பெண்ணால் முடியும்.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கோவிந்த நிகாலனி இயக்கிய Sanshodhan என்ற ஹிந்திப்படத்தைப் பார்த்தேன். NFDC & UNICEF இணைந்து தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வித்யா என்ற இளம்பெண் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து உறுப்பினராகிச் சந்திக்கும் பிரச்சனைகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் நிகாலனி.

செய்திதுறையின் விளம்பரப் படம் போல நிறையக் காட்சிகள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் மகளிர் பங்கெடுப்பு பற்றிய விளக்கமாக இருந்த போதும் ராஜஸ்தானிய கிராமிய வாழ்க்கையைக் காட்சிபடுத்தியதிலும் கல்விக்காகக் கிராம மக்கள் போராடும் பிரச்சனையை முதன்மைபடுத்தியதாலும் இப்படம் முக்கியமானதாகிறது.

தமிழகத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்களாகப் பெண்கள் கிராம நிர்வாகத்தில் பங்குபெற்ற போது என்னவிதமான நெருக்கடிகளை, அவமானங்களைச் சந்தித்தார்கள் என்பதை நேரடியாகவே அறிவேன். அந்த நினைவுகளின் திரைவடிவம் போலவே இப்படமிருப்பதை உணர்ந்தேன்.

பஞ்சாயத்து உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பெண்ணைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது எனத் தடுத்துவிட்டு அவளது கணவன் கூட்டத்தில் கலந்து கொள்வது. பெண்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் ஈடுபடத் தகுதியற்றவர்கள் என ஒரு காண்டிராக்டர் திட்டுவது, பஞ்சாயத்து அதிகாரிகள் பெண் உறுப்பினர்களை அவமானப்படுத்தும் முறை என நிறையக் காட்சிகள் நிகழ்கால உண்மையை அப்படியே பிரதிபலிக்கின்றன.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களும் இடம்பெற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு வாய்ப்பும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்களை செயல்படவிடாமல் தடுத்து, அவர்களுடைய கணவர்கள் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனச் சமீபத்தில் பாரதப் பிரதமர் கூறியிருப்பது இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவிட்டிருப்பதன் அடையாளமே..

ரத்தன் சிங்கைப் போல இந்தியா முழுவதும் ஆண்களே தலைமுறையாகப் பஞ்சாயத்தின் தலைவர்களாக ஊரைத் தன்கையில் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து விடுபட்டு பெண்களின் பங்கேற்பு பஞ்சாயத்து நிர்வாகத்தில் எது போன்ற மாற்றங்களை உருவாக்கும் என்பதையே நிகாலனி எடுத்துக் காட்டுகிறார்

ஆவணப்படம் போன்ற சாயல் கொண்டிருந்த போதும் தேர்ந்த நடிப்பாலும். கதைப்போக்கினாலும் இப்படத்தைச் சமூகப்பிரச்சனையைச் சுட்டிக்காட்டும் சினிமாவாக உருமாற்றியிருக்கிறார் கோவிந்த் நிகாலனி.

அவரது அர்த்சத்யா திரைப்படம் போலீஸ்காரர்கள் சந்திக்கும் உளவியல் நெருக்கடிகளை, வன்முறையைச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது.  அப் படத்தின் பாதிப்பு இன்றுவரை பல படங்களில் காண முடிகிறது

பன்வர் வித்யாவைத் திருமணம் செய்து ஒட்டக வண்டியில் அழைத்துக் கொண்டு வருவதில் படம் துவங்குகிறது. படத்தின் இசை விஷால் பரத்வாஜ். சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களைத் தந்திருக்கிறார்.

பன்வர் கிராமத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன். அந்த ஊரின் பண்ணையார் போலிருப்பவர் ரத்தன்சிங். அவர் பல ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தவர். இப்போது எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட விரும்பியதால் தனது மகன் இந்தர்சிங்கை பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மூன்று உறுப்பினர்கள் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதால் பன்வரின் படித்த மனைவி வித்யாவைத் தேர்தலில் போட்டியிட வைக்கிறான் இந்தர்சிங்.

தனக்கு பலவிதமான உதவிகள் செய்தவன் என்பதால் இந்திரங்சிங்கிற்கு ஆதரவாக மனைவியைத் தேர்தலில் களம் இறக்குகிறான் பன்வர். பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலில் இந்தர்சிங் ஜெயித்துவிடுகிறான். வித்யா பஞ்சாயத்து உறுப்பினராகிவிடுகிறாள்.

முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஆண்கள் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்கள். பெண்கள் தயக்கத்துடன் பயத்துடன் முக்காடு போட்டபடியே தரையில் ஒரமாக ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த காட்சி மறக்கமுடியாதது. பதவி கைமாறிய போதும் ரத்தன்சிங்கின் முடிவே  கிராம பஞ்சாயத்தில் செயல்படுத்தபடுகிறது.

அக் கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டி முடிக்கபடாமலே இருக்கிறது. ஆனால் அதைக் கட்டி முடித்துவிட்டதாக ரத்தன்சிங் முழுப்பணத்தையும் கையாடல் செய்திருக்கிறார். அதை அறிந்த வித்யா இந்த ஊழலை கண்டித்துப் போராடத்துவங்குகிறாள்

ஒரு பக்கம் கணவர் மறுபக்கம் ரத்தன் சிங்கின் ஆட்கள் என இரண்டுபக்கமும் அவளுக்கு நெருக்கடி. ஆனால் ஏழைக்குழந்தைகள் படிக்கப் பள்ளி வேண்டும் என்பதில் உறுதியாக  இருக்கிறாள். இதற்காக கட்டி முடிக்கபடாத பள்ளியைத் திறந்து அவளே ஆசிரியர் ஆகிறாள்.

அப் பள்ளியை நடத்தவிடாமல் செய்ய இந்தர்சிங் போராடுகிறான். ஆட்களை வைத்து அடித்து உடைக்கிறான். வித்யாவை மிரட்டுகிறான்.  வித்யாவின் பள்ளித்தோழி மஞ்சு தான் இந்தர்சிங்கின் மனைவி. அவள்  தன்னுடைய கணவரை  எதிர்க்க வேண்டாம் என வித்யாவிடம் வேண்டுகிறாள்.

வித்யாவின் வீடு அடித்து நொறுக்கபடுகிறது. சைக்கிளில் வரும் பன்வர் தாக்கபடுகிறான். முடிவில் கிராமம் ஒன்று சேர்ந்து எப்படிப் போராடுகிறது என்பதை அழுத்தமாகக் காட்டியுள்ளார் கோவிந்த் நிகாலனி

காந்தி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகச் செயல்பட்டவர் கோவிந்த் நிகாலனி. இவரது தமஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் மிகச்சிறந்த ஒன்று. ஐந்து முறை தேசிய விருது பெற்றவர். ஷியாம் பெனகலின் முக்கியப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக செயல்பட்டவர். இவரது Aakrosh ,Ardh Satya ,Party ,Hazaar Chaurasi Ki Maa ,Drishti போன்றவை முக்கியமான திரைப்படங்கள். இவரது Drohkaal திரைப்படம் தான் தமிழில் கமல்ஹாசனால் குருதிப்புனலாக எடுக்கபட்டது,

பன்வராக நடித்துள்ள மனோஜ் பாஜ்பாய், வித்யாவாக நடித்துள்ள வன்யா ஜோஷி இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வித்யா போராட்ட குணமுள்ள பெண்களுக்கு ஒரு அடையாளம்

NFDC படங்கள் அதிகம் திரையரங்குகளில் வெளியாவதில்லை. தூர்தர்ஷனில் ஒளிபரப்பும் போது பார்த்தால் மட்டுமே சாத்தியம். தற்போது சிறந்த தரத்துடன் NFDC படங்களின் டிவிடி விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆன்லைனில் இவற்றை எளிதாகப் பெறமுடிகிறது.

**

0Shares
0