நீண்ட நாட்களுக்குப்பிறகு நேற்றிரவு மார்லன் பிராண்டோ நடித்த Viva Zapata படத்தை மறுபடியும் பார்த்தேன். பிராண்டோவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று. கூடுதல் சிறப்பு இதை இயக்கியது எலியா கசன் .
இந்த முறை பார்க்கும் அது ஈழத்தின் யுத்த நினைவுகளையும் , ஈழப்போராளிகளின் வீரமரணத்தையும் பெரிதும் நினைவூட்டியது. போராட்டமும் துயர நினைவுகளும் எல்லா தேசங்களிலும் ஒன்று போலதான் இருக்கிறது. படத்தைப் பார்க்க பார்க்க மனதில் ஈழப்போரின் வரலாறு பொங்கி மிகவும் உணர்ச்சிகரமாக்கியது.
விவா ஷபாடா ஒரு போராளியின் கதை. எமிலியானோ ஷபாடா தனது மக்களின் விடுதலைக்காக ஒரு இயக்கத்தை உருவாக்கி ஆயுதமேந்தி கொரில்லாப் போரிட்டு அரசைக் கைப்பற்றி அப்போதும் தான் விரும்பிய மாற்றத்தை அடைய முடியாமல் தோற்றுப்போய் வஞ்சகமாகக் கொல்லப்பட்டக்கதை.
மக்கள் எழுச்சி எப்படித் துவங்குகிறது என்பதற்கு விவா ஷபாடா ஒரு பாடம். மெக்சிகோவின் புரட்சியாளரான எமலியானோ ஷபாடாவின் உண்மைக் கதையே இப்படம். உண்மைச் சம்பவங்களோடு கொஞ்சம் புனைவும் கலந்து உருவாக்கபட்டிருக்கிறது. 1909 முதல் 1919 வரையான பத்து ஆண்டுகாலம் ஷபாடா மக்களுக்காக போராடியிருக்கிறார்.
அரசு அதிகாரிகள் தங்களது நிலங்களை முறைகேடாக அபகரித்துக் கொண்டு தங்களை விரட்டுகிறார்கள் என்று புகார் சொல்ல மெக்சிக சர்வாதிகாரியான டயûஸச் சந்திக்க வருகிறார்கள் கிராமப்புற விவசாயிகள். அவர்களில் ஒருவராக அறிமுகமாகிறான் ஷபாடா. ஊழல் பெருச்சாளியான அதிபரோ தான் ஒரு உண்மையான மக்கள் சேவகன் என்றும் இது போன்ற விசயங்களில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது ஆகவே உரிய முறையில் விசாரணை செய்து அவர்களுக்கு நீதிவழங்கப்படும் என்கிறார்.
அதில் தனக்கு நம்பிக்கையில்லை. விவசாயிகள் தங்கள் நிலத்தை பறிகொடுத்துவிட்டு என்றோ கிடைக்கப்போகும் நியாயத்திற்காக காத்திருக்க முடியாது என்கிறான் ஷபாடா. உடனே அவனது பெயர் மற்றும் முகவரியை விசாரித்து சிவப்புக்குறி போடுகிறார் அதிபர்.
அதன்பிறகு ஷபாடா கலக்காரன் என்று அடையாளப்படுத்தப்படுகிறான். அவர்களது கிராமம் சூறையாடப்படுகிறது. அரசாங்க வீரர்கள் அவர்களை வேட்டையாட அலைகிறார்கள். வேறு வழியின்றி அரசாங்க வீரர்களைத் தாக்குகிறான்.
சண்டையில் சிலர் கொல்லப்படுகிறார்கள். ஷபாடா தப்பிப் போய் மலைக்குகையில் ஒளிந்து வாழ்கிறான். விவசாயிகள் அவனுக்கு ஆதரவு தருகிறார்கள். மக்கள் அவன்பின்னால் ஒன்று சேர்கிறார்கள். அவனைத் தங்களது தலைவனாக கருதுகிறார்கள்.
ஷபாடாவின் சகோதரன் யுபிமோவாக ஆன்டனி குயின் நடித்திருக்கிறார். யுபிமோவும் ஷபாடாவும் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டுகிறார்கள். ஆயுதங்களைத் திருடி வந்து கொரில்லா யுத்தத்திற்கு மக்களைப் பயிற்றுவிக்கிறார்கள். அரசு அவர்களை ஒடுக்கப் படையை அனுப்புகிறது. தீவிர முயற்சி எடுக்கிறது. அந்த எதிர்ப்பு மக்களை ஒன்று சேர்க்கிறது. ஷபாடா மிகப்பெரிய தலைவனாகிறான்.
ஆரம்ப நாட்களில் ஷபாடா ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்த பெண்ணின் அப்பா ஒரு பண்ணை உரிமையாளர். அவர் ஷபாடா ஒரு பொறுக்கி. உருப்படாதவன். ஏமாற்றுக்காரன் என்று பெண் தர மறுக்கிறார். ஆனால் இப்போது ஷபாடா புரட்சித் தலைவன் ஆனதும் அவனுக்குப் பெண் தர தானே முன்வருகிறார்.
பெண்கேட்பதற்கு ஷபாடா செல்லும் அந்தகாட்சி வாய்விட்டுசிரிக்கக் கூடியது. பணமும் அதிகாரமும் மட்டுமே பெரிதாக நினைக்கும் பண்ணை உரிமையாளரை ஷபாடா மிரட்டிப் பெண்ணை அடைகிறான்.
ஒரு பக்கம் அரசோடு இடைவிடாத சண்டை. தாக்குதல். இதற்கிடையில் தான் விரும்பிய பெண்ணை ஷபாடா மணந்து கொள்கிறான். அவனது திருமணக்காட்சியும் அதைத் தொடர்ந்த விருந்தும் மறக்க முடியாத காட்சிகள். ஷபாடாவின் வீட்டின் முன்னால் குடித்துவிட்டு இரவெல்லாம் மக்கள் ஆடியபடியே இருக்கிறார்கள். இசையும் நடனமும் பீறிடுகின்றன.
ஷபாடா முதலிரவில் தன் மனைவியிடம் தான் படிப்பறிவில்லாதவன் தனக்கு எழுதப்படிக்க கற்றுத்தர முடியுமா என்று கேட்கிறான். அவள் சம்மதிக்கிறாள். பாதி இரவில் எழுந்து அவன் தன்னைக் கொண்டாடும் மக்களை வேடிக்கை பார்க்கிறான். அவனது பொறுப்புணர்வு அவனை உறங்கவிட மறுக்கிறது.
புரட்சிக்குழுவின் தாக்குதலில் அரசுப்படை தோற்றுப்போகிறது. ஷபாடாவை புதிய தலைவராக தேர்வு செய்கிறார்கள். அவன் இடம் மாறுகிறான். பதவி வந்தவுடன் பிரச்சனைகள் தானே தோன்ற ஆரம்பிக்கின்றன. எல்லா அதிபர்களைப் போல அவனையும் அதிகாரிகள் புகழ்ந்து பேசி கிடைத்த சந்தர்ப்பத்தில் கை நிறைய சம்பாதித்துவிடுங்கள் என்று வழிகாட்டுகிறார்கள். அதை ஷபாடா ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.
அவனுக்காக அரசாங்க நிலம் முறைகேடாகக் கையகப்படுத்தபடுகிறது. எந்தப் பிரச்சனையை எதிர்த்து ஷபாடா போராடினானோ அது போன்ற ஒன்று இப்போது அவன் பெயராலே நடக்கிறது. அதிகாரம் இழந்து போனவர்கள் அவனை அண்டி திரும்பவும் அதிகாரம் பெறத் துடிக்கிறார்கள். கூட இருந்த நண்பர்கள் பதவி வந்தவுடன் துரோகிகளாக மாறிவிடுகிறார்கள்.
சாவும் நிம்மதியின்மையும் அவனைப் பீடித்துக் கொள்கிறது. உறக்கமில்லாமல் அவதிப்படுகிறான். குழப்பம். பிரச்சனைகள். நெருக்கடி என்று அவதிப்படும் ஷபாடா உறங்குவதற்காக மட்டுமே சொந்த ஊர் திரும்பி வீட்டிற்கு வந்து மனைவியின் அருகாமையில் மயங்கிவிழும் காட்சி ஒரு புரட்சியாளனின் அந்தரங்கம் எவ்வளவு காயங்கள் நிரம்பியது என்பதைக் காட்டுகின்றன.
நீண்ட காலமாக மக்களுக்காகப் போராடிய ஷபாடாவின் சகோதரன் புரட்சிக்குப் பிறகு கிராமங்களை கொள்ளையடித்து விவசாயிகளின் மனைவியை தூக்கி சென்றுவிடுகிறான். அதைப்பற்றி புகார் செய்ய ஷபாடாவிடம் கிராம விவசாயிகள் வந்து சேர்கிறார்கள். அவன் எனது சகோதரன் . ஒரு போதும் அப்படி நடந்து கொள்ள மாட்டான் என்கிறான் ஷபாடா.
ஒரு விவசாயி கோபப்பட்டு அதிகாரம் உங்கள் கண்களை மறைக்கிறது என்கிறான். உடனே ஷபாடா அவன் பெயர் முகவரியை கேட்டு சிவப்புகுறியிடு இடுகிறான். சட்டென அதிகாரம் தன்னையும் முந்தைய சர்வாதிகாரி போலவே மாற்றிவிட்டதை உணர்கிறான்.
உடனே பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு தனது சகோரதனை தேடிப்போகிறான். அவன் ஷபாடாவிடம் கத்துகிறான். மக்களுக்காகப் போராடி நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். நமக்கென என்ன சொத்து இருக்கிறது. வருமானத்திற்கு என்ன வழியிருக்கிறது. ஆகவே நான் இப்படித்தான் நடந்து கொள்வேன் என்கிறான். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சகோதரனை கொன்றுவிடுகிறான் ஷபாடா. கூட இருந்த நண்பர்களை தானே சுட்டுக் கொல்லவேண்டிய அரசியல் நெருக்கடி உருவாகிறது. மீண்டும் தான் புரட்சிப்படையை உருவாக்க முனைகிறான்.
சூழ்ச்சிகள் வலையிடத்துவங்குகின்றன. தான் கொல்லப்பட்டுவிடக்கூடும் என்று ஷபாடா உணர்ந்தேயிருக்கிறான். அதனால் மனைவியை அழைத்துக் கொண்டு மலைப்பகுதியில் ஒளிந்து வாழ்கிறான். அவனை வஞ்சகமாக வலையில் சிக்கவைக்கிறார்கள். சூழ்ச்சியறியாது வரும் ஷபாடா சுற்றிவளைத்து சுட்டுக் கொல்லப்படுகிறான். காட்டிக் கொடுத்தவன் கூட இருந்த நண்பன்.
ஷபாடாவின் இறந்த உடலைக் கொண்டு போய் ஊரின் மத்தியில் போட்டு இது மக்களுக்கு ஒரு பாடம் இனிமேல் எவனும் தங்களை எதிர்க்கக் கூடாது என்கிறது அரசாங்கம். ஆனால் ஷபாடாவின் குதிரை தனியே மலையில் அலைந்து கொண்டிருப்பதை கண்ட கிராம மக்கள் அவன் இறக்கவில்லை. உயிரோடு தானிருக்கிறான். இது அரசு செய்யும் நாடகம். வெறும் சூழ்ச்சி என்று அவன் சாவை நம்ப மறுக்கிறார்கள்.
எல்லாப் புரட்சியாளர்களையும் போல ஷபாடாவும் உயிரோடு எங்கோ இருப்பதாக மக்கள் நம்புவதோடு படம் நிறைவு பெறுகிறது.
ஷபாடாவாக நடித்துள்ள பிராண்டோ எளிய விவசாயியாக இருப்பதில் துவங்கி புரட்சியாளராக உருமாறும் காட்சிகள் நடிப்பின் உச்சபட்ச சாதனை. மார்லன் பிராண்டோவை ஏன் உலகம் சிறந்த நடிகர் என்று கொண்டாடுகிறது என்பதற்கு இந்த ஒரு படமே சாட்சி. கான்ஸ் திரைப்பட விழாவில் பிராண்டோ இப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதைப்பெற்றார். ஆண்டனி குயினும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் பலகாட்சிகள் தமிழ்சினிமாவின் பிரபலமான படங்களில் நகலெடுக்கபட்டிருக்கின்றன. படத்தின் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அற்புதமானவை. நிழல்கள் படமெங்கும் உருவங்களை விடவும் முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நிழல்கள் பேசுகின்றன. சிந்திக்கின்றன. துக்கப்படுகின்றன. அதுதான் ஒளிப்பதிவின் சாதனை.
ஒரு காட்சியில் அரசாங்க வீரர்களை ஷபாடாவின் படை சுற்றிவளைத்துக் கொள்கிறது. அந்தக் காட்சி துவங்கும் போது துள்ளும் இசை அப்படியே உருமாறி அவர்கள் மாட்டிக் கொள்ளும் போது இசை உச்சபட்ச கேளிக்கையாக மாறுகிறது.
ஜேன் பீட்டர்ஸ் ஷபாடாவின் மனைவியாக நடித்திருக்கிறார். ஷபாடா கொல்லப்படக்கூடும் என்று உணரும் இறுதிக்காட்சியில் அவள் வெளியே போக வேண்டும் என்று அவனை தடுக்கும் போது அவளது முகத்தில் வெளிப்படும் துக்கமும் வலியும் மறக்கமுடியாத உணர்ச்சிவெளிப்பாடுகள்.
இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக். 1952ல் வெளியான இந்தத் திரைப்படம் ஹாலிவுட்டின் சிறந்த நூறு சினிமாக்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
**
