ராஞ்சிபூரின் மழை



 


 


 


 


நேற்றிரவு The Rains Came  என்ற 1934 ல் வெளியான கறுப்பு வெள்ளை திரைப்படத்தை பார்த்தேன். இந்தியாவைப் பற்றி எடுக்கபட்ட பெரும்பான்மை ஆங்கில படங்கள் பொதுவாக இந்தியர்களை முட்டாள்களாகவும், இந்தியா முழுவதும் பாம்புகளும் யானைகளும் பெருகியிருப்பது போன்றும் சாமியார்கள், நரபலி, வறுமை பீடித்த மக்கள், படிப்பறிவில்லாத கிராமவாசிகள் என்று கலவையான உலகமாகவே சித்தரித்துள்ளது.


அதிலும் வெள்ளைக்காரர்களை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட படங்களில் இந்தியர்கள் கூலிகளாகவோ, அல்லது கார் ஒட்டுனர்கள் பாம்பாட்டிகள் என்று மூன்றாம் தர நிலையில் தான் இடம்பெறுவார்கள். இந்த படம் அதில் சற்றே விதிவிலக்கு என்று சொல்லலாம். ஹாலிவுட்டில் எடுக்கபட்ட இந்திய படங்களில் தி ரெயின்ஸ் கேம் தனித்துவமானது. இன்னும் சொல்வதாயின் பல இந்தியபடங்களில் பேசப்படாத நிகழ்வுகளும் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.


ரஞ்சிபூர் என்ற சமஸ்தானத்தில் கதை நடைபெறுகிறது. ராஜாவை ஒவியம் வரைவதற்காக வந்து தங்கியுள்ள ரான்சம் என்ற பிரிட்டீஷ்காரன் உல்லாசமாக வாழ்க்கை நடத்துகிறான். எப்போதாவது ராஜா அழைக்கும் போது அவரை படம் வரைகிறான். மற்ற நேரங்களில் குடி பெண்கள் என்று கேளிக்கைகளில் மிதக்கிறான்.


ஒரு விருந்தில் தற்செயலாக தனது பழைய காதலியை சந்திக்கிறாள். அவள் திருமணமாகி தன் கணவனோடு வந்திருக்கிறாள். கணவனோ ராஜாவிடமிருந்து வனப்பான குதிரைகளை விலைக்கு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கும் வெள்ளைகாரன்.


ரான்சமிற்கு தன் காதலியை கண்டதும் பழைய காதல்துளிர்விடத்துவங்குகிறது. ஆனால் எட்வினா என்ற அவனது காதலிக்கோ அந்த விருந்தில் அறிமுகமான ஒரு இந்திய மருத்துவர் மீது காதல் பிறக்கிறது.


சேதி என்ற அரசபரம்பரையை சேர்ந்த அந்த மருத்துவர் அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்ய மருத்துவமனை நடத்துகிறார். எட்வினா சேதியை காதலிக்க துவங்குகிறாள்.


இது ரேன்சம்மிற்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. இந்த நிலையில் ரஞ்சிபூரில் மழை துவங்குகிறது. அடைமழையாகி அதன் காரணமாக பூகம்பம் உருவாகிறது. பூகம்பத்தின் காரணமாக அணைகள் உடைபட்டு வெள்ளம் பெருகியோடுகிறது. அதில் பலர் இறந்து போகிறார்கள். எங்கும் காலரா பரவுகிறது. இதனால் சேதி தன் காதலை மறந்து மருத்துவம் செய்வதில் முழுமையாக ஈடுபடுகிறான். பூகம்பத்தில் எட்வினாவின் கணவன் இறந்து போகவே அவளும் மருத்துவ குழுவில் இணைந்து சேவை செய்ய துவங்குகிறாள்.


முடிவில் அவளையும் காலரா பற்றிக் கொள்கிறது. அவளை குணப்படுத்த சேதி எவ்வளவோ முயற்சிக்கிறான். ஆனால் அவள் இறந்து போய்விடுகிறாள். ரஞ்சிபூரின் மழைக்காலம் முடிவடைகிறது


பாதி படம் மழையின் ஊடாகவே நகர்கிறது. படத்தின் துவக்கத்தில் மழை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அப்போது ஒரு வெள்ளைகாரன் அது மூடநம்பிக்கை என்கிறான். இன்னொருவனோ இந்திய மக்களின் மனதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அது விசித்திரமான நம்பிக்கைகளால் நிரம்பியது என்கிறான்.


அதை மெய்யாக்குவது போல மழை பெய்யதுவங்கி நீண்டு கொட்டு கொட்டொன கொட்டி எடுக்கிறது. மழையின் ஊடாக படமாக்கபட்ட காட்சிகள் செட்டில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றபோதும் மிக இயல்பாகவும் உண்மையாகவும் படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக அடைமழையின் சப்தம் மற்றும் வேகம். மழையை கடந்து செல்கின்றவர்கள்.


குதிரையில் பயணம் செய்யும் பயணிகள் ஒடி ஒதுவங்குவது. மழையின் ஊடாக நடைபெறும் விருந்து என்று படம் முழுவதும் மழை ஒரு முக்கியபுள்ளியாக இடம் பெறுகிறது


படத்தில் எட்வினாவும்  சேதியும் ஒரு இசைப்பள்ளியை காண செல்கிறார்கள். அங்கே ஒரு மூடிய கதவின் பின்னால் இந்துஸ்தானி இசைக்கலைஞர் ஒருவர் அமர்ந்தபடியே தன்னை மறந்து பாடிக் கொண்டிருக்கிறார். அந்த பாடலும் அந்த பாடலின் போது இசைக்கலைஞரின் முகபாவமும் அதை காணும் வெள்ளைகாரர்களின் புரியாமையும் மிக அற்புதமானது


அது போலவே வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. அது வரை வெள்ளை அரசின் கௌரவசின்னமா கருதப்பட்ட விக்டோரியா மகராணியின் சிலை முழ்க துவங்குகிறது. அவள் தலை வரை முழ்கிவிடுகிறது. அதை  பற்றிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் ரான்சேம். ராணியே அசைய துவங்கிவிட்டால் அவளை நம்பி பற்றிக் கொண்டிருந்தால் வெள்ளம் அடித்து கொண்டு போய்விடும் என்பான். அது ஒருவகையில் குறியீடு போலவே அமைந்திருக்கிறது


வெள்ளம் பெருக்கெடுத்த போது மழையை நிறுத்த வேண்டி பேனர்ஜி என்பவர் மழையை நோக்கி பிரார்த்தனை செய்கிறான். வெள்ளைகாரன் கிண்டல் செய்வதை பொருட்படுத்தாமல் அவன் பிரார்த்தனை நீள்கிறது. அப்போது வெள்ளைகாரன் மழையில் செத்தால் கூட இவன் நம்பிக்கையை கைவிட மாட்டான் என்கிறான்.


சில நிமிசங்களில் எதிர்பாராமல் மழை நின்று விடவே பேனர்ஜி முகத்தில் தோன்றும் வியப்பு மற்றும் வெள்ளைகாரனை பார்க்கும் அலட்சியம் யாவும் மிக நிஜமானது.


Louis Bromfield    நாவலை படமாக்கியிருக்கிறார்கள். லுயிஸ் இந்தியாவில் சில காலம் வசித்த பிரிட்டீஷ் எழுத்தாளர். மும்பை குறித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.


ஹாலிவுட்டில் கான் வித் தி விண்ட் படம் வெளியாகி ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அது போல ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று உடனே எடுக்கபட்ட படமிது. நிறைய காட்சிகள் கான்வித் தி விண்டை நினைவூட்டக்கூடியவை.


ஆறு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்த படம் ஸ்பெஷல் எபெக்டுக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. எவ்விதமான நவீன உபகரணங்களின் உதவியும் இன்றி இந்த படத்தில் உருவாக்கபட்ட பூகம்ப காட்சியும் வெள்ளம்


பெருக்கெடுத்து ஒடும் காட்சியும் ஸ்பெஷல் எபெக்ட்டின் உச்சபட்ச சாதனை என்றே சொல்வேன். ஸ்பெஷல் எபெக்டுக்காக விருது பெற்ற முதல் படமும் இதுவே


தற்போது நவீனமான டிஜிட்டல் முறையில் மறுசீரமைக்கபட்ட இந்த படத்தின் நவீன பிரதிகள் பார்க்க மிக அற்புதமாக இருக்கின்றன. வெள்ளைகாரர்கள் பேசும் ஹிந்தியும், பரிகாசத்திற்கு உரிய சில இந்திய முகங்களும் தாண்டி படம் பெருமளவு நேர்த்தியாக பண்ணப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கு படப்பிடிப்பிற்கு வராமலே இந்தப்படம் இந்தியாவின் நிலவெளியை வீதிகளை, வீடுகளை அழகாக காட்சிபடுத்தி உள்ளது. அந்த வகையில் கலை உருவாக்கத்திற்கு சரியான உதாரணம் இது.


அவசியம் பார்க்க பட வேண்டிய கிளாசிக் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.


**


 

0Shares
0