வாசிப்போம் வாருங்கள்

ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய  எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு  சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்,  அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன்

••

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் வாசித்தவரை முக்கியமான எழுத்தாளர்களாக பத்து பேரைக்குறிப்பிடுவேன்,

ஆப்ரிக்க இலக்கியம். லத்தீன் அமெரிக்க இலக்கியம்.  பின்நவீனத்துவம். என்று ஒவ்வொரு பத்தாண்டிலும் உலக இலக்கியத்தின் போக்கு ஏதாவது ஒரு புள்ளியில் மையம் கொண்டிருக்கும்,  தற்போது அந்த மையப்புள்ளியாக உருக்கொண்டிருப்பது ஆசிய இலக்கியமே,

ஆசியநாடுகளின் இலக்கியப்படைப்புகள்  குறித்த தீவிரமான சர்ச்சைகள். ஆய்வரங்குகள் மேற்குலகில் தொடர்ந்து நடந்து வருகின்றன, சமீபத்தைய வருசங்களில் புக்கர் பரிசு உள்ளிட்ட  பல முக்கியமான இலக்கியப் பரிசுகளை வென்றவர்கள் ஆசிய எழுத்தாளர்களே.

1)யான் மார்டில்    ( Yann Martel)

2002 ம் ஆண்டிற்கான மான்புக்கர் பரிசு பெற்ற Life of pi  என்ற நாவலின் மூலம் உலகின் கவனத்தை பெற்ற யான் மார்டில் கனடாவைச்சேர்ந்தவர்,

பட்டேல் என்ற பாண்டிச்சேரியை சேர்ந்த இளைஞன் கடற்பயணத்தில் சந்திக்கும் விசித்திரமான நெருக்கடியைப் பற்றியதே இந்த நாவல், பட்டேல் தன் பெயரை பை என்று சுருக்கிக் கொண்டிருக்கிறான், அவனது  பெற்றோர் ஒரு மிருகக்காட்சி சாலை நடத்துகிறார்கள், இங்கிருந்து இடம் பெயர்ந்து கனடா போய் வாழ்வது என்று ஒரு கப்பலில் பையின் குடும்பம் புறப்படுகிறார்கள்,அதற்காக மிருக்காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் ஒரு கப்பலில் ஏற்றப்படுகின்றன, அந்தக்கப்பல் கடலில் விபத்திற்கு உள்ளாகிறது

அதில் தப்பி உயிர்காக்கும் படகில் ஒரு வங்கப்புலியோடு 227 நாட்கள் கடலில் தவித்து உயிர் பிழைக்கிறான் பை, முடிவில் அவன் ஜப்பானிய அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு விசாரணை செய்யப்படுகிறான் அப்போது தனது கடற்பாடுகளை வேறு ஒரு கதை போல மாற்றிச் சொல்கிறான், இரண்டில் எது நன்றாக உள்ளது என்று கேட்கையில் அதிகாரிகள் மிருகங்களுடன் தப்பி உயிர்பிழைத்த கதையே என்கிறார்கள்,

இந்த நாவல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது,  தனது நாவலின் களத்தை அறிந்து கொள்வதற்காக இந்தியாவில் ஒன்றரை வருசங்கள் வாழ்ந்திருக்கிறார் யான் மாட்டில்,  Beatrice and Virgil  இவரது சமீபத்தைய நாவல், உருவகக்கதை போல அமைந்துள்ள இந்த நாவலும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது

2)ரானா தாஸ் குப்தா, (Rana Dasgupta)

இங்கிலாந்தில் வாழும் இந்தியர், இவரது முதல் நாவல் Tokyo Cancelled, 13 சிறுகதைகள் ஒன்று சேர்ந்து உருவாக்கபட்ட புதிய வடிவம் கொண்டுள்ளது, போர்ஹெஸ் மற்றும் மார்க்வெஸின் எழுத்துகளில் காணப்படும் மாயத்தன்மையும் கவித்துவமான கதை சொல்லும் முறையும் இவரிடமும் காணப்படுகின்றன,  இவரது SOLO நாவல் பல்கேரியாவில் வசிக்கும் நூறு வயதான  ஒரு பார்வையற்ற ஒருவரின் நினைவுகளின் வழியே இரண்டு வேறுபட்ட காலங்களில் நடைபெறும் வரலாற்று முக்கியமான சம்பவங்களை ஒன்று  சேர்க்கின்றன,  பழைய டெல்லி பற்றிய இவரது அவதானிப்புகள் வியப்பளிக்கின்றன.

3) கார்லோஸ்  ருஸ் ஜபான்  (Carlos Ruiz Zafón)

ஸ்பானிய எழுத்தாளரான இவரது THE SHADOW OF THE WIND  மிக முக்கியமான நாவல், இந்த நாவல் காலத்தால் கைவிடப்பட்டு மறந்து போன புத்தகங்களுக்கான ஒரு ரகசிய கல்லறை போன்ற நூலகம் ஒன்றிற்குள் சென்று தனக்கு விருப்பமான ஒரு புத்தகத்தை தேர்வு செய்யும் டேனியல் என்ற இளைஞனை பற்றியது

அவன் தேர்வு செய்த புத்தகமே காற்றின் நிழல்,  அந்த நாவலின் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த எழுத்தாளரின் அடுத்த புத்தகத்தை தேட துவங்கி அதன் வழியாக தனது சொந்த வாழ்வின் நினைவுகளை இழந்த அடையாளங்களை தெரிந்து கொள்வதே நாவலாக விரிகிறது,

ஒரு புத்தகத்தோடு ஒரு வாசகனுக்கு உள்ள உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நாவல் அழகாக விவரிக்கிறது, புனைவில் உள்ள ஒரு கதாபாத்திரம் நிஜமாகி புத்தகங்களின் விதியை அது முடிவு செய்கிறது என்ற கற்பனை அபாரமானது, நாவலின் உரையாடல்களும். கதைத்துவமும் போர்ஹெஸை அதிகம் நினைவூட்டுகின்றன, சமகால உலக இலக்கியத்தில் போர்ஹெஸின் பாதிப்பு இல்லாத முக்கிய எழுத்தாளர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

இவரது சமீபத்தைய நாவல் , THE ANGELS GAME இதுவும் மிகைபுனைவு வகை எழுத்தே,

4) காலித் ஹொசைனி ( Khaled Hosseini)

அமெரிக்காவில் வாழும் ஆப்கானிய எழுத்தாளர், THE KITE RUNNER என்ற இவரது நாவல் 2003ம் ஆண்டு வெளியாகி மிகுந்த பிரபலமாகியதுடன் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெற்றியடைந்தது, இந்த நாவல் ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகி உள்ளதாகச் சொல்கிறார்கள்  

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இவரது A THOUSAND SPLENDID SUNS நாவலும் விற்பனையில் பெரிய சாதனை செய்திருக்கிறது, யுத்த பின்புலத்தில் சிதறுண்ட குடும்பங்களின் கதையை சொல்வதே இவரது எழுத்து .  ஆப்கானில் இருந்து அமெரிக்காவிற்கு புகலிடம் தேடிச் சென்ற அமீர் என்ற சிறுவன் மற்றும் அவனது தந்தையின் வாழ்க்கையும் பால்யத்தின் மறக்கமுடியாத நினைவுகளுமே கதையின் மையம், நாற்பத்தைந்து வயதாகும் ஹொசைனி அரசியல் காரணங்களுக்காக சொந்த நாட்டினையும் உறவுகளையும் துறந்து செல்லும் மனிதர்களின் வாழ்வே தன்னை தொடர்ந்து எழுதச் செய்கிறது என்கிறார், யுத்தம் ஒரு தனிநபரின் நட்பு மற்றும் உறவுகளின் மீது என்ன விளைவுகளை உண்டாக்குகிறது என்பதை இவரது எழுத்தின் வழியாக நுட்பமாக உணர முடிகிறது,

5)  ஹருகி முராகமி, (Haruki Murakami)

சமகால ஜப்பானிய இலக்கியத்தில் இவரே மிகச்சிறந்த எழுத்தாளர், உலகெங்கும் இவருக்கான வாசகர்கள் பல லட்சமிருக்கிறார்கள், ஐரோப்பிய இலக்கியங்களை ஜப்பானில் மொழிபெயர்ப்பு செய்வதில் துவங்கி இன்று மிக முக்கிய எழுத்தாளர் ஆகியிருக்கிறார், தமிழில் கூட இவரது சிறுகதைகள் தனித்தொகுப்பாக வெளியாகி உள்ளது, ஜி, குப்புசாமி மொழிபெயர்த்திருக்கிறார், முராகமியின் சிறுகதைகள் வடிவ ரீதியாக முற்றிலும் மாறுபட்டவை,  பகடியும் மாயத்தன்மையும் மிக்கவை, இவர் ஒரு மராத்தான் ஒட்டப் பந்தய வீரர் என்பதால் ஒட்டப்பந்தயம் குறித்து what i talk about when i talk about running  என்றொரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார், முராகமி நூற்றுக்கும் மேலான சிறுகதைகள் எழுதியிருக்கிறார், அந்தக் கதைகள் ஜப்பானிய தினசரி வாழ்வின் ஊடாக ஒரு மாயத்தன்மையை அல்லது அசாதாரண நிகழ்வை அடையாளப்படுத்துபவையாக இருக்கின்றன, இவரது இரண்டு முக்கிய நாவல்கள்  KAFKA ON THE SHORE மற்றும்  THE WIND-UP BIRD CHRONICLE,

இசையிலிருந்தே தனது எழுத்து பிறக்கிறது எனும் முராகமி காப்கா விருது . கிரையாமா விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார், இவரது கதைகளில் வரும் தவளைகள்  பூனைகள் மற்றும் நாய்கள் குறித்து தனியே ஒரு புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது, அந்த அளவு வளர்ப்புமிருகங்களை நாம் எப்படி நடத்துகிறோம், மனிதநம்பிக்கைகள் எந்த அளவு சீரழிந்து வருகின்றன என்பதை பகடி செய்து எழுதியிருக்கிறார் முராகமி.

பிறந்த நாள் கதைகள் என்று பிறந்தநாளை முதன்படுத்தி  பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் கொண்ட ஒரு கதைத்தொகுப்பை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்

6  ராபர்ட்டோ போலனோ ( Roberto Bolaño .)

சிலி நாட்டை சேர்ந்த நாவலாசிரியர், 2666  என்ற இவரது 900 பக்க நாவல் சமீபத்தைய நாவல்களில் மிக முக்கியமானது, இந்த நாவல் போலனாவின் மறைவிற்கு பிறகு இந்த நாவல் வெளியாகி உள்ளது ஐந்து பகுதிகளாக உள்ள இந்நாவல் இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் நடைபெற்ற தொடர்கொலைகளை விவரிக்கிறது, போலனோவின் கனவுதன்மை மிக்க எழுத்து லத்தீன் அமெரிக்காவில் அரசியல் உருவாக்கிய வன்முறை மற்றும் துர்மரணங்கள் குறித்த ஆழ்ந்த மனவேதனை மற்றும் அதிகாரத்திற்கு எதிரான மாற்றுக்குரலாக ஒலிக்கிறது, BY NIGT IN CHILE இவரது மற்றொரு குறிப்பிடத்தக்க நாவல் 

7) ஹாசு இஷிகாரோ  (Kazuo Ishiguro)

இங்கிலாந்தில் வசிக்கும் ஜப்பானிய எழுத்தாளர், மான் புக்கர் பரிசு பெற்றிருக்கிறார் இங்கிலாந்தில் வசித்த போதும் ஜப்பானிய வாழ்வின் கடந்த காலங்களைப் பற்றியே இவரது நாவல்கள் பேசுகின்றன, The Remains of the Day என்ற இவரது நாவல்  முக்கியமானது, இது ஒரு இங்கிலிஷ் பட்லரின் நினைவுகளைப் பேசுகிறது, குறிப்பாக அவரது நன்னடத்தை மற்றும் நம்பிக்கைகளை விவரிக்கிறது,

ஒரு மனிதன் தனது மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வது என்பது காலப்போக்கில் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்பதையே இந்த நாவல் முதன்மையாக சுட்டிக்காட்டுகிறது, குறிப்பாக வேலைக்காரராக பணியாற்றும் ஒருவரின் தனிப்பட்ட சுகதுக்கங்கள் அவர் வேலை செய்யும் சூழலில் எப்படி வெளிப்படுகிறது,  அது சரியா தவறா என்பதை பற்றி ஸ்டீவன் என்ற நாவலின் கதாநாயகன் மனக்குழப்பம் அடைகிறான், விசுவாசமாக இருப்பது என்றால் என்ன, அதை எப்படி வரையறை செய்வது என்பதை அவன் ஆராய்கிறான், நினைவுகளாலும் நடப்பு நிகழ்ச்சிகளாகவும் இடைவெட்டிச் செல்கிறது நாவல்

8) ஜீன் சினோஷ்  (Jean Echenoz)

பனிரெண்டு நாவல்களை எழுதியுள்ள இவர் சமகாலத்தின் முக்கியமான பிரெஞ்சு எழுத்தாளர், இவரது எழுத்தும் பகடி வகையை சேர்ந்ததே, அலன் ராபே கிரியோவிற்கு நிகராகப் பேசப்படுகிறார், சரளமான கிண்டலுடன் கூடிய கதை சொல்லும் முறையே இவரது தனித்துவம், முதல்வரியிலே கதையை சொல்லத்துவங்கிவிடும் கதை சொல்லும் முறையை கொண்ட இவர் தன்னை ஒரு சீரியஸ் எழுத்தாளர் என்று சொல்வதைக் கூட கேலிசெய்தே எழுதுகிறார்

I’m Gone என்ற இவரது நாவல் ஒரு கலைக்கூடத்தை நடத்துகின்ற ஒருவரின் சொந்த வாழ்வின் சிக்கல்களையும் கலைப்பொருள் விற்பனை எந்த அளவு மலிமாகப்பட்டிருக்கிறது என்பதையும் விவரிக்கிறது, துப்பறியும் கதையை போன்ற எழுத்துமுறையோடு ஆசிரியரின் குரலும் இணைந்து இந்தக்கதையை விவரிக்கிறது,

9) எட்கர் கரிட்( Etgar Keret)

சிறந்த இஸ்ரேலிய சிறுகதையாசிரியர், பல்வேறுவிதமான கதை சொல்லும் முறையை உருவாக்கி சிறுகதைகள் எழுதி வரும் இவர் குறுங்கதைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார் The Bus Driver Who Wanted To Be God & Other Stories  என்ற இவரது சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன், தனிமையும் விரக்தியான மனநிலையும் கொண்டவர்களின் கதைகளையே அதிகம் எழுதுகிறார், திரைப்படத்துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் தனது மனைவியுடன் சேர்ந்து இயக்கிய படமான ஜெல்லி பிஷ் கான்ஸ் படவிழாவில் விருது பெற்றிருக்கிறது

10)ஷியாம் செல்லதுரை (Shyam Selvadurai)

கனடாவில் வசிக்கும் ஷியாம் செல்லதுரை  FUNNY BOY   என்ற தனது முதல்நாவலின் வழியே கவனத்தை ஈர்த்துக் கொண்டார், இந்த நாவல் இலங்கையில் உள்ள ஒரு தமிழ் குடும்பத்தின் கதையை விவரிக்கிறது,  ஷியாம் செல்லதுரையின் அப்பா தமிழர், அம்மா சிங்கள இனத்தை சேர்ந்தவர், 1983 இனக்கலவரத்தில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து போன செல்லதுரை டொரன்டோவில் வசிக்கிறார், இந்த நாவல் கொழும்புவில் அவர் வசித்த பதின்வயது நாட்களை விவரிக்கிறது, குறிப்பாக பதின்வயதின் பாலின்ப ஈடுபாட்டை மையமாக;f கொண்டு அதன் ஊடாக ஒரு தமிழ் குடும்பத்தின் அகஉலகைச் சொல்கிறது இவரது எழுத்து,  இனப்பிரச்சனையின் துவக்ககாலம். பதின்வயதின் அடையாளச்சிக்கல்கள். ஒருபாலின்ப ஈடுபாடு என்று நாவல் விவரிக்கும் களம் நுட்பமானது, CINNAMON GARDENS இவரது சமீபத்தைய நாவல்

இவர்களுடன் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஒரான் பாமுக்(Orhan Pamuk) கனடாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான மார்க்ரெட் அட்வுட் (Margaret  Atwood).  இத்தாலியின் ராபர்ட்டோ கலாசோ (Roberto Calasso) பிரான்சின் மார்க்ரெட் யூரிசனார் ( Marguerite Yourcenar) அமெரிக்காவின் பிலிப் ராத் ( Philip Roth) போன்றவர்களையும் விரும்பி வாசிப்பதுண்டு

இவர்களது நாவல்கள் ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக எழுதினால் அது தனிப்புத்தகம் அளவு வந்துவிடும், ஆகவே  இவர்களைத் தேடி வாசித்து அறிந்து கொள்ள வேண்டியது  உங்களின் வேலை,

இந்தப் புத்தகங்கள் சென்னை பெங்களுர் டெல்லி போன்ற பெருநகரங்களில் உள்ள லேண்ட்மார்க், ஒடிசி மற்றும் புக்வார்ம் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன, இணையத்தில் ஆன்லைனிலும் இவற்றை  வாங்க இயலும்,

புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பதில் உங்களது மனவிருப்பமும் ஈடுபாடுமே முதன்மையானது, இருபது வயதில் நான் படித்துக் கொண்டாடிய சில புத்தகங்களை இன்று பத்து பக்கங்கள் கூடப் புரட்டிப்படிக்க முடியவில்லை, அதே நேரம் அன்று வீண்வேலை என்று புறமொதுக்கிய சிறுவர்களுக்கான நாவல்கள் இன்று வாசிக்க அருமையாக இருக்கின்றன, ஆகவே படிப்பது நமது மனதின் தேர்வாலே பெரிதும் அமைகிறது,

நான் தற்போது CHILDREN CLASSIC`S எனப்படும் ROBINSON CRUSOE ,GULLIVER’S TRAVELS , RIP VAN WINKLE, LITTLE WOMEN, THE WONDERFUL WIZARD OF OZ, THE ADVENTURES OF TOM SAWYER , HEIDI படிப்பதில் தான் அதிகம் விருப்பம் கொண்டிருக்கிறேன், அது தரும் புத்துணர்வும மற்றும் அலாதியான வாசிப்பு இன்பத்திற்கு நிகராக வேறு எதுவும் இல்லை.

••

0Shares
0