மக்களின் கலைகள்

ஜப்பானின் மிகவும் புகழ்பெற்ற மண்பாண்டக் கலை குறித்த Handmade in Japan -Mingei Pottery என்ற பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்டங்கள், பீங்கான் பொருட்கள் செய்து வரும் கைவினைஞர்களின் மரபு இன்றும் தொடர்கிறது. ஜப்பானின் மாஷிகோ நகரம் பீங்கான் மற்றும் மண்பாண்டங்களுக்குப் புகழ்பெற்றது. அங்கே ஷோஜி ஹமாடா என்ற மட்பாண்டக் கலைஞரின் குடும்பத்தினர் பராம்பரியமான முறையில் இன்று கலையைத் தொடருகிறார்கள். அதே பழைய பாணியில் உள்ள சூளை அடுப்பினைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக, ஜப்பானியர்கள் உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மரம், களிமண் மற்றும் மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிறந்த கலைப்பொருட்களைத் தயாரித்து வருகிறார்கள் . எடோ காலம் முழுவதும் (1615-1868), ஜப்பானில் கைவினை உற்பத்தி செழித்து வளர்ந்தது இரண்டாம் உலகப்போரின் பிறகு நவீன தொழில்மயமாக ஜப்பான் மாறிய போதும் இந்த மரபு கைவிடப்படவில்லை.

மண்பாண்டங்களைச் செய்வதற்கு ஏற்ற களிமண் படிவுகளைத் தேடி வாங்குவது அவசியம். இதற்காக மாஷிகோ நகரைச் சுற்றிய மலைப்பகுதியில் கிடைக்கும் களிமண் படிவுகளைப் பாளம் பாளமாக வெட்டி எடுத்து வந்து  வணிகர்கள்  விற்பனை செய்கிறார்கள்.  அதை வாங்கிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளும கைவினைஞர்கள் தேவையான போது பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மட்கலங்களைச் சுடும் சூளை மரபான முறையில் இன்று விறகுகள் மூலமே எரிக்கப்பட்டுச் சூடேற்றப்படுகிறது. வண்ணம் தீட்டுவதும், அலங்காரம் செய்வதும், மெருகு ஏற்றுவதும் முற்றிலும் கையால் தான் செய்யப்படுகிறது. இயந்திரங்களின் உதவியின்றிச் செய்யப்படும் இந்தப் பொருட்களுக்குச் சந்தையில் பெரிய கிராக்கியிருக்கிறது என்கிறார்கள்.

தேநீர் குவளைகள், கலயங்கள் ,பூக்குவளைகளைச் சூளையில் வைத்து நெருப்பு வைக்கும் முன்பாக தெய்வத்தை வணங்குகிறார்கள். தெய்வத்தின் அருள் இல்லாமல் நெருப்பு சீராகச் சூடு தராது என்பது நம்பிக்கை. அது போலவே சூளையில் பகலிரவாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது குழந்தையை அருகிலிருந்து கவனித்துக் கொள்வது போல அக்கறையோடு கவனிக்கிறார்கள். சுட்டு எடுத்த கலயங்களைத் தொட்டுப் பார்க்கும் போது ஹமோதா முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். அந்தக் கலயத்திற்குச் சிவப்பும் மஞ்சளும் கலந்த வண்ணம் தீட்டுகிறார். மீண்டும் அதை மெருகு ஏற்றுவதற்காக மிதமான சூட்டில் வைக்கிறார். முழுமையாகச் சுட்டு எடுக்கப்பட்ட மண்பாண்டங்கள் அத்தனை அழகாக இருக்கின்றன.

மாஷிகோவில் நிறையக் கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சூளையிலிருந்து எழும் புகையை வைத்து யாருடைய சூளை என்றைக்குப் பானைகளைச் சுடுகிறார்கள் என்று மக்கள் தெரிந்து கொள்வார்களாம். 2011ல் ஏற்பட்ட பூகம்பம் காரணமாகச் சூளைகள் உடைந்து நொறுங்கிப் போயின. இதனால் மண்பாண்டக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் இந்த மரபைக் கைவிடக்கூடாது என்று சூளைகளை மறு உருவாக்கம் செய்து மீண்டும் தங்கள் பணியைத் தொடர்ந்து வருகிறார்கள்

சூட்சு யானகி (1889-1961) தலைமையில் மிங்கே இயக்கம் – அதாவது “மக்களின் கலைகள்” என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. ஜப்பானின் நவீனமயமாக்கல் முறைகளுக்கு எதிர்வினையாக மிங்கே கைவினைஞர்களால் செய்யப்படும் கலையை முன்னெடுக்கிறது.

இயந்திரத்தின் மூலம் நகலெடுத்து உருவாக்கப்படும் பொருட்களைப் போலின்றி அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து கைவினைஞர்களால் நுட்பமாக இந்தக் கலைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

கலைஞனின் மனதில் அன்பும் நேசமும் இல்லாமல் கலைப்பொருட்கள் உருவாக்கப்பட்டால் அவை சிறந்த கலைப்பொருளாக இருக்காது என்ற எண்ணம் இந்தக் கைவினைஞர்களிடம் உள்ளது. ஆகவே அவர்கள் தியானம் செய்வது போன்ற மனதுடன் தான் கலைப்பொருட்களைச் செய்கிறார்கள்.

Hand of the artisan is no longer his or her own hand, but the hand of nature. The craftsman does not aim to create beauty, but nature assures that it is done. He himself has lost all thought, is unconsciously at work. Just as faith appears of its own accord from ardent belief, beauty naturally appears in works unconsciously created என்கிறார் சூட்சு யானகி

இந்த ஆவணப்படத்தில் நாம் காணும் கலைஞர்களின் கலைத்திறனைக் காணும் போது சூட்சு யானகி சொன்னது உண்மை என்று நன்றாகவே புரிகிறது

••

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: