ஊர்வாசம்

ந.முருகேச பாண்டியன் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர். தேர்ந்த படிப்பாளி. தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ள புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், புதுக்கோட்டையில் வசிக்கும் அவர் நாடகம். சிறுபத்திரிக்கை. கல்வி. நூலகத்துறை என்று விரிந்த தளங்களில் இயங்குபவர்.

உயிரோசை இணைய இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கிராமத்து தெருக்களின் வழியே என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன், தனது கிராம வாழ்வின் நினைவுகளை துல்லியமாக, அதே நேரம் மிகை உணர்ச்சியின்றி அழகாக சித்தரித்திருக்கிறார்

வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவர் பால்ய நாட்களுக்குச் சென்று திரும்பும் அனுபவம் பெறுவது உறுதி, நினைவு எவ்வளவு வலியது என்பதை இந்தப் புத்தகம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது

சொந்த ஊரைப்பற்றி பேசுவதை ஏதோ நாஸ்டர்ல்ஜியா என்று நினைக்கிறார்கள், அது தவறு , இது தனிநபரின் ஆதங்கமில்லை, காலம் எப்படி உருமாறி வருகிறது என்பதன் அனுபவச் சாட்சி. எப்படி உருவானோம், எது நம் அகத்தை உருவாக்கியத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொள்வது . நினைவுகள் இப்படி பல்வேறு விதங்களில் மீள் பரிசீலனை செய்யப்படுகிறது

முருகேச பாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக கலாச்சார சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும். இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார், அத்துடன் சாதிய அடக்குமுறை. வன்முறை. மூடத்தனம் போன்றவற்றை நேரடியாக விமர்சிக்கவும் செய்கிறார்

வாசிக்கையில் சொற்களின் வழியே கடந்தகாலம் நுரையோடு ததும்பி வருவதை நன்றாக உணர முடிகிறது

கடந்த காலம் என்பது முடிவுற்ற ஒன்றில்லை, அது நினைவில் எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருக்க கூடியது என்பதையே இவரும் சுட்டிக்காட்டுகிறார்

ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாக தன்னை உணரும் முருகேச பாண்டியன் தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளை பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழ் வாழ்க்கை எப்படி காலம் தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இதன் சிறப்பு

ஊரின் இயற்கைவளங்கள் அழிக்கப்பட்டு வணிகமயமான சூழல் உருவாகி போனதையும். மக்கள் தங்களுக்கான சுயஅடையாளங்கள். கலைவெளிப்பாடுகளை இழந்து மொண்னையாகி வருவதையும் விரிவாகவே எடுத்துக்காட்டுகிறார்

வாசிக்கையில் எவ்வளவு கிராமிய விளையாட்டுகள். கலைகள். விழாக்கள், மனிதஉறவுகள். எளிய இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நாம் இழந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது,  

கிராமத்தை கொண்டாடும் மனநிலையில் இருந்து இது எழுதப்படவில்லை, மாறாக ஒரு வாழ்வியல் வெளி புறக்காரணங்களால் எப்படி கட்டமைக்கபடுகிறது, வீதிகள் வீடுகள் துவங்கி மனித மனம்  கூட எப்படி காலமாற்ற்த்தோடு தன்னை  உருமாற்றி கொள்கிறது, ஏன் இயற்கை விவசாயம். நாட்டார் கலைகள். கூட்டுவாழ்வை காரணமின்றி கைவிட்டோம். என்ற கேள்வியை எழுப்புகிறது

விவசாயம். சக உயிர்களோடு இணைந்த வாழ்க்கை. கிராம நம்பிக்கைகள். சிறார் விளையாட்டுகள். திருமணமுறைகள். வேடிக்கை விநோதங்கள். தீட்டு . கிராமிய மருத்துவம். போதை. கிராமிய கலைகள் என்று பதினெட்டு கட்டுரைகள் இந்த தொகுப்பில் உள்ளன

இது ஒரு கிராம வாழ்வின் ஐம்பது ஆண்டுகால மாற்றங்களை விரிவான ஆவணப்பட்ம் போல  நமக்குக் காட்டுகிறது.

பண்பாட்டு மாற்றங்களை அதிலிருந்து விலகியிருந்து பாரபட்சமின்றி எழுத்தில் பதிவு செய்வது எளிதானதில்லை, அதில் முருகேச பாண்டியன் வெற்றி பெற்றிருக்கிறார்

கிராமத்து தெருக்களின் வழியே  ந. முருகேச பாண்டியன்

உயிர்மை பதிப்பகம் 11/ 29 சுப்ரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை18 தொலைபேசி 24993448

விலை ரூ 90 பக்கங்கள  182

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: