திருலோக சீதாராம்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் திருலோக சீதாராம். சிறப்பான மொழியர்ப்பு. 1962 ஆகஸ்ட் 9ம் தேதியன்று ஹெஸ்ஸே காலமான செய்தியை ரேடியோவில் கேள்விபட்ட திருலோகம் தனது உறவினர்களில் ஒருவர் இறந்து போனது போலப் பதறிப்போயிருக்கிறார்

அதைக்கண்ட மனைவி யாரு இறந்து போனது எனக்கேட்டதற்கு, என் சொந்தம். உனக்கு இதுல தீட்டு இல்லை என்று சொல்லிவிட்டு ஹெஸ்ஸேயிற்க்காக தான் தீட்டு காக்கவில்லை என்றாலும் உடனே ஒரு முழுக்கு போட வேண்டும் எனக் கிணற்றடிக்குப் போய்க் குளித்துத் துக்கம் அனுஷ்டித்திருக்கிறார்.

ஒரு எழுத்தாளர் மீது மொழிபெயர்ப்பாளர் கொண்டிருந்த அன்பிற்கு இதைவிட உயர்வான நிகழ்வு வேறு என்ன இருக்கமுடியும்.

இந்தத் தலைமுறையை சேர்ந்த பெரும்பான்மையான வாசகர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் திருலோக சீதாராம் யார் என்றே தெரியாது. அறிந்து கொள்ளும் முனைப்பும் குறைவு.

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியப்பரப்பில் திருலோக சீதாராம் மிக முக்கிய ஆளுமை. கவிஞர். சிவாஜி பத்திரிக்கையின் ஆசிரியர். பாரதி பாடல்களை ஊர் ஊராகப்பாடிய பாடகர். மொழிபெயர்ப்பாளர். சிறந்த மேடைப்பேச்சாளர். தமிழ் அறிஞர், இப்படித் தனது வாழ்க்கையைத் தமிழ் இலக்கியத்தின் மேம்பாட்டிற்காகவே செலவிட்ட அரிய மனிதர்.

திருலோக சீதாராமின் பூர்வீகம் திருவையாறு . ஆனால் பெரம்பலூர் அருகிலுள்ள அருகில் தொண்ட மாந்துறையில் தாய்மாமா வீட்டில் வளர்ந்திருக்கிறார்.

பாரதி மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது குடும்பத்துடன் நெருங்கிப்பழகியவர் திருலோகம். பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை கதாகாலட்சேபம் செய்வதுபோல இசைத்து மேடையில் பாடியிருக்கிறார்

பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் இறுதிகாலத்தில், அவரோடு தங்கி பணிவிடைகளை செய்தவர் சீதாராம். செல்லம்மாவின் உயிர் அவரது மடியில் தான் பிரிந்தது

கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான நண்பர் ரவி சுப்ரமணியன் திருலோக சீதாராம் பற்றி அற்புதமான ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

திருலோகம் என்றொரு ஆளுமை  என்ற இப்படம் அவரது வாழ்க்கை மற்றும் எழுத்துலகம் குறித்து விரிவான ஆய்வின் வழியே உருவாக்கபட்டுள்ளது. அரிய கோப்புக்காட்சிகள். புகைப்படங்கள். தகவல்களைத் தேடி வழங்கியிருக்கிறார்.

எழுத்தாளர்களின் புகைப்படங்களோ, கையெழுத்துபிரதிகளோ, புத்தகங்களோ எதுவும் ஆவணப்படுத்தபடாத சூழலில் இவற்றைத் தேடிச்சேகரிப்பது எளிதான வேலையில்லை. ஒன்பது மாதங்கள் இதற்கான ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். அந்த உழைப்பின் பலனே சிறப்பான இந்த ஆவணப்படம். `ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை’இதனை தயாரித்துள்ளது

பாரதிதாசனின் பாடலை ஓவியர் மருது வரைந்த ஓவியங்களைக் கொண்டு அனிமேஷன் செய்திருப்பது சிறந்த முயற்சி

கவித்துவமாக உருவாக்கபட்ட இந்த ஆவணப்படத்தில் திவாகர் சுப்ரமணியத்தின் நேர்த்தியான இசையும் சிபி சரவணனின் அருமையான ஒளிப்பதிவும் இணைந்து நம்மைக் காலத்தின் பின்னோக்கி அழைத்துப் போகின்றன. ரவி சுப்ரமணியன் சிறந்த பாடகர். முறையாக இசைகற்றுக் கொண்டவர். அதன் வெளிப்பாட்டினை இந்த ஆவணப்படத்தில் முழுமையாகக் காணமுடிகிறது.

சீதாராமின் புதல்வர்களில் ஒருவரான சுப்ரமணியன் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார். அவர் தனது தந்தைக்கு செலுத்திய சிறந்த அஞ்சலி இதுவென்பேன்.

திருலோக சீதாராமின் நண்பரும் சீடருமான தமிழறிஞர் டி. என். ராமச்சந்திரன் அவர்களின் நேர்காணல் இப்படத்தின் தனிச்சிறப்பு. அவர் திருலோக சீதாராமைப்பற்றிப் பேசும்போது நெகிழ்ந்து போய்த் தனது நினைவுகளைக் கண்ணீருடன் பகிர்ந்து தருகிறார்.

திருலோக சீதாராம் தான் நடத்திய சிவாஜி இதழின் ஆண்டு மலருக்குப் பாவேந்தரிடம் ஒரு கவிதை கேட்ட போது சீதாராமை புகழ்ந்து ஒரு கவிதை எழுதி கொடுத்திருக்கிறார்.

அதற்குப் பாவேந்தர் சொன்ன காரணம்

“திருலோகம் உனக்கு என்ன பஞ்சம் தெரியுமா? புகழ் பஞ்சம். உன் அருமை உனக்குத் தெரியலை. அதான் நான் கவிதையா எழுதி, என் கையெழுத்தும் போட்டிருக்கேன். “

திருலோகத்தின் பெருமைகளை, தியாகத்தை இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு நினைவூட்டும் விதமாக ரவி சுப்ரமணியன் இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவருக்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இலக்கியவாசகர்கள், ஆய்வாளர்கள் இந்த டிவிடியை வாங்கிப் பார்த்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரிகள். இலக்கிய அமைப்புகள். பள்ளிகளில் இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டு காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

••

டிவிடி விலை ரூ 300.

தேவைப்படுகிறவர்கள் தொடர்பு கொள்க

ரவிசுப்ரமணியன் cell.9940045557

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: