பப்புவின் காலணி

புதிய சிறுகதை.  (அச்சில் வெளிவராதது.)

“பப்பு உனக்காக இன்று காலையில் புது ஷு ஒன்று வாங்கியிருக்கிறேன். உனக்குப் பிடித்திருக்கிறதா“ என வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் என் மகளுக்குத் தகவல் அனுப்பி வைத்தேன். அவள் லண்டனில் வசிக்கிறாள். மருத்துவராக இருக்கிறாள்.

மறுநிமிசம் அவளிடமிருந்து பதில் தகவல் வந்தது

“அப்பா.. என் வயது 37. நீங்கள் என்னை இன்னமும் சிறுமியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய ஷு பத்து வயது சிறுமி அணியக் கூடியது. இது இந்த ஆண்டில் நீங்கள் வாங்கிய பதினெட்டாவது ஷு. உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை“

அதைப் படித்து நான் சிரித்தேன்.

••

பப்பு சொல்வது உண்மை. அவள் வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாள். திருமணமும் நடந்துவிட்டது. ஆனால் இவை எல்லாம் தெரிந்த போதும் மனதில் அவள் சிறுமியாக உள்ள எண்ணம் மாறவேயில்லை. இப்போதும் கடைத்தெருவிற்குப் போகையில் எங்காவது அழகான சிறுமிகளின் காலணியைப் பார்த்துவிட்டால் உடனே இது பப்புவிற்கு அழகாக இருக்குமே என்று தோன்றுகிறது. உடனே என்னை அறியாமல் அந்த ஷுவை வாங்கியும் விடுவேன்.

அந்த ஷுவை பப்பு அணிந்து கொள்ளவே முடியாது என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் அதைப் புகைப்படம் எடுத்து அவளுக்கு அனுப்பி வைப்பேன். சில நேரங்களில் அவள் வியப்பூட்டும் ஸ்மைலியை பதிலாக அனுப்பி வைப்பாள். சில நேரம் பதிலே அனுப்ப மாட்டாள்

பப்புவிற்காக வாங்கிய செருப்புகளை வைப்பதற்காக ஒரு மர ரேக் செய்தேன். அந்த ரேக்கினுள் இருப்பவை அத்தனையும் அவளுக்காக வாங்கிய செருப்புகள் தான்.

பப்பு சிறுவயதில் விதவிதமான செருப்புகள் அணிய ஆசைப்பட்டாள். பூனை போன்று சப்தம் எழுப்பும் ஷு ஒன்றுடன் அவள் வீட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. முயல் வடிவ ஷு, வெளிச்சம் மினுங்கும் ஷு. வின்னி படம் போட்ட லேஸ் வைத்த ஷு, சிண்ட்ரல்லா தேவதை ஷு எனப் பல்வேறு விதமான ஷுக்களை அவளுக்காக வாங்கித் தந்திருக்கிறேன். இரவில் உறங்கும் போது கூட அதைக் கழட்ட மாட்டாள். அவள் உறங்கியதும் ஷுவை கழட்டி படுக்கை அடியிலே வைத்திருப்பேன், காலை எழுந்தவுடன் ஷுவை தேடி போட்டுக் கொள்வாள்.

கடைகளுக்கு அழைத்துப் போகும் போது சிறுவர்கள் சாக்லெட் , பொம்மைகள் கேட்பது வழக்கம். ஆனால் பப்பு அப்படியில்லை. அவள் விதவிதமான ஷுக்களை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிலவற்றை அணிந்து பார்த்துச் சந்தோஷம் அடைவாள். ஒவ்வொரு முறை நாங்கள் ஷாப்பிங் போய் வரும் போது அவளுக்குப் புதுச் செருப்பு ஒன்றிருக்கும்.

இதற்காக என் மனைவி நிறையத் தடவை சண்டையிட்டிருக்கிறாள். பணத்தை வீணடிக்கிறேன் என்று கோவித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் எனக்குக் கடைக்குப் போனால் பப்புவிற்குப் பிடித்தமான பொருட்கள் மட்டுமே கண்ணில்படுகின்றன.

அலுவலக வேலை காரணமாக வெளிநாடு போய் வரும் போதும் கூடப் பப்புவிற்கு ஆடைகளும் ஷுவும் தான் வாங்கி வருவேன்.

பள்ளிக்குப் போகத் துவங்கிய பிறகு பப்பு மாறிப்போனாள். கறுத்த முயல்குட்டி போன்ற ஷுக்களுக்கு மட்டுமே பள்ளியில் அனுமதி என்பதால் மற்ற செருப்புகளை அவள் ஒதுக்க ஆரம்பித்தாள். எட்டாம் வகுப்பிற்குப் பிறகு அவளது ஆசைகள் மாறிப் போயின. பெரும்பாலும் அவள் தனியாக ஷாப்பிங் போய்வரவே விரும்பினாள். சில நேரம் தோழிகளுடன் போய் வருவாள். என்ன வாங்கி வந்திருக்கிறாள் என்பதைக் காமிக்க மாட்டாள். பிறந்த நாளின் போது ஏதாவது பரிசு வாங்கித் தருவதாக இருந்தால் கூடப் பணமாகக் கொடுங்கள் என்று சொல்வாள்.

பணத்தைக் கொண்டு என்ன வாங்க போகிறாள். அவள் கேட்டதை எல்லாம் நானே வாங்கித் தந்துவிடுவேனே எனத் தோன்றும். பப்பு எதற்காகப் பணம் சேர்க்கிறாள் என எனக்குப் புரியாது.

மருத்துவக் கல்லூரி போய் வரத்துவங்கிய பிறகு பப்பு எங்களை விட்டு விலகிப் போவதை அதிகம் உணர துவங்கினேன். எப்போதும் அவள் ஏதோ யோசனையிலே இருந்தாள். விருப்பமான எதையும் சாப்பிடுவதும் கிடையாது. பின்னிரவில் அவள் விழித்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவளது உடைகளும், குரலும் கூட உருமாறிப்போயின.

எப்போதாவது அசதியாக அவள் உறங்கிக் கொண்டிருக்கையில் அருகில் உட்கார்ந்து அவளைப் பார்த்தபடியே இருப்பேன்

“அது என் பப்பு தானா.. இல்லை வேறு பெண்ணா. “

பப்பு விழித்தவுடன் மெல்லிய புன்னகையுடன்“ என்னப்பா“ எனக்கேட்டாள்

“இப்போ நீ எதுவும் என்கிட்ட கேட்கிறதேயில்லை“ என்று சொல்வேன்

“நான் ஒண்ணும் சின்னபிள்ளயில்லைப்பா“ எனச்சிரிப்பாள்.

என் கழுத்தைக்கட்டிக் கொண்டு என் மடியில் தூங்கிய பெண் இவளில்லை. ஆனால் அந்தச் சிரிப்பு மட்டும் அப்படியே இருக்கிறது

அவளை ஏறிட்டு பார்த்தபடியே எப்படியிருக்குக் காலேஜ் எனக்கேட்பேன். அவள் பதில் சொல்லமட்டாள். வெறும் சிரிப்பு. அல்லது பதில் சொல்லாமல் எழுந்து போய்விடுவாள்.

அவள் கல்லூரியில் படிக்கும் வயதில் கூட நான் அவளுக்காகச் சிறுமி அணியும் காலணியை வாங்கி வந்திருக்கிறேன். அதை எதற்காக இப்படி வாங்கிச் சேகரிக்கிறேன் என எனக்குப் புரியவேயில்லை

என் சிறுவயதில் வீட்டில் செருப்பு வாங்கித் தந்ததேயில்லை. நான் படித்த காலங்களில் பள்ளிக்குச் செருப்பு அணிந்து வரும் சிறார்களும் குறைவு. வசதியான வீட்டுப் பிள்ளைகள் தான் செருப்பு அணிந்து வருவார்கள். மற்றவர்கள் வெறும்கால்வாசிகள் தான்.

என் வீட்டில் அப்பா அம்மா இருவர் மட்டுமே செருப்பு அணிந்திருந்தார்கள். அதிலும் அம்மாவின் செருப்பு மிகவும் பழையது. ஒரு முறை அப்பாவோடு செருப்பு கடைக்குப் போன போது அழகான லெதர் செருப்பு ஒன்றை பார்த்தேன். அப்பாவிடம் அது வேண்டும் எனக் கேட்டபோது அவர் பணமில்லை என வாங்கித் தர மறுத்துவிட்டார்.

அந்த ஆண்டுப் பங்குனி பொங்கலுக்காக வந்த மாமா தான் எனக்கு முதன்முதலாகச் செருப்பு வாங்கித் தந்தார். அது ரப்பர் ஸ்லீப்பர். அதைப் போட்டுக் கொண்டு சப்தம் வர தெருவில் நடந்து திரிந்தேன். பத்தாம் வகுப்புப் படிக்கையில் தான் புதுச் செருப்பு நானாக வாங்கினேன். பின்பு கல்லூரி நாட்களில் வேண்டும் என்றே விலை உயர்வான செருப்புகளை வாங்கி அணிந்து கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு ஷு வைத்துக் கொள்வதற்காகத் தனி ரேக் ஒன்று வாங்கிக் கொண்டேன். என்னிடம் பத்து ஜோடி ஷுக்கள் இருக்கின்றன.

ஆனால் அவை பயன்படுத்தக்கூடியவை. பப்புவிற்காக வாங்கி வைத்துள்ள செருப்புகளோ அணிய முடியாதவை.

ஒரு முறை பப்பு சொன்னாள்

“இந்த செருப்புகளை யாருக்காவது கொடுத்துவிடுங்கள்“.

“என் பேத்தி அணிந்து கொள்ளட்டும்“ என்றேன்

“பேத்தி கீத்தி என்ற பேச்செல்லாம் வேண்டாம். எனக்கு இருப்பது ஒரு பையன். அத்தோடு போதும் என நாங்கள் முடிவு செய்து கொண்டுவிட்டோம்“

“ஒரேயொரு பிள்ளையாக நீ வளர்ந்தாய். அப்படி உன் மகனும் வரவேண்டுமா“ எனக்கேட்டேன்

“எங்களுக்கு ஒரு பிள்ளை போதும் டாட்“ என்றாள் பப்பு

அந்தக்குரலில் உறுதி தெரிந்தது.

“அப்படியானால் இந்தச் செருப்புகள் உன் ஞாபகமாக இருக்கட்டும்“ என்று சொல்லிச் சிரித்தேன்

“யாராவது இதைப் பார்த்தால் கேலி செய்வார்கள்“ என்றாள் பப்பு. அப்போது அவள் முகம் இறுக்கமடைந்திருந்தது.

“அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது. பப்பு, உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். எனக்கு நீ சிறுமியே தான். ஷாப்பிங் மாலில் சின்னக் கவுனை, செருப்பை, வளையல்களை, ரிப்பனை பார்த்தால் உன் நினைவு மட்டுமே வருகிறது“

“உங்களுக்கு இருப்பது மனநோய்“ என்று அவளும் சிரித்தாள்

“மனநோய் என்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே“.

அணிந்து கொள்ளாத செருப்புகளைக் காணும் போது இனம் புரியாத வலி உருவாவது உண்மை தான்.

இந்தச் செருப்புகள் காலம் கடந்து போய்விட்டது என்பதை எனக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.

நான் ஏன் அதைப் புரிந்து கொள்ள மறுக்கிறேன்.

பிள்ளைகள் வளருவார்கள் என்பது உண்மை தானே. ஏன் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன். என் மகள் என்பதற்காகப் பப்பு பத்து வயதோடு நின்றுவிடுவாளா என்ன.

அவளுக்காக வாங்கிச் சேகரித்துள்ள செருப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. முன்பு இதைப் பற்றித் திட்டிக் கொண்டிருந்த மனைவி இப்போது வாயே திறப்பதில்லை. சில வேளைகளில் அவளே அந்தச் செருப்புகளைத் துடைத்து அடுக்கி வைக்கிறாள். பப்புவிற்காக வாங்கிய தொட்டில் மரக்குதிரை, சைக்கிள், எல்லாவற்றையும் கூட உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டோம். ஆனால் இந்தச் செருப்புகளைக் கொடுக்க மனதேயில்லை.

சென்ற கோடைவிடுமுறையில் பப்பு லண்டனில் இருந்து வந்திருந்த போது சொன்னாள்

“உங்கள் பர்ஸில் எனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இந்தப் பழக்கம் நிற்கும்“

அதைக் கேட்டு நான் சிரித்தேன்

“என் பர்ஸில் நீ லண்டனில் குடும்பத்துடன் உள்ள புகைப்படம் தான் வைத்திருக்கிறேன். மனதில் தான் அந்தப் புகைப்படத்தை மாட்ட முடியவில்லை. மனதின் சுவரில் உன் பள்ளி வயது புகைப்படம் மட்டுமே மாட்டப்பட்டிருக்கிறது“

பப்பு சிரித்ததபடியே சொன்னாள்

“உங்களைத் திருத்தவே முடியாது டாட்.. ஒவர் செண்டிமெண்ட். “

அது நிஜம். ஒவர் செண்டிமெண்ட். ஆனால் அதில் என்ன தவறு இருக்கிறது. ஏன் அதைக் கேலி செய்கிறாள்.

பப்பு லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்பாகத் திடீரென என்னை ஷாப்பிங் போக அழைத்தாள். நீண்ட காலத்திற்குப் பிறகு அவளுடன் ஒன்றாகக் கடைக்குப் போகிறேன். நகரின் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றுக்குள் சென்றோம். அவள் இரண்டு பைகள் உடைகள், அலங்காரப் பொருட்கள் என நிறைய வாங்கினாள். இருவரும் ஒன்றாக ஐஸ் கிரீம் சாப்பிட்டோம்.. திடீரென அவள் டெஸ்டோனி ஷுவிற்கும் கடைக்குள் என்னை அழைத்துப் போனாள்.

அவளாகவே ஒரு ஷுவை தேர்வு செய்து வாங்கிக் கொடுத்தாள். விலை ஐம்பதாயிரத்திற்கும் மேல்.

“இவ்வளவு விலையுள்ள ஒரு ஷு எனக்கு எதற்காக“ என மறுத்தேன்

“இப்படியாவது உங்களை விட்டுப் பைத்தியம் போகிறதா எனப்பார்ப்போம்“ எனச் சிரித்தாள்.

அந்த ஷூவினை அணிவதற்கு எனக்குக் கூச்சமாகயிருந்தது. அதைப் பத்திரமாக அட்டைப்பெட்டியில் வைத்துக் கொண்டேன். ஆனால் பப்புவிற்காகச் சிறுமிகள் அணியும் காலணி வாங்கும் பழக்கம் என்னை விட்டு போகவேயில்லை.

குழந்தைகள் ஏன் மனதில் ஒரு குறிப்பிட்ட வயதின் சித்திரத்துடன் தங்கிவிடுகிறார்கள். நானும் அப்படித் தான் என் பெற்றோர் மனதில் தங்கியிருப்பேனா..

சில வேளைகளில் வீட்டில் நானும் என் மனைவியும் மட்டும் இருப்பதை உணரும் போது ஊற்றில் தண்ணீர் கொப்பளிப்பது போல மனதில் துயரம் கொப்பளிக்கத் துவங்கும். பூதாகரமாகத் தனிமை வளர்ந்து என்னைக் கவ்வி கொள்ளும். லைட்டை கூடப் போடாமல் ஹாலுக்கு வருவேன். அதன் ஒரு மூலையிலுள்ள பப்புவிற்காக வாங்கிய செருப்புகளை வைக்கும் பீரோவை திறந்து இருட்டிலே அதைத் தடவி கொடுப்பேன். முட்டாள்தனமான செய்கையாக உலகிற்குத் தோன்றக்கூடும்.

வயதான தந்தை என்பவன் ஒரு முட்டாள் தான். அவனது செய்கைகளை உலகால் புரிந்து கொள்ளமுடியாது.

இருட்டிலே அந்தப் பீரோவை மூடிவைத்துவிட்டு அதன்முன்னே நின்று கொண்டேயிருப்பேன்.

இந்நேரம் லண்டனில் பப்பு ஹாஸ்பிடலில் வேலை செய்து கொண்டிருப்பாள். இனிமேல் தான் சாப்பிடுவாள். உறங்கப்போவாள் என அவளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன். அப்படி நினைக்க நினைக்க மனது ஆறுதல் கொள்ளத்துவங்கும்

பப்பு பள்ளிக்குச் சென்ற நாட்களில் அவள் பள்ளிவிட்டுத் திரும்புகிற போது ஒரு முறை கூட நான் வீட்டில் இருந்ததேயில்லை. அதை அவள் ஒரு முறை சொல்லிக் காட்டினாள். அவளுக்காகவே ஒரு நாள் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து அவளை வரவேற்றேன். அசதியும் சோர்வுமாக அவள் பள்ளியில் இருந்து வந்து நேராகப் படுக்கையில் போய்விழுந்து கொண்டாள். ஒரு வார்த்தை கூடப் பேசவேயில்லை. அது எனக்கு மிகுந்த மனவேதனையாக இருந்தது.

சொல்லிக் கொள்ளமுடியாத வேதனைகள் இல்லாத தந்தை யார் இருக்கிறார்கள்.

பப்பு லண்டனுக்கு வேலை கிடைத்து கிளம்பும் போது அம்மாவிடம் சொன்னாள்

“அப்பாவை பார்த்துக் கொள். அவர் ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறார்“

என் மனைவி இறுக்கமான முகத்துடன் சொன்னாள்

“அது உன் விஷயத்தில் மட்டும் தான். அவருக்கு உன்னைப் பற்றிக் கவலை. என்ன கவலை என்று எனக்குப் புரியவேயில்லை“

என் மனைவி சொன்னது சரி.

கவலை. தீர்க்கமுடியாத கவலை.

ஆனால் அது கவலைதானா.. இல்லை வேறு ஒன்றா..

•••

வாட்ஸ்அப்பில் பப்பு இன்னொரு பதில் அனுப்பியிருந்தாள்

“இந்தச் செருப்புகளை எல்லாம் ஒரு கண்காட்சியாக வையுங்கள் டாட். நானே வந்து அதைத் திறந்து வைக்கிறேன்“

அதைப் படித்துச் சிரித்தேன். பிறகு அவளுக்குப் பதில் எழுதினேன்

“என் முட்டாள்தனம். என்னோடு இருந்துவிட்டு போகட்டும்“

பதிலுக்கு அவள் சிரிக்கும் ஸ்மைலி ஒன்றை அனுப்பியிருந்தாள்.அந்தத் திறந்த வாய்க் கொண்ட முகம் என்னைப் போலவே இருந்தது.

பப்புவிற்காக வாங்கிய செருப்பை ரேக்கைத் திறந்து பத்திரமாக வைத்துவிட்டுக் காலையில் படித்துப் பாதியில் விட்டுப் போன நீயூஸ் பேப்பரை மறுபடி வாசிக்க ஆரம்பித்தேன்.

பிள்ளைகள் தான் வளருகிறார்கள். தந்தை வளர்வதேயில்லை போலும்.

••

ஜுலை 28. 2018

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: