உறுபசி

அ.திருவாசகம்,

எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி” நாவல் வாசித்தேன். எந்த மிகை உணர்ச்சியும் இல்லாமல் உண்மையான வார்த்தைகளால் நாவலை பதிவு செய்திருக்கிறார்.

கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த சம்பத் என்ற நண்பனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாக இருக்கிறான்.

அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்ட சம்பத்தின் சட்டையில் ஒரு சிவப்பு எறும்பு ஊர்ந்து போய் கொண்டிருந்ததையும், அதனை இனி தட்டி விடத் தேவையில்லை என அவன் மனைவி  எண்ணுவது இரக்கத்தை ஏற்படுத்துகிறது.

சம்பத்தின்  மரணம், அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த  அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. அழகர் சிகரெட் பற்ற வைத்த கயிறு கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருப்பதை எண்ணி மனிதன் வாழ்வும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறதோ என அவன் மனதில் மெல்லிய பயம் ஏற்படுகிறது.

சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு சொல்லப்படுகிறது.

சம்பத்தின்  மரணத்தின் போது, நீர்மாலை எடுத்து வருவதற்காக தெருவில் உள்ள அடி குழாயில் தண்ணீர் எடுக்க  சம்பத்தின் மனைவி  பிளாஸ்டிக் குடத்தை எடுத்துச் செல்லும்  போது, வீட்டுக்காரப் பெண்மணி நீர்மாலைக்கு   பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் கொண்டு வரக் கூடாது என்று சொன்ன பொழுது,  தன்னிடம் அதைத் தவிர வேறு எவர்சில்வர் குடங்கள் எதுவும் கிடையாது என என்று சம்பத்தின் மனைவி கூறுவது வறுமையின் எதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது.

சம்பத்தின் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த சில ஆண்கள் ஜெயந்தியின் ஈரக்கோலத்தை மிக நிதானமாகப் பார்த்தபடி இருந்த செயல் துன்பநிலையில் ஒரு பெண் இருப்பினும் இவர்களது காமப் பார்வை மாறாது போலும்.

சம்பத்துக்கு தீப்பெட்டி மீது இருந்த மோகம். தீப்பெட்டியை வாங்கினால் எப்போதுமே அவன் அதை முகர்ந்து பார்ப்பதும், லைட்டரில் எரியும் தீயைவிட தீக்குச்சியிலெரியும் தீயை தான் விரும்புவதாக அவன் சொல்வதும்  ,எரிந்து தீர்வதுதான் அவன் வாழ்க்கை என்ற எண்ணத்தை நாவல் வெளிப்படுத்துகிறது.

சம்பத்தும் அவன் மனைவியும் கரும்பு ஜூஸ் குடிக்கிறநேரத்தில் . ஒரு கரும்பு பிழியும் இயந்திரம் வாங்கி தொழிலை ஆரம்பிப்பது பற்றி சம்பத் பேசுகிறபோது  வருமானம் வருவதுடன், நமக்கு பிடிக்காதவர்களின் மேல் உள்ள அத்தனை ஆத்திரத்தையும் நினைத்துக் கொண்டு கரும்பை சக்கையாகப் பிழியும் போது மனதும் சாந்தமாகி விடும் என சொல்வதும் அதற்கு அவன்  மனைவி  சிரிப்பதும் அருமையான பதிவு.

அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் நால்வரில் தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்று விரும்பி கல்லூரிக்கு வந்து சேர்ந்தவன் சம்பத். மற்றவர்கள் வெவ்வேறு கட்டாயங்களால் வந்தவர்கள்.  இவர்கள் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துக் கொண்டிருந்த போது முதல் வருடம் எந்த பெண்களும் தமிழ் பிரிவில் சேரவில்லை. கல்லுரியில் 218 பெண்கள் படிப்பதும், ஒருத்தி கூட தமிழ் பற்றில்லாமல் இருப்பதைக் கண்டு உலகம் தன் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என குறிப்பிடுவது நிதர்சனமான உண்மை.

இராண்டாம் வருடத்தில் இளங்கலை தமிழ் பிரிவில் யாழினி வந்து சேருகிறாள். யாழினியின் அப்பா மயில்வாகனன் ஒரு பொறியாளர். தீவிர நாத்திகர். திராவிட இயக்கத்தவர். யாழினியுடன் நட்பு கொள்ளும் சம்பத் ஒரு நாத்திகப்பேச்சாளனாக உருவகிறான். யாழினி சம்பத்தின் ‘நல்ல தோழி’ ஆக மாறுகிறான். இருவரும் சிந்தனையாளர் முகாமுக்குச் சென்றுவருகிறார்கள். கடவுள் மறுப்பு கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலமும் கல்லூரியில் கலகக்காரனாக இருப்பதன் மூலமும் சம்பத்தின் வாழ்க்கை தடம் புரள்கிறது.

மனிதன் கண்டுபிடித்ததில் மிக மோசமானது சுவர் என சம்பத் கூறுகிறான். இந்தச் சுவர் அனைவரையும் பிரிக்கிறது. இந்த சுவர் மட்டும் இல்லாதிருந்தால் இச் சமூகம் பிரிக்கப்படாமல் இருக்கும் என்பது சம்பத்தின் அடிப்படை எண்ணம்.

கல்லூரிக்கு ஒரு நாள் கறுப்பு சட்டை, வேட்டியுடன் வரும் சம்பத்தை வகுப்பு எடுக்க வந்த பேராசிரியர் உனது உறவினர் யாரேனும் இறந்து விட்டனரா என கேட்டதற்கு சம்பத் உடை என்பது அடையாளம், இது எதிர்ப்பின் நிறம் என சொல்கிறான்.

கம்பராமாயணப்பிரதியை எரித்ததற்காக சம்பத்தை காவல் துறையினர் கைது செய்வதும, இதனால் கல்லூரியிலிருந்து நீக்கப்படுவதும், பின்னர் அரசியல் பேச்சாளனாக மாறுவதும், மேடைக் கூட்டங்களில் கலந்து கொள்ள பணம் வாங்குவதும் , வாங்கிய பணத்தில் மதுக் குடித்து, குடிக்கு அடிமையாவதும், கிடைக்கும் வேலைகளுக்கு அவ்வப்போது செல்வதும் அவனது வாழ்க்கையாகிறது. ஒரு கற்றாழை செடியைப் போல யாருமே அணைத்துக் கொள்ள முடியாத ஆளாக சம்பத் மாறிவிட்டான்.

சம்பத்தின் தங்கை சித்ரா மகாலிங்க மலை சுனையில் இறந்து கிடந்தது நெஞ்சை பதறவைத்தது.

சம்பத்தின் அய்யா அவனை வீட்டில் பார்த்தவுடன் தாயோளி என்ன மயித்துக்குடா இங்கே வந்தே. உன்னால நாங்க என்ன அவமானமெல்லாம் பட வேண்டியதாகிப் போச்சு. செத்து தொலைய வேண்டியது தானடா,,, என்ற கரிசல் வார்த்தைகள் கனலாய் கொதிக்கிறது.

மலையின் பிரம்மாண்டத்தை எஸ்.ராமகிருஷ்ணனின் அற்புதமாக விவரிக்கிறார். பாறையைப் பற்றிச் சொல்லும் போது , யானையின் தொங்கும் அடி வயிற்றைப் போல அந்தப் பாறை இன்னொரு பாறையோடு சேர்ந்து தொங்கி கொண்டிருந்தது என குறிப்பிடுகிறார்.

கானல் காட்டில் இவர்கள் தங்கியிருந்த போது, சன்னாசி காட்டைப் பற்றி, காடு நாம நினைக்கிற மாதிரி வெறும் மரம், செடி, கொடி மட்டுமில்லை. இது ஒரு சுழி. எங்கே நம்மளைக் கவித்துப் போடும்னு தெரியாது எனச் சொல்கிறார்.

சம்பத் லாட்டரி சீட்டு வாங்குவதன் மூலம், அறிமுகமான ஜெயந்தியை 42 வது வயதில் திருமணம் செய்து கொள்கிறான், வேலைக்கு செல்வதும் பிறகு ஏதேனும் காரணங்கள் சொல்லி கைவிடுவதுமாக இருக்கிறான், முடிவில் இறந்து போகிறான்.

இந் நாவலில் வரும்  கதாப்பாத்திரங்களில்  சம்பத்தின் மனைவி  ஜெயந்தி அமைதின் சொருபமா காட்சி தருகிறான்.  பெற்ற தாயில்லாமல்,  டாக்டர் வீட்டில்  வேலை செய்து பிழைப்பு நடத்துவதும், அவள்  தந்தை பொறுப்பற்ற மனிதனாய்  வாழ்ந்து வருகிறார்.

வேலை விஷயமாக கேரளா செல்லும் அவளது அப்பா 25 வயது பத்மஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து அவர்கள் பகலில் கூட  புணர்ச்சியில் ஈடுபடுவதும், வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் அவளுக்கு மிகப் பெரும பிரச்சைனையாக இருந்தது அவளின் அப்பாவின் காமம் தான்.

சம்பத் ஜெயந்தியை பார்த்து உன்னை நான் திருமணம் செய்து கொள்ளவா என கேட்பான்.அதனை எண்ணி அன்றிரவு ஜெயந்தி துக்கத்தில் புரண்டு கொண்டே கிடந்தாள். அவள் உடலில் காமம் நெருஞ்சிப் பூ போல எண்ணிக்கையற்று பூக்கத் துவங்கியிருந்தது.

சம்பத்தை திருமணம்செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்குங்கும் ஜெயந்தி அவனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி கிழித்துப்போடபப்ட்ட காகிதமாய் மாறிப் போகிறாள்.அவள் முகம் பாறையில் வரையப்பட்ட சித்திரம் போல சலனமற்றதாய் மாறிப் போனது.

சம்பத் மரண செய்தி கேள்விப்பட்டு யாழினி டெல்லியிலிருந்து  வந்து அவன் மனைவியைப் பார்க்கிறாள். யாழினியின் மனதில் சம்பத் காமம் குமுறிக் கொந்தளித்தபடி இருக்கும் ஓர் இளைஞனாய் இடம் பெற்று  கவர்வதும பின்னர் அவனது காமமே யாழினியை  அச்சுறுத்துகிறது. இதன் காரணமாய் அவள் சம்பத்தை விட்டு பிரிகிறாள். உறுபசி கொண்ட காமம் சம்பத்தை எரித்து விடுகிறது.

ராமதுரை தன் நண்பர்களைப் பார்த்து நாமெல்லாம் பிராடுடா…. சம்பத்துதாண்டா நிஜமா வாழ்ந்தவன்  என சொல்வது  எது வாழ வேண்டிய வாழ்க்கை என யோசிக்கத் தோன்றுகிறது.

இந்நாவலை படித்து முடித்தவுடன் சாவின் வலி புரிகிறது.

கடலும்,நுரையும் கண்ணில் படும்வரை சம்பத்தை மறப்பது எளிதானதில்லை.

வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல்.

0Shares
0