கனவு இல்லம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வண்ணதாசன்,ஜி. திலகவதி, எஸ் இராமகிருஷ்ணன், பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன். ப. மருதநாயகம், இரா. கலைக்கோவன், கா. ராஜன், ஆர்.என்.ஜோ.டி. குருஸ், ஆகிய பத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

நான் எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன். இதே சென்னையில் தங்குவதற்குச் சிறிய அறை கூட இல்லாமல் பல ஆண்டுகள் சுற்றியலைந்திருக்கிறேன். நிராகரிப்பும் அவமானமுமாக வாழ்ந்த அந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன. வேலை, சம்பாத்தியம் என எதுவுமில்லாமல் குடும்பத்துடன் சென்னை வந்த போது எத்தனை வாடகை வீடுகளில் வசித்திருக்கிறேன். எவ்வளவு துரத்தப்பட்டிருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்கிறேன்.

வாசகர்களின் நிகரில்லாத அன்பும் அரவணைப்பும், பதிப்பகம், பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் உறுதுணையும், பல்வேறு இலக்கிய அமைப்புகள் மற்றும் அரசின் அங்கீகாரமுமே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம் முன்னோடியது. மிகுந்த பாராட்டிற்குரியது. இந்திய அளவில் எந்த அரசும் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கவில்லை. தமிழ் எழுத்தாளர்கள் மீது தமிழக முதல்வர் கொண்டுள்ள பேரன்பின் அடையாளமாகவே இதைக் காணுகிறேன்.

கனவு இல்லத் திட்டத்தில் எனக்கு வீடு வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0Shares
0