சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய பூவை என்ற சிறுகதையில் பேரக்கா என்ற ஒரு பெண் வருகிறாள். அவள் ஒரு அநாதை. அண்டி வாழும் அவள் மாடு மேய்க்கிறாள். பாட்டிக்குக் கைகால் பிடித்துவிடுகிறாள். அவளுக்குத் தலைமுடி சரியாக வளரவில்லை என்று மொட்டையடித்துவிடுகிறார்கள். நாலைந்து முறை இப்படிச் செய்தபிறகே அவளுக்குக் கூந்தல் வளருகிறது.

அவளது கல்யாண நாளை பற்றியதே கதை. மணப்பெண் என்பதால் அவளை அலங்கரித்துத் தலையில் பூச்சூடுகிறார்கள். இந்தப் பூவாசனை தாங்காமல் பேரக்கா மயங்கிவிடுகிறாள். காரணம் இதுவரை அவள் பூச்சூடி மகிழ்ந்தவளில்லை. சின்னஞ்சிறிய கதை. ஆனால் அபூர்வமான வெளிச்சம் ஒன்றைக் காட்டுகிறது

பூவாசம் தாங்க முடியாத பெண்ணாகப் பேரக்காள் இருக்கிறாள் என்பது வியப்புக்குரியது. தன்னைப் பற்றிய அக்கறையோ, கவனமோ அவளுக்கு ஒரு போதும் கிடையாது. வேலை வேலை என்று பிறருக்காக அவள் ஒடியோடி வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

தாயில்லாமல் வளரும் பெண்ணிற்கு ஏற்படும் பெரிய வருத்தம் தனக்கு ஜடை பின்னி பூவைத்து விட யார் இருக்கிறார்கள் என்பதே. தாயிருந்தால் நிச்சயம் பேரக்காளுக்குப் பூச்சூடி விட்டிருப்பாள். அல்லது சகோதரிகளோ, தோழிகளோ இருந்தால் ஆசையாக மலர்களைச் சூடிவிட்டிருப்பார்கள். ஆனால் யாருமற்ற பேரக்கா திருமணத்தன்று தான் முதன்முறையாக அவ்வளவு மலர்களைச் பூச்சூடுகிறாள். அதன் வாசனையை அவளால் தாங்க முடியவில்லை. வாழ்வின் கடினங்களைத் தாங்க முடிந்த அவளால் மலரின் மென்மையைத் தாங்க முடியவில்லை.

எளிய விஷயம் என்ற நினைப்பது கூடப் பலருக்கு வாழ்வில் கிடைப்பதேயில்லை. பூவிற்கும் பெண்கள் ஒருபோதும் தலை நிறையப் பூச்சூடிக் கொள்வதில்லை.

தி மகியோகா சிஸ்டர்ஸ் படத்தில் நான்கு சகோதரிகள் சகுரா மலர்கள் பூக்கும் பருவத்தில் அதைக் காண கியாத்தோவில் ஒன்றுகூடுகிறார்கள். மூன்றாவது சகோதரிக்குத் திருமணப் பேச்சு நடக்கிறது. பெரிய அக்கா ஒரு மாப்பிள்ளை பார்க்கிறாள். அதைச் சின்ன அக்காவிற்குப் பிடிக்கவில்லை. அவள் மாப்பிள்ளையின் அம்மா ஒரு பைத்தியக்காரி என்று குற்றம் சாட்டுகிறாள். சகோதரிகளுக்குள் சண்டை வருகிறது. நீ எப்போதும் இப்படிக் குற்றம் கண்டுபிடிக்கிறாள் என்று பெரிய அக்கா தனது தங்கையிடம் கோவித்துக் கொள்கிறாள். இந்தச் சண்டை சட்டென ஒரு நிமிஷத்தில் மாறி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்கிறார்கள். அத்தனை அழகான சிரிப்பு. சின்ன அக்கா சொல்கிறாய் நான் மலர்களை வேடிக்கை பார்க்க ஒன்றுகூடியிருக்கிறோம். பெரிய அக்கா சொல்கிறாள். ஆமாம் மலர்களை .

அவர்களின் சிரிப்பும் சகுரா மலர்களும் ஒன்று போலவே இருக்கின்றன. அந்தப் பெண்கள் சகுரா பூத்துள்ள பூங்காவில் உலவுகிறார்கள். மலர்கள் காற்றில் பறந்து வந்து அவர்கள் காலடியில் விழுகின்றன. அவர்கள் ஒரு மலரைக் கூடக் கையில் எடுப்பதில்லை. கண்ணால் மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். அழகு என்பது நிரந்தரமானதில்லை. அது முழுமையாக வெளிப்படும் போது காணும் ஆனந்தம் போதுமானது என்கிறார்கள். மலர்களைப் போன்றதே இளமையும். அது நீடித்து நிலைப்பதில்லை. மகியோகா சகோதரிகளில் மூத்தவள் சொல்கிறாள் காலம் கடந்து செய்யப்படும் திருமணங்கள் நீடிப்பதில்லை என்று.

கிராவின் கன்னிமை கதையில் வரும் நாச்சியார் இளமையில் அவ்வளவு அன்பாக இருக்கிறாள். வேலையாட்களுடன் அன்பாகப் பழகுகிறாள். வீட்டுக்கே விளக்காக ஒளி இருக்கிறாள்.பிறருக்கு அள்ளிக்கொடுப்பதில் ஆனந்தம் காணுகிறாள்

காட்டில் பருத்தி எடுக்கும் பெண்களும் நாச்சியாரம்மா வந்துதான் கூலி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

அவளைப் போல ஒருத்தியைக் காண முடியாது என்று ஊரே புகழுகிறது. ஆனால் இளமை மறைந்து வாழ்வின் வசந்தம் போய்விட்ட பிறகு நாச்சியார் உரு மாறிவிடுகிறாள். சிடுசிடுப்பும் கோபமும் எரிச்சலுமாக நடந்து கொள்கிறாள். வாசலில் வந்து நிற்கும் ஏகாலிக்கும் குடிமகனுக்கும் சோறுபோட முகம் சுளிக்கிறாள்

காய்ச்சலோடு கட்டிலில் விழும் ரங்கையாவை கவனிக்காமல் அவன் உடல் நலம் பற்றி ஒரு வார்த்தை கேட்காமல் கொண்டு வந்த சிட்டைக்கும் மீதிக்காசுக்கும் கணக்கு உதைக்கிற்தே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். உடைந்த கண்ணாடியை ஒட்டவைப்பது போல உருமாறிப் போன அவளை ரங்கையா பார்த்துக் கொண்டிருக்கிறான்.

நாச்சியாரு,என் பிரியே !நீ எங்கிருக்கிறாய்?” என்று கதையை முடிக்கிறார் கிரா.

தன்னிடமிருந்தே தான் தொலைவிற்குப் போய்விட்டாள் நாச்சியார். வாழ்க்கை கொடுத்த பரிசு இது தானா. அன்பும் கருணையும் கொண்ட நாச்சியாரை எது இப்படிச் சுயநலமியாக மாற்றியது. நாள்பட நாள்பட முகம் பார்க்கும் கண்ணாடி ரசமிழந்து போவது போல அவள் மாறிவிடுகிறாள். கன்னிமை தான் அவளது அன்பின் ஊற்றுக்கண் என்கிறார் கிரா

பூவை கதையில் வரும் பேரக்காளும் நாச்சியாரும் மகியோகா சகோதரிகளும் வேறுவேறு கிளைகளில் பூத்துள்ள சகுரா மலர்கள் தான்.

மார்டின் துகார்ட் எழுதிய முத்தம் என்ற கதையில் பேரக்கா போலவே ஒரு பெண் வருகிறாள். இவள் ஒரு பணிப்பெண். பிரபு ஒருவரின் வீட்டில் வேலை செய்கிறாள். பதினைந்து வயதானவள். அந்த வீட்டிற்கு விருந்தினராக வரும் இளைஞன் அவளது அழகில் மயங்கி ஆசையாகப் பேசுகிறான். அவளோ பயந்து விலகிப் போகிறாள்.

ஒரு நாள் மாலை அவளை வீட்டுத் தோட்டத்தில் பார்த்த இளைஞன் ஆசையாகக் கட்டிக் கொள்கிறான். அவளோ பயந்து உதறுகிறாள். அவன் விடாப்பிடியாக அவளை இழுத்து முத்தமிடுகிறாள். மறுநிமிஷம் அவள் மயங்கிவிடுகிறாள். அவளால் முத்தத்தின் மென்மையைத் தாங்க முடியவில்லை.

வாழ்நாளில் அன்று தான் அவள் முதல் முத்தம் பெறுகிறாள். பயந்து போன இளைஞன் அவளது மயக்கம் தெளிய வைக்கிறான். அவளிடம் மன்னிப்புக் கேட்கிறான். அவளோ சிரித்தபடியே வீட்டிற்குள் ஒடி விடுகிறாள். சில நாட்களின் பின்பு அந்த இளைஞன் தனது ஊருக்குக் கிளம்புகிறான். அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவளே தேடி வருகிறாள். இந்த முறையும் அவன் முத்தமிட்டபோது அவள் மயங்கி விழவே செய்கிறாள்.

கடினமான வீட்டுப்பணிகளைச் செய்யத் துணிவு கொண்ட அந்தப் பெண்ணிற்கு மிருதுவான முத்தம் மின்னல் வெட்டு போல மயக்கமடையச் செய்கிறது.

மார்டின் துகார்டும் கிராவும் காட்டும் பெண்கள் சந்தோஷத்தைத் தாங்க முடியாதவர்கள்.

மோசமான துயரத்தைக் கூடப் பலராலும் ஏற்றுக் கொள்ளவும் தாங்கிக் கொள்ளவும் முடிகிறது. எதிர்பாராத சந்தோஷத்தை அப்படித் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியைக் கையாளுவது எளிதானதில்லை.

கிராவின் கதையில் பேரக்காளின் திருமணத்தை ஊர் கூடி நடத்துகிறது. இன்றைய காலத்தில் அப்படியான நிகழ்வுகள் சாத்தியமா என்று தெரியவில்லை. நகரம் கிராமம் என்ற பேதமில்லாமல் அவரவர் வாழ்க்கை அவர்களுக்கு எனச் சுருங்கிவிட்டிருக்கிறது.

In Kyoto,

hearing the cuckoo,

I long for Kyoto.

என்ற பாஷோவின் கவிதையில் தனது சொந்த ஊரான கியாத்தோவில் இருந்தபடியே குயிலின் குரலைக் கேட்கும் பாஷோ கியாத்தோவிற்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குகிறார்.

அவர் பால்யத்தில் அறிந்த கியாத்தோவும் தற்போதைய கியாத்தோவும் வேறுவேறு தானே. தனது பால்யத்தின் கண்ட காட்சிகளும். வீதிகளுக்கு அவர் மறுமுறை செல்ல விரும்புகிறார். அது சாத்தியமேயில்லை. ஆனால் அந்த ஏக்கம் தீராதது.

ஒரு குயிலின் குரல் இழந்து போன காலத்தை நினைவூட்டுகிறது. சகுரா மலர்கள் நிலையாமையை நினைவுபடுத்துகின்றன. இந்த அடையாளங்களை, அபூர்வ நிகழ்வுகளை, புரிந்து கொள்ள முடியாத ஏக்கத்தை இலக்கியம் கவனப்படுத்துகிறது.

நாச்சியாரு,என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்? என்ற கிராவின் சொற்கள் காலத்தைத் தாண்டி ஒலிக்கின்றன. திரிந்து போன பாலைப் போல அன்பும் மாறிவிடும் என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

••

0Shares
0