உதய்பூர் போயிருந்த போது ராஜஸ்தானின் பாரம்பரிய பொம்மலாட்டத்தைப் பார்த்தேன். உதய்பூரில் நாட்டுப்புறக்கலைகளுக்கான கலைக்கூடம் ஒன்றை அரசே உருவாக்கியுள்ளது. ராஜஸ்தான் முழுவதுமே இது போன்ற நாட்டுப்புறக்கலை மையங்கள் செயல்படுகின்றன. இங்கே தினமும் மாலை நேரம் ஆடல் பாடல் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு இதனால் நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்யப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆர் வி.. ரமணி பாவைக்கூத்துக் கலைஞர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் இயக்கிய போது அவருடன் பொம்மலாட்டக்கலைஞர்களைச் சந்திக்க உடன் சென்றிருந்தேன்.
தமிழகத்தில் அவர்களின் வாழ்க்கை மிகவும் கஷ்டமான சூழலில் உள்ளது. ஊரின் ஒதுக்குப்புறத்தில் குடியிருக்கிறார்கள். பாவைக் கூத்து நடத்தி அதிலிருந்து பிழைக்க முடியாத சூழ்நிலை. சிலர் வாழ்க்கை தேவைகளுக்காக பலூன் விற்கப் போய்விட்டார்கள்.
என் சிறுவயதில் கிராமத்தில் பாவைக் கூத்து பத்து நாட்கள் நடத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அதற்குக் கட்டணமில்லை. ஊர் பொதுவில் இருந்து பணம் கொடுத்துவிடுவார்கள். தினமும் இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி நேரம் நடக்கும். பாவைக்கூத்து நடந்தால் நிச்சயம் மழை பெய்யும் என்பது கிராம மக்கள் நம்பிக்கை. ராமாயணக் கதை தான் பாவைக்கூத்தாக நடத்தப்படுகின்றன. ஆகவே பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கும் நாளில் அவர்களுக்குப் புது வேஷ்டி சேலை கொடுத்து ஊர் பெரியவர்கள் மரியாதை செய்வார்கள்.
ராஜஸ்தானில் நடத்தப்படும் பொம்மலாட்டம் முற்றிலும் வேறுபட்டது. அங்கே மூன்றடி நான்கடி பொம்மைகளைக் கொண்டு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.kathputli என்று அழைக்கப்படும் இந்தப் பொம்மலாட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான மரபு தொடர்ச்சியாகும். மன்னர்களின் ஆதரவில் நடைபெற்று வந்த இந்தப் பொம்மலாட்டம் இன்றும் அதே பராம்பரிய கலைஞர்களின் வழியே நடத்தப்பட்டு வருகிறது. நம் ஊரைப் போல ராமாயணக்கதையை மட்டும் அவர்கள் சொல்வதில்லை. ராஜஸ்தானிய நாட்டுப்புறக்கதைகள். புராணக்கதைகளைப் பொம்மலாட்டத்தில் நடத்திக் காட்டுகிறார்கள். இசை தான் இதன் தனித்துவம். மிகச்சிறப்பான இசையோடு பொம்மலாட்டத்தை வழங்குகிறார்கள். விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காகவும் இந்தப் பொம்மலாட்டம் பயன்படுத்தப்படுகிறது.
ரமணியின் ஆவணப்படத்தில் எப்படி மகாராஷ்டிராவிலிருந்து பொம்மலாட்டக் குடும்பங்கள் இந்தியா முழுவதும் இடம்பெயர்ந்து போயிருக்கிறார்கள் என்பது தெளிவாகக் காட்டப்படுகிறது. பாவைக்கூத்தில் காட்டப்படும் பாவைகள் பொதுவாக விற்பனைக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ராஜஸ்தானில் பொம்மலாட்ட பொம்மைகள் விலைக்கு விற்கிறார்கள். பள்ளி மாணவர்கள் அதை வாங்கிச் சென்று நிகழ்ச்சி நடத்துவதுண்டு என்கிறார்கள். உதய்பூரில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு அதை எப்படிச் செய்தோம் என்று மேடையில் தோன்றி பொம்மைகளை அசைத்துக் காட்டி விளக்கவும் செய்தார்கள்.. இந்தியா முழுவதும் வேறுவேறு வகைப்பட்ட பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன.
சினிமாவிற்கும் பாவைக்கூத்திற்கும் ஒரே வேறுபாடு க்ளோசப் காட்சிகள் கிடையாது என்பதே. மற்றபடி சினிமா போலவே பல்வேறு விதமான காட்டுக்கோணங்களைப் பாவைக்கூத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள்.
உச்சிக்குடுமி உழுவை மண்டையன் என்ற வேடிக்கை கதாபாத்திரங்கள் மக்களுக்குப் பிடித்தமானவர்கள். பகலில் பாவைக் கூத்து நடத்தும் கலைஞர்கள் வீடு வீடாக வந்து தானியங்களைப் பெறுவார்கள். அப்போது இவர்கள் தான் பொம்மைகளை இயக்குகிறார்களா என்று வியப்பாக இருக்கும்.
ராஜஸ்தானிய பொம்மலாட்டத்தில் காணப்படும் பொம்மைகளின் வண்ணங்களும் உடைகளும் தனித்துவமான அழகுடன் உருவாக்கப்பட்டுள்ளன. பொம்மைகளை நடனமாடச்செய்வது தனிச்சிறப்பு. நான் பார்த்த நிகழ்ச்சியில் ஒரு கிராமத்துப் பெண் வெட்கப்படுகிறாள். பொம்மை வெட்கத்தில் தலைகவிழ்ந்த போது வியப்பாக இருந்தது.
ராஜஸ்தானில் எங்கே சென்றாலும் இந்தப் பொம்மலாட்டத்தைக் காண முடியும். குறிப்பாக நட்சத்திர விடுதிகளில் இதை முக்கியமான கலைநிகழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் இப்படித் தமிழ் கலைகள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
ஜோத்பூரில் உள்ள பாலைவன அருங்காட்சியகத்தினை நாட்டுப்புறவியல் அறிஞர் கோமல் கோதாரி உருவாக்கியிருக்கிறார். மோக்லாவாஸ் என்ற கிராமத்தில் இந்த ம்யூசியம் உள்ளது. இங்கே 150 வகைகளுக்கு அதிகமான விளக்குமாறுகளைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். வீடு கூட்டும் விளக்குமாறுக்கு ஒரு ம்யூசியம் இருப்பது ஜோத்பூரில் மட்டும் தான்.
சென்னை மதுரை தஞ்சை கோவை சேலம் காஞ்சிபுரம் எனத் தமிழகத்தில் பத்து இடங்களில் இது போன்ற நாட்டுப்புறக்கலைகளுக்கான மையத்தை அரசே உருவாக்கி அங்கே சனிக்கிழமை மற்றும் ஞாயிறு தோறும் நிகழ்ச்சிகள் நடத்தலாம். இந்தக் கலைகளைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி தரும் முகாம்களை ஏற்பாடு செய்யலாம். கலைப்பொருட்கள் விற்பனை மையங்களை துவக்கலாம். அதுவே நாட்டுபுறக்கலைஞர்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.
••