அஞ்சலி: தி.க.சி

தமிழ் இலக்கிய உலகின் மூத்த விமர்சகரும், சிறந்த பண்பாளருமான தி.க.சி காலமடைந்த செய்தி கேட்டு தாளமுடியாத துயரமடைந்தேன்

இலக்கியத்திற்காகவே வாழ்ந்த அபூர்வமான மனிதர் தி.க.சி,  புதிய எழுத்தாளர்களை அவர் போல வழிநடத்தக்கூடியவர் எவருமில்லை,  அவரது பாராட்டுக் கடிதம் பெறாத எழுத்தாளர்கள் எவருமில்லை, பேரன்பு கொண்ட மனிதர்.

தி.க.சி ஒரு தனிநபரில்லை அவர் ஒரு இலக்கிய இயக்கம், அவர் உருவாக்கிய எழுத்தாளர்கள், தீவிர வாசகர்கள், ஊடக செய்தியாளர்கள் என நிறைய இருக்கிறார்கள்,

எனது முதல் கதை வெளியான போது எப்படியோ எனது மல்லாங்கிணர் முகவரியைக் கண்டுபிடித்து, அக்கதையைப் பாராட்டி கடிதம் எழுதியவர் தி.க.சி, அதன்பிறகு எத்தனையோ கடிதங்கள், பலமுறை அவரைத் தேடி சந்தித்து உரையாடியிருக்கிறேன், தி.க.சியைச் சந்தித்துத் திரும்பும் போது மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பிவிடும்

இடதுசாரிக்கோட்பாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர் தி.க.சி, அதன் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு தனது கருத்துக்களைத் திறந்த மனதுடன் விவாதிக்க்கூடியவர்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நெல்லை போயிருந்தபோது  சுடலைமாடன் கோவில் தெருவில் உள்ள அவரது வீடு தேடிப்போய் கிருஷி, ஷாஜகான், இன்னும் சில நண்பர்கள் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம், முதுமையின் தளர்ச்சியில்லை, உற்சாகமாக இரண்டு மணி நேரம் பேசினார், தினமும் நடந்து போய்ப் பத்திரிக்கைகள், வார இதழ்கள் வாங்கி வந்து படித்துவிடுவதாகச் சொன்னார்

அரசியல், சினிமா, இலக்கியம், இணையதளம், பத்திரிக்கை உலகம் என எல்லாவற்றையும் பற்றிப் பேசினார், எவ்வளவு துல்லியமான நினைவாற்றல் என வியந்து கொண்டிருந்தேன், பேசி முடித்துக் கிளம்பும் போது, நீ ஆன்டன் செகாவ் பற்றி விரிவாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார்

ஊர் திரும்பி மறுநாள் அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு

ஆன்டன் செகாவை எழுத ஆரம்பிச்சிட்டயா. உடனே ஆரம்பிச்சிரு, செகாவ் பத்தி நல்ல பொஸ்தகம் ஒண்ணும் வரலை, செகாவ் மகத்தான எழுத்தாளர், என நினைவூட்டினார்,

மற்றவர்களை எழுத வைத்து ஆனந்தம் காண்பது அரிய குணம், யாருக்கு வரும் அந்த மனது

ஒரு கலங்கரை விளக்கம் போல இலக்கிய உலகிற்குள் வருபவர்களுக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்தார் தி.க.சி

அவரது மறைவில் வாடும் எனதருமை அண்ணன் கல்யாணிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

••

0Shares
0