நிமித்தம் : புறக்கணிப்பின் துக்கம்

கேசவமணி

***

வாழ்க்கையில் பிறர் நமக்குச் செய்யும் அவமானங்களும், துரோகங்களும் வலி நிரம்பியவைதான் என்றாலும், அவைகள் புறக்கணிப்பின் துக்கத்தைப் போல அவ்வளவு வலி நிறைந்ததல்ல. நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் புறக்கணிப்பின் துன்பத்திற்கு ஆளாகிறோம். ஆனாலும், ஒரு காது கேளாதவனின் புறக்கணிப்பின் துக்கத்தை நாம் ஒரு போதும் உணர முடியாது. அதை அந்த உலகத்தில் இருப்பவர்களால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தேவராஜ் எனும் காது கேளாத மனிதனின் துக்கத்தை, வலியை, வேதனையை எஸ்.ராமகிருஷ்ணன் உணர்வுப் பூர்வமாகவும், காலாபூர்வமாகவும் அற்புதமாகச் சித்தரித்த நாவல்தான் நிமித்தம். அவர் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான வாசிப்பனுபவத்தைத் தருபவை. அவ்வாறே நிமித்தமும் புதியதோர் உலகத்துக்குள் நம்மை நடமாட வைக்கிறது.

47 வயதில் திருமணம் செய்துகொள்ளும் தேவராஜ் அடுத்த நாள் முகூர்த்தத்திற்காகக் காத்திருக்கிறான். நண்பர்கள் யாரும் இதுவரை வந்துசேரவில்லை என்பது அவனுக்கு வருத்தமளிக்கிறது. வெகு நாட்களுக்குப் பின்னர் நடக்கும் தன் திருமணம் நின்று போகுமோ என்ற பயமும் பதட்டமும் அவனைச் சூழ்ந்துகொள்ள, தன் நிலைமைக்குக் காரணமான காதுகேளாமை ஏற்பட்டது குறித்த தனது பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறான். யாமத்தில் பத்ரகிரி, துயிலில் அழகர் இவர்களின் அப்பாக்களைப் போலவே தேவராஜின் அப்பாவும் அவனைப் புரிந்துகொள்ளாத கொடுமைக்காரராக இருக்கிறார். குடும்பத்தில் அவனது அம்மாவும், அக்காவும்தான் அவனுக்கு ஓரளவு அனுசரணையாக இருக்கிறார்கள். ஆனால் அப்பாவைத் தாண்டி அவர்களால் ஏதும் செய்ய முடிவதில்லை. தன் துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே நண்பனாக அவனுடன் படித்த ராமசுப்பு ஒருவன்தான் இருக்கிறான். எனவே தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து அவமானங்களையும், அலட்சியங்களையம் நாளும் சந்தித்துத் தாழ்வுணர்ச்சியில் வெந்து தணிவதே தேவராஜால் முடியக்கூடியதாக இருக்கிறது. ‘வயதாகிப்போவதின் முதல் அடையாளம் அவமானங்களைச் சகித்துக்கொள்வதுதான்‘ என்று அவனின் இயலாமையைப் பற்றி ராமகிருஷ்ணன் சொல்வது எத்தனை சத்தியமான வார்த்தை.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது இளமைப் பருவம் என்பது என்றென்றும் மறக்கவியலாத இனிமையான அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. ஆனால் காதுகேளாமை, தேவராஜின் பள்ளிப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் நரகமாக அடித்துவிடுகிறது. சாபக்கேடாக அவைகள் அவனுக்குத் துயரத்தையே கொடுக்கின்றன என்பது எவ்வளவு பெரிய சோகம்.

காதுகேளாமையினால் வெகுவாக மனச்சோர்வு அடையும் அவன், தனது 30வது வயதில் மனநலம் பாதித்து, மருத்துவ மனையில் ஒன்றரை மாதங்கள் சிகிச்சைக்காகத் தங்கும்படியாகிறது. நாவலின் இந்தப் பகுதிகள் ராமகிருஷ்ணனின் சிறப்பான சித்தரிப்புகள் என்றால் அடுத்து வரும் ராஜாமணி என்ற பாத்திரத்தின் சித்தரிப்பு நம் மனதில் நெகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தக்கூடியவை. காந்தி என்ற ஒரு தனி மனிதர் எத்தனை எத்தனை பேர்களின் மனதில் புகுந்து அவர்களிடம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என நினைக்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது. அவரைத் தன் ஆசானாக வரித்துக்கொண்ட ராஜாமணி தான் நடத்தும் உணவகத்தின் மூலமே பிறருக்குச் செய்யும் சேவைகள் நம் மனதை நெகிழ்ச்சியால் நிரப்புபவை. யாருடனும் அன்பாகவும் இனிமையாகவும் பேசும் அவர் தேவராஜிக்கு காது கேட்காது என்பதை அறிந்து அவன் மீது பரிவுகொண்டவராக, “குளிக்கும்போது தண்ணீர் விழும் சத்தம் கேட்காதே“ என்று கேட்கும்போது தேவராஜ் கொள்ளும் மன நெகிழ்ச்சி, அவன் மனம் இப்படியான ஒரு புரிதலுக்காக எப்படி ஏங்கித் தவித்திருக்கிறது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவனுக்கும் ஏதாவது ஒரு எதிரி தோன்றிவிடுகிறான் என்பது இந்த வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று. அந்த எதிரியினால் ராஜாமணி கொலையுண்டு போவது அந்த பாத்திரத்தை நாம் என்றென்றும் மறக்க இயலாதபடி செய்துவிடுகிறது. அன்னமிடுதல் ஆயிரம் யாகங்களுக்குச் சமம் என்பதை ராஜமணி கதாபாத்திரத்தின் மூலம், நம் மனம் நெகிழ்ச்சியில் ததும்பும்விதமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.

நாவலின் வசீகரம் நிறைந்த பகுதி என தேவராஜ் தன் தாத்தாவோடு கொள்ளும் நினைவுகளைச் சொல்லலாம். நமக்கு நம் தாத்தாவோடு நாமிருந்த காலங்கள் நினைவில் எழுகின்றன. அவர் பானை வனையும் குயவர் என்பதும், அவர் வனையும் குதிரைகள் தத்ரூபமாக இருக்கும் என்பதும் நமக்கு அபாரமான கற்பனையையும், மன எழுச்சியையும் தருவதாக இருக்கிறது. அந்த ஊர் செல்வந்தர் வைரவன் செட்டியார் பினாங்குகாரி புவன்ஸ்ரீயை மணமுடித்து வருவதும், அவளுக்காக அவர் நூறு ஜன்னல்கள் கொண்ட வீட்டைக் கட்டுவதும், தேவராஜின் தாத்தா வெண்கலயங்கள் செய்யாதற்கான ஆவிகளின் கதையும் நம்மை அற்புதமான புனைவின் வெளியில் சஞ்சரிக்க வைக்கின்றன. தாத்தா குதிரை செய்வதற்கான மனநிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்று சொல்வதும், அவர் நடவடிக்கைகளும் அந்தப் பாத்திரத்தின் சித்தரிப்பை நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. தாத்தாவோடு அந்த கிராமத்திலேயே தங்கிவிடலாம் என்ற தேவராஜின் ஏக்கம் நமக்கும் ஏற்பட்டுவிடுகிறது.

தேவராஜ் பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிலும் இருக்க முடியாமல் அந்த ஊரிலிருக்கும் வண்டிப்பேட்டையை தான் விளையாடும் இடமாகத் தேர்ந்துகொள்கிறான். அங்கே இருக்கும் ஒரு பெரியவர் மூலம் வண்டிப்பேட்டை உருவான வரலாற்றையும் பிறகு அது அழிந்துபோன கதையையும் தெரிந்துகொள்கிறான். அந்த வண்டிப்பேட்டையில் உலவிய பலவகையான மனிதர்களும் அவர்களைப் பற்றிய வாழ்க்கையும், பின்னர் அவர்களின் அழிவும் மனித வாழ்க்கை எதற்காக என்ற கேள்வியை எழுப்புகிறது. பல வகையிலும் தன்னை வளர்த்துக் கொண்டு, தன்னை அண்டிய மனிதர்களையும் வாழவைத்த வண்டிப்பேட்டை பிறகு இல்லாமல் போவது ஒரு கால கட்டத்தின் மனித வாழ்க்கையை மட்டுமல்ல ஒரு இடத்தின் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகிறது. மனிதனைப் போல பல நகரங்களும், இடங்களும்கூட பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து பின் இல்லாமலாகிவிடுகின்றன என்பதையே நாவலின் இப்பகுதி நமக்கு உணர்த்துகிறது. ஒரு நாள் ஓவிய ஆசிரியர் சுதர்சனம் இந்த வண்டிப்பேட்டையை படம் வரைந்துகொண்டிருப்பதை தேவராஜ் பார்க்கிறான். அன்றிலிருந்து அவரது தொடர்பும், உறவும் அவனுக்குக் கிடைக்கிறது. அது அவன் வாழ்க்கையை ஓரளவு மாற்றுகிறது.

சுதர்சனமும் அவர் மனைவியான அங்கையற்கண்ணி ஆசிரியர் பாத்திரமும் நமக்கும் இப்படியான ஆசிரியர்கள் அமையவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்துபவை. அவர் பென்சிலால் வரையும் கோடுகள் உருவமாக உருக்கொள்ளும் விந்தையில் தேவராஜ் அதிசயப்படுவதும், அவன் கையில் குருவி உட்கார்ந்திருப்பது போல அவர் வரைந்து தரும் ஓவியம் அவனை மகிழ்விப்பதும், வாழ்க்கையில் அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தருணங்களாக இருக்கின்றன. அவர்கள் அவனிடம் காட்டும் பரிவும், அக்கறையும், அவன் பொருட்டு அவர்கள் எடுக்கும் நடவடிக்கையும், தன்னலம் கருதாத எத்தனை எத்தனை நபர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களால்தான் இந்த உலகம் இன்னும் இருக்கிறது என்பதையும் உணரச்செய்து வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் பிடிப்பும் கொள்ளவைக்கிறது.

வயது ஏறஏற ஏதாவது வேலை செய்யவேண்டிய கட்டாயம் தேவராஜிக்கு ஏற்படுகிறது. அப்பாவின் சுடு சொற்கள் தாங்கமாட்டாமல் அவன் வேலைக்கு முயற்சிக்கிறான். ஆனால் எந்த வேலையிலும் அவனால் நிலைத்திருக்க முடியாமல் போகிறது. எனவே பல்வேறு வேலைகளில் அலைப்புண்டு அவன் வாழ்க்கை திசைதெரியாத புயலிலே அகப்பட்ட தோணியாகத் தத்தளிக்கிறது. வயது கூடக்கூட வயதிற்குத் தகுந்த ஆசைகளும், ஏக்கங்களும் முளைக்கின்றன. ஆனால் அவைகள் கைகூட வழியேதுமின்றி இயலாமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறான் அவன். இதனால் மனச்சோர்வும், காரணம் தெரியாத பயமும் அவனை வாட்டுகிறது. பிறரைப்போல தன் வாழ்க்கையும் அமைந்துவிடாதா என்ற ஏக்கம் அவனை வெகுவாக அலைக்கழிக்கிறது. தேவராஜைப்போல மெல்லிய மனம் கொண்டவர்களை இந்த உலகம் மிகக் கேவலமாகத் தோற்கடிக்கக் காத்துக்கிடக்கிறது. எனவே வேலைக்குச் சென்ற ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான விரும்பத்தகாத அனுபவம் அவனுக்குக் கிடைக்கிறது. உலகில் எத்தனை விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதையும் இந்த அனுபவங்கள் அவனுக்குக் காட்டுகிறது. அவனது அந்த அனுபவங்கள் வாயிலாக வாழ்க்கை குறித்த பல கேள்விகளை நம் முன் வைக்கிறார் நாவலாசிரியர். தன் வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழும் ஒரு மனிதனையாவது இந்த உலகத்தில் காண முடியுமா என்ற கேள்வி அவற்றில் முக்கியமானது.

தேவராஜின் வாழ்க்கையை மட்டுமின்றி இந்திரா காந்தி, நெருக்கடி நிலை, காந்தியடிகள், வண்டிப்பேட்டை, இலங்கை அகதிகள், மண்டல் கமிஷன் என அந்தந்த காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளையும் நாவலில் பிணைத்திருப்பதன் மூலம் நாவலின் பின்புலம் குறித்த நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறார் ஆசிரியர். ராமகிருஷ்ணனின் எல்லா நாவல்களிலும் காணக்கிடைக்கும் ஓர் அம்சம்தான் இது என்றாலும் இந்நிகழ்வுகளைக் கனவு, கதை, வாய்மொழிக் கதை, நேரடிக்காட்சிகள் எனப் பல்வேறு வடிவங்களில் சொல்லியிருப்பதின் மூலமாக நாவலை மேலும் செழுமையுறச் செய்திருக்கிறார்.

ஒரு நாள் இரவில் தேவராஜின் மனதில் ஓடும் எண்ணங்களாக அவன் வாழ்க்கைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இது அவன் இதுவரை வாழ்ந்த ஒரு பகுதி வாழ்க்கைதான். இன்னும் அவன் வாழப்போகும் காலங்கள் மிச்சமிருக்கின்றன. அவைகள் எப்படி இருக்கப்போகின்றன என்பதை யார் அறியக்கூடும்? எனும் கேள்வியோடு நாவல் முடிந்துவிடுகிறது. நாவலை வாசித்து முடித்ததும் நிமித்தம் தேவராஜ் என்ற தனிப்பட்ட மனிதனின் கதையாக மட்டுமில்லாது இந்த உலகத்தில் ஜீவித்திருக்கும் அவனைப்போன்ற எண்ணற்ற பலரது வாழ்க்கையாகவும் காணும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

இந்த சமூகத்தில் வாழ்வதற்குச் சாதாரண மனிதர்களுக்கு எத்தகைய உரிமை இருக்கிறதோ அதற்குச் சற்றும் குறையாத உரிமை தேவராஜைப் போன்றவர்களுக்கும் இருக்கிறது. சொல்லப்போனால் அந்த உரிமை மற்றவர்களைவிட அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது எனலாம். அரசாங்கமும் சமூகமும் அவர்களின் நலனுக்கும், இணக்கமாகச் செயல்படவும் பல நடவடிக்கைகளை எடுக்கிறது என்றாலும் அவர்களை வார்த்தைகளால், நடத்தையால், புறக்கணிக்கவும், அவமானப்படவும் செய்வதிலிருந்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் யாராலும் எடுக்க முடியாது. இயலாமையில் தத்தளிக்கும் இத்தகைய மனிதர்களை அனுசரிப்பதும், தோள்கொடுப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதைச் சாதாரண மனிதர்கள் உணரும்போதுதான் இந்த மண்ணில் சுபிட்சம் மலரும் என்பதை நிமித்தம் நமக்கு உணர்த்துகிறது.

அங்க ஹீனங்களும், குறைபாடுகளும் மனிதனின் வாழ்க்கை எத்தகைய சிக்கலானதாக, மோசமானதாக இருக்கப்போகிறது என்பதை உணர்த்தும் நிமித்தமாக இல்லாது, அவைகள் அவன் வாழ்வதற்கான உந்துதலையும், மன உறுதியையும் தரும் சகுனமாகவே நாம் காணவேண்டும் என்பதை ராமகிருஷ்ணனின் இந்த நிமித்தம் நம்மை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறது.

நிமித்தம் தரும் வாசிப்பின் அனுபவத்தை ஒற்றை வரியில் சொல்வதென்றால்: ‘புறக்கணிப்பின் துக்கம்‘

நன்றி : புத்தகம் பேசுது -மார்ச் 2014. இதழ்

0Shares
0