இசையறியும் ஒட்டகம்.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் மிக சிறந்தது என்று இதையே குறிப்பிடுவேன். The Story of the Weeping Camel ஒரு ஆவணப்படம். இதைஇயக்கியிருப்பவர் Byambasuren Davaa  என்ற இளம் திரைப்படக்கல்லூரி மாணவி.


மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நடைபெறும் சிறிய சம்பவமே இந்த ஆவணப்படத்தின் அடித்தளம்.


கடுமையான வெக்கையும் கடுமையான குளிரும் கொண்ட கோபி பாலைவனத்தில் மங்கோலிய  நாடோடி இனமக்கள் வசிக்கிறார்கள். அவர்களது பிரதான தொழில் ரோமத்திற்கான ஆடு வளர்ப்பது மற்றும் ரோமங்களைப் பின்னி குளிராடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது. பாலையைக் கடந்து சென்று வணிகம் செய்வதற்காக ஒவ்வொருவரிடமும் ஒட்டகங்கள் இருக்கின்றன. அது போன்று நிறைய ரோம ஆடுகளும் ஒட்டங்களும் கொண்ட ஒரு மங்கோலியக் குடும்பம் அறிமுகமாகிறது.


பாலையின் நடுவில் சிறிய கூடாரம் அமைத்து அவர்கள் வசிக்கிறார்கள். வயதான தாய், தகப்பன் மகன், அவனது மனைவி, மற்றும் பேரன் பேத்திகள் என்று மரபான குடும்பம் அது. ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையிருக்கிறது. குறிப்பாக வீட்டின் தலைமையாக இருப்பவள் வயதானவள். அவள் சமையல் மற்றும் வீட்டை பராமரிப்பதை மேற்கொள்கிறாள்.


ஒட்டகப்பாலை சுட வைத்துக் குடிக்கிறார்கள். சமைத்த உணவை முதலில் பூமிக்கு படைக்கும் வழக்கம் அவர்களிடம் இருக்கிறது. அது போலவே உணவை நான்கு திசைகளிலும் படையல் செய்யும் பழக்கமும் காணப்படுகிறது. பாலைப்புயல்  ஆவேசமாக மணலை வாறி அடித்து கடக்கிறது. வீடுகள் மணலேறி போகின்றன. இயற்கையை சமாளித்து வாழ்கிறார்கள்.


படம் துவங்கும் போது ஒட்டகங்கள் பிரசவிக்கும் காலம் துவங்குகிறது. இதற்காக ஒட்டகங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. ஒரு ஒட்டகம் பிரசவிக்கும் காட்சி மிக அண்மையில் நேரடியாகப் படமாக்கபட்டிருக்கின்றது. பிரசவத்தின் போது ஒட்டகம் எழுப்பும் ஒலியும் வலி நிறைந்த அதன் கண்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.


அப்படி பிரவச நேரம் வந்த ஒட்டகம் ஒன்று பிரசவம் ஆகாமல் தவிக்கிறது. ஏன் என்று அந்த குடும்பத்திற்குத் தெரியவில்லை. பிரார்த்தனை செய்கிறார்கள். இருட்டில் ஒட்டகம் பிரவசத்திற்கு தயார் ஆகிவிட்டதா என்று கவனமாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஒட்டகம் திணறுகிறது. தவிக்கிறது. முடிவில் பிரசவிக்கத் துவங்குகிறது. ஆனால் தலை வெளியே வருவதற்கு பதிலாக கால் வெளியே வந்து மாட்டிக் கொள்கிறது. குடும்பமே ஒன்று சேர்ந்து பண்டுவம் பார்க்கிறார்கள். ஒட்டகம் வலி தாங்கமுடியாமல் அங்குமிங்கும் அலைகிறது. அதை கிழே விழச்செய்து காலை கட்டுகிறார்கள். வலியும் ஒலமுமாக ஒட்டகம் பிரவசிக்கிறது.


குட்டி ஒட்டகம் வெள்ளை ரோமங்களுடன் உயரமாக இருக்கிறது. தாய் ஒட்டகத்திற்கு தன் குட்டி தன்னை போல் இல்லாமல் வேறு நிறத்தில் இருப்பது கண்டு ஒதுக்குகிறது. அதே போல வலியும் வேதனையும் தந்து பிறந்தது என்பதால்தானோ என்னவோ குட்டியை அருகில் வரவே விட மறுக்கிறது. குட்டியோ பிறந்தவுடனே தாய்பாலுக்காக தாயை சுற்றிவரத்துவங்குகிறது. தாய் ஒட்டகம் விடுவதேயில்லை. அது உதைக்கிறது. தள்ளிப்போய்விடுகிறது


ஒட்டகத்தை கட்டிப்போட்டு குட்டியை பால் குடிக்க வைக்கிறார்கள். ஆனால் மறுநாளில் இருந்து தாய் ஒட்டகம் குட்டியை தன்னோடு சேர்க்க மறுக்கிறது. இதற்காக மரபான சடங்கு செய்கிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் ஒட்டகம் தன் குட்டியை நெருங்க விடுவதேயில்லை.


பால் இல்லாத ஒட்டகக் குட்டி தவிக்கிறது. ஒட்டகப்பாலை கறந்து புனல்வழியாக குட்டிக்கு புகட்டுகிறார்கள். ஏன் தாய் ஒட்டகம் குட்டியைப் புறக்கணிக்கிறது என்று அவர்களுக்கு புரியவேயில்லை. 


பிரசவ வலி அதற்குள் குட்டியின் மீதான கோபமாக மாறியிருக்க கூடும் என்கிறார்கள். இதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போது பழமையான சடங்கு ஒன்று நினைவுறுத்தப்படுகிறது


குட்டியை நெருங்கவிடாத தாய் விலங்குகள் குறிப்பிட்ட இசைப்பண்ணைக் கேட்டால் மனது மாறி குட்டியை தன்னோடு நெருங்கவிடும் என்று மங்கோலியர்கள் நம்புகிறார்கள். அதன்படியே யாழ் போன்ற வாத்தியகருவி ஒன்றை வாசிக்கும் ஒருவரை அழைத்து வருவது என்று முடிவு செய்கிறார்கள்.


ஆனால் அப்படியொரு வாத்தியம் வாசிப்பவர் தொலைவில் இருப்பதால் அவரை அழைத்து வர இரண்டு சிறுவர்களை ஒட்டகங்களில் அனுப்பி வைக்கிறார்கள். ஆவணப்படத்தின் மிகச்சிறப்பான காட்சியிது.


எல்லையற்ற மணல்வெளியின் ஊடே இரண்டு ஒட்டகங்கள் செல்வதும் அவர்கள் தங்கித் தங்கி பயணமாவதும் மிக அழகாக படமாக்கபட்டிருக்கிறது
ஒரு யாழ் இசைக்கலைஞரை அடையாளம் கண்டு அழைத்து வருகிறார்கள்.


அவர் தன்னுடைய யாழை எடுத்து ஒட்டகத்தின் மீது வைத்து ஏதோ முணுமுணுக்கிறார். பிறகு யாழில் பண் இசைக்க துவங்குகிறார். அது வரை கோபம் ரௌத்திரம் என இருந்த ஒட்டகம் தன்னை அறியாமல் இசை கேட்டு கண்ணீர் விடத்துவங்குகிறது. அந்த கண்ணீரோடு தன் குட்டியை தன்னோடு சேர அனுமதிக்கிறது. இசையின் முடிவில் தாயும் குட்டியும் ஒன்று சேர்கின்றன. மங்கோலிய குடும்பம் சந்தோஷமடைகிறது


இசை அடக்கபட்ட மனவுணர்ச்சிகளை சாந்தப்படுத்த கூடியது. அதற்கு மனிதர்கள் விலங்கு என்ற பேதமில்லை என்பதையே இப்படம் நிரூபணம் செய்கிறது.


மங்கோலியர்களின் இந்த நம்பிக்கையில் பெரும்பகுதி தமிழக கிராமங்களில் ஆடு மாடுகளுக்கு பிரவச நேரத்தின் போது நடைபெறுவதை நானே நேரில் கண்டிருக்கிறேன். குறிப்பாக பசு ஈனும் நாட்களில் பசுவிற்கு செய்யப்படும் வைத்தியமும் சடங்குகளும் மனிதர்களை ஒத்தது.


ஒரு வேளை பசு இறந்து போய் கன்று மட்டும் பிழைத்த நேரங்களில் கன்றின் வாய் கட்டிக் கொண்டு அது பால் குடிக்க முடியாமல் கதறும் துயரும் நேரில் கண்டிருக்கிறேன். பொதுவாக விலங்குகள் ஈனும் போது அருகாமையில் இருந்து கண்டால் அதன் வலியும் துயரும் ரத்தபெருக்கும் மனதை துவள செய்வதுவிடக்கூடியதாக இருக்கும்.


இந்த படத்தை இயக்கியுள்ள ஆஹ்ஹம்க்ஷஹள்ன்ழ்ங்ய் ஈஹஸ்ஹஹ பெர்லினில் உள்ள திரைப்படக்கல்லூரி ஒன்றில் பயின்ற இளம்பெண். தனது நிலப்பரப்பான மங்கோலியாவை முன்வைத்து படம் பண்ண வேண்டும் என்று விரும்பிய அவளுக்கு தன் சிறுவயதில் கண்ட இந்த சம்பவம் நினைவிற்கு வந்திருக்கிறது. உடனே தன்னுடைய நண்பர்கள் நால்வரோடு மங்கோலியா புறப்பட்டு அது போன்ற மங்கோலிய குடும்பம் ஒன்றை விசாரித்து பாலைவனத்திலே தங்கி படமாக்கியிருக்கிறார்.


அறுபது ஒட்டகங்கள் முந்நூறு ஆடுகள் கொண்ட ஒரு மங்கோலிய குடும்பத்தோடு பாலைவனத்தில் தங்கி பாலைபுயலையும் அவர்கள் வாழ்வையும் படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் அப்படியே நேரடியாகப் படமாக்கபட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு காட்சிகள் இவர்களால் நிகழ்த்தப்பட்டு ஒன்றிணைக்கபட்டிருக்கின்றன. டாகுடிராமா என்று இதை வகைப்படுத்தலாம்.


படத்தின் பின்னணி இசை அருமையானது. ஒருவகையில் இந்த படம் ஒட்டகம் குறித்தது. இன்னொருவகையில் மங்கோலிய நாடோடி இன மக்களின் வாழ்விற்குள் நவீன உலகம் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் படம் நுட்பமாக படம் பிடித்திருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் டிவி பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவது. அதற்காக டிவியை விலை கேட்பது. ஐஸ் கிரீம் சாப்பிடுவதை  பெரிய வியப்புடன் ஈடுபடுவது. ரேடியோவிற்கான பேட்டரி வாங்க அலைந்து திரிவது. இன்னொரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் பாலைவனத்தின் உள்ளேயும் தங்கள் கால்தடங்களை பதிக்க துவங்கிய சாட்சிகள் தென்படுகின்றன.


இதே போல மங்கோலிய குடும்பத்தில் உள்ள பெண்களின் நம்பிக்கைகள் பெரிதும் தமிழக கிராமப்புற பெண்களின் மரபான நம்பிக்கைகளுக்கு இணையாக இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 90 நிமிசங்கள் ஒடும் இந்தப் படத்தை ThinkFilm தயாரித்திருக்கிறது.



0Shares
0