இளம்பகவத்

இளம் ஐஏஎஸ் அதிகாரியான இளம்பகவத் நேற்று தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார்.

ஐஏஎஸ் தேர்விற்காகத் தயாராகும் பலரும் என்னை வந்து சந்திப்பதுண்டு. தமிழ் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள் சார்ந்து விவாதிப்பார்கள்.

விகடனில் கதாவிலாசம் எழுத துவங்கிய நாள் முதல் இளம்பகவத் என்னைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார். இந்திய ஆட்சிப்பணியில் உள்ள பலர் தீவிர இலக்கியவாசிப்புக் கொண்டவர்கள் என்பதை அறிவேன்.

தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை செய்தவர் இளம்பகவத். எளிய குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஆட்சிப்பணியின் வழியே சமூகத்திற்கு நிறையத் தொண்டாற்ற முடியும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

இலக்கியத்திலும் வரலாற்றிலும் தத்துவத்திலும் நிறைய வாசிப்பு அனுபவம் கொண்டிருக்கிறார். பயணம், வரலாறு, இலக்கியம், பௌத்தம், நீதி எனப் பல்வேறு துறைகள் சார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

இந்தியாவின் அடையாளமாகக் கருதப்படும் புத்தன், காந்தி, விவேகானந்தர், கபீர், போன்றவர்கள் தன்னை , சாமான்யமக்களில் ஒருவராக எளிமையும் அன்பும் கொண்டவர்களாகவே முன்னிருத்திக் கொண்டார்கள் . இந்திய சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி ஒரு ஆளுமையை உருவாக்குகிறது. அவர்கள் இந்தியாவை ஒன்றிணைக்கிறார்கள் எனப் பேசிக் கொண்டிருந்தேன்

புத்தரை நாம் எப்படி அணுகுவது. புத்தனின் தேவையாக எதைக்கருதுகிறேன் என்பதைப் பற்றிப் பேச்சு திரும்பியது. இலக்கியம் வாழ்க்கையை மேம்படுத்துமா, இன்றைய கவிதைகள் எப்படியிருக்கின்றன. ரமணர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, போன்றோர்களின் மெய்தேடல். தமிழகப் பண்பாட்டு அடையாளங்கள், கீழடி எனப் பல்வேறு விஷயங்களைப்பற்றிய நேற்றைய உரையாடல் மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருந்தது

இளம்பகவத் சிறந்த ஆட்சியாளராகப் பணியாற்ற எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

0Shares
0