தனிமையெனும் தீவு

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இடையில் அடிப்படையிலே வேறுபாடிருக்கிறது.

வெறும்பொழுதுவிஷயங்களைத் தாண்டி, காட்டை அழித்து இயற்கை வளங்களை நாசப்படுத்துவது குறித்தும். போருக்கு எதிராகவும், வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்தும், தொழில்மயமாதல், நகர்மயமாதலின் விளைவுகள் பற்றியும், சிறார்களின் வியப்பபூட்டும் கனவுகள். கற்பனைகள் பற்றியும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேசுகின்றன. அதீத வன்முறைக்காட்சிகள். இன மதத் துவேசம் எதையும் ஜப்பானிய அனிமேஷனில் காணமுடியாது.

மூத்தோர்களின் வழிகாட்டுதலும் ஞானமும் அவசியமானது. இயற்கையோடு இணைந்து வாழுதல் முக்கியம். உறுதியான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும், விடா முயற்சியும், விசுவாசமும், சகல உயிர்கள் மீது அன்பு செலுத்துதலும் முக்கியமானது என்றே இப்படங்கள் கூறுகின்றன

ஜப்பானிய அனிமேஷன் படங்களில் Studio Ghibli தயாரிப்பில் வெளியான ஹயாவோ மியாசகியின் (Hayao Miyazaki) படங்களே எனது ஆதர்சம். மாங்கா காமிக்ஸ் ஜப்பானில் மிகவும் புகழ்பெற்றது. மியாசகி புகழ்பெற்ற மாங்கா ஒவியர், இவர் சில ஆண்டுகள் தொலைக்காட்சியில் அனிமேட்டராக வேலை செய்திருக்கிறார். இன்றும் மியாசகி தன் படங்களுக்கான காட்சிகளைக் கையால் தான் வரைகிறார்.

மியாசகியின் அனிமேஷன் திரைப்படங்களில் Spirtual Quest அதிகம். இயற்கையின் பரவசங்களை அடையாளப்படுத்தும் படங்களாக அவற்றைச் சொல்லலாம். மியாசகியின் படங்கள் குழந்தைகளுக்காக உருவாக்கபட்ட போதும் அவை பெரியவர்களுக்கும் உரியதே.

மேல்தளத்தில் வசீகரமான சாகச கதையைக் கூறும் இப்படங்கள் ஆழ்தளத்தில் ஆன்மீக அனுபவத்தையே வெளிப்படுத்துகின்றன. உயிர்த்திருத்தலின் இனிமையை அடையாளம் காட்டுகின்றன. ஒருவேளை பௌத்தம் தான் இந்த அடிப்படைக்கு மூலகாரணமே என்னவோ. ஜப்பானிய அனிமேஷன் படங்களில் ஜென் தன்மை நீக்கமற நிறைந்திருக்கிறது. அரிதாக ஒன்றிரண்டு ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் ஒரு சில காட்சிகளில் ஜென் தருணங்களை காணமுடிகிறது.

ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் மாற்றுப்பிரதிகள் போலவே அனிமேஷன் படங்களும் இருக்கின்றன. ஆனால்  ஜப்பானிய அனிமேஷன் படங்கள் அப்படி பட்டவையில்லை. அவற்றின் உரையாடல் கவித்துவமானவை.. சினிமா நட்சத்திரங்களின் குரல்களை ஜப்பானிய அனிமேஷன் பயன்படுத்துவதில்லை

THE LION KING, FANTASIA, KUNG FU PANDA, FINDING NEMO, RATATOUILLE, INSIDE OUT ,ZOOTOPIA ,ANOMALISA போன்ற ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் எனக்குப் பிடித்திருந்த போதும் WALTZ WITH BASHIR, PERSEPOLIS, WHEN THE WIND BLOWS THE TRIPLETS OF BELLEVILLE போன்ற அனிமேஷன் படங்கள் தந்த அனுபவத்திற்கு நிகரேயில்லை.

குறிப்பாக மியாசகியின் PRINCESS MONONOKE. SPIRITED AWAY .THE CASTLE OF CAGLIOSTRO, NAUSICAÄ ,CASTLE IN THE SKY, MY NEIGHBOR TOTORO ,KIKI’S DELIVERY SERVICE ,THE CAT RETURNS, HOWL’S MOVING CASTLE, THE WIND RISES. PONYO . PORCO ROSSO போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் நிகரற்றவை. அவசியம் குழந்தைகள் இவற்றைக் காணவேண்டும். ஐப்பானியர்கள் இதை ANIME MOVIES என்கிறார்கள்

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்கான அனிமேஷன் பிரிவில் பரிந்துரைக்கபட்ட படம் The Red Turtle.

ஜப்பானிய பிரெஞ்சு கூட்டுத்தயாரிப்பு. இதை இயக்கியுள்ளவர் Michaël Dudok de Wit. இவரது இயக்கத்தில் உருவான Father and Daughter குறும்படம் ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. Father and Daughter படத்தின் சாயலை Red Turtle லில் காணமுடிகிறது.

The Red Turtle படம் புயலில் சிக்கித் தீவில் அடைக்கலமாகும் ஒருவனின் கதை. யாருமற்ற தீவில் அவன் பசியோடும் களைப்போடும் அலைந்து திரிகிறான். அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக மரங்களைக் கொண்டு மிதவை ஒன்றை உருவாக்குகிறான். அதைச் செலுத்தி கடலில் போக முற்படும் போது சிவப்பு ஆமை ஒன்று அந்த மிதவையை மோதி உடைந்துவிடுகிறது. இதனால் அந்த மனிதன் ஆத்திரமடைகிறான். சிவப்பு ஆமை கரையேறி வரும்போது அதைத் தாக்குகிறான். ஆமை பலத்த காயமடைகிறது. ஆமையை ஏன் அடித்துத் திருப்பிப் போட்டோம் என்ற குற்றவுணர்வில் அவன் அதற்கு உதவி செய்ய முயற்சிக்கிறான்.

ஒரு நாள் அந்த ஆமையின் ஒடு உடைந்து அதிலிருந்து ஒரு இளம்பெண் வெளிப்படுகிறாள். வியப்போடு அப் பெண்ணைப் பார்க்கிறான். அவள் தனது ஆமை ஒட்டினை கடலில் அனுப்பிவிடுகிறாள். அதைக் கண்ட அவனும் தனது மிதவையைக் கடலில் தள்ளிவிட்டு இனி தீவிலே வசிக்கலாம் என முடிவு செய்கிறான்.

அந்த ஆமைப்பெண்ணும் அவனும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பையன் பிறக்கிறான். அவன் ஒரு நாள் பாறைசரிவில் தவறி கடலில் விழுந்துவிடுகிறான். அங்கே ஆமை ஒன்றைச் சந்திக்கிறான். அதனுடன் பழக ஆரம்பிக்கிறான். தான் ஆமையின் வாரிசு என அறியாமலே அவன் ஆமையை நேசிக்கிறான்.

அந்தத் தீவை திடீரென சுனாமி தாக்குகிறது. அங்கிருந்த மரங்கள் அழிக்கபடுகின்றன. பையன் வளர்ந்து பெரியவன் ஆகிறான். அந்தத் தீவை விட்டு வெளியேறி போக விரும்புகிறான். வயதான தாயும் தந்தையும் அவனை அனுப்பி வைக்கிறார்கள். அந்தத் தீவில் அந்த வயதான ஆளும் ஆமைப்பெண்ணும் என்ன ஆகிறார்கள் என்பதே முடிவு.

நட்சத்திரங்கள் அடர்ந்த வானைப் பார்த்தபடியே அந்த மனிதன் படுத்துக்கிடக்கும் காட்சி அபாரமானது. அது போலச் சிவப்பு ஆமை ஒரு பெண் என அவன் முதன்முறையாகக் கண்டுகொள்வதும், கடலில் குளிக்கும் அவளுக்காகத் தனது மேற்சட்டையைக் கழட்டி தருவதும். அவர்கள் இருவரும் கடலில் நீந்திக் காதலிப்பதும். குட்டி பையன் கடல் ஆமையை முதன்முறையாக அருகில் பார்ப்பது என மறக்கமுடியாத காட்சிகள் நிறைய உள்ளன.

ஆமைப்பெண் ஏன் தனது ஒட்டினைத் தூக்கி எறிந்து அந்த மனிதனோடு வாழ முற்படுகிறாள் என்பதே படத்தின் மையப்புள்ளி.

தீவிலிருந்து தப்பிப் போக மிதவை தேவைப்படுகிறது. ஆனால் உறவாக ஒரு பெண் கிடைத்துவிட்டபிறகு மிதவை தேவையற்றதாகிவிட்டது. யாருமற்ற அந்தத் தீவை கண்டு அவன் ஆரம்பத்தில் பயப்படுகிறான்.

மனைவி பிள்ளையோடு வாழ ஆரம்பித்துவிட்ட பிறகு அந்தத் தீவு அவனது வீடு. அது அவனது உலகம். சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார்கள். பயம் போய்விட்டது. வாழ்வின் இனிமை உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் தானிருக்கிறது. பரஸ்பரம் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள்.

படத்தில் இயற்கை எவ்வளவு வசீகரமாகயிருக்கிறதோ, அவ்வளவு கருணையற்றதாகவும் இருக்கிறது. தேர்ந்த இசையும் கவித்துவமான காட்சிகளும் இப்படத்தை மகத்தான அனுபவமாக மாற்றுகிறது.

படம் முடியும் போது நம் வாழ்க்கையும் இப்படிப்பட்டது தானே, தீவில் மாட்டிக் கொண்ட மனிதன் என்பது ஒரு குறியீடு தானே. நகரம், மாநகரம் எல்லாமும் தனித்தீவுகள் தானே எனத்தோன்றியது

இப்படத்தைச் சிறுவர்களும் பார்க்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்கான படமே.

படம் முழுவதும் நண்டுகள் ஒடிக்கொண்டேயிருக்கின்றன. ஒரு காட்சியில் சிறுவன் ஒரு நண்டினை பிடித்து வாயிலிட்டு கடிப்பான். தின்னப்பிடிக்காமல் துப்பிவிடுகிறான். அந்த நண்டு ஒடிவிடுகிறது. ஒடிக்கொண்டிருக்கும் நண்டு தான் காலம் போலும்.

ஆமையாக இருந்தவள் பெண்ணாக மாறுவதற்குக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நீள்துயில் நீங்கியே அவள் பெண்ணாக உருமாறுகிறாள். அவனது அன்பும் அக்கறையுமே அந்த விழிப்பிற்குக் காரணமாகிறது. பெண்ணாக மாறியவள் ஒரு காட்சியில் மணலில் ஆமையின் உருவத்தை வரைகிறாள். அப்போது கூடத் தன் மகனிடம் தான் ஒரு ஆமை என்று சொல்வதில்லை. ஆனால் கோடுகளின் வழியே தனது நினைவைப் பகிர்ந்து கொள்கிறாள். இன்னொரு காட்சியில் பாறைப்புடவில் சிக்கிக் கொள்ளும் மகனிடம் இந்தப் பக்கம் நீந்து எனக் கையால் ஜாடை காட்டுகிறாள். அவன் புரிந்து கொள்கிறான். தாயின் மொழி சொற்களற்றது தானே.

அடர் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ள விதத்தில் ஜப்பானிய அனிமேஷனின் தொடர்ச்சியை அடையாளப்படுத்துகிறார்கள். ஹாலிவுட் அனிமேஷன் படங்களைப் போலச் செயற்கையான நட்சத்திரக்குரல்கள் எதுவும் இப்படத்தில் பயன்படுத்தபடவில்லை. சேர்ந்திசைப்பாடல்கள். கொண்டாட்டக் காட்சிகள் எதுவுமில்லை. எளிமையும் கவித்துவமும் உண்மையான உறவை சித்திரிக்கும் கதையுமே இப்படத்தின் சிறப்புகள்.

ஒரு அனிமேஷன் திரைப்படம் வழியாகவும் ஆத்மீகமான அனுபவத்தைப் பெறமுடிகிறது என்பது இப்படத்தின் தனித்துவம்

**

23.06.2017

0Shares
0