எனக்குப் பிடித்த கதைகள் 1

பால்மணம்

ஜப்பானியச் சிறுகதை

எழுதியவர்- அகுடாகாவா[ RYUNOSUKE  AKUTAGAWA] தமிழாக்கம்: கவிஞர் வைதீஸ்வரன்

ஷின்சுகே பிறந்ததிலிருந்து தாய்ப்பாலைச் சுவைத்ததேயில்லை. அவன் பிறந்ததிலிருந்தே அவன் தாய் மிகவும்   பலஹீனமானவளாக  பால்சுரப்பில்லாமல் இருந்தாள். குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக செவிலித்தாயை ஏற்பாடு செய்யவேண்டுமென்றால் அதற்குப் பணம் தேவையாக இருந்தது. அவளுக்கு அவ்வளவு   வசதியில்லை. ஆகை யால் ஷின்சுகே பசும்பால் குடித்துத்தான் வளரவேண்டியிருந்தது.  இப்படி தாய்ப்பால் சுவையறியாமல் வளர்ந்த குழந்தைப் பருவத்தை  நினைத்து  அவன் எப்போதும் சபித்துக் கொள்ளாமல் இருந்ததே யில்லை

தினமும் காலையில்  சமையல் அறையில் மேடையில் வைக்கப் பட்டிருக்கும் பால் பாட்டில்களைப் பார்க்கும்போது அவனுக்கு வெறுப்பாக இருக்கும்.. அவன் சிநேகிதர்களைப் பார்க்கும்போது அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அவர்கள் பெரிய கெட்டிக்காரர்களாக இல்லாமலிருக்கலாம்.ஆனாலும், அவர்கள்  தாய்ப்பாலின் சுவையை அனுபவித்தவர்கள்.

இவன் நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாவதுக்குப் போன போது வருஷப்பிறப்பின் சமயம் வந்திருந்த அவனுடைய சின்ன அத்தையின் ஸ்தனங்கள் வலிக்கும் அளவுக் குப்  பெரிதாக வீங்கிவிட்டன. அவள் வெங்கலப்பேலாவில்  பாலைப் பீச்சி எடுக்க முயற்சிசெய்து பார்த்தாள்.  ஆனாலும்  வலி சற்றும் குறையவில்லை.

அத்தை அப்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஷின்சுகேவைப் பார்த்து  கண்களை சிமிட்டியவாறு, “ஏண்டா  கண்ணு..   நீ  கொஞ்சம் குடிக்கிறயாடா?..    எனக்காக  கொஞ்சம் குடீடா…. .குடிக்கிறயா?”  என்று கேட்டுப்பார்த்தாள்.  பசும்பால் குடித்து வளர்ந்தவனுக்கு ஒரு வேளை முலைசூப்புவது தெரியாமலும் இருக்கலாம். முடிவாக அத்தை பக்கத்துவீட்டு மாமியுடைய பெண்ணை அழைத்துவந்து   பால் கொடுத் தாள். அவள் ஸ்தனங்கள்  அப்போது நீல நரம்புகள் படர்ந்து  அரை வட்டமாகப்  புடைத்துக்கொண்டிருந்தன.

ஷின்சுகே எப்போதுமே எதற்குமே வெட்கப்படுவான். முலைசூப்பத் தெரிந்திருந்தாலும்கூட அத்தையிடம் பால் குடிப்பது அவனால் முடிந் திருக்காது. அத்தையிடம் பால் குடித்துவிட்டுப் போன அந்த பக்கத்து வீட்டுச்சிறுமியை நினைக்கும்போது அவனுக்கு வெறுப்பாக இருந்தது. பக்கத்துவீட்டுப் பெண்ணை அழைத்துவந்து பால்கொடுத்த அத்தையின் மீதும் அவனுக்குக் கோபமாக வந்தது. இந்த சின்ன சம்பவம்  அவன் மனதில் எதைப்பற்றியோ இனமறியாத பொறாமையைத் தூண்டிவிட்டது. பருவத்தின் கிளர்ச்சிக்கும் அது ஒரு ஆரம்பமாக இருந்தது.

பாட்டிலில் அடைத்த பசும்பாலும், அம்மாவின் பால் குடித்தறியாத நினைவும் இரண்டுமே அவன் உள்மனத்தில் ஏதோ இழந்த உணர்ச் சியை விரவிக்கொண்டிருந்தன. இந்த பலஹீன உணர்வு அவன்  உள் மனத்தில் வெட்கமான ரகஸியமாக யாருக்கும்  தெரிவிக்க இயலாத தாக புதைக்கப்பட்டிருந்தது.. அவனுக்கு  வெட்கம்  மட்டுமல்ல ஒரு சின்ன அதிர்வைக் கூடத் தாங்க முடியாமல்  நெஞ்சு எதற்கெடுத்தாலும் படபடத்தது – சாதாரணமாக ஒரு கத்தியைப் பார்த்தால் கூட!

இதற்கு நேர்மாறானவர் அவன் அப்பா. தன் தைரியத்தைப் பற்றி  அடிக்கடி   கர்வப்பட்டுக்கொள்ளக்கூடியவர். புஷிமா டோபா யுத்தத்தில்  எதிரிகளின்  குண்டுவீச்சை  எதிர்கொண்டு சண்டையிட்டவர் .

ஷின்சுகேயிக்கு எந்த வயதில் எப்போதிலிருந்து நிச்சயமில்லை. ஆனால்,  தன்  அப்பாவைப்போல் இல்லாமலிருப்பதற்கு காரணம் தாய்ப்பாலுக்கு பதிலாக மாட்டுப்பால் குடித்ததே என்றொரு அசட்டுநம்பிக்கை  வேர்விட்டிருந்தது. அவனுடைய  நோஞ்சலான உடம்புக்கு தான் குடித்த பால்தான்   காரணம் என்று அவன் நம்பினான்.

அவனுக்கு தன் ஊகம் சரியாக இருந்தால் அவன் தன் பலஹீனத்தை லேசாகக் காட்டினாலும் அவன் நண்பர்களுக்கு அது அவன் ரகஸியத்தைக்  காட்டிக்கொடுத்துவிடும் என்று தோன்றியது.

ஆகையால் அவன் தன் சிநேகிதர்கள் சவால்விடும் எந்த போட்டிகளையும் ஏற்கத் தயாராக இருந்தான்.அதில் ஒன்று ஊன்றுகோல் இல்லாமல் பெரிய சாக்கடையை  தாண்டு வது…மற்றது, ஏணியில்லா மல் கோயில் கிணற்றருகில்  வளர்ந்திருக்கும் தென்னைமரத்தில் ஏறுவது.  இன்னொன்று  ஒரு ’மோட்டா’ப் பையனுடன் மோதி முட்டி சண்டைபோடுவது.

சாக்கடையைத் தாண்டும்போது முழங்கால் இரண்டும் நடுங்கியது. கண்களைஇறுக்கி மூடிக்கொண்டு ஆன மட்டும் வேகத்தைக் கூட்டிக் கொண்டு குதித்து    சாக்கடை  ஓரத்தில்   சேறு மண்டிய களைகளில் போய் விழுந்தான்.

தென்னைமரம் ஏறும்போதும்,  குண்டுப் பையனுடன் சண்டை போடும் போதும் கூட அவனுக்கு அதே மாதிரி தடுமாற்றமும் பயமும் மேலிட்டுக்கொண்டிருந்தது.இருந்தாலும் ஒவ்வொருமுறையும் அவன் பயத்தை ஜபித்துக்கொண்டிருந்தான்.

அவனுக்குள் புதைந்துபோன அந்த பலஹீனத்தின்  தூண்டுதலே போன்று இப்படிப்பட்ட குருட்டுத் துணிச்சலான  பயிற்சிகளுக்கு அவனை ஈடுபடுத்தி  அவன் முழங் காலிலும்  ஆழ்மனதிலும் மாறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு நல்ல மாற்றமாக  அவனுடைய  அசட்டுத்தனமான  நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருவதாகவும் தோன்றியது. மேலும் முக்கியமாக அவன் படித்த மேற் கத்திய சரித்திரத்தில் கண்டறிந்து கொண்ட ஒரு விஷயம் அவனுடைய   நெடுங் காலக் கற்பனை பயத்தை முற்றாக  அழித்துவிடும் விதமாக   இருந்தது. அந்த விஷயம் “ரோமாபுரியை நிர்மாணித்த  ரோமுலஸ் என்ற மன்னன்   ஓநாயால் பாலூட்டி  வளர்க்கப்பட்டவன்‘ என்று தெரிவித்தது.

மாறாக, அவன்  பசுவின் பால்  குடித்துவளர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டபோது அவனுக்குப் பெருமையாகக்கூட இருந்தது. அவன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது மாட்டுப்பண்ணை வைத்திருந்த அவன் மாமாவுடன் ஒருமுறை அங்கே சென்றதும் அங்கே  ஒரு வெள்ளைப்பசுவுக்கு  வைக்கோல்கட்டு ஒன்றை ஊட்டியபோது அது வேலியைத் தாண்டி கழுத்தை நீட்டிக்கொண்டு வைக்கோலை வாயில் கடித்துக்கொண்டு அசைபோட்ட பாங்கும்  நினைவுக்கு வந்தது. அந்தப் பசுவின் கருமையான பெரிய விழிகளின் பார்வை அநேகமாக மனிதனைப் போலவே   இருந்தது.  மீண்டு வரும் இந்த எண்ணங்கள் ஒரு வேளை கற்பனையா?.. இருக்கலாம்.

அவன் இப்போது பூவரசக்கிளைகளின் அடியில் வட்டமாக வளைந் திருக்கும் வேலியில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருக்கிறான்.

ஒரு உயரமான வெண்மையான தாய்ப்பசு ஒன்றுஅவனை  அன்புடன் கருமையான விழிகளால் பார்த்து அவன் மனதை பிரியத்தால் நிரப்பி ஊடுருவதுபோல் அவன்  உணர்ந்தான்.

***

0Shares
0