கரப்பான்பூச்சிகள் காதலிப்பதில்லை.


                


 


 


 


                        ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவு தமிழில் மற்ற நாடுகளின் இலக்கியங்கள் அறிமுகமாகவில்லை. பிரெஞ்சு இலக்கியத்தின் மாபசானும் விக்டர் க்யூகோவும் எமிலிஜோலாவும் தமிழுக்கு 1950களில் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் ஜெர்மனிய இலக்கியத்தைப் பொறுத்தவரை அறிமுகமாகியிருந்த ஒரே பெயர் கதே. அதுவும் அவரது பாஸ்டஸ் நாடகம் மட்டுமே.

நவீன ஜெர்மானிய இலக்கியம் பற்றிய அறிமுகம் மிகக் குறைவாகவே உள்ளது . நவீன தமிழ் இலக்கியத்தின் ஊடாக அறிமுகமான முக்கிய ஜெர்மானிய எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா (Franz Kafka). காப்காவின் விசாரணை நாவல் நேரடியாக ஜெர்மனியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. அது போலவே காப்காவின் சிறுகதைகளும் குறுங்கதைகளும் சமீபத்தில் அவரது டயரியும் தமிழில் வெளியாகி உள்ளன.

அவரைத் தவிர பிரெக்டின் கவிதைகளும் ஒன்றிரண்டு நாடகங்களும் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா. பால்வான் ஹெய்சேயின் குறுநாவல் தாமஸ்மானின் இரண்டு நாவல்களும் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு திரவியம் தொகுத்த ஜெர்மானிய புத்திலக்கியம் என்ற தொகுப்பு நுல் வெளிவந்திருக்கிறது. அதன்பிறகு அது போன்ற முயற்சிகள் நான் அறிந்தவரை நடை பெறவில்லை

தமிழில் மொழிபெயர்க்கபடாத போது நன்றாக அறிமுகமான எழுத்தாளர் நோபல் பரிசு பெற்ற குந்தர்கிராஸ். அதற்கு கிராஸ் இந்தியா வந்திருந்த நாட்களில் சென்னை வந்ததும் அவரது படைப்புகள் இந்தியா மீது காட்டும் அக்கறையும் முக்கிய காரணம். அதன்பிந்திய தலைமுறை எழுத்தாளர்களை பற்றிய விரிவான அறிமுகம் தமிழில் இன்றுவரை இல்லை..

தேடி வாசித்தவகையில் எனக்கு Heinrich Böll, Peter Handke, Heinrich Heine போன்ற ஒருசிலர் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.. மற்றவகையில் சமகால ஜெர்மனிய இலக்கியம் நான் அறியாததே.

காப்காவின் உருமாற்றம் (The Metamorphosis)கதையை என் கல்லூரி நாட்களில் முதன்முறையாக வாசித்தேன். முதல்வரி தேவதைக் கதை போலத் துவங்கியது.இளவரசிகள் கிளிகள் ஆவதும், இளவரசர்கள் தவளைகள் ஆவதையும் பற்றிய அற்புதக்கதைகளை வாசித்திருந்த எனக்கு தன்னுடைய படுக்கையில் கண்விழித்து பார்த்த கிரிகோர் சாம்சா தான் ஒரு கரப்பான்பூச்சியாக மாறியிருப்பதை உணர்ந்தான் என்ற காப்காவின் முதல் வரி நெருக்கமானதாகயிருந்தது.

தேவதைக் கதைகளில் தவளையாகவோ, கிளியாகவோ மாறுகின்றவர்கள் சாபத்தால், தங்கள் விருப்பமின்றி உருமாறியவர்கள். அவர்களுக்கு மீட்பு காத்திருக்கிறது. யாரோ ஒருவன் அவர்களை மீட்கும் வரை தங்கள் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டு காத்திருப்பார்கள்.

காப்காவின் கதைநாயகன் கிரிகோர் சாம்சாவிற்கு நடந்தது சாபம் அல்ல. அது எதிர்பாராமை. துர்சொப்பனம் ஒன்றிலிருந்து விழித்து எழுந்த போது கனவு நிஜமானது போன்றதொரு நிலை. இன்னும் சொல்வதாயின் அடிமனதில் உறைந்து போயிருந்த விபரீத ஆசையொன்று கண்விழித்து கொண்டுவிட்டது என்றும் சொல்லலாம்.

கிரிகோர் சாம்சா ஒரு கரப்பான்பூச்சியாக உருமாறிவிட்டான் என்ற வரியைக் கடந்து கதைக்குள் செல்வது எளிதானதில்லை. காரணம் அறிவு உடனே விழித்துக் கொண்டுவிடுகிறது. அதையொரு விந்தை என்று மட்டும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

எப்படி ஒரு மனிதன் கரப்பான்பூச்சியாக மாற முடியும் என்ற தர்க்கம் கேள்வியாக நம் முன்னே வந்துநிற்கிறது. உண்மையில் பல வேளைகளில் நம்மை ஒரு கரப்பான்பூச்சியை விடவும் கேவலமாக நடத்தும் சமூக நெருக்கடிகளை உணர்ந்தபோதும் கூட அறிவு இந்தக் கேள்வியை கட்டாயம் எழுப்பவே செய்கிறது. இன்னொன்று பூச்சியாக மாறியபிறகு எப்படி கிரிகோர் சாம்சாவின் நினைவு கரப்பான்பூச்சிக்குள் இருக்கிறது என்ற துணைக்கேள்வி

இந்த தர்க்கங்கள் கதையின் மீதான சந்தேகமாக ஊசலாடத் துவங்குகிறது. உண்மையில் புனைவிலக்கியம் இது போன்ற நமது முன்கூட்டிய முடிவுகளை அழித்து எழுதுவதையே தன் பிரதான வேலையாகக் கொண்டிருக்கிறது.

கதை என்பது ஒரு புனைவு. புனைவு என்றதும் நாம் பொய் என்று அர்த்தப்படுத்திக் கொண்டுவிடுகிறோம். புனைவு என்பது இன்னொரு யதார்த்தம். காண் உலகில் நாம் அறிந்த யதார்த்தம் எவ்வளவு இயல்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறதோ அது போல மொழியால் உருவாக்கபடும் யதார்த்தம்.

கதையை வாசிக்கும் எவருக்கும் கிரிகோர் சாம்சா என்ற பெயர் முக்கியமானதில்லை. அவன் ஒரு மனிதன். ஒரு குடும்பத்தில் வசிப்பவன். நெருக்கடியில் அவதிப்படுகின்றவன் என்ற தகவல்கள் போதுமானதாகயிருக்கிறது.

ஆனால் கிரிகோர் சாம்சாவின் உண்மையான பிரச்சனை தான் அந்தப் பெயர் மட்டும் இல்லை என்பதே. அந்தப் பெயரைக்கடந்து கிரிகோர் சாம்சா தனக்கான அடையாளம் எது என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கிறான்.

ஊர் ஊராகச் சுற்றிப் பயணம் செய்யும் வணிகப்பிரதிநிதியாக வேலை செய்வது அவனது தவிர்க்கமுடியாத வாழ்க்கை நெருக்கடி. ஆனால் அது மட்டுமே அவனல்ல. தனது விருப்பங்களும் ஆசைகளும் ஒடுக்கபட்டு, முன்னதாகவே கரப்பான்பூச்சியை போல தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அவனைப் பீடித்திருப்பது பயம். அப்பாவிற்கு, அலுவலகத்தின் உயரதிகாரிகளுக்கு, வீட்டிற்கு என எல்லாவற்றிற்கும் பயந்து வாழ்கிறான். ஆனால் அவன் மனது விழிப்படைந்தபடியே உள்ளது. அவனால் இயல்பாக தூங்க முடியவில்லை. ஒய்வற்ற பயணம் அவனை வதைக்கிறது.

கரப்பான்பூச்சிகள் இருட்டுக்குள் ஒளிந்து வாழ்வது போன்று அவன் தன் அறையின் கதவைச் சாத்திக் கொண்டு வாழ்கிறான். நெருக்கடி அவனை துரத்திக் கொண்டேயிருக்கிறது. பல நேரங்களில் அவன் மாறிமாறி ரயிலைப் பிடிக்க ஒடும் போது அவனுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கால்கள் தேவைப்படுகின்றன. அதனால் தானோ என்னவோ அவன் நிறைய கால்கள் உள்ள கரப்பான் பூச்சியாக மாறுகிறான்.

கிரிகோர் சாம்சா எப்படி கரப்பான்பூச்சியாக மாறினான் என்பதில் இல்லை விந்தை. கரப்பான் பூச்சி ஏன் ஆபீஸ் போக மறுத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறது. கரப்பான் பூச்சி ஏன் பணம் சம்பாதிக்க மறுக்கிறது. கரப்பான் பூச்சி ஏன் அப்பாவை வெறுக்கிறது. கரப்பான் பூச்சி ஏன் தங்கையிடம் அன்பாக இருப்பதில்லை என்பதே.

மனிதர்கள் கரப்பான் பூச்சியாக மாறியபோதும் கூட நிம்மதியாக வாழ முடியாது என்பதே மறுக்கமுடியாத நிஜம். கிரிகோர் சாம்சா கரப்பான் பூச்சியாக மாறியதை அறிந்திருக்கிறான். ஆனால் நம்மில் ஆயிரக்கணக்கானோர் நாம் கரப்பான் பூச்சிகளாக மாறியுள்ளதை அறிந்திருக்கவில்லை. அவ்வளவு மட்டுமே வித்யாசம்.

சரி கரப்பான்பூச்சியாக மாறியபிறகு கிரிகோர் சாம்சாவிற்கு என்ன நடக்கிறது. இரண்டு வரிகளில் அந்த விந்தை அழித்து எழுதப்பட்டுவிடுகிறது. ஒரு நிமிசம் தன்னை உற்றுப் பார்த்து கொள்ளும் கிரிகோர் சாம்சா தான் கரப்பான்பூச்சியாக எப்படி மாறினோம் என்று குழப்பமடைவதில்லை.

கரப்பான்பூச்சியாக உள்ளதில் ஏற்படும் உடற்சிரமங்களை மட்டுமே அவன் உணரத் துவங்குகிறான். பல நாட்கள் தேவதை கதைகளை வாசிக்கும் போது எனக்கு இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தவளையாக மாறியபிறகு இளவரசன் மற்ற தவளைகளைப் போல இருப்பானா இல்லை இளவரசனாகவே தன்னை நினைத்து கொண்டு இருப்பானா என்று. உண்மையில் தவளையாக மாறியபிறகு இளவரசனாக நினைவுகள் இருப்பது சித்ரவதைதானில்லையா?

கிரிகோர் சாம்சாவிற்கு தான் கரப்பான்பூச்சியாக மாறியதை விடவும் தான் இன்னும் கொஞ்ச நேரம் துங்க வேண்டுமே என்பதில் தான் அதிக கவனம் இருக்கிறது. அவன் வெளியே பெய்யும் மழை சப்தம்கேட்ட போது கூட மனவருத்தமே அடைகிறான். ஒடி ஒடி ரயிலைப் பிடிப்பது எரிச்சல் ஊட்டும் காரியம் என்று அலுத்துக் கொள்கிறான்.

கரப்பான்பூச்சி கூட்டுகண்கள் கொண்டது. ஆனால் கிரிகோர் சாம்வாவிற்கோ இமைகள் உள்ள மனித கண்களாகவே இருக்கின்றது. என்றால் அவன் விலங்கியலில் இடம் பெறாத ஒரு பூச்சியாக மாறியிருக்கிறான் என்று தானே அர்த்தம். ஒரு வேளை போர்ஹே சொல்வது போல அவன் ஒரு கற்பனா ஜீவராசியாக மாறியிருக்கிறானோ என்னமோ.

கரப்பான்பூச்சியாக உருமாறியதை விடவும் மறுநாள் செய்யத் தவறிய வேலைகள் அவனை வாட்டி எடுக்கத் துவங்குகின்றன. நேரமாகிறது. எழுந்து வேலைக்கு கிளம்பவில்லை. வீட்டில் உள்ளவர்கள் கவலைபடுகிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். அவனது அலுவலகத்திலிருந்து தலைமை அதிகாரி வீட்டிற்கு வந்து திட்டுகிறார். அவன் தான் கிளம்பிக் கொண்டிருப்பதாக பதில் சொல்கிறான்.

எனக்கு மிகவும் பிடித்தமான வரி அது. கரப்பான்பூச்சி பதில் சொல்கிறது. இதுவரை கோடான கோடி மனிதர்களை கண்டிருந்த போதும் கரப்பான்பூச்சி எவருக்கும் பதில் பேசியதில்லை. இப்போது கரப்பான் பூச்சி பேசுகிறது. வெளியில் இருந்தவர்களுக்கு அதன் பாஷை புரியவில்லை. ஏதோ மிருக ஒலி என்று புறம் ஒதுக்குகிறார்கள்.
நம்மால் புரிந்து கொள்ளபட முடியாத மொழியாவும் விலங்கின் ஒலி என்று தானே நம் இத்தனை நாள் கருதி வருகிறோம். அதைத் தான் காப்காவின் வீட்டோரும் செய்கிறார்கள்.

அதன்பிறகு நடப்பது தான் கதையை சுவாரஸ்யமூட்டுகிறது. கிரிகோர் சாம்சா கரப்பான்பூச்சியாக மாறிவிட்டதை வீட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்கிறார்கள். கரப்பான்பூச்சியை வீட்டில் வைத்து எப்படி காப்பாற்றுவது என்று எரிச்சல் அடைகிறார்கள். அத்தோடு யார் இனிமேல் சம்பாதித்து வீட்டைப் பராமரிக்கப் போகிறார்கள் என்ற பிரச்சனை முன்னால் எழுகிறது.

வழியில்லாமல் மீண்டும் கிரிகோர் சாம்சாவின் அப்பா வேலைக்குப் போகிறார். அது வரை சோம்பியிருந்த வீடு மெல்ல விழித்துக் கொள்கிறது. அவனது இருப்பை மறந்து அவர்கள் தங்களது அன்றாட வாழ்வைத் தொடருகிறார்கள்.

கரப்பான்பூச்சியாக மாறியபிறகு அவனுக்கு தான் இதுவரை புரிந்து கொள்ளாமல் விட்டது வெளிஉலகை அல்ல வீட்டை தான் என்ற உண்மை புரிகிறது. வீட்டின் ஒவ்வொரு இயக்கத்தையும் உன்னிப்பாக கவனிக்கிறான். பகலிரவுகள் கடந்து போகின்ற எளிமையான காலத்துளிகள் அல்ல என்பது புரிகிறது.

ஆனால் அவனால் எதிலும் பங்கேற்ற முடியாது. அவனை அப்புறப்படுத்தபட வேண்டிய அருவருப்பான பூச்சியாக நினைக்கிறாள் வேலைக்காரி. கிரிகோர் சாம்சா மீளமுடியாத அகநெருக்கடிக்கு உள்ளாகிறான். அவனுக்குப் பசிக்கிறது. அறையை விட்டு வெளியே வர நினைக்கிறான். ஆனால் அது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

குடியிருப்பில் இருப்பவர்கள் ஒரு மனிதன் கரப்பான்பூச்சியாக மாறியதை அனுமதிக்க மறுக்கிறார்கள். கைவிடப்பட்ட கிரிகோர் சாம்சா மீளமுடியாத வேதனையில் அவதியுற்று இறந்தும் போகிறான். அவனை குப்பையை போல அகற்றிவிடுகிறார்கள். குடும்பத்தின் இயல்பான வாழ்க்கை எப்போதும் போல தொடர்கிறது.

காப்காவின் இக்கதை 1915 ஆண்டு வெளியானது. இந்த கதை வெளியான சூழலில் ஜெர்மனியில் யுத்தநெருக்கடியில் இருந்தது. உணவுதானியக் கட்டுபாடு அமுலில் இருந்தது. காப்காவிற்கு முப்பத்திரெண்டு வயதாகியிருந்தது. அவர் பெலிக்ஸ்பெவர் என்ற பெண்ணைக் காதலித்து கொண்டிருந்தார். ஆனால் அவளைக் கல்யாணம் செய்து கொள்வதில் மனக்குழப்பம் இருந்தது. சிறுவயதிலிருந்து அப்பாவின் மீது வளர்ந்து வந்த வெறுப்பு உச்சநிலையை அடைந்திருந்தது. தனிமையும் சுயவெறுப்பும் கொண்டிருந்த
காப்காவிற்கு எழுத்து மட்டுமே ஆறுதல் தருவதாகயிருந்தது.

உருமாற்றம் என்ற கதையை காப்காவின் சொந்தவாழ்வின் எதிரொலி என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. மாறாக குடும்ப உறவுகளுக்குள் தத்தளிக்கும் ஒரு மனிதனின் கதை என்று எடுத்து கொள்ளலாம். கிரிகோர்சாம்சா நம்மில் யாராகவும் இருக்கலாம் என்பதே அதன் தனிச்சிறப்பு.

காப்காவின் கதையை வாசிக்கையில் ஒரு கவிதையும் இன்னொரு கதையும் நினைவிற்கு வருகின்றன. அது ஒரு ஜென் கவிதை. எழுதியவர் சாங்க் ட்சூ. (Chaung Tzu)

ஒரு நாள் சாங்க் ட்சூ தான் ஒரு பட்டாம்பூச்சியாக உருமாறுவதாக கனவு காண்கிறார். பறந்து திரிந்து மறுபடியும் கண்விழிக்க மீண்டும் மனிதனாகிறார். அவருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. தான் பட்டாம்பூச்சியாக மாறினோமா அல்லது பட்டாம்பூச்சி சாங்க் ட்சூவாக மாறியதா என்று .இந்த கவிதையும் உருமாற்றம் பற்றியே பேசுகிறது.
ஆனால் இதில் பட்டாம்பூச்சி விடுபட்ட சுதந்திர நிலையாகவும் அடைய முடியாத ஆனந்ததின் வெளிப்பாடாகவும் காட்டப்படுகிறது. இன்னொன்று கனவில் எது நிஜம் என்ற பதிலற்ற கேள்வியோடு நமக்குள் எப்போதும் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கிறது என்ற தத்துவார்த்த படிமத்தை முன்வைக்கிறது.

அது போலவே ருஷ்யாவின் நாட்டுபுறக் கதைகளில் ஒன்றை வாசித்திருக்கிறேன். அதில் ஒரு இளம்மந்திரவாதி ஒருவன் கிராமபுறத்தின் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். அவனை கடந்து போன குதிரை வண்டி அவன் மீது சேற்றை வாறி அடித்துவிட்டுப் போகிறது.

கோபம் கொண்ட மந்திரவாதி உடனே அந்தக் குதிரையை ஒரு பூனையை போல மாற்றிவிடுகிறான். அதைக்கண்ட விவசாயி அய்யோ குதிரையில்லாமல் என்னால் வேலை செய்ய முடியாதே என்றதும் இது பார்க்கத்தான் பூனை போல இருக்கும் ஆனால் குதிரை செய்யும் எல்லா வேலைகளையும் செய்யும் என்கிறான்.

விவசாயி வேறு வழியில்லாமல் பூனையை தன்வீட்டிற்கு கூட்டிவருகிறான். குதிரைக்கு நேற்றுவரை இல்லாமல் உலகம் திடீரென மிகப் பெரியதாக இருக்கிறது. அது வீட்டின் கூரையின் மீது ஏறி நின்று ஊரை பார்க்கிறது. மரங்களில் தாவி ஏறுகிறது. இஷ்டம் போல அலைகிறது. இவ்வளவு ஏன் ஒரு எலியோடு நட்பாக பழக கூடச் செய்கிறது.
அதே நேரம் வண்டி இழுக்கிறது. சுமை கொண்டு செல்கிறது. விவசாயி அந்தப் பூனையை தன் அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறான். பூனையாக மாறிய குதிரை மிக சுதந்திரமாக உணர்கிறது.

அதே மந்திரவாதி சில மாதங்களின் பிறகு திரும்ப அந்த ஊருக்கு வருகிறான். விவசாயியை கண்டதும் மனம் மாறி அவன் பூனையை திரும்ப குதிரையாக்கிவிடுகிறான். இப்போது அதற்கு பூனையின் மனமும் குதிரையின் உடலும் இருக்கிறது. எலி அருகில் வர மறுக்கிறது. சுவரில் ஏற முடியவில்லை. அந்தக் குதிரை தான் உண்மையில் யார் பூனையா , குதிரையா என்று தெரியாமல் அவதிப்பட்டு இரட்டை வாழ்வை வாழத் துவங்குகிறது என்பதில் கதை முடிகிறது

இது தான் காப்காவின் உலகம். நாம் அடையாளம் இழந்து தத்தளித்து கொண்டிருக்கிறோம் என்பது தான் காப்கா காட்டும் உண்மை.

இன்னொருவகையில் காப்காவின் கதையை ஒரு முன்னோடிக் கதை என்று சொல்வேன். காரணம் இரண்டாவது உலக யுத்ததின் பிறகு யூதர்கள் கரப்பான்பூச்சிகளை போல கொல்லப்பட போகிறார்கள் என்பதற்காக முன் அறிவிப்பு என்று கூட இதை வாசிக்கலாம் .

இந்த கதையை வாசித்த நபகோவ் காப்கா உருமாறியது கரப்பான்பூச்சியாக அல்ல ஒரு வண்டாக என்று குறிப்பிடுகிறார். எனக்கு கரப்பான்பூச்சியே பிடித்திருக்கிறது. காரணம் கரப்பான்பூச்சிகள் மீது நமக்கு காரணம் இல்லாமலே வெறுப்பு இருக்கிறது. பெண்களுக்கு கரப்பான்பூச்சிகள் பிடிப்பதில்லை. அது போலவே கரப்பான் பூச்சிகள் காதலிப்பதில்லை. அதற்காக மனவருத்தம் கொள்வதில்லை. குடும்ப உறவுகளால் சிக்கி கொண்டு அவதிப்படுவதில்லை.

காப்காவின் கதை காலம் கடந்து நிற்பதற்குக் காரணம் அதன் வியப்பூட்டும் நடையும் கதையின் வழியாக வெளிப்படும் மறுக்கமுடியாத உண்மையுமே என்று தோன்றுகிறது. அது தான் செவ்விலக்கியங்களின் பொதுக் குணம் இல்லையா .

**
மார்ச் 31 – 2008 – சென்னையில் உள்ள மேக்ஸ்முல்லர் பவனில் நடைபெற்ற விழாவில் காப்கா குறித்து பேசிய உரையின் வடிவம்

0Shares
0