காழ்ப்புணர்வின் வடு

உறுபசி (நாவல்) – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை.

‘உறு’ என்பது, ‘மிகுதி’ என்ற பொருளில் வரும் ஓர் உரிச்சொல். மிகுதியான ‘பசி’ என்ற பொருளில் இந்த நாவலின் தலைப்பு அமைந்துள்ளது. இந்தப் பசி எதைக் குறிக்கிறது?. நிச்சயமாக உணவை அல்ல. எல்லாவற்றின் மீதான ‘காழ்ப்புணர்வு’தான் இந்தப் ‘பசி’ என்று நான் கருதுகிறேன்.

அந்தக் காழ்ப்புணர்வு மிதமிஞ்சிப் போய்விடுகிறது. அதனால் ‘உறுகாழ்ப்புணர்வு’ என்றும் நாம் இந்த நாவலுக்குத் தலைப்பிடலாம். சரி, ‘இது யார் மீதான, எதன் மீதான காழ்ப்புணர்வு?’ என்பதை இந்த நாவலை மையப்படுத்தி நம்மால் வகைப்படுத்திக்கொள்ள இயலுகிறது.

தன் மனத்தின் மீதான காழ்ப்புணர்வு, தன் இயலாமையின் மீதான காழ்ப்புணர்வு, எதிரிகளின் மீதான காழ்ப்புணர்வு, நண்பர்களின் மீதான காழ்ப்புணர்வு, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதான காழ்ப்புணர்வு, உறவினர்களின் மீதான காழ்ப்புணர்வு என இந்தக் காழ்ப்புணர்வு மண்ணடி வேராகப் படர்ந்துகொண்டே இருக்கிறது.

‘எல்லாவற்றையும் துறந்துவிட்டுக் காட்டுக்குச் சென்று தியானம் செய்தல்’ என்பது, அகவிடுதலைக்கான முதற்படியாக முற்காலத்தில் நம்பப்பட்டு, பின்பற்றப்பட்டது. இந்த நாவலில், நண்பர்கள் அழகர், ராமதுரை, மாரியப்பன் ஆகிய மூவரும் கானல்காட்டுக்குச் செல்வதும் இதுபோன்ற மனநிலையில்தான்.

அவர்கள் துறக்க நினைப்பது, தம்முள் நிறைந்துவிட்ட காழ்ப்புணர்வைத்தான். அதனை மெல்ல மெல்ல துறந்துகொண்டே கானல்காட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் அடையவிரும்பும் ‘அகவிடுதலை’ என்பது, மீண்டும் தமது இனிய கல்லூரி வாழ்க்கையாகத்தான் இருக்கிறது.

அந்த வாழ்க்கைதான் இவர்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. மீண்டும் தொட்டிலுக்குத் திரும்புதல் என்பதும் மீண்டும் கிளைக்குத் திரும்புதல் என்பதும் எந்தக் குழந்தைக்கும் எந்தப் பூவுக்கும் நிகழாதே!

இவர்கள் எந்தக் கல்லூரி வாழ்க்கை தமக்கு இனிப்பானதாக இருந்ததாகக் கருதுகிறார்களோ அந்தக் கல்லூரி வாழ்க்கையில்தான் இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவருக்கிடையிலும் காழ்ப்புணர்வினை வளர்த்துக்கொண்டார்கள். இவர்கள் மட்டுமல்ல யாழினியும்தான்.

இவர்கள் விரும்பும் அகவிடுதலையை அடைந்தவராக, எந்தவிதமான காழ்ப்புணர்வும் அற்றவராக நமக்குத் தெரிபவர் சன்னாசிதான். இவர்கள் சன்னாசி போல வாழ்ந்துவிடலாம்தான். ஆனால், இவர்களுக்கு அடிப்படையிலேயே நிலையற்ற மனது வாய்த்துவிட்டதால், இவர்களால் சன்னாசியைப் போல ஒரு கணம்கூட வாழ முடியாது. இவர்களின் மனம் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

தன்னுடைய மனத்தாலும் தனக்கான விதியாலும் அலைக்கழிக்கப்படும் மனிதர்களாகவே இந்த நாவலில் இடம்பெற்றுள்ள பல கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, சம்பத்தும் ஜெயந்தியும்.

என்னைப் பொறுத்தவரை இந்த இருவருக்கும் பெரிய அளவில் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்க்கை முழுவதும் இருவருமே ஆதரவற்ற நிலையில்தான் இருக்கிறார்கள். இருவரும் ‘இக்கணம்’ மட்டுமே வாழக்கூடியவர்களாகத் திகழ்கிறார்கள்.

இவர்கள், ‘கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்ததால் மட்டுமே இந்த நிலைக்கு ஆளானார்கள்’ என்று நாம் கூறிவிட முடியாது. இவர்களால் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமையையும் நாம் இங்குச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சம்பத் விரும்பித்தான் தமிழ் இலக்கியத்தைப் படிப்பதற்காகக் கல்லூரியில் சேர்கிறான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

“காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகைப்போலச் சம்பத் ஏதேதோ திசைகளில் சுற்றியலைந்து கொண்டிருந்தான்.”

சம்பத் வெவ்வேறு திசைகளிலும் மற்றவர்கள் ஒரே திசையிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். யாருக்கும் எந்த இலக்கும் வலுவாக இல்லை. அவர்கள் எந்தப் பிடிப்பும் இல்லாமல் தன்னைத் தன்போக்கில் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

வாழ்க்கை ஒவ்வொருவரையும் அல்லது நண்பர் குழுவினரை ‘கேரம்போர்டு காயின்கள்’ போலக் கலைத்துப் போட்டுவிடுகிறது. ஆட்டம் தொடக்கும்போது ‘கேரம்’ பலகையின் மையத்தில் அடுக்கப்பட்ட ‘காயின்’கள் வலுவான முதல் அடித்தலில் மூன்று திசைகளுக்கும் சிதறுவதுபோல, இவர்கள் காலத்தால் சிதறடிக்கப்படுகிறார்கள். தெறித்து விழும் வாழிடச்சூழலில், இவர்கள் தாமாகவே காலூன்றி முன்னேறுகிறார்கள்.

அந்த முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. அந்த முன்னேற்றத்தில் ஏற்பட்டுவிட்ட சமமின்மையே இவர்களுக்குள் காழ்ப்புணர்வு எழ பெரிய காரணமாகி விடுகிறது. சம்பத் தான் ‘கொலைகாரனாகிவிடுவேனோ?’ என்று அஞ்சுவதுகூட ஒருவகையில் சமுதாயத்தின் மீது தான்கொண்ட காழ்ப்புணர்வுதான். கானல்காட்டில் எம்.ஆர். எம். செட்டியாரின் குண்டு இல்லாத வேட்டைத் துப்பாக்கியை ஏந்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் குறிபார்த்துக்கொள்வதும் இந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடன்றி வேறு என்ன?

இந்த நாவலில் சம்பத்தின் மனப்போக்கு மிக முக்கியமானது. அதற்கு இணையானவைதான் அழகர், மாரியப்பன், ராமதுரை ஆகிய மூவருக்கும் சம்பத் பற்றிய மனப்போக்குகள். இவர்கள் நால்வரும் நல்ல நண்பர்கள்தான். ஆனால், அதேநேரத்தில் இவர்கள் நால்வரும்தான் நால்வருக்கும் உளவியல் சார்ந்த எதிரிகள்.

இவர்கள் ஒவ்வொருவரும் மற்ற மூவரைப் பார்த்தே தம்மை எடை போட்டுக்கொள்கிறார்கள். இவர்களுக்குரிய உலகம் என்பது, இந்த நாவல்கூட்டணியாக மட்டுமே இருக்கிறது. அதுதான் சிக்கல். இந்தச் சிக்கலின் மையத்திலிருந்து விடுபட இவர்கள் பணியிடத்தை மாற்றிச் சென்றாலும்கூட, இவர்களின் மனம் இந்தச் சிக்கலில் விரும்பியே அகப்பட்டுக்கொள்கிறது.

இறுதிவரை இச்சையிலிருந்து விடுபட முடியாத மனிதனாகச் சம்பத் இருக்கிறார்.

“அடிபட்டுக் காயம் உலராத மிருகம் தன் மூர்க்கம் குறையாமல் அலைந்துகொண்டிருப்பது போன்று சம்பத் சுற்றிக்கொண்டே இருந்தான்.”

சம்பத்தின் தொடர்ச்சியை நாம் மாரியப்பனிலும் காணமுடிகிறது. சம்பத் அந்த இச்சையை வெளிப்படுத்திக்கொண்டார். மாரியப்பன் மறைத்துக்கொண்டார். மறைத்துக்கொள்வதால் மட்டும் ஒரு மனிதர் நல்லவராகிவிட முடியுமா, என்ன?

இச்சையை வெளிப்படுத்திக்கொள்பவர் ஒரு தவறு செய்கிறார். இச்சையை மறைப்பவர் மறைத்தலாகிய மற்றொரு தவறையும் செய்கிறார் என்றுதான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால், சம்பத்தைவிட மிகவும் தாழ்வானவராக நான் மாரியப்பனையே மதிப்பீடு செய்வேன்.

“சம்பத், “நான் ஒரு தக்கை. கிணற்றில், ஆற்றில், கடலில் என்று எவ்வளவு தண்ணீரில் தூக்கிப்போட்டாலும் மிதக்கும் தக்கை” என்றான்.”

சம்பத்தை நம்மால் சமாளித்துவிடமுடியும். ஆனால், மாரியப்பனைப் போன்றோரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் யாழினியின் மீது கொண்டது வெறும் காமம் மட்டுமே என்பதை நிறுவுவதற்கு, இந்த நாவலின் இறுதியில் அவரும் யாழினியும் சந்திக்கும் காட்சியே போதுமானது.

சம்பத், மாரியப்பன் ஆகிய இருவருக்கும் எதிர்நிலையில் ராமதுரை இருக்கிறார். அவருக்கும் ஜெயந்திக்குமான உறவு எத்தகையது? தோழனின் மனைவியும் தோழிதானே! அதை உணந்தவர் ராமதுரை மட்டும்தான்.

இந்த நாவலை நமக்குச் சொல்லும் கதைசொல்லியாக வரும் அழகர் இந்த மூவரையும்விட எந்த விதத்திலும் உயர்ந்தவரும் அல்லர்; தாழ்ந்தவரும் அல்லர். ஒருவகையில் அழகரும் அயோக்கியர்தான். அவர் எப்போதும் ராமதுரையைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார். பொதுவாகவே சமூகம் அப்படித்தான் இருக்கிறது. அத்தகைய சமூகத்தின் ஒரு பிரதிநிதியாகவேதான் அழகர் இருக்கிறார்.

‘வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்தல்’ என்பது, எவ்வளவு மனஅழுத்தம் நிறைந்தது என்பதை இந்த நாவல் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளது. ‘சம்பத் தானே விரும்பி விரும்பி வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றுவிடுகிறானோ?’ என்றும்கூட எண்ணத்தோன்றுகிறது.

வறுமையில் இருக்கும் ஒவ்வொருவரும் வளமையை எட்டிப் பார்த்தபடியே இருக்கிறார்கள். அதுவே அவர்களை மேலும் மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் வளமையாக இருப்பவர்கள் எட்டிப் பார்க்கின்றனர். வளமையாக இருப்பவர்கள் தனக்கும் மேலாக வளத்துடன் இருப்பவர்களை எட்டி எட்டிப் பார்க்கின்றனர். இது சங்கிலித்தொடர்போல நீள்கிறது. இதற்கு முடிவே இல்லைபோலும். எவ்வளவு பணத்தைப் பெற்றாலும் எவ்வளவு வசதிவாய்ப்புகளை அடைந்தாலும் மனம் அமைதிகொள்ளாது போலும்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் தன்னுடைய வாழ்க்கையை ஒரேயடியாக வளமைக்குக் கூட்டிச்செல்ல நினைத்துத்தான் சம்பத் ‘லாட்டரி டிக்கெட்’ (பரிசுச்சீட்டு) வாங்குகிறான். உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்பத் தொடங்கிவிடுகிறான்.

அவனுடைய கல்லூரிக்காலக் கொள்கைகள் அனைத்தும் காலவோட்டத்தில் அவனைவிட்டு நழுவிவிடுகின்றன. அவன் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் தடுமாறிவிழுந்துவிட்டதுதான் வியப்பைத் தருகிறது.

அதற்குக் காரணங்களாக, ‘அவன் இளமையில் மேற்கொண்ட அதீத துடிப்புத்தனம்தான் காரணமோ?’ என்றும் ‘அவனை முறையான வழியில் நடத்த சரியான நபர்கள் கிடைக்கவில்லையோ?’ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

அவன தன் வீட்டுச்சூழலிலிருந்தும் சமுதாயச் சூழலில் இருந்தும் எடுத்துக்கொள்ளும் கட்டற்ற சுதந்திரம்தான் அவனை வாழ்க்கையில் கட்டற்று வாழச் செய்துவிட்டது. முன்னோர்கள் ‘கால்கட்டு’ என்று திருமணத்தைக் குறிப்பிடுவது, இவ்வாறு கட்டற்று வாழ்வதைத் தடுப்பதற்குத் தானோ? ஆனால், திருமணத்திற்குப் பின்னரும் சம்பத் தொடர்ந்து கட்டற்று வாழவே செய்கிறான்.

அவன் ஒரே பிறவியில் எண்ணற்ற பிறவில் வாழ்ந்து அடையும் வெவ்வேறு விதமான இன்ப, துன்பங்களை அடைந்துவிடத் துடிக்கிறான் போலும். தான் இவ்வாறெல்லாம் இருப்பதற்கு அடிப்படைக்காரணமாக அவன், தான் மிகவும் கோழை என்றும் தனக்கு எல்லாவற்றைப் பற்றியும் அச்சம் இருக்கிறது என்றும் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவே தான் முரடனாகப் பிறர் முன்னிலையில் காட்டிக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறான்.

அவன் தனக்குள் ஒருவிதமாகவும் தனக்கு வெளியில் வேறுவிதமாகவும் இருக்கிறான். அவனுடைய மனம் அவனுக்குள்ளும் அவனுக்கு வௌியிலும் மாறி மாறி ஊடாடுகிறது. இந்த ஊடாட்டம்தான் எதிலும் அவனுடைய நிலையற்ற அவனுடைய செயல்பாடுகளுக்குக் காரணமாக அமைகிறது.

குழம்பிய மனம் உடையவர்களால் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் என்றுமே சிக்கல்களை உருவாக்கியபடியே இருப்பர். இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தாமே காரணம் என்பதை உணர்ந்தாலும் அதிலிருந்து அவர்களால் விடுபட முடியாது.

அவனுடைய மனம் ஒரு கணம் தெளிந்தும் மறுகணம் குழம்பியும் விடுகிறது. அவன் மனத்தெளிவாக இருக்கும்போது மட்டுமே எல்லாவற்றையும் சிறப்பாகச் சிந்திக்கிறான். அவன் மனம் குழம்பும்போது, அவன் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சீரழித்துவிடுகிறான்.

“மனிதன் கண்டுபிடித்தவற்றிலேயே மிகவும் மோசமானவை ‘சுவர்கள்’ ” என்றான் சம்பத். “நாம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாததுமான எத்தனையோ சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கிறோம்.”

ஆம்! எல்லோரும் எண்ணற்ற சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளார்கள். சம்பத் போன்றோர் வெளியில் தெரிந்த அயோக்கியர்கள். அழகர், மாரியப்பன் போன்றோர் வெளியில் தெரியாத அயோக்கியர்கள். இவர்களின் கூட்டிணைவுதான் இந்தச் சமூகம்.

இந்தச் சமூகத்தில்தான் யாழினியும் ஜெயந்தியும் வாழநேர்கிறது. இவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே நிம்மதியாகச் சுவர்கள் அற்ற கானல்காட்டில் இருக்கிறார் சன்னாசி.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நாவல்களிலேயே இந்த நாவல்தான் பக்க அளவில் சிறியது. ஆனால், எண்ணற்ற ‘சிடுக்குகள்’ உடைய நாவல் இது. படித்து முடித்ததும் நம் மனத்தை உலுக்கியெடுக்கும் கதைமாந்தர்கள் நிறைந்த நாவல் இது.

– – –

0Shares
0