குற்றாலத்து சிங்கன் சிங்கி.



 


 


 


 


 


 


 


குற்றாலக்குறவஞ்சியை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. திரிகூட ராஜப்ப கவிராயரால் எழுதப்பட்டது. அதிலும் சாரல் அடிக்கும் நாட்களில் குற்றாலத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடியே  குற்றாலக்குறவஞ்சி வாசித்திருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் கரைந்து பின்னோடிவிட வசந்தவல்லி பூப்பந்தாடும் காட்சி விரியத்துவங்கிவிடும். குற்றாலத்தின் ஆதிசித்திரம் அந்தக் கவிதைகளில் பதிவாகியுள்ளது.


கானகக்குறத்தி வருகிறாள். அவளது எழிலும் குரலும் அதில் வெளிப்படும் காட்டுவாழ்வின் நுட்பங்களும், மழை பெய்யும் மேகமும், அடர்ந்த விருட்சங்களும், கானகப்பறவைகளும், பலாமரங்களும் தெறிக்கும் அருவியின் ஒசையும், கிளை தாவும் குரங்குகளும், ஈரம் பீடித்த குற்றாலநாதரும் குழல்வாய்மொழி அம்மையும், செண்பக மலர்களின் வசீகரமும், தண்ணீரில் பட்டு ஒளிரும் சூரியனும், அருவிக்கரை எங்கும் சிந்திக் கிடக்கும் சிரிப்பும், குழந்தையின் விரல்களை போல மிருதுவான காற்றும், மனதில் விரிவு கொள்கின்றன.


ஒரு முறை தேனருவிக்கு செல்லும் போது வழியில் ஒரு பாறையில் சாய்ந்தபடியே சிங்கன் சிங்கி இருவருக்குமான சரசப்பாடலை என் நண்பன் ஒருவன் உரக்க பாடியது இன்றும் மனதில் அப்படியே இருக்கிறது. சிங்கியின் நளினமும், வசீகரமும் சொல்லை அவள் உருட்டி விளையாடும் லாவகமும் பரிகாசமான தொனியும் அவள் மீதான ஈர்ப்பை அதிகமாக்கிக் கொண்டேயிருக்கிறது.


குற்றாலக்குறவஞ்சி நாட்டிய நாடகமாக, நவீன நாடகமாக, நாட்டார் இசைக்கலையாக என பல்வேறு வடிவங்களில் கண்டிருக்கிறேன்.


தேர்ந்த இசையமைப்புடன் இந்தப் பாடல்களை தனித்த இசைத்தட்டுகளாக கொண்டுவந்தால் மிகச்சிறப்பாக இருக்கும். இளையராஜாவின் கவனம் மெய்நெறியில் மட்டுமே செல்லாமல் சற்றே இந்தப்பக்கமும் திரும்பினால் தமிழின் வளமான காதல்கவிதைகள்  சிறப்பான இசைவடிவம் கொள்ளும்.


குற்றாலத்திற்கு செல்கின்றவர்கள் இரண்டு இடங்களை அவசியம் பார்க்க வேண்டும் என்று நான் சிபாரிசு செய்வேன். ஒன்று அங்குள்ள சித்திர சபை. இயற்கை வண்ணங்களால் உருவாக்கபட்ட சுவரோவியங்கள் மிக அரிதானவை.  சிவனின் பஞ்ச சபைகளில் ஒன்றாக சிறப்பு பெற்றது. மற்றது கம்பனை ஆழ்ந்து சுவைத்த தமிழறிஞர் ரசிகமணி டி.கே.சிதம்பர நாத முதலியார் நினைவில்லம். செங்கோட்டை சாலையில் உள்ளது. 


**


சிங்கனுக்கும் சிங்கிக்கும் உரையாடல்


 


 


இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்


எங்கே நடந்தாய்நீ சிங்கி (எங்கே நடந்தாய்நீ)


 


கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்


குறிசொல்லப் போனனடா சிங்கா (குறிசொல்ல)


 


 


(1) வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பானேன் சிங்கிகாதில்


வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா


 


(2) கள்ளிப்புப் பூத்த ததிசய மல்லவோ சிங்கிதெற்கு


வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண்டொட்டி சிங்கா


 


(3) வன்னக் குமிழிலே புன்னை யரும்பேது சிங்கிமண்ணில்


முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா


 


(4) சொருகி முடித்ததில் தூக்கண மேதடி சிங்கிதென்


குருகையூ ரார்தந்த குப்பியுந் தொங்கலுஞ் சிங்கா


 


(5) பொன்னிட்ட மேலெல்லா மின்வெட்டிப் பார்ப்பானேன் சிங்கிஇந்த


வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா


 


(6) இந்தப் பணியைநீ பூணப் பொறுக்குமோ சிங்கிபூவில்


ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்குங்காண் சிங்கா


 


(7) குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி – ???


கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா


 


(8) இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கிநாட்டில்


நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா


 


(9) பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கிஇந்த


வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா


 


(10) கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கிநடுப்


பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா


 


(11) முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கிகாம


மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா


 


(12) சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கிசும்மா


நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா


 


(13) பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கிமனப்


போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா


 


(14) நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கிஉன்றன்


வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா


 


(15) ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கிபருங்


கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா


 


(16) விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கிஅது


சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா


 


(17) தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கிஅப்பால்


இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா


 


(18) நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கிமணிப்


பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா


 


(19) பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கிநீதான்


பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா


 


(20) பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கிமுன்னே


ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா.


 


***


 

0Shares
0