ஹென்றி கார்த்தியே பிரஸான்


 


 


 


 


  – நூற்றாண்டுவிழா.


A photograph is not a painting, a poem, a symphony, a dance. It is not just a pretty picture, not an exercise in contortionist techniques and sheer print quality. It is or should be a significant document, a penetrating statement, which can be described in a very simple term – selectivity.


          Berenice Abbott



இருள் என்பது குறைந்த ஒளி என்கிறார் பாரதி. இதை ஹென்றி கார்த்தியே பிரஸானின் (Henri Cartier-Bresson )  புகைப்படங்களில் நாம் கண்கூடாகக் காணமுடியும். உலகம் முழுவதும் பிரஸானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2008 ஆகஸ்ட் 22 ம் தேதி முதல் நடக்க உள்ளன. இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞரான ஹென்றி கார்த்தியே பிரஸான் கொண்டாடவும் கற்றுக் கொள்ளவும் வேண்டிய முன்னோடிக் கலைஞர். 



அன்றாட வாழ்வின் சின்னஞ்சிறு சலனங்களைக் கூட அற்புதமான புகைப்படங்களாக்கி சாதனை செய்த உயர்கலைஞன். பிரஸானின் புகைப்படங்கள் தேர்ந்த ஒவியங்களை போன்றவை. அதில் வெளிப்படும் லயமும் ஒத்திசைவும் பொருள்கள் கொள்ளும் நெகிழ்வுத் தன்மை வண்ணங்களும்  பார்வையாளர்களை மயக்கக்கூடியது.


இந்த நூற்றாண்டில் அதிகம் வீணடிக்கபட்ட பொருள் என்னவாக இருக்கும் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பது புகைப்படங்கள். ஒவ்வொரு நாளும் உலகில் கோடான கோடி புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த புகைப்படங்களில் பெரும்பான்மை சில நாட்களில் சில மாதங்களில் அல்லது சில வருசங்களில் மதிப்பிழந்து குப்பையில் சென்று சேகரமாகிவிடுகின்றன. அதிலும் செல்பேசிகளில் எளிமையாக புகைப்படம் எடுப்பது வந்தபிறகு புகைப்படம் என்பது அதீதமான வீணடிக்கபட்ட  பொருளாகி விட்டது.


ஆனால் எல்லா கலைகளையும் போல புகைப்படமும் அதற்கு உரித்தான தனித்துவமான அழகியலும் நுட்பமும் கொண்டது. ஒருவகையில் ஜென் கவிதைகளில் எப்படி ஒரு நிமிசம் அல்லது ஒரு தருணம் சொற்களின் வழியே நித்யமான கவித்துவ தன்மையடைகிறதோ அதற்கு நிகரானது தான் புகைப்படக்கலையும்.


புகைப்படக்கலையின் நோக்கம் காண்உலகை அப்படியே பதிவு செய்வது மட்டுமில்லை. மாறாக காண்உலகின் காணாத அரூப இயக்கத்தை அதன் ஊடாக தோன்றி மறையும் விந்தைகளை, எளிமையை, நுட்பங்களை பதிவு செய்வது என்பதில் பிரஸான் அதிக ஆர்வம் காட்டினார். அவரது சில புகைப்படங்களை காணும் போது கனவிலிருந்து துண்டிக்கபட்ட காட்சிகளை போன்ற தன்மையிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.


பிரான்ஸ் தேசத்தை சார்ந்த  பிரஸான் இளவயதிலே ஒவியத்தின் மீது ஆர்வம் கொண்டு ஒவியக்கலைஞராக தன்னை வளர்த்துக் கொண்டவர். முறைப்படி ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படித்து ஒவியங்கள் தீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.


ஒவிய உலகில் சர்ரியலிசம் எனப்படும் கனவுத்தன்மை மிக்க படைப்பு கோட்பாடுகள் உருவான காலமது. தொடர்ந்து சர்ரியலிச வகைகோட்பாடுகள் பற்றிய விவாதங்களும் அதன் முன்னோடிகளின் நேரடியான நட்பும், அவர்கள் புகைப்படக்கலையை பற்றி விவாதித்த விதமும் பிரஸானை புகைப்படங்களின் மீது அக்கறை கொள்ள செய்திருக்கிறது.


குறிப்பாக பிரஸான் ஹங்கேரியை சேர்ந்த புகைப்படக்கலைஞரான Martin Munkácsi  தனது ஆப்ரிக்க பயணத்தின் போது எடுத்த   என்ற Three Boys at Lake Tanganyika புகைப்படத்தை பார்த்த போது ஒரு புகைப்படத்தில் இத்தனை உயிரோட்டமும் வசீகரமும் உருவாக்கமுடியுமா என்ற வியப்பு மேலிட தானும் புகைப்படக்கலைஞராக உருவாக வேண்டும் என்ற முடிவு செய்து கொண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் செய்து புகைப்படங்கள் எடுக்க துவங்கினார்.


அந்தப் புகைப்படத்தை காணும் போது அதே பரவசத்தை நாமும் அடைய முடியும். சிறார்களின் உடலில் நளினம். மற்றும் கைகள் உற்சாகத்தில் கொள்ளும் பாவனைகள், உயர்த்தபட்ட பாதம் ஒன்றில் வெளிப்படும் ஆசை. காலில் மிதிபட்டு தெறிக்கும் தண்ணீர். ஈரமேறிய சிற்பங்களை போன்ற உடல்களின் லயம். முகம் தெரியாத அந்த சிறுவர்களின் ஒரு கணம் அப்படியே உறைந்து நித்யமானது போல எடுக்கபட்டிருக்கிறது அந்தப் புகைப்படம்.


தன்னைப் பாதித்த மிக முக்கிய உந்துதல் அந்த புகைப்படமே என்று பலநேர்காணல்களில் பிரஸான் குறிப்பிடுகிறார். புகைப்படங்களை எடுப்பதற்காக தேசம் தோறும் சுற்றித்திரிந்து அங்கு தான் கண்ட மனிதர்கள். அவர்களின் கலாச்சார சமூக பழக்கவழக்கங்களை புகைப்படமாக்கியிருக்கிறார்.  வீதிகள் வீடுகள் கலையரங்கங்கள், இயற்கையின் அருகாமை என்று அவர் கேமிரா ஒரு சஞ்சாரியாக அலைந்து திரிந்து பதிவு செய்த அற்புதங்கள் ஏராளம்.


மூன்று ஆண்டுகாலம் புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்பட இயக்குனரான ழான் ரெனாரிடம் உதவியாளராக A Day in the Country,  The Rules of the Games படங்களில் வேலை செய்தார் பிரஸான். அது போல 1940களில் பிரெஞ்சில் ஜெர்மனிய ஆக்ரமிப்பு நடந்த போது போர்கைதியாக பிடிபட்டு சிறையில் அடைக்கபட்டார். அங்கிருந்து தப்பியதோடு மற்றவர்கள் தப்பி செல்வதற்கும் உதவி செய்திருக்கிறார். யுத்த ஆக்ரமிப்பிலிருந்து பிரெஞ்சு பெற்ற எழுச்சியை தன் புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார்.



தன்னுடைய புகைப்படங்களை வெறும் வணிக தந்திரங்களுக்காக பத்திரிக்கைகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்று மனம் நொந்துபோன ஹென்றி கார்த்தியே பிரஸான் தன்னை போன்ற ஒத்த மனது கொண்ட புகைப்படக்கலைஞர்கள் இருவரோடு ஒன்று சேர்ந்து மேக்னம் நிறுவனம் என்ற ஒன்றினை உருவாக்கினார். இதன் முக்கிய நோக்கம் நேர்த்தியான செய்திபுகைப்படங்களை எடுத்து தருவது. மற்றும் முறையான அனுமதியின்றி புகைப்படங்கள் பிரசுரம் ஆவதை கட்டுபடுத்துவது.


ஒவியனின் தூரிகையை போன்றதே கேமிரா என்று சொல்லிய பிரஸான் முப்பதாண்டு காலம் உலகின் முக்கிய அத்தனை தேசங்களை சுற்றியலைந்தார். அரசுகட்டுபாடுகள் மிகுந்த ருஷ்யாவில் கூட அவர் தன்னிஷ்டம் போல சுற்றி புகைப்படம் எடுக்க அனுமதிக்கபட்டார். தனது புகைப்படங்களை தொகுத்து புத்தகங்களாகவும் வெளியிட்டிருக்கிறார். அப்படி அவர் வெளியிட்ட சில முக்கிய புத்தகங்கள், The Decisive Moment, One China to Another , CartierBresson’s France, Cartier-Bresson in India. The People of Moscow, The World of Henri Cartier-Bresson.


மகாத்மா காந்தியின் இறுதி யாத்திரையை பிரஸான் எடுத்த புகைப்படங்கள் சிறந்த வரலாற்று பதிவுகள். அந்த புகைப்படங்களில் இந்திய மனதின் சோகமும் காந்தியின் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் வெளிப்படுகின்றன
புகைப்படக்கலையின் அடிப்படையை எப்படி அறிந்து கொள்வது என்று பிரஸானிடம் இளம் புகைப்படக்கலைஞர் ஒருவர் கேட்ட போது  அவர் சொன்ன பதில் இது தான்.



புகைப்படக்கலை என்பது வாள்சண்டை போன்றது. வாளை எவ்வளவு தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பொறுமையும் நிதானமுமாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சரியான தருணத்தில் வாளை சுழற்ற வேண்டும். இது தான் புகைப்படக்கலைக்கும் அடிப்படை. முதலில் எந்த கோணத்தில் எவ்வளவு இடைவெளியில் படமாக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பிறகு சரியான தருணத்திற்காக காத்திருக்க வேண்டும். மூன்றாவது அந்த  தருணத்தை நழுவவிடாமல் பதிவு செய்ய வேண்டும்.


வேட்டையாடுவதற்கு காத்திருக்கும் விலங்கு எவ்வளவு கவனமாக காத்திருக்குமோ அந்த அளவு தீவிரமான வேட்கை உள்ளவரே நல்ல புகைப்படக்கலைஞராகிறார்.


சமகாலத்தின் முக்கிய புகைப்படக்கலைஞர்கள் பலருக்கும் ஆதர்சமாக இருப்பவர் பிரஸான். தினசரிவாழ்வை நேரடியாக மக்களோடு மக்களாக கலந்து பதிவு செய்யும் வீதி புகைப்படக்கலை (Street photography ) முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்தவர் பிரஸான். இவரது உந்துதல் காரணமாக இன்று உலகம் முழுவதும் மக்களை அவர்கள் வாழ்விடங்களில் வாழ்வியல் சூழலோடு  தேடிச் சென்று பதிவுசெய்யும் புகைப்படக்கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள்.


1908 ஆகஸ்ட் 22 ல் பிறந்த பிரஸான் தனது 95வது வயதில்  ஆகஸ்ட் 2  2004ல் மரணமடைந்தார். தன் வாழ்நாள் முழுவதும் அற்புதமான புகைப்படங்களை எடுத்துள்ள பிரஸான் தன்னை மற்றவர்கள் புகைப்படங்கள் எடுப்பதை விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் விருது தந்த போது அந்த விழாவில் தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று முகத்தை ஒரு காகிதத்தால் மறைத்து வந்தார் பிரஸான்.



இணையத்தில் இவரது புகைப்படங்கள் அதிகம் காணக்கிடைக்கின்றன. அந்த புகைப்படங்களில் ததும்பும் உயிரோட்டமும் நெருக்கமும் பிரஸானை என்றும் நினைவில் வைத்திருக்க தூண்டுகின்றன.


அவரது புகைப்பட காட்சிகளில் ஊடாடும் வெளிச்சமும், பேரழகும் நமக்குள் விளக்கின் சுடரை போல நிசப்தமாக அசைந்து கொண்டிருப்பது வார்த்தைகளில் அடங்காத  ஒரு தனி ஆனந்தம்.


**


 


 

0Shares
0