சத்ரபியின் காமிக்ஸ் உலகம்

மர்ஜானே சத்ரபியின் (Marjane Satrapi) சிக்கன் வித் பிளம்ஸ் கிராபிக் நாவலை சென்ற ஆண்டு டெல்லி புத்தகக் கண்காட்சியின் போது வாங்கி வாசித்தேன்,  தற்போது அது திரைப்படமாக வெளியாகி உள்ளது, வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் விலகி மாறுபட்ட உருவாக்கதில் வெளியாகியுள்ள இப்படம் காமிக்ஸ் ரசிகர்கள் மிகவும் விரும்பக்கூடியது.

இப்படம்  நஸர் அலி கான் என்ற தோல்வியுற்ற இசைக்கலைஞரைப் பற்றியது, தனது வயலின் உடைந்து போனதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறார், படக்கதை அவரது காதலை, தற்கொலை மனநிலையை, விசித்திரக் கனவுகளை விவரிக்கிறது, அபத்தமான புறச்சூழலினை எதிர்கொள்ளும் ஒரு இசைக்கலைஞனின் மனப்போராட்டத்தை  நகைச்சுவை ததும்ப விவரிக்கிறது சித்திரக்கதை.

நஸர் அலி தனது உடைந்து போன வயலினுக்கு மாற்றாக இன்னொரு ஒரு வயலின் வாங்க விரும்புகிறார்,  தனது மனைவியின் காரணமாகவே தனது வயலின் உடைந்துவிட்டதாக குற்றம் சொல்கிறார், மொசார்ட்டின் வயலின் தன்னிடம் உள்ளது என்று பழைய பொருள்கடைக்காரன் ஒரு வயலினை அவரிடம் விற்க முயற்சிக்கிறான்,

அந்த வயலினும் அவருக்குத் திருப்தியாக இல்லை, தற்கொலை செய்வது என முடிவு செய்கிறார்,  தோல்வியுற்ற வேலை, குடும்பம், காதல் காரணமாக தற்கொலை எண்ணம் வலுப்படுகிறது, அவரது குழந்தைகள் வாழ்க்கையை நோக்கி அவரது மீட்சியாக இருக்கிறார்கள், அவர் வயலின் கற்றுக் கொண்ட பசுமையான நாட்களும் காதலித்த பெண்ணும் மனதில் ஊசலாடுகிறார்கள், சிறந்த இசை என்பது ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடு எனும் நஸர், கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் சிக்குண்டு ஊசலாடுவதே கதையின் முக்கிய போக்கு.

படத்தில் ஈரான் ஒரு அழகான இளம்பெண்ணாக உருவகிக்கப்படுகிறது, அதை ஒரு காலத்தில் நேசித்தவர்கள்  இன்று அகதியாக தேசத்தினை இழந்த போது மனதிற்குள் பழைய ஈரானின் மீதான அன்பும் நினைவுகளும் அப்படியே இருக்கிறது, போரினால் சிதைவுற்ற ஈரானின் கோர நிஜம் அதை நேசித்தவர்களை பெரும் அகச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது, குறிப்பாக ஈரானை நேசித்த கலைஞர்கள் அகதியாக புலம் பெயர்ந்து வாழும் போது என்னவிதமான மனப்போராட்டத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதையே படம் மறைபொருளாக தெரிவிக்கிறது

இப்படத்தின் ஒளிப்பதிவு காமிக்ஸ் போல விசித்திரமான கோணங்களை கொண்டது, Christophe Beaucarne படத்தின் ஒளிப்பதிவாளர். அது போலவே சர்ரியலிச பாணியில் அமைக்கபட்ட அரங்க அமைப்பு படத்தினை வேறுபட்ட ஒன்றாக உருவாக்குகிறது

95 நிமிஷங்கள் ஒடும் இப்படம் வெனிஸ்திரைப்படவிழாவில் பங்குபெற்று மிகப்பெரிய பாராட்டுதல்களை பெற்றிருக்கிறது

••••

மர்ஜானே சத்ரபியின் சித்திரக்கதை பெரிஸ்போலிஸ் வரிசை தமிழில் ஈரான்  ஒரு குழந்தைபருவத்தின்கதை, திரும்பும் காலம் என இரண்டு புத்தகங்களாக விடியல் பதிப்பக வெளியீடாக எஸ்.பாலச்சந்திரன் மொழியாக்கத்தில் வந்துள்ளது,

தமிழில் வெளியான மிகவும் குறிப்பிடத்தக்க காமிக்ஸ் இது, சத்ரபி உலக அளவில் குறிப்பிடத்தக்க காமிக்ஸ் எழுத்தாளர், ஒவியர், திரைப்பட இயக்குனர், இவரது பெரிஸ்போலீஸ் திரைப்படமாக வெளியாகி உள்ளது, அதைப் பார்த்திருக்கிறேன், கறுப்பு வெள்ளையில் பண்ணப்பட்ட வித்தியாசமான படம், அவரது இன்னொரு சித்திரக்கதையே Chicken with Plums ,

ஈரானின் அரசியல் நெருக்கடிகளை, மதவாதக்கட்டுபாடுகளை கடுமையாகச் சாடும் சத்ரபி டெக்ரானில் உள்ள பிரெஞ்சுப் பள்ளியில் பயின்றவர், கம்யூனிச சிந்தனை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆகவே பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக தீவிரமான கலைஞராக ஒவியங்கள் வரைந்துவருகிறார், ஈரான், ஈராக் யுத்தம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளும் அகதியாக்கபட்ட மனிதர்களின் வாழ்க்கையையும் சத்ரபி கதையின் களமாக உள்ளன, ஒருவகையில் அவரது சித்திரக்கதைகள் அவரது சொந்த வாழ்வின் பிரதிபலிப்புகளே.

அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட மர்ஜானே, ஈரான் அகதியாக புகலிடத்தில் வாழ்வதன் வலியை தனது கறுப்பு வெள்ளை கோடுகளின் வழியே துல்லியமாகத் தீட்டிக்காட்டுகிறார், Art Spiegelman வரைந்த  alternative comics ஆன Maus போன்ற நாஜி எதிர்ப்பு சித்திரக்கதையை சத்ரபியுடன் ஒப்பிடலாம், அரசியல் காரணத்தால் ஒடுக்கபட்ட யூதர்களின் வேதனைகளை  கூறும் அற்புதமான காமிக்ஸ் ஸ்பிக்கில்மெனுடையது, அந்தப் பாதிப்பை சத்ரபேயிடமும் பலஇடங்களில் காணமுடிகிறது,

ஈரானில் பள்ளிக்கூடங்கள் குண்டுவீச்சில் தாக்கபட்டு கல்வி மறுக்கபடுகிறது, படிப்பதற்காக சத்ரபி ஆஸ்திரியா செல்கிறார், அங்கே ஐரோப்பியர்கள் தனது நாட்டின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துகிறார், அறியாமையில் அவர்கள் ஈரானை கேலி செய்வது அவள் மனதைப் புண்படச்செய்கிறது, ஐரோப்பாவில் அகதியாக வாழும் போது அவளது மனதில் தனது கடந்தகாலத்தின் நினைவுகள் பீறிடுகின்றன, ஒரு பெண் ஈரானில் எத்தகைய குழந்தை பருவத்தை அனுபவித்தாள் என்பதையே அவர் தனது சித்திரக்கதையில் தெரிவிக்கிறார் , மதக்கட்டுபாடுகள் கொண்ட ஈரானிய வாழ்க்கையின் மீதான பகிரங்க விமர்சனம் இந்த நூலில் வைக்கபட்டுள்ளது

பெர்சிபோலிஸ் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது அதிலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது, பொதுவாக காமிக்ஸைத் தமிழ்படுத்துவது கடினமான பணி, அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன்,  அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள், இது போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் தமிழில் வரவேண்டியது மிகவும் முக்கியம்,

இந்த காமிக்ஸ் குறித்து பரவலாக அறியப்படவில்லை, இன்றும் அதன் பிரதிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, நானே இருபது பிரதிகளுக்கு மேல் வாங்கி நண்பர்களுக்குப் பரிசு தந்திருக்கிறேன், இது போன்ற அரிய பணிகள் கண்டுகொள்ளப்படாமல் போவது சூழலின் தடித்தனத்தையே காட்டுகிறது

ஈரான்  ஒரு குழந்தைபருவத்தின் கதையில் மர்ஜானே சிறு வயதிலேயே ஒரு தீர்க்கதரிசியாக ஆக விரும்புகிறாள். அதற்காக அவள் தானே ஒரு நூலைத் தயாரிக்கிறாள். அதில் பல கட்டளைகளை உருவாக்குகிறாள், அந்த கட்டளைகள் இதுவரை அனுமதிக்கபடாத சமூக அவலங்களை மாற்றி அமைப்பதாக உள்ளது  ,  குறிப்பாக வேலைக்காரர்கள் தங்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும், வயதானவர்கள் எவரும் வருத்தபடக்கூடாது, அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்து தரப்பட வேண்டும் என அவளது பல்வேறு கனவுகள் கட்டளைகளாக மாறுகின்றன ,

மதம் ஒரு பக்கம், கார்ல் மார்க்ஸ் மறுபக்கம், இரண்டினையும் அவள் எதிர் கொள்கிறாள், மார்க்ஸ் அவளை பெரிதும் கவர்கிறார்,   மதவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றியதே வீழ்ச்சியின் துவக்கம் எனச் சொல்லும் சத்ரபேயின் குழந்தைபருவம், தன்னை சுற்றிய பழமையான உலகினைப் புரிந்து கொள்ள தத்தளிக்கும் ஒரு சிறுமியின் அகவுலகைச் சித்தரிக்கிறது

அதன் அடுத்த பகுதியான ஈரான், திரும்பும் காலம்  படக்கதையில் சத்ரபே வளர்ந்த பெண்ணாக ஈரானின் வரலாற்றை அறிந்தவளாக, அதன் சமகாலப் போராட்ட நிகழ்வுகளில் நேரடியாக பங்குபெற விரும்புகிறவளாக இருக்கிறாள்,  சுதந்திரமான சிந்தனை கொண்ட பெண்ணாக அவள் வளர்வதில் ஏற்படும் பண்பாட்டு பிரச்சனைகளை, அதன் போலிமைகளைச் சத்ரபி சுட்டிக்காட்டுகிறார், சத்ரபியின் நகைச்சுவை உணர்வு அபாரமானது, அவரது கற்பனையும், யதார்த்தமும் இதுவரை இல்லாத புதிய வெளி ஒன்றினை காமிக்ஸ் புத்தகத்திற்கு தருகிறது.

சத்ரபேயின் கோடுகள் வான்கோவின் சாயலைக் கொண்டவை, அவை வலிமையானவை, கோட்டுருவங்கள் தங்கள் உணர்ச்சிகளையே பிரதானமாக வெளிப்படுத்துகிறார்கள், கறுப்பு நிறத்தின் விஷேசப் பண்பினை சத்ரபே மிக அழகாக வெளிப்படுத்துகிறார், குறிப்பாக பெண்களின் முகத்திரை, அது ஒரு இரும்புக் கவசம் போலவே வரையப்பட்டிருக்கிறது, தோல் பொம்மலாட்ட  பொம்மைகள் போன்றும், சிறுவயதில் நோட்டில் வரைந்த சிறார் ஒவியங்களை போலவும் இருவிதமான சித்திரப்போக்கு சத்ரபேயிடம் காணப்படுகிறது, நகரங்கள், வீடுகள், கட்டிடங்கள் யாவும் லோ ஆங்கிள் காட்சிகளாக வரையப்பட்டுள்ளன, அதன் காரணமாக அவை விசித்திரமான தோற்றம் தருகின்றன, சித்தரக்கதையின் சம்பிரதாயமான சட்டகத்தை உடைத்து அவர் சிறியதும்பெரியதுமான பல்வேறு பகுதியாக வெட்டுவது தனிச்சிறப்புடையதாக உள்ளது

விடியல் பதிப்பகம் சார்பாக ஒசாமு தெசுகாவின் புத்தா சித்திரக்கதை முழுமையாக வெளிப்பட இருந்தது, விடியல் சிவாவின் பெருங்கனவு அது, அதற்குள் சிவா இறந்துவிட்டார், தெசுகாவின் புத்தா தமிழுக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழலே உள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழிலும் கிராபிக்ஸ் நாவல்கள், மாங்கா நேரடியாக எழுதப்பட்டு மிகப்பிரபலமாக விளங்கும் என்று நான் முன் உணர்கிறேன், அது நடைபெறுவதற்காக ஆரம்ப அறிகுறிகள் இப்போது தென்படத்துவங்குகின்றன.

மர்ஜானே சத்ரபி

ஈரான் : ஒரு குழந்தை பருவத்தின் கதை & ஈரான்: திரும்பும் காலம்

தமிழில்: எஸ்.பாலச்சந்திரன்

வெளியீடு: விடியல் பதிப்பகம், 11. பெரியார் நகர், மசக்காளிபாளையம் வடக்கு, கோயம்புத்தூர் -15.

பக்கம்:188 ஒவ்வொன்றின் விலை ரூ.100

•••

0Shares
0