சித்தேஸ்வரி

ஒரு சிறந்த திரைப்படத்திற்குத் தேவை தேர்ந்த காட்சிபடிமங்கள்,  சிறந்த இசை, யதார்த்தமான நடிப்பு, மிக்குறைந்த அளவான உரையாடல் என மணிகௌல் (Mani Kaul) ஒரு நேர்காணலில் கூறுகிறார், இவரது திரைப்படங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள் போலவே இருக்கின்றன

அமெரிக்கப் பல்கலைகழகத்தில் சினிமாப் பேராசிரியராக பணியாற்றும் எனது நண்பர் சொர்ணவேல் மணிகௌலின் தீவிர ரசிகர், அவருடன் அமெரிக்காவில் தங்கியிருந்த போது இரவெல்லாம் மணிகௌல் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம், அவரிடமிருந்து சித்தேஸ்வரி (Siddheshwari) டாகுமெண்டரியின் டிஜிட்டல் பிரதி ஒன்றைப் பெற்றுவந்தேன்,

அப்படத்தை பத்துக்கும் மேற்பட்ட முறை பார்த்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் படம் தரும் அனுபவம் புதிது புதிதாகவேயிருக்கிறது, இசையை அறிவது ஒரு நறுமணத்தை உணர்வது போன்றது, அது தரும் மனஎழுச்சி ஒரு மின்னல்வெட்டு , இசையால் நம் அகத்தைத் தூய்மையாக்கி அதில் சந்தோஷத்தை நிரப்புகிறார் மணிகௌல், உன்னதமான கலைஞனால் மட்டுமே இது சாத்தியம், நவீன இந்திய சினிமாவின் துருவநட்சத்திரம் என்றே இவரைச் சொல்வேன்

திரைக்கு ஏற்றார் போல இசையைப் பயன்படுத்துவதில் தனது குரு ரித்விக் கட்டக்கை போல மணிகௌலும் தேர்ந்தவர், குறிப்பாக ஹிந்துஸ்தானி மற்றும் நாட்டார் இசையை, ஒவியம் மற்றும் நுண்கலைமரபுகளை தனது திரைப்படங்களில் அற்புதமாக பயன்படுத்தியவர் மணிக்கௌல்,

உலக அளவிலுள்ள பல்வேறு திரைப்படக்கல்லூரிகளில் இவரது படங்கள் பாடமாகக் கற்றுத்தரப்படுகின்றன, ஆனால் இந்திய சினிமா ரசிகனோ இவரது மதிப்பையும் சிறப்பையும் இன்றும் அறியாமலிருக்கிறான்.

மணிக்கௌலின் சினிமா நுண்ணோவிய மரபைச் சேர்ந்தவை, அதில் நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம், அவருக்கு மெலோ டிராமாவான கதைகள் தேவையற்றவை, மணிகௌல் மனித மனதின் ஆதார உணர்ச்சிகளை ஆராய்வதையே படத்தின் வேலையாகக் கருதுகிறார்,

நம்பிக்கை, பயம், ஆசை, அன்பு, காத்திருத்தல், தனிமையுறுதல் என்று மனித இருப்பின் வலியும் சந்தோஷமுமே அவர் படங்களின் முக்கியக் கருப்பொருட்கள், பட்டு நெசவாளி மிருதுவான நூலைக் கொண்டு வண்ணமயமான உடையை நெய்து காட்டுவது போல பல்வேறுவிதமான காட்சிகளைக் கொண்டு இவர் உருவாக்கி காட்டும் சித்திரம் நம்மைப் பிரமிக்க செய்கின்றது,

காட்சிகளை  உருவாக்குவதற்கு இந்திய மரபு ஒவியத்திலிருந்தும், மரபுக்கலைகளில் இருந்தும் பெற்ற உந்துதலைக் கொண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டிருக்கிறார், மணிக்கௌலின் கலையை யாரோடாவது ஒப்பிட வேண்டும் என்றால் ஒவியர் வான்கோவோடு மட்டுமே ஒப்பிட முடியும்,

எப்படி வான்கோவின் கோடுகள் பற்றி எரியும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கிறதோ அது போல காட்சிகளைக் கொண்டு பார்வையாளனின் அகத்தை  புத்துருவாக்கம் செய்கிறார் மணிக்கௌல்,

அவரது கலைவெளிப்பாடு அதுவரையிருந்த திரை இலக்கணங்களை, வரம்புகளை மீறிய கவித்துவமான பாய்ச்சலை நிகழ்த்துகிறது என்பதே உண்மை, மணிக்கௌலின் சினிமாவை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால்  காட்சிகளோடு நம்மை கரைத்துக் கொள்ள வேண்டும்,

இசை குறித்த அவரது டாகுமெண்டரி படங்களில் முக்கியமானது சித்தேஸ்வரி, இந்துஸ்தானி இசைக் கலைஞரான சித்தேஸ்வரி தேவி காசியில் வசித்தவர், அவரது தும்ரி இசையின் தனித்துவத்தையும், வாழ்க்கை வரலாற்றையும் பற்றிய இந்த டாகுமெண்டரிப் படத்தை ஒரு முன்மாதிரி படமாக உருவாக்கியிருக்கிறார் மணிக்கௌல்,

இதை டாகுபிலிம் என்று வகைப்படுத்துகிறார்கள், வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் வழக்கமான டாகுமெண்டரிகளைப் போல பழைய புகைப்படங்கள், நேர்காணல்கள், காப்பகங்களில் இருந்த பழைய வீடியோ காட்சிகளை ஒன்று சேர்த்து ஒரு படத்தினைத் தயார் செய்வது போலின்றி ஒரு நீள்கவிதை போல இந்த டாகுமெண்டரி படத்தை உருவாக்கியிருக்கிறார்,

நாடகத்தில் வரும் தனிமொழி (soliloquy) போல இவரது டாகுமெண்டரி சித்தேஸ்வரியின் தனிமொழியாக உள்ளது. அந்த நினைவோட்டத்திற்கு ஊடாக இசை தரும் படிமங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் மணி கௌல், சித்தேஸ்வரியின் இசை எவ்வளவு மகத்துவமானது என்பதை நாமே உணர வைக்கிறார் என்பதே இதன் தனிச்சிறப்பு

ஒரு இலக்கியப்பிரதி உருவாக்கபடுவதைப் போல இந்த டாகுமெண்டரி படம் உருவாக்கபட்டுள்ளது, படத்தின் முகப்பில் புத்தகங்களின் உள்ளடக்கம் போல டாகுமெண்டரியின் உள்ளடக்கம் வரிசையாக பட்டியலிடப்படுகிறது,

சித்தேஸ்வரியின் இசை பெருகியோடும் கங்கையைப் போல வழிகிறது, அதில் ஒரு வெற்றுப்படகு தத்தளிக்கிறது, ஆற்றின் போக்கில் தன்னை ஒப்படைத்துக் கொண்ட படகு நீரின் வேகத்துடன் இணைந்தும் விலகியும் முன்பின்னாக நகர்வது இசையோடு பொருந்திப்போகிறது,

காசியின் பழமையான வீடுகள், படித்துறைகள், பசுக்கள், மல்யுத்த வீரர்கள், துறவிகள் படகோட்டிகள், பறவைகள் என காசியின் ஒட்டுமொத்த இயக்கமும் படத்தில் காட்சி படிமங்களாகின்றன, இதன் இடைவெட்டாக சித்தேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு விவரிக்கபடுகிறது, மூன்று நான்கு பெண்கள் வேறுவேறு வயதில் சித்தேஸ்வரியாக சித்தரிக்கபடுகிறார்கள்,

குருவிடம் சித்தேஸ்வரி எப்படி இசை கற்றுக் கொள்கிறார்கள், குரு அவளை எந்த சூழலில் வளர்ப்பு பெண்ணாக ஏற்றுக் கொண்டார் என்பவை சிறிய உரையாடல்கள்  மற்றும் நாடகம் போன்ற காட்சித் தொகுப்புகளின் மூலம் விளக்கபடுகின்றன,

இசையின் இயக்கத்திற்கு ஏற்ப கேமிரா தானும் கூடவே இயங்குகிறது, இசை உயரும் போது கேமிரா உயர்ந்து காசி நகரத்தின் இடிபாடுகளைக் காட்டுகிறது, இசை பொங்கியோடும் போது கேமிரா படிகளில் இறங்கி கங்கையை நோக்கிப் போகிறது, உடலும் மனமும் ஒன்றிணைய ஆற்றில் அமிழ்ந்துள்ள மனிதர்களை அடையாயம் காட்டுகின்றது,

இசையை இப்படி எல்லாம் அனுபவிக்கமுடியுமா என்பது போல காட்சிபடிமங்கள் புதிது புதிதாக வந்தபடியே இருக்கின்றன, காரை உதிர்ந்த சுவர்கள், தரையில் உருட்டிவிடப்பட்ட  பித்தளைக்குடம், படகில் சுருண்டு படுத்து இருக்கும் பெண்ணின் ஈர்ப்பான கண்கள்,  கலைந்த ஆடைளுடன் மயங்கி கிடக்கும் பெண் உடல்,  மேகங்களுக்குள் ஒளிரும் நிலா, கோவில் மணிகள்,  அதிரும் வயர்கம்பிகள், தண்ணீருக்குள் ஆளுக்கு ஒரு திசைநோக்கி நிற்கும் மனிதர்கள், சுவரில் தொங்கிய ராஜஸ்தானிய நுண்ணோவியங்களின் நுட்பமான அண்மைக்காட்சிகள், இசையை ரசிக்கும் பெண்ணின் விரல் அசைவுகள், அவளது பட்டுப்புடவையின் உரசல், இரவு பகல் மாறும் அற்புதம், என மணிக்கௌல் காட்சிப்படிமங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்,

அசையாத புகைப்படங்கள் அசைந்து உருப்பெறுகின்றன, வானவில் ஒளிர்வது போல சித்தேஸ்வரி  படகில் போகிறாள், வானுலக மங்கை போல அவள் சுடர்விடுகிறாள், சட்டென காலம் மாறி படித்துறையில் அர்சுனன் பேடியாகிறான்,  விளக்குகள் ஒளிரும் அரண்மனையில் அரசன் குருவாகி இசை கற்றுதருகிறான், சித்தேஸ்வரி பாடுகிறாள், கங்கையில் மஞ்சள் பூக்கள் மிதக்கின்றன,

காமமும் தாபமும் ஒன்று சேர சித்தேஸ்வரி ஒடுகிறாள், அவள் வீட்டில் உள்ள ஒவியத்தில் உள்ள மான் தனது கண்ணை அசைத்து அவளைப் பார்க்கிறது, பியூஷாவின் கேமிரா உருவாக்கி காட்டும் மாயத்தை என்னவென்று விவரிப்பது,

மழைக்கு நம்மை ஒப்புக் கொடுப்பதை போல முழுவதுமாக கரைந்து போனால் தான் படத்தின் சிறப்புகளை முழுமையாக நாம் அனுபவிக்க முடியும்,

வான்கோவின் ஒவியங்களில் காணப்படுவது போல லேயர் லேயராக படிமங்கள் இடம் பெறுகின்றன, ஒவியம், இசை, நாடகம், தொல்கதை, பேச்சு, முணுமுணுப்பு, கருவிகளின் இசையாக்கம்,  சுருள்ஒவியங்கள், மாறுபட்ட நிலக்காட்சிகள், வீடுகள், வீதிகள் என்று  மணிக்கௌல் புதியதொரு சொல்முறையை இப்படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்,

காட்சிபடிமங்களின் வழியே நாம் சித்தேஸ்வரியின் இசையை நாம் கொஞ்சம் கொஞ்சமாக  உணரத்துவங்குகிறோம், படத்தின் முடிவில் ஒரேயொரு வீடியோ பதிவு இடம்பெறுகிறது, அதில் சித்தேஸ்வரி பாடுகிறார், பிரக்டின் காட்சியாக்கம் போல ஒலிப்பதிவு கூடத்தில் அதை மிதா வஷிஸ்ட் பார்த்துக் கொண்டிருக்கிறார், எது நிஜம், எது கற்பனை என்ற பேதங்கள் அழிக்கபடுகின்றன,

இதுவரை இந்தியாவில் உருவாக்கபட்ட கலை சார்ந்த ஆவணப்படங்களில் சித்தேஸ்வரியே  தலை சிறந்தது என்பேன், இப்படம் சிறந்த ஆவணப் படத்திற்கான தேசிய விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

மணி கவுலின் இயற்பெயர் ரவீந்திரநாத் கவுல். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர். பூனா  திரைப்படக்கல்லூரியில் பயின்றவர், ரித்விக் கட்டகின் மாணவர். 1969ல் உஸ்கி ரொட்டி படத்தின் மூலம் தனது சினிமா‌ வாழ்க்கையை தொடங்கிய மணி கவுல், அந்தப் படத்திற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார். ஆசாத் கா ஏக் தின், துவிதா, இடியட் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்திய செவ்வியல் மரபின் நீட்சி போலவே இவரது திரைப்படங்கள் உருவாக்கபட்டுள்ளன, திரைப்பட மேதை ராபர்ட் பிரஸானை தனது ஆதர்சமாகக் கொண்ட மணிகௌல் அவரைப்போலவே காட்சிபடிமங்களை உருவாக்குவதில் தன்னிகரற்று திகழ்கிறார்,

இசை தரும் மனநெகிழ்ச்சியை, அற்புத உணர்வை  தனது கவித்துவப் படிமங்களால் உருவாக்கிக் காட்டியவர் கவிஞர் சுகுமாரன், தமிழின் மிக முக்கிய நவீன கவிஞரான சுகுமாரன் இக் கவிதையின் வழியே இசை  நம்முடைய மனதில் உருவாக்கும் படிமங்களை அற்புதமாக எடுத்துக்காட்டுகிறார்,

இந்த கவிதையில் இடம்பெற்றுள்ள காட்சிபடிங்களைப் போல நூறாயிரம்  காட்சி படிமங்கள் ஒன்று சேர்ந்த்து தான் மணி கௌலின்  சித்தேஸ்வரி

இசை தரும் படிமங்கள்

சுகுமாரன்

1.

விரல்களில் அவிழ்ந்தது தாளம்

புறங்களில் வீசிக் கசிந்தது குரல்

கொடித் துணிகளும்

சுவர்களும் விறைத்துக்கொண்டன‌

ஈரம் சுருங்கிய பிடிமணலாய்ப்

பிளந்தேன்

தொலைவானின் அடியில்

நூலறுந்த பலூன்

யாரோ தட்டக் -‍’ கதவைத் திற’

வெளிக்காற்றில்

மழையும் ஒரு புன்னகையும்

(ஹரிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும்)

2.

புல்லாங்குழல்

சகல மனிதர்களின் சோகங்களையும்

துளைகளில் மோதிற்று

கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்

ரத்தமாய்ப் பெய்தன‌

அறையெங்கும் இரும்பின் வாசனை

மறு நிமிஷம்

என் உப்புக் கரைந்து எழுந்தது

மல்லிகை மணம்

(ஹரிபிரசாத் சௌரஸ்யாவுக்கு)

3.

மழை தேக்கிய இலைகள்

அசைந்தது

சொட்டும் ஒளி

கூரையடியில் கொடியில் அமர‌

அலைக்கழியும் குருவி

காலம்-‍ ஒரு கண்ணாடி வெளி

எனக்கு மீந்தன‌

கண்ணீரும் சிறகுகளும்

(யேசுதாஸுக்கு)

4.

குழம்பியிருந்தது சூரியன் அதுவரை

கரை மீறிய கடல்

என் சுவடுகளைக் கரைத்தது

இசை திரவமாகப் படர்ந்து உருக்க‌

செவியில் மிஞ்சியது உயிர்

திசைகளில் துடித்த தாபம்

சகலத்தையும் பொதிந்துகொள்ள விரிந்தது

அண்ணாந்தால்

கழுவின கதிர்களுடன் வெளியில் சூரியன்

(ஸாப்ரிகானுக்கு)

••

ரித்விக் கட்டக் போல லட்சியத்துடன், சமரசமற்ற திரைப்படங்களை உருவாக்கிய மணி கௌல் தனக்னெ மாறுபட்ட சினிமா மொழியை உருவாக்கி அதில் சாதனை  செய்து காட்டியிருக்கிறார்.

1982 இல் மணிகௌல் ‘துருபத்’ படத்தை எடுத்தார். அதற்கும் சில வருடங்கள் கழித்து, 1989 இல் சித்தேஸ்வரியை இயக்கினார்  – வணிக ரீதியாக அவரது படஙகள் வசூலை குவிக்கவில்லை என்பதால் மணி கௌல் சில காலம் திரைப்படத்தை விட்டு விலகி இசை கற்பித்துக் கொண்டிருந்தார். ஐந்து வருடங்கள் இசை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார், அவரே ஒரு இசை ஆசிரியராக இருந்த காரணத்தால் சித்தேஸ்வரிதேவி பற்றிய இப் படத்தை தனது இசைரசனையின் உன்னத வெளிப்பாடாக உருவாக்கியிருக்கிறார்,

மணி கௌல் தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர வாசகர், அவரது கதை ஒன்றினை நசர் என்ற பெயரில் படமாக எடுத்திருக்கிறார், தஸ்தாயெவ்ஸ்கியின் பாதிப்பினை அவர் படங்களில் வெளிப்படையாக காணமுடிகிறது

நல்ல இசை மனதைத் தூய்மையாக்கி நம்மைச் சந்தோஷம் கொள்ள வைக்கும் என்பார்கள், மணி கௌலின் படமும் அதைத் தான் செய்கிறது

••

0Shares
0