அரங்கின் பின்வாசல் படிக்கட்டின் மறைவில் கரடி, குரங்கு வேஷமிட்ட எல்கேஜி சிறுவர்கள் ஒடியாடிக் கொண்டிருந்தார்கள். பரதநாட்டியம் ஆடுவதற்கு தயாராக இருந்த நாலு மாணவிகள் ஒரமாக நின்று கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியின் துவக்கத்தில் இறைவணக்கம் பாட வேண்டிய பெண் பயபக்தியோடு சந்தனம் பூசி நடுங்கும் கைகள் வெளித்தெரியாமல் மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு பார்வையாளர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பரிசு வாங்க காத்திருந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முன்வரிசையில் அமர்ந்து யாருமில்லாத மேடையை செல்போனில் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆடல்பாடல் நிகழ்ச்சிகாக ஜிகினா டிரஸ் போட்ட நாலு பையன்கள் பிரபுதேவா போல கால்களை நின்ற இடத்திலே வளைத்து ஆடி பழகிக் கொண்டிருந்தார்கள். இப்படி கலவையான முகங்கள். என்னை வரவேற்ற ஒரு ஆசிரியர் மேடைக்கு அழைத்துபோய் உட்கார வைத்துவிட்டு காணாமல் போய்விட்டார். தனியே மேடையில் அமர்ந்திருப்பதைப் போல தண்டனை வேறு எதுவுமேயில்லை. யாரைப் பார்ப்பது என்று தெரியாமல் நானும் உள்ளுற நடுக்கம் கொள்ளத் துவங்கியிருந்தேன். ஐந்து மணிக்கு நிகழ்ச்சி துவங்கப்படும் என்று ஒரு மணி நேரமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதற்குள் எல்கேஜி கரடிகளில் ஒன்று அசதியில் ஒரமாக சாய்ந்து உறங்கத் துவங்கியிருந்தது. பரிசு கோப்பைகள், சான்றிதழ்களை பெரிய தாம்பாளத்தில் வைத்து கொண்டு வந்த சிறுவர்கள் எனக்கு சல்யூட் அடித்தார்கள். எதற்கு என்று புரியவேயில்லை. ஆறரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. பரிசுகளை வழங்குவதற்காக வங்கி ஒன்றின் தலைமை அதிகாரி வந்திருந்தார். அவரோடு கல்வித்துறை சார்ந்த இரண்டு ஒய்வு பெற்ற அதிகாரிகள் சிறப்பாளர்களாக வந்திருந்தார்கள். அவையன்றி பள்ளியோடு தொடர்புடைய முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றிருந்தார்கள். யாரும் யாருக்கும் அறிமுகமாகவேயில்லை. பள்ளியில் நிகழ்ச்சி நடக்கிறது என்பதால் தானோ என்னவோ வங்கி அதிகாரி தன் சட்டையில் ரோஜா பூ குத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கல்வித் துறை அதிகாரிகள் வெளிர் நீல சபாரி சூட்டை அணிந்து வந்திருந்தனர். பல வருடங்களாக விழாவிற்கென்றே அதை அணிவார்களோ என்று தோன்றியது. இறைவணக்கம் பாடும் மாணவி நான் நினைத்தது போலவே கண்ணை மூடிக் கொண்டு பாடினாள். நிகழ்ச்சி துவங்கியதும் பாலர்கள் தங்களது நடனத்திற்கு தயாராகி நின்று கொள்ள துவங்கினார்கள். முதலில் வரவேற்புரை பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மிக சுருக்கமாக நாற்பது நிமிசங்கள் பேசினார். இடையிடையே மாணவர்களை சப்தமிடாமல் இருக்கும்படியாக கேட்டுக் கொண்டார். இதில் அவர் சொன்ன நகைச்சுவைகளுக்காக அவரே பல முறை சிரித்துக் கொண்டார். பேச்சை முடிக்கும்படியாக மாணவர்கள் அவ்வப்போது கைதட்டினார்கள். அவரோ அதிக உற்சாகத்துடன் தொடர்ந்து பேசத்துவங்கினார். அவர் பேசி முடிந்த போது விண்ணை முட்டும் கரவொலி கேட்டது. அவர் பெருமிதத்துடன் உட்கார்ந்து கொண்டார். அடுத்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. பரதநாட்டியம் ஆடும் பெண்கள் ஒருவர் மீது மற்றவர்கள் இடித்துவிடுவார்களோ என்ற பயத்திலே ஆடினார்கள். திரையின் பின்னால் நின்று கொண்டிருந்த ஆசிரியை ஏய்..பத்மா.. கீப் ரைட் .. நிவேதா. கீப்.. சென்டர் என்று ஆர்டர் கொடுத்தபடியே இருந்தார். நடனமாடிய ஒரு மாணவியின் பின்னலில் இருந்த அலங்காரம் கழண்டு கிழே விழுந்தது. அவள் கவனம் முழுவதும் அதிலே இருந்தது. சரியாக பத்து நிமிசங்கள் பாதி பாடலில் பரதநாட்டியம் நிறுத்தபட்டு மாணவிகள் தலை வணங்கினார்கள். கைதட்டு கிடைத்தது .புகைப்படம் எடுத்து கொண்டார்கள். இந்த புகைப்படங்களை பின்னாளில் மற்றவர்கள் அறியாமல் ஒளித்து வைக்க எவ்வளவு பிரயாசை படுவார்கள் என்று யோசித்து கொண்டிருந்தேன் அடுத்து வங்கியின் தலைமை அதிகாரி தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லி சில நிமிசங்கள் பேசி விட்டு செல்வதாக மாணவர்களின் முன் வந்து நின்றார். அவர் நின்ற கோலத்தைக் கண்ட போது எப்படியும் மனிதர் ஒரு மணி நேரமாவது பேசாமல் களம் திரும்பமாட்டார் என்று நினைத்தேன். என்னை அவர் வஞ்சகம் செய்யவில்லை ஒரு மணி நேரம் இருபது மணி நிமிசம் பேசினார். அதில் எண்பது சதவீதம் ஆங்கிலம். இடையிடையே தமிழ். அவர் பேசிய ஆங்கிலம் வழக்கொழிந்து போய் முப்பது வருசமாகிவிட்டது என்ற எளிய உண்மையை அவர் அறிந்திருக்கவில்லை. தான் ஒரு முறை அமெரிக்கா போய்வந்த போது நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சிகளை பற்றி விவரிக்க துவங்கி நவீன வங்கியியலில் தங்கள் வங்கி அடைந்துள்ள சாதனைகள், மனிதவள மேம்பாடு உலகபொருளாதார மாற்றங்களும் நகர்மயமாதாலும் என்று சுற்றியலைந்து இடையிடையே மாணவர்களுக்கு தனக்கு பிடித்த பழைய பாடலான உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடலை பாடிக்காட்டி என்று அத்தனை வித்தைகளையும் ஒருங்கே நிகழ்த்தி காட்டினார். அநேகமாக இதை விட்டால் இனி இந்த வருசத்தில் தன் வித்வத்தை காட்ட வேறு சந்தர்ப்பமே கிடைக்காது என்று முடிவு செய்தவர் போல உற்சாகம் கரைபுரண்டு ஒட பேசிக் கொண்டேயிருந்தார். எப்படி அவரது பேச்சிற்கு அணை போடுவது என்று புரியாமல் அவர் முன்னால் சுருக்கமாக பேசிய தலைமை ஆசிரியரே யோசித்து கொண்டிருந்தார். பரிசு வாங்க வந்திருந்த பெற்றோர்கள் முகத்தில் இருந்த ஆர்வம் அப்படியே வற்றிப் போய் ஒடுங்கியிருந்தது. சினிமா தியேட்டராக இருந்தால் கூட எழுந்து போய்விடாலாம் இங்கே எப்படி எழுந்து போவது என்று புரியாமல் பெற்றோர்கள் வானத்தையும் பூமியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வங்கி அதிகாரியோ தன் அவசர வேலைகளைப் பற்றி கவலைப்படாமல் பெர்னாட்ஷாவின் மேற்கோள்களில் தாவியிருந்தார். நடனம் ஆடுவதற்காக காத்திருந்த எல்கேஜி குழந்தைகளின் முகங்களில் பசியும் தூக்கமும் அப்பிப் போயிருந்தது. ஆசிரியர்களில் துணிச்சலான ஒருவர் துண்டுசீட்டு எழுதி நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இத்தோடு முடித்து கொள்ளவும் என்று தந்த போது அதை வாங்கி மாணவர்களிடம் வாசித்து காட்டிய வங்கி அதிகாரி இப்படி சீட்டுகுடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். ஏன்னா இப்படி தான் போன வருசம் நான் எங்க வங்கியோட சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டபோது ஒரு சம்பவம் நடந்தது என்று அடுத்தவிஷயத்திற்கு தாவி சென்று விட்டார். ஒரு கட்டத்தில் பலரும் எழுந்து நடக்க துவங்கியிருந்தார்கள். அவராக பெரிய மனது பண்ணி கூட்டத்திடம் தான் அடுத்த வருசம் வந்து மீதி விஷயங்களை சொல்வதாக விடைபெற்ற போது யாரும் கைதட்டவேயில்லை. அவர் சற்றே வருத்ததுடன் தன் அவசர வேலையை பார்க்க உடனே கிளம்பி சென்றார். இப்போது மேடையில் நானும் இன்னும் இரண்டு கல்வி அதிகாரிகளும் இருந்தோம். இவர்கள் என்ன கொத்து கொத்துவார்களோ என்ற பயம் அங்கிருந்த அத்தனை மாணவர்கள் பெற்றோர்கள் கண்களிலும் பீறிட்டு கொண்டிருந்தது. அடுத்து ஒரு வழியாக பாலர்கள் நடனம் மேடையில் அரங்கேறியது. கரடிகள் குதிரைகள் மான்கள் என்று மாணவர்கள் பாதி தூக்கத்தோடு ஆடினார்கள். ஆடி முடிந்தவுடன் ஒரு சிறுவன் அம்மா இந்த டிரஸை கழட்டிவிடு என்னாலே தாங்க முடியலை என்று மேடையில் கத்தினான். அந்த குரல் அவன் ஒருவனுடையது அல்ல என்று புரிந்தது. இவ்வளவு களேபரத்திற்கும் அஞ்சாமல் ஜிகினா டிரஸ் பையன்கள் கைகளை கட்டிக் கொண்டு தங்கள் நேரத்திற்காக காத்திருந்தார்கள். அடுத்து பரிசளிப்பு என்றதும் யாரோ சில மாணவர்கள் பரிசு வாங்க போகிறார்கள் என்று நினைத்தேன். கிட்டதட்ட பதினாறு பிரிவுகளில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசு வாங்கினார்கள். இதில் பெயர் குழப்பங்கள், சான்றிதழ் குழப்பங்கள் நிறைய இருந்தன, பரிசு வாங்கிய மறுநிமிசம் சம்பந்தப்பட்ட மாணவனும் அவனது பெற்றோர்களும் மாயமாக மறைந்து போனார்கள். கல்வி அதிகாரிகளில் ஒருவர் என்பக்கம் திரும்பி இப்போ உள்ள பேரன்ஸ்க்கு ரெஸ்பான்சிபிலிடி கிடையாது என்று அலுத்துக் கொண்டார். அறுநூறு பேர் இருந்த அரங்கு இப்போது பாதியாக மாறியிருந்தது. மணியைப் பார்த்தேன். ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது. நான் மணிபார்ப்பதை தலைமை ஆசிரியர் கவனித்திருக் கூடும். என் அருகில் தலைசாய்ந்து பத்து நிமிசத்தில நீங்க தான் பேசுறீங்க என்றார். அங்கிருந்த நிலைமையை கண்டு பயமாக இருந்தது. நான் பதில் சொல்லவில்லை. இதன்பிறகு நான்கு மாணவிகள் ஆங்கிலப்பாடல் பாடினார்கள். ஒரு மாணவன் பத்து அதிகாரம் திருக்குறள் ஒப்புவித்தான். ஒரு கல்வி அதிகாரி அறவுரை ஆற்றினார். அதன்பிறகு தேசஒற்றுமையை வலியுறுத்தி பன்மொழி பாடல் ஒன்றிற்கு நாற்பது மாணவ மாணவிகள் ஆடினார்கள். அப்போதும் ஜிகினா உடை நடனக்கலைஞர்கள் பொறுமையாக நின்று கொண்டிருந்தனர். எனக்கு பசியும் தொடர்ந்து அதிக நேரம் கலைநிகழ்ச்சிகளில் முழ்கியிருந்த மூச்சு திணறலும் ஒன்று சேர்ந்திருந்தது. முடிவாக ஜிகினா உடை நடனக்கலைஞர்கள் அழைக்கபடவே அவர்கள் மேடையேறி தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடுடா பாடலுக்கு ஆடினார்கள். அதற்காகவே காத்துக்கொண்டிருந்த அந்த மாணவர்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள், வகுப்புதோழர்கள் இடைவிடாமல் கைதட்டிக் கொண்டிருந்தார்கள். எனது கல்லூரி நாட்களில் கட்டயாம் ஆண்டுதோறும் ஒரு மாணவனாவது சலங்கை ஒலி கமலை போல பரதநாட்டியம் ஆடுவது வழக்கம். அது போலவே விழாவிற்கு வந்திருந்த ஒன்றிரண்டு அழகான மாணவிகளை மயக்குவதற்காக மேடைக்கு பைக்கை கொண்டு வந்து அதில் ஏறி சுற்றி இளமை இதோ இதோ பாடி ஆடும் சகலகலாவல்லவர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் இப்போது என்னவாகியிருப்பார்கள் என்று நினைத்து கொண்டே நடனத்தை பார்த்து கொண்டிருந்தேன் பத்து மணி அளவில் எதிர்பாராமல் காற்றோடு மழை பெய்ய துவங்கி திடீரென மின்சாரம் இல்லாமல் போனது. ஒரே கூச்சல் குழப்பம். விசில் சப்தம் பிளந்தது. நான் மிகவும் ஆசுவாசத்துடன் இருட்டை குடிக்க துவங்கியிருந்தேன். எந்த முகமும் தெரியாதபடி இருள் கவ்வியிருப்பது ஆனந்தமாக இருந்தது. யாரோ அவசர விளக்கை கொண்டு வந்தார்கள். இதற்கு மேலும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்ற விவாதம் துவங்கியிருந்தது. நானாக இத்தோடு முடித்து கொண்டுவிடலாம் நான் பேசாவிட்டால் பரவாயில்லை என்று சொன்னேன். மிகவும் வருத்தபட்ட தலைமை ஆசிரியர் அடுத்த வருசம் நீங்கள் அவசியம் வந்து முன்னாடியே பேசிவிட வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். நிகழ்ச்சி அத்துடன் முடிவடைந்தது. அரங்கின் வெளியே வந்த போது மழை வலுத்து கொண்டது. நனைந்தபடியே கொஞ்ச தூரம் வந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். வழியெல்லாம் நல்லவேளை நான் பேசவேயில்லை என்று இயற்கையின் கருணைக்கு நன்றி சொல்லிக் கொண்டே வந்தேன். அன்றிலிருந்து அடுத்த வருசம் அழைத்துவிடுவார்களோ என்ற பயம் உள்ளுக்குள் கசிந்து கொண்டேயிருந்தது. இன்றும் பள்ளி ஆண்டுவிழா என்ற சொல்லைக் கேட்டாலே மனது உதறல் எடுக்கத் துவங்கி விடுகிறது. என்னை போல் இல்லாமல் வங்கி அதிகாரி, நிச்சயம் தான் மாணவர்களிடம் சொல்ல வேண்டிய சேதியை இன்றும் ஒவ்வொரு பள்ளியாக சென்று சொல்லிக் கொண்டுதான் இருக்ககூடும். மாணவர்களின் இயல்பான கலைத்திறன்களுக்கும் ஆர்வத்திற்கும் களம் அமைத்து தருவதை விடுவித்து விழாவின் பெயரில் நடக்கும் கேலி கூத்துகள் சகிக்க முடியாமல் இருக்கின்றன. கலைக்கு இவ்வளவு சோதனைகள் தேவைதானா என்று நினைத்து எரிச்சல் கொள்ளுமளவே பெரும்பான்மை பள்ளிகளில் கலை நிகழ்ச்ச்சிகள் நடத்தபடுகின்றன. இது போன்ற வங்கி அதிகாரிகள், அறவுரையாளர்கள். நீதி கூறும் தலைமை ஆசிரியர்களோடு தான் என்பிள்ளையும் உங்கள் பிள்ளைகளும் படிக்கிறார்கள். புத்தகம் படிப்பு இசை கலை என்று சொன்னால் ஏன் பிள்ளைகள் விலகியோடுகிறார்கள் என்பது இப்போது தான் புரிய துவங்குகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல எல்லா பள்ளிகளிலும் நடைபெறும் விஷயம் என்பதால் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினேன்.
மொத்தமே ஒரு மணி நேர நிகழ்ச்சி இதில் நீங்கள் பத்து நிமிசம் பேசினால் போதும் என்று தெரிந்த ஒரு ஆசிரியர் வழியாக அன்புக் கட்டளையிட்டு கலந்து கொள்ளச் செய்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்ச்சி என்பதால் நாலரை மணிக்குச் சென்றேன். ஐநூறு பேருக்கும் மேலாக அரங்கம் நிரம்ப மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
நடனமாடுவதற்கு தயாராகி சோர்ந்து போன சிறுவர்கள் எப்போது நிறுத்துவார் என்று அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். அவரோ பள்ளியின் அடிக்கல் நாட்டிய நாளில் இருந்து துவங்கி அவர் சிறுவயதில் கேட்ட நகைச்சுவை வரை விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
இனி பயனில்லை என்று முடிவு செய்து கடவுளின் கருணையிருந்தால் மட்டுமே அவர் பேச்சு முடியும் என்று விதியிடம் தங்களை ஒப்படைத்துக் கொண்டு மொத்த பார்வையாளர்களும் தலைகவிழ்ந்திருந்தார்கள்.
**