நேற்று திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த போது கேரளாவின் புகழ்பெற்ற நடிகர் மதுவைச் சந்தித்தேன், தனியே அமர்ந்து வார இதழ் ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது புன்சிரிப்புடன் தமிழ் மக்கள் எனது படங்களை நேசிக்கிறார்களா எனக்கேட்டார், செம்மீனைப் பிடிக்கும் என்று சொன்னேன், செம்மீன் ஒரு நல்ல படம் என்று சொல்லிவிட்டு பெருமூச்சிட்டுக் கொண்டார்,
பிறகு வேடிக்கையான குரலில் சொன்னார், அது கருத்தம்மாவின் படம், ஷீலாவைத் தமிழ் மக்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது, அவள் தான் படத்தின் ஆதார பலம், அப்படியொரு கதாபாத்திரம் சினிமாவில் தோன்றுவது அபூர்வம் என்றார்,
பரிகுட்டியாக அவர் சிறப்பாக நடித்துள்ளதை பற்றி சொன்னேன், அதுவும் குறிப்பாக ஒரேயொரு தலைமுடி முன்னால் விழும் அவரது தோற்றம் வசீகரமானது என்றேன், அப்படியா, என்றபடியே மறுபடியும் புன்னகை செய்தார்.
பிறகு, மெல்லிய குரலில், அந்தப் படத்திற்கான எனது ஸ்கிரின் டெஸ்ட் சென்னையில் தான் எடுக்கபட்டது என்றபடியே அவர் தனது கண்களை மூடிக் கொண்டார், விமானம் ஏறும் வரை அதன் பிறகு மது என்னோடு பேசவில்லை,
செம்மீன் மலையாள சினிமாவில் மறக்கமுடியாத படம், தகழி சிவசங்கரன் பிள்ளையின் நாவலை அற்புதமாக படமாக்கியிருப்பார் ராமு கரியாத், மார்க்ஸ் பட்லேயின் கேமிரா கடற்புர வாழ்வை, கடலைப் படமாக்கிய விதம் ஒப்பற்றது
மதுவைப் பலரும் கண்டுகொண்டு சிறு புன்ன்கையுடன் கடந்து போய்க் கொண்டிருந்தார், விமானத்தில் அவர் தனக்கான இருக்கையை தேடிப்போய் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி ஒய்வு கொள்ளத் துவங்கினார், விமானம் தரையிறங்கும் போது என்னை பார்த்து புன்னகையுடன் தலையசைத்தபடியே இறங்கிச் செல்ல ஆரம்பித்தார்
அவரை பார்த்த நிமிசத்தில் இருந்து மனம் முழுவதும் செம்மீன் படத்தின் மீதே நிலைத்திருந்தது, இன்று சென்னை வந்து சேர்ந்தவுடன் செம்மீனை மறுபடி பார்க்க வேண்டும் என்று தேடத்துவங்கினேன், படம் கிடைக்கவில்லை, செம்மீன் நாவலை வாசிக்கத் துவங்கினேன்
செம்மீன் நாவலை சுந்தர ராமசாமி மொழியாக்கம் செய்திருக்கிறார், அற்புதமான மொழிபெயர்ப்பு அது, கடற்புரத்தின் மணம் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் வீசிக் கொண்டிருக்கிறது.
இப்போது நாவலை வாசித்த போதும் பரிக்குட்டியை எனக்கு பிடித்திருந்தது, நிராசையின் நாயகன் அவன், நம் எல்லோருக்குள்ளும் நிராசை கொண்ட காதலன் ஒருவன் இருக்கிறான், அவனின் அடையாளம் தான் பரிக்குட்டி
நேற்றைக்கு தான் எழுதப்பட்டதோ எனும்படி அவ்வளவு புதியதாக உள்ளது செம்மீன், தகழி இந்த நாவலை மூன்று வாரத்தில் எழுதியிருக்கிறார் என்கிறார்கள், 30 மொழிகளில் செம்மீன் நாவல் வெளியாகியிருக்கிறது, இப்படத்தின் பாடல்கள், வசனம் அடங்கிய இசைத்தட்டு ஒன்றினை முன்பு வைத்திருந்தேன், மானச மைனே வரோ எனக்கு விருப்பமான பாடல்,
செம்மீன் இந்திய சினிமாவில் மறக்கமுடியாத படம், ஒரு நாவல் படமாக்கபட்டு மிகப்பெரிய புகழைப்பெற்றது செம்மீனில் தான் நடந்தேறியது,
•••