நவ கண்டம்

தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டு கொள்ளும் மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது.


கொற்றவையின் முன்பாக தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்து பலியிட்டு கொண்டவர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனை பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது.


இது போலவே தண்டனையாகவும் தன் தலையை தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பிடிபட்ட திருடனை குடும்பத்துடன் ஒரு நாள் சந்தோஷமாக வாழச்செய்து மறுநாள் கோவில் முன்பாக தன்தலையை தானே அறுத்து பலியிட்டு கொள்ளும் ஒரு வழக்கு உண்டு.


இது போன்றே தன் குடும்ப நன்மைக்காகவும். முற்றிய நோயிலும் தன்னை பலி கொடுத்து கெண்டிருக்கிறார்கள்


தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக் கொள்வதையே நவகண்டம் என்பார்கள்.


இது ஒரு வீரச்சாவு. 


சாமுராய் வீரர்கள் வயிற்றை கிழித்து தற்கொலை செய்து கொள்வார்கள், அதற்கு பெயர் ஹராகிரி.


ஆவிப்பலியை மெய்ப்பிக்கும் சிற்பங்களை கொங்கு நாட்டில் காண முடிகிறது.


 ஈரோட்டின அருகில் உள்ள விஜயமங்கலத்தில் அப்படியான நவகண்ட சிற்பங்களை கண்டேன். புகழ்பெற்ற விஜயமங்கல சமண கோவிலின் அருகாமையில் உள்ள அம்மன் கோவிலில் நவகண்ட சிற்பங்கள் இருப்பதாக அறிந்து அதை காண ஈரோட்டு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.


அம்மன் கோவிலை இடித்து புதிதாக கட்டும் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த சிற்பங்களை என்ன செய்தார்கள் என்று அறியமுடியவில்லை.


இங்கிருந்த சிற்பங்கள் எங்கே  போனது என்று அருகாமையில் வேலை செய்பவர்களை கேட்ட போது  மரத்தடியில் தூக்கி போட்டிருப்பதாக சொன்னார்கள்.


அந்த மரத்தடியில் தலைகுப்புற விழுந்து கிடந்தன சிற்பங்கள். நூற்றாண்டு பழமையானவை என்ற முக்கியத்துவம் அறியாமல்  அதை தூக்கி போட்டிருந்தார்கள்.


 வீரச்சாவில் இறந்தவர்களுக்கு நடுகல் வைத்து வழிபடும் பழக்கம் உண்டு. அதை சாவன்கல்லு என்று சொல்வார்கள். தாராமங்கலம் பகுதியில் இது போன்ற நடுகல்களை காணமுடிகிறது


தன் தலைவனுக்காக கழுத்து அறுத்து இறந்து போதலே ஆவிப்பலி எனப்படும் ஆவிப்பலி தர முன்வருபவர்கள் செஞ்சோறு சாப்பிட்டு தங்களை பலியாக்கி கொள்ள போவதை உறுதி எடுப்பார்கள் என்று இலக்கிய சான்றுகள் கூறுகின்றன.


இரண்டு நவ கண்ட சிற்பங்க்ள் அங்கிருந்தன,


புரட்டி வெயிலில் அந்த சிற்பங்களை கண்ட போது தலை அறுத்துக் கொள்ளும் மனிதனின் முகம் தென்பட்டது. மிக சாந்தமான முகம். அறுபட்ட தன் தலை தரையில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் தலைமயிரை கொத்தாக கையில் அள்ளி பிடித்திருக்கிறான். சாவின் பயம் அவன் முகத்தில் இல்லை. உறுதியான உடற்கட்டும் ஆரோக்கியமும் கொண்டவன் என்பது அவன் உடல்வாகில் தெரிகிறது. இறுகிய உதடுகள். பேச்சு அழிந்த முகம் அடர்ந்த புருவங்கள். கொண்டையிட்ட கேசம். கழுத்தில் மணியாரம்.


வெயில் அவன் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் காலத்தின் முன்பு என்றோ தன்னை பலியாக்கி கொண்ட மனித உடலை குருதி காயாமல் காண்பது போல அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்


கையில் தொட்டு அறியாமல் சிற்பத்தை உணர முடியாது என்று நம்புகின்றவன் நான். நவகண்ட சிற்பத்தை கையால் தொட்டுப் பார்த்தேன். காற்றும் வெயிலும் மழையும் அரித்து கல்லைகரைத்திருக்கிறது.


 சிற்பங்கள் நம் அகத்தோடு நேரடியாக உரையாடக்கூடியவை. அந்த சிற்பம் அப்படியானதொரு உச்சஉணர்ச்சிகளையே உருவாக்கியது. கைவிடப்பட்டு மண்ணில் முகம் புதைத்து கிடந்த சிற்பம் மண்ணோடு என்ன பேசியிருக்கும். எதை நினைவு கொள்ள தூண்டுகிறது இச்சிற்பம்.


 நீண்ட நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  அந்த மனித முகம் பாஷையில்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தது. சாவு முடிவல்ல என்று சொல்வது போலவே தோன்றியது


 


***

0Shares
0