நிமித்தம் விமர்சனக்கூட்டம்

படி அமைப்பின் சார்பில் நிமித்தம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது,

சமீபத்தில் காலமான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மற்றும் நேற்று காலமான இலக்கிய வாசகர் அன்புசிவன் இருவருக்குமான மௌன அஞ்சலியைச் செலுத்திக் கூட்டம் துவங்கியது.

அன்புசிவன் ஒரு அற்புதமான மனிதர், இலக்கியத்தை மிகவும் நேசித்தவர், அவரைப் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறேன், அவரது இழப்பு மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியது

நந்தனம் கல்லூரியில் பணியாற்றும் பேராசியர் ராமன் நிமித்தம் குறித்து ஒரு மணி நேரம் மிகச்சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். நாவல் என்ற வடிவத்தின் வரலாறு துவங்கி, டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, மார்க்வெஸ் என விரிந்த தளத்தில் நாவல்களின் சிறப்பியல்புகள் குறித்துப் பேசி அந்த நிலையில் இருந்து நிமித்தம் நாவல் எவ்வளவு முக்கியமானது என்பதைக் குறித்து நாவலின் பல்வேறு நிகழ்வுகள், வரிகள், உரையாடல்களைக் கொண்டு உரையாற்றியது சிறப்பாக அமைந்தது.

விரிந்த வாசிப்பு அனுபவமும் சிறந்த விமர்சன அணுகுமுறைகளும் கொண்டவர் என்பதால் ராமன் இந்த நாவலை துல்லியமாக அணுகி அதன் சிறப்பு மற்றும் போதாமைகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.

நவீனத்துவ நாவல்களின் போதாமையைத் தான் நிமித்தமும் கொண்டிருக்கிறதா என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியதுடன் நன்மை தீமை என்பதைப் பற்றிய இன்றைய வரையறைகள், பெண் கதாபாத்திரங்களை வார்ப்பதில் ஏற்படும் மரபு ரீதியான பிரச்சனைகள், நம்பிக்கையின்மையைச் சொல்லும் முடிவு என அவர் சுட்டிகாட்டிய விவாதப்புள்ளிகள் முக்கியமானவை.

நான் அது குறித்து விளக்கம் அளித்தேன், குறிப்பாகக் கிரேக்க டிராஜடி என்பதும் இந்திய இலக்கியத்தின் துன்பவியல் கருத்துகளும் ஒன்றா, வேறுபட்டதா, பிரிவை ஏன் சங்க இலக்கியம் இவ்வளவு முக்கியமான உணர்ச்சியாகக் கருதுகிறது, இதிகாசங்கள் எதனால் வீழ்ச்சியைப் பாடுகின்றன, சமகாலச் சூழலில் அதிகாரம் எப்படி நன்மை தீமைகளை முடிவு செய்கிறது, சென்ற நூற்றாண்டு நாவல் வாசகனுக்கும் இன்றைய வாசகனுக்குமான வேறுபாடுகள் எவை என விவாதம் நீண்டு கொண்டே போனது. அத்துடன் செவ்வியல் நாவல்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது.

நிமித்தம் நாவலை முன்வைத்து இத்தனை காரசாரமான விவாதம் நடப்பது சந்தோஷம் தருவதாக அமைந்தது.

நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்த படி அமைப்பின் நெய்வேலி பாலு அவர்களுக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும், வருகை தந்து சிறப்பித்த வாசகர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றிகள்.

•••

0Shares
0