பசியின் குரல்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் Hunger/Sult novel 1890 ல் வெளியானது. வாசகர்களால் கொண்டாடப்பட்ட இந்த நாவலைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.

இந்நாவலை.க. நா. சு பசி எனத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறியதொரு நாவல். ஆனால் அழுத்தமான அனுபவத்தைத் தரக்கூடியது.

இளம் எழுத்தாளனின் ஒரு நாள் காலையில் நாவல் துவங்குகிறது எண்ணவோட்டங்களின் வழியே கதை விவரிக்கப்படுகிறது. கையில் காசில்லாத ஒருவன் ஒரு நாளை எப்படி மதிப்பிடுவான் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது. பசி தான் அவன் முன்னே நிற்கும் சவால். அது தன்மானத்தை மண்டியிடச் செய்கிறது. பசியைப் தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் போராடுகிறான். வாடகை கொடுக்க முடியாத நிலையில் வீட்டு உரிமையாளர் அவனை வெளியேற்றுகிறார். பசித்த மனிதனுக்கு உலகம் வேறாகக் காட்சி அளிக்கிறது.

அணிந்திருந்த மேல்கோட்டினைக் கூட அடமானம் வைக்கிறான். ஆனால் அவனே தான் தானம் செய்கிறவனாகவும் இருக்கிறான். பசித்த ஒருவன் தன்னைப் போல இன்னொருவனை அடையாளம் காணுவது எளிது தானே.

அந்த எழுத்தாளனுக்கு வேலை கிடைக்கவில்லை. கதை கட்டுரைகளிலிருந்தும் சொற்ப பணமே கிடைக்கிறது. அந்த நகரின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிகிறான்.

ஒரு எழுத்தாளன் அங்கீகரிக்கப்படுவது எளிதானதில்லை. பத்திரிக்கைகள் அவனை எளிதில் கண்டுகொள்ளாது.. அத்துடன் மூத்த படைப்பாளிகள் எளிதாக அங்கீகரித்துவிட மாட்டார்கள். அந்தப் போராட்டமிக்க வாழ்க்கையைக் கடந்து வராத இளம்படைப்பாளிகள் எவரும் இருக்க மாட்டார்கள்.

பசிக்கான தேடலின் ஊடே அவன் ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறான். அவளால் வசீகரிக்கபடுகிறான். அவளுடன் போதையில் பேசுகிறவன் போல நடித்துப் பேசுகிறான்.

ஒரு நிலையில் பசியின் உச்சத்தில் தன் கைவிரலைச் சாப்பிடலாம் என்று கூட அவனுக்குத் தோன்றுகிறது. சாப்ளின் இயக்கிய கோல்ட் ரஷ் படத்தில் பசித்த ஒருவனுக்கு மற்றவன் உயிருள்ள கோழி போலவே தோன்றுவான். இது போலவே கியூபாவைச் சேர்ந்த விர்ஜிலியோ பினோரா எழுதிய மாமிசம் சிறுகதையில் ஒருவன் தனது உடலை அறுத்துச் சாப்பிட முனைகிறான். பசி ஒரு மனிதனை எந்தக் கீழ்மையிலும் ஈடுபடச் செய்யும் என்பதே நிஜம்.

இக்கதை 1890 ஆம் ஆண்டில் கிறிஸ்டியானியா ( ஒஸ்லோ )நகரில் நடக்கிறது. ,

நாவலை வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியே நினைவிற்கு வருகிறார். அடகுக் கடை, இளம்பெண்ணைச் சந்திப்பது. அவளுக்குத் தன்னிடமுள்ள பணத்தைத் தருவது. பதிப்பாளரிடம் பேசுவது போன்ற காட்சிகளில் தஸ்தாயெவ்ஸ்கியின் சாயல் தெரிகிறது.

க.நா.சு ஒரு நூலை மொழிபெயர்ப்பதற்கு முன்பு அந்நூலைக் கிட்டத்தட்ட ஐம்பது தடவையாவது படித்திருப்பதாக மதகுரு நாவலின் முன்னுரையில் கூறுகிறார்.

க.நா.சு தேர்வு செய்து தமிழில் மொழியாக்கம் செய்துள்ள படைப்பாளிகள் அத்தனை பேரும் மிகச்சிறந்தவர்களே. அவர்களை எப்படி அடையாளம் கண்டு வாசித்தார் என்பது வியப்பாகவே இருக்கிறது.

0Shares
0