இடக்கை (நாவல்) – வாசிப்பனுபவம்
ந. பிரியா சபாபதி, மதுரை

‘இடக்கை’ என்ற இந்த நாலைப் படித்ததும், ‘தன் மனத்தினை அநீதியிடம் ஒப்படைத்தவர்களின் கைகளில் எளியோர் சிக்குண்டால், அவர்களின் நிலைமை சூறாவளியால் வேரோடு பறித்துச்செல்லப்படும் மரத்தின் நிலைமையைப் போன்றாகிவிடுமே!’ என்பதை உணர்ந்தேன்.
இந்நாவல் மன்னராட்சிக் காலத்தைப் பற்றிப் பேசுகிறது. மன்னர்களின் வாழ்வினையும் அவர்கள் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் சிக்குண்ட நிலையையும் கூறிச் செல்கிறது.
“அரசபதவி என்பது ஒரு மரணசிம்மாசனம், அதில் ஏறி அமர்ந்தவன் மெல்ல மெல்ல மனிதத்தன்மைகளை இழந்து போவான். அவனைச் சிம்மாசனம் ஆட்சி செய்யத் துவங்கிவிடும். அரியணையில் அமர்ந்த பலரும், கைது செய்யப்பட்டுச் சிறைப்பட்டு நொந்து புலம்பியோ, சதி செய்தோதான் இறந்து போயிருக்கிறார்கள்.”
எளியோர்களின் நிலையை உணர்த்தும் காட்சியாகவே ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளது. இரவு, பகலானது ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே வந்தாலும் அவை அனைவருக்கும் ஒரே வெளிச்சத்தைத் தருவதில்லைதானே?.
“எல்லா இரவுகளும் ஒன்றுபோலத் தோன்றினாலும் ஒன்றில்லை. ஒவ்வொரு இரவும் தனித்துவமானது. தனிவாசனையும் இயல்பும் கொண்டது. எங்கிருந்து வருகிறது இந்த இருள். காற்றைப்போல அதுவும் ரகசியமாகப் பிறப்பெடுக்கிறதா, ஒவ்வொரு இரவிலும் மனிதர்கள் இறந்து போகிறார்கள். விடியலில் மீண்டும் உயிர்ப்பெற்று விடுகிறார்கள். இந்த நாடகத்தை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்.”
மன்னரின் தாதி உணர்த்திய கருத்தினை மன்னன் தன் இளம் பருவத்தில் உணர இயலவில்லை. அவர் தன்னுடைய 88ஆவது வயதில் உணர்கிறார். காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய வேளையில் உணர்த்துகிறது அல்லது அவர் காலத்திற்குத் தன்னை ஒப்படைக்கும் பொழுது உணர்த்துகிறது.
“எந்தப் பேரரசனாலும் உதிர்ந்த ஒரு பூவை மரத்தில் ஒட்ட வைத்து விட முடியாது. எளிய விஷயங்களைப் புரிந்து கொள்வது சிரமமானது. இயற்கையை எவராலும் வெல்ல முடியாது. மனித சக்தி என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று. இயற்கை அப்படியானதில்லை. அது ஒரு மர்மம். அவிழ்க்க அவிழ்க்க நீண்டு கொண்டே செல்லும் புதிர்.”
இந்தப் புதிரை அவிழ்க்க நினைப்போருக்கு இது, வெவ்வேறு புதிர்களின் தொகுப்பாக மாறி விடுகிறது.
எளிய மக்களின் பிரதிநிதிகளான தூமகேதுவும் அஜ்யாவும் நீதிக்காகக் காத்திருந்தனர். ‘நீதியானது தங்களுக்குக் கிடைக்காது’ எனத் தெரிந்தும் காத்திருக்கும் சாமர்களில் ஒருவர் தூமகேது. அவர் இடக்கைப் பழக்கம் கொண்டவர். இது இயற்கை அவருக்குக் கொடுத்தது அல்ல. செயற்கையாக அவருக்கு உருவாக்கப்பட்டதாகும்.
“சாமர்கள் எல்லோரும் இடக்கைப் பழக்கம் கொண்டிருந்தார்கள். அது தற்செயலில்லை. மாறாக அவர்கள் வலதுகையைப் பயன்படுத்தக்கூடாது எனத் தண்டிக்கப்பட்டிருந்தார்கள்”
எதற்காக இடக்கைப் பழக்கத்தினை மேற்கொள்ளவேண்டும் என்ற காரணமும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. அவர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். நீதியின் குரல் அடங்கும் போது அநீதியின் குரல் மேலெழும். தூமேகது வாழ்விலும் அது நடக்கிறது. அவரின் இறுதிக் காலம் வரை அக்குரல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தூமகேது விதியைப் பற்றிச் சிந்திப்பவர் இல்லை. ஆனால், திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் அவர், ‘விதியின் பயன் இது’ என நினைக்கிறார்.
“ஒருவன் விதியை நம்பத் துவங்கிய மறுநிமிசம் பலவீனமானவன் ஆகிவிடுகிறான். பின்பு அவனால் அதிலிருந்து விடுபடவே முடியாது.”
இந்த விதியானது அவரைச் சிறைச்சாலைக்குத் தள்ளுகிறது. அங்கிருந்து அவரைப் பூடகமாக வெளியேற்றுகிறது. ஒவ்வொரு பகுதியாக அவரை அலைக்கழிக்கிறது. துடுப்பை இழந்த படகு என அவர் வாழ்வு மாறிவிடுகிறது. அதனாலேயே அவது அவரை அவர் விரும்பும்வழியில் அவர் விரும்பும் இடத்துக்கு அவரைக் கொண்டு சேர்க்கவில்லை.
சிறைச்சாலையில் நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் அங்குப் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் அடைக்கப்பட்டவர்களின் குரலாகவே எழுகின்றன. ‘தன்னைப் போன்ற எளிய மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?’ என்று மனதிற்குள் புழுங்குகிறார் தூமகேது. அந்தப் புழுங்கலானது அதைக் காது கொடுத்துக் கேட்போரிடம் வருத்தமாக வெளிப்படுகிறது.
“எல்லாத் தேசங்களிலும் எளிய மனிதர்கள்தான் குற்றவாளியாக்கப் படுகிறார்கள். எவருக்கும் நீதி எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. ஒருநாள் தூமகேது சக்ரதாரிடம் கேட்டான்.
“நீதி என்றால் என்ன?”
அவர் சிரித்தபடியே சொன்னார், “அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி”.
“என்னைப் போன்ற ஆட்டுத் தோலைப் பதப்படுத்துபவன் கூடவா அரசிற்கு எதிரானவன்? எனக் கேட்டான் தூமகேது.
“ஒருவன் மீது குற்றம் சுமத்த ஒரு காரணமும் தேவையில்லை. நிரூபணம் செய்யத்தான் சாட்சிகள் வேண்டும். நீயும் நானும் அரசால் குற்றவாளியாக்கப் பட்டிருக்கிறோம். நம்மைப் போல எண்ணிக்கையற்ற மனிதர்கள் உலகெங்கும் குற்றவாளியாக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர்தான் ‘நிரபராதி’ என நிரூபிக்கப்படும் முன்பே இறந்தும் போய்விட்டார்கள். நீதிக்காகக் காத்திருப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் பெருநிகழ்வு. அதில் நாம் சிற்றெறும்புகள்”
அஜ்யா மன்னரின் அன்பினைப் பெறும் பொழுதே தன் வாழ்நாளில் எவ்வாறு முடியும் என்பதைக் கணித்துதான் வைத்திருந்தார். அதன்படியே அவர் வாழ்வில் நடந்தது. அவர் தனது இளம்வயது முதலே பிறரால் துன்புறுத்தப்பட்டே வாழ்ந்தார். அவரின் இறுதிவிநாடியும் அவ்வாறே அமைந்தது.
மண்ணில் ஊர்ந்து செல்லும் எலும்பற்ற எளிய புழு தன் துணையின் இறப்பிற்குக் காரணமானவரை நீதியின் முன் நிறுத்த எண்ணிப் போராடுகிறது. இதுவும் எளியோர்களுக்கு ஒரு குறியீடே!.
“கேட்டவுடன் தானம் தருவதைப் போல நீதியை அளித்துவிட முடியாது. நீத்கி என்பது விசாரித்து அறியப்பட வேண்டிய உண்மை என மறுத்தார் காசிராஜன்.
“காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநீதிக்குச் சமமானதே” என்றது புழு.
‘ புழுவானது கீழ் உலகம் மேல் உலகம் என எல்லா உலகத்தில் உள்ளோரிடமும் தனக்கான நீதி வழங்கப்படவில்லை’ என மன்றாடுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்த பதிலைக் கூறுகின்றனர்.
“நீதி என்பது வலிமை மிக்கவர்களின் நலனாகத்தான் எப்போதும் இருந்து வருகிறது. சாமானியர்கள் அதன் உயிர்ப்பலிகள்தானா. எனக்கான நீதி மறுக்கப்படும்போது நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை.”
மன்னர் பிஷாடன் வளர்க்கும் குரங்கானது அவரின் பிம்பமே ஆகும். தன்னைத்தானே கட்டுப்படுத்த தெரியாத மனக்குழப்பம் உடையவராகக் காணப்படுகிறார். கொடூரத்தனம் நிறைந்து வழிகிறது. மனக்குழப்பம் உடையவர்கள் பிறரின் கைப்பாவைகளாக எளிதில் மாறிவிடுவார்கள். இம்மன்னனும் அதே போன்றுதான்.
தன்னை உணர்ந்து, ‘தான் யார்?’ என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை அவர்களின் இறுதி முடிவினை அவர்களாகவே தேடிக் கொள்பவர்கள் ஆவர். கொடூரத்தின் மொத்த வடிவம் கொண்டவராகக் காணப்படுகிறார் மன்னர் பிஷாடன்.
“ஆத்திரத்துடன் பிஷாடன் படுக்கையை விட்டு எழுந்தபோது திடீரென யாரோ அவன் மீது பாய்ந்து அமுக்கினார்கள். அடுத்தச் சில நிமிடங்களில் அவன் வாயைப் பொத்திக் கைகால்களின் கட்டி கம்பளம் ஒன்றில் கட்டி தூக்கிக் கொண்டு ஓடினார்கள். காவலர்களில் ஒருவன் தூக்கக் கலக்கத்தில் யாரோ வெளியேறிப் போவதைக் கண்டான்; ஆனால், குரல் எழுப்பவில்லை.”
காவலாளியின் குரல் என்றோ ஒடுக்கப்பட்டிருக்கும். அதனால்தான் அவர் அன்று குரல் எழுப்ப விரும்பவில்லை போலும். இந்நாவலானது நீதியின் ஆழ்மனத்தில் புதைந்த சொற்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
••