லிவோச்சாவின் குற்றமனது.

தஸ்தயேவ்ஸ்கியின் மனதால் பார்க்கப்படும் லிவோச்சாவின் காதல்

த.அரவிந்தன்

`மண்டியிடுங்கள் தந்தையே’ படித்து முடித்தேன். இது ரஷ்ய நிலத்தின், டால்ஸ்டாய் நிலத்தின் நாவல். அதற்கேற்ப உறைபனியின் குளுமையைத் தாங்கி இருக்கிறது. காலமும் அதில் அமைதியாக உறைந்து கிடக்கிறது.

எல்லோரையும் போல ரஷ்ய நிலத்தின் பனியை எப்படிக் கொண்டு வரப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நாவலைப் படிக்கத் தொடங்கிய பிறகு ஒரு நிலத்தில் பெய்கிற மழையைப்போலத்தான் பனியும், அதைக் கையாளுவதற்குச் சிரமம் இருக்காது என்பதைப்போலத் தோன்றியது. அதே நேரம் நிலம் என்பது மனம் தொடர்புடையதும், அதை எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து, அதையும் உறைபனிக்கான காலணியை அணிந்ததுபோல நடந்து கடப்பதைப் பார்க்க முடிந்தது.

ரஷ்ய நிலத்தின் மனதை அறிய டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, துர்க்கனேவ், செக்காவ், கார்க்கி, ஐத்மாத்வ், குப்ரின் உள்படப் பலரின் எழுத்துகள் மண்ணின் ஈரத்தோடு கிடைக்கின்றன என்றாலும், இந்த நாவலில் டால்ஸ்டாய், அவர் பண்ணையில் வேலை செய்யும் பெண்ணும் அவரின் இளம் வயது காதலியுமான அக்ஸின்யா, இருவருக்கும் பிறந்த மகன் திமோஃபியா, மனைவி சோபியா ஆகியோரை வைத்துத் தாங்கள் ஆடியுள்ள பரமபத விளையாட்டுக்கான மனதை அறிவதற்கு டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் நெஹ்லூதவ், கத்யூஷாவின் மனம் ஓரளவு சற்று நெருங்கிய வண்ணம் குழைக்க உதவியிருக்கலாம் என்றாலும், அவ்வளவு எளிதில் எழுதிவிட முடியாது என்பதையும், அதிக உழைப்பைக் கோரியிருப்பதையும், நெடும் பயணத்துக்குப் பிறகு ஒரு இடத்தை அடைந்திருப்பதையும் நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் உணர முடிகிறது.

டால்ஸ்டாயின் நிரந்தரக் கொண்டாட்டமாக இருப்பது எழுத்துகள்தாம் என்று தாங்கள் குறிப்பிடுவதுபோல, தங்களுக்கும் எழுத்தே நிரந்தரக் கொண்டாட்டமாக இருப்பதன் வழியேதான் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

ரஷ்ய ஜிப்சி பெண்கள் அலங்கார மணிகளுடன் இடையணி அணிவது, டால்ஸ்டாய்ச் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு முறை காபி குடிப்பது, யஸ்னயா போல்யானா பண்ணையில் வாயிலில் இருந்த இரண்டு காவற் கோபுரங்கள் என்று தொலைநோக்கி வழியே கோள்களை ஆராய்ச்சி செய்பவர்களைப் போல ஒவ்வொன்றாகத் தேடித்தேடி அவற்றைத் திணிப்பு இல்லாமல் உயிர் கொடுத்திருப்பது வியக்க வைக்கிறது.

`ஒரு மனிதன் எந்த வயதிலும் தான் விரும்பியபடி நடந்து கொள்ள முடியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட முடியாது. இந்த வாழ்க்கை போலித்தனமானது.’ – இந்த வரிகள்தாம் நாவலின் மைய அம்சமாக இருக்கிறது. இது 70 வயதாகும் டால்ஸ்டாயின் போலித்தனமான வாழ்க்கை மட்டுமா? எல்லோரின் வாழ்க்கையுமே ஏதோவொரு போலித்தனத்தின் அம்சமாகவும் இன்னும் சொல்லப் போனால் வாழ்க்கை என்பதுமே ஏதோ ஒன்றால் கட்டமைக்கப்பட்ட போலித்தனத்தின் அம்சமாகத்தான் இருக்கிறது. அதில், டால்ஸ்டாய் மட்டும் விதிவிலக்காக இருந்து எப்படித் தப்பிக்க முடியும்?

ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தாங்கள் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டீர்கள். டால்ஸ்டாயின் தலைக்குப் பின்னால் இருந்த ஒளியை எடுத்துவிட்டேன் என்றீர்கள். அப்படி ஓர் ஒளியை டால்ஸ்டாய் தன் தலைக்குப் பின்னால் ஒளிரச் செய்து கொள்ளவில்லை. அது எல்லோராலும் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பிதம். ஒரு போலித்தனம்.

ஆனால், இறந்து புதைமேட்டுக்குப் போகும் வரை டால்ஸ்டாயின் மனதை அறிந்தவளாகவும், அவரின் காதலைப் புரிந்தவளாகவும் அக்ஸின்யா இருக்கிறாள். அவளையும், மகனான திமோஃபியாவையும் அமைதியாக ஏற்றுக்கொள்பவராக டால்ஸ்டாயும் இருக்கிறார். அப்படியெனில், இங்குக் கட்டமைக்கப்பட்ட போலித்தனமான வாழ்க்கை நெறிமுறைகள்தாம் அவர்களின் வாழ்க்கையோடு விளையாடிப் பார்க்கிறது. அப்படியுமே கூட, அந்தப் போலித்தனத்தையும் இறுதியாக டால்ஸ்டாய் உதற முற்படுகிறார். அக்ஸின்யாவின் புதைமேட்டில் மஞ்சள், சிவப்புப் பூக்களை வைத்துவிட்டு, மண்ணை வருடுவதைப் போல அவளை வருடுகிறார். அப்போது பனி விலகுவதுபோல எல்லாப் போலித்தனங்களும் விலகுகிறது. இந்தக் கட்டத்தில் உள்ளன்போடு நீங்களும் டால்ஸ்டாயின் தலைக்குப் பின்னால் ஓர் ஒளியை ஏற்றி வைத்துவிடுகிறீர்கள். அது முன்பைவிடவும் அதிகமாகவே ஒளிரச் செய்கிறது.

விழாவில் தஸ்தயேவ்ஸ்கியிடம் இருந்து மெல்ல நகர்ந்து டால்ஸ்டாயின் பக்கம் வந்துவிட்டீர்கள் என்றீர்கள். இந்த நாவல் டால்ஸ்டாய் எனும் லிவோச்சாவின் குற்ற மனதிற்குள் நுழையப் பார்க்கிறது. அதுவும் ஒரு வகையில் குற்றத்தின் மனதை ஆராய முற்படும், குற்ற உணர்ச்சியால் அலையும் மனதின் பக்கம் நிற்கும் தஸ்தயேவ்ஸ்கியின் மனம்தான் என்பதை அறிவோம். தஸ்தயேவ்ஸ்கியின் மனதால் பார்க்கும் இந்த மனமும், லிவோச்சாவின் இந்தக் காதலும் எல்லோராலும் ஏற்கப்படும்.

••••

0Shares
0