வானம் காட்டும் உண்மை.

அ.திருவாசகம், அண்ணா நகர், மதுரை.

••

சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இந்திய வானம்’’ என்னும் புத்தகம் வாசித்தேன்.

எஸ். ராமகிருஷ்ணன்  தொடர்ந்து இந்தியாவெங்கும் பயணம் செய்து, அந்தப் பயணங்களின் வழியாக மக்ளின்  வாழ்க்கையின் இனிமைகளையும், அவர்களுக்குள்  உள்ளோடும் அவலங்களின் சாரத்தைப் பற்றியும் பதிவு செய்துள்ளார். அவரது  இந்திய வானம் என்ற நூல் பயணங்களைப் பற்றிச் சொல்லக்கூடியது.

நூலைப் படிக்கும் போது, இன்னும் மாறாமல் மூலைமுடுக்குகளில் சிக்கியிருக்கும்  மாறா மனிதர்களின்  பண்பாடு, மொழி, கலாச்சாரம், வாழ்வியலை தேடிச் செல்ல மனம் அலைகின்றது.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியையும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, ஒரு வரலாற்று ஆசிரியராய், தொல் பொருள் ஆய்வாளராய், பயணியாய், அறிஞனாய், அந்தப் பகுதியில் வாழும் மக்களில் ஒருவராய் மாறி ஆழமான செய்திகளுடன் ஒவ்வொரு கட்டுரையையும் படைத்துள்ளார்.மேற்படி இடங்களை நாம் சுற்றுலா சென்ற போது கண்டிருக்கலாம். ஆனால், ஒரு பெரும் படைப்பாளியின் உலகுக்குள் சென்று அவரது பார்வையில் மேற்படி இடங்களை காணும் போது ஒரு தனி உலகையே காண்கிறோம்.

“புத்தன் இல்லத இடம் இல்லை” என்ற கட்டுரை புத்தரைப் பற்றிய அருமையான பதிவு.

கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நூற்றாண்டாகும். இந்த நூற்றாண்டில் தான் இந்தியாவில் புத்த சமயத்தை  தோற்றுவித்த புத்தர்  தோன்றினார். கி.மு. ஆறாம் நூற்றாண்டை  பொருத்தவரை இந்தியாவின் பெரும் சிந்தனை காலம் என்று குறிப்பிடலாம். ஒரு புதிய அறிவுப் புரட்சியையும் புத்துயிர் எழுச்சியையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியவர் புத்தர். இக் கட்டுரையை வாசிக்கும் போதே மனதுக்குள் மழை பொழிவது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.

நமது மனம்தான் நம்மை வழிநடத்தும் கருவி. அதை ஆராயவும், சரிசெய்யவும், தூய்மைப்படுத்தவும், நல்ல சிந்தனைகளை, செயல்களை, நல்ல அறத்தைக் கைக்கொள்ளவும் புத்தரே நமக்கான ஞான குரு என  குறிப்பிட்டுள்ளார்.

புத்தர், ராஜகிரியில் இருந்து நாளந்தா சென்று கொண்டிருந்த போது,  ஒருவர் புத்தரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, பேசத் தொடங்கினார். அதைக் கேட்ட புத்தருடன் வந்த  சீடர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆனால், புத்தரிடம் எந்தச்  சலனமும் இல்லை.

‘யுத்தக் களத்தில் செல்லும் யானை, எல்லா திசைகளில் இருந்து வரும் அம்புகளைப் பொறுத்துக்கொண்டு, தன் இலக்கை நோக்கி நடந்துபோவதுபோலத்தான் நான் செயல்படுவேன். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் எனக்கு ஒன்றே. இந்த இரு சூழ்நிலைகளிலும் சமநிலையுடன் இருப்பதே உண்மையான தம்மம் ஆகும்’ என புத்தர் விளக்கினார் என்ற வரிகள் என்னை நெகிழச் செய்தது.

எட்கர் கீரத் என்கிற இஸ்ரேலிய எழுத்தாளரின் `பன்றியை உடைத்தல்’ என்ற  சிறுகதையை குறிப்பிட்டு  ஒரு சிறுவனின் அன்பு உலகத்தை நம் இதயத்தில் மலரச் செய்கிறார்.

பார்ட் சிம்சன் பொம்மை ஒன்றை வாங்குவதற்காக, பீங்கான் உண்டியலில் காசு சேர்த்து வைக்கிறான் ஒரு சிறுவன். அந்த உண்டியல் ஒரு பன்றி வடிவில் உள்ளது. அதனுள் தனக்குக் கிடைக்கும் காசுகளை எல்லாம் சிறுவன் சேகரித்துவருகிறான். ஒவ்வொரு நாளும் அந்த உண்டியலை கையில் வைத்துக்கொண்டு பன்றியோடு பேசுவான். தனது ஆசையை அதனிடம் விவரிப்பான். இப்படியாக அந்தச் சிறுவன் பன்றியை மிகவும் நேசித்தான்.

ஒருநாள் உண்டியல் நிறைந்துவிடுகிறது. அவன் ஆசைப்பட்டதுபோல கடைக்குப் போய் பொம்மை வாங்கிவிடலாம் என, உண்டியலை உடைக்க சுத்தியலை எடுக்கிறார் பையனின் தந்தை. ஆசை ஆசையாக வைத்துள்ள பன்றியை உடைத்துத்தான் நாணயங்களை வெளியே எடுக்க வேண்டும் என்பது பையனுக்கு வருத்தம் அளிக்கிறது

அதைத் தடுப்பதற்காக `நாளைக்கு உடைக்கலாம்…’ என அப்பாவைச் சமாதானம் செய்கிறான். அன்று இரவு எல்லோரும் உறங்கிய பிறகு, அந்தப் பன்றியை தன் கையில் எடுத்துக்கொண்டு போய் ஒரு வயலில் வைத்து, `வயலுக்குள் ஓடி ஒளிந்துகொண்டுவிடு…’ எனச் சொல்லிவிட்டு ஆசையோடு அதன் மூக்கைத் தடவுகிறான்.

அதைத் தவிர, அந்தப் பன்றியைக் காப்பாற்ற அவனுக்கு வேறு வழி தெரியவில்லை என, கதை முடிகிறது.

வெறும் பீங்கான் பன்றிதான் என்றபோதும், அதை நேசிக்கிற சிறுவன், பன்றி உடைபடாமல் காப்பாற்றப்பட வேண்டும்; அதனால் தனது பொம்மை வாங்கும் ஆசை பறிபோனால்கூடப் பரவாயில்லை என நினைக்கிறான். இதுதான் சிறார்களின் மனது.

பொய்யின் அலங்காரம் என்ற கட்டுரையில்  ஆக்ராவில் உள்ள பேரரசர் அக்பரின் சமாதிக்கு எஸ். ராமகிருஷ்ணன் சென்றுபார்த்த போது  அங்கு அவரின் மனதில்   தோன்றியதை எழுதுகிறார்.

அக்பர் தன் வாழ்நாளில் எவ்வளவு புகழுரைகளை, பாராட்டுகளைக் கேட்டிருப்பார். அவை வெறும் அலங்கரிக்கப்பட்ட பொய்கள் என அறிந்திருப்பாரா?

இன்று அந்த நினைவிடத்தில், அக்பர் என்பது ஒரு பெயர் மட்டுமே. யாரும் அவரது புகழைப் பாடவில்லை. அவரது உருவம் எப்படி இருக்கும் என்றுகூட யாருக்கும் தெரியாது. மாமன்னரே ஆனாலும் உண்மை இதுதான் என, காலம் உணரச் செய்திருக்கிறது

‘அதிகாரம் கைமாறும்; ஆட்சி மாறும்; பணமும் செல்வமும் வந்து  போகும். ஆனால், நிலையான அறம், நீதி, உண்மை ஆகியவை மட்டுமே நிலைத்து நிற்கும்’ என குறிப்பிடுகிறார்.

‘இந்திய வானம்’ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் தமிழுக்கு தரப்பட்ட மற்றுமொரு கொடை.

••

நூலை வாங்குவதற்கு
இந்திய வானம்
விலை 240.00
தேசாந்திரி பதிப்பகம்
https://www.desanthiri.com
D1, Gangai apartments, 110,
Sathya garden, Saligramam,
Chennai – 600 093
(044) 236 44947
(+91) 9600034659
0Shares
0