குறுங்கதை 109 பொம்மைக் கல்யாணம்

மொட்டை மாடியில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து பொம்மைக் கல்யாணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளையாக இருந்த பொம்மையை ஒரு சிறுவன் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். அது ஒரு சூப்பர்மேன் பொம்மை. மணமகளாக மரப்பாச்சியைக் கொண்டு வந்தவள் வேறு ஒரு சிறுமி.

மணமகளை அலங்கரிக்கிறோம் என இரண்டு சிறுமிகள் பிளாஸ்டிக் பூக்களை அதன் தலையில் சொருகினார்கள். மணமகனுக்குக் குதிரை வேண்டும் என ஒரு சிறுவன் தேடி அலைந்து தெருமுனையிலிருந்த ஒரு சிறுவன் வைத்திருந்த பிளாஸ்டிக் குதிரை ஒன்றை வாங்கி வந்திருந்தான். அதில் சூப்பர்மேன் பொம்மையை உட்கார வைக்க முயன்று, முடியாமல் கயிறு போட்டு கட்டிவிட்டார்கள்.

இது போலவே மரப்பாச்சி பொம்மைக்கு முக்காடு போட்டுவிட வேண்டும் என ஒரு சிறுமி பிடிவாதமாக இருந்தாள்.

மணமகனைக் குதிரையில் அழைத்து வரும்போது பன்னீர் தெளிக்க வேண்டும் என்றான் ஒரு சிறுவன். அதைக் கேட்ட வேறு ஒரு சிறுவன் வானவேடிக்கை போட வேண்டுமென்றான்.

அதெல்லாம் கிடையாது. இது சிம்பிள் கல்யாணம் என மறுத்தாள் மரப்பாச்சி வைத்திருந்த சிறுமி.

சூப்பர்மேனோ ஒரு மரப்பாச்சியைத் திருமணம் செய்து கொள்ளப்போவதைப் பற்றி சலனமின்றி வெறித்த பார்வையுடன் இருந்தான்.

மணமக்களை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வந்த போது ஒரு சிறுவன் வாயாலே நாதஸ்வரம் வாசித்தான். மணமகள் வெட்கப்பட வேண்டும் என்று ஒரு சிறுமி சப்தமாக சொன்னாள். மரப்பாச்சிக்கு வெட்கப்படத் தெரியவில்லை என ஒரு சிறுவன் கேலி செய்தான். அவள் ஒரு சிட்டிகேர்ள் என்றாள் இன்னொரு சிறுமி.

சூப்பர்மேனுக்கு கல்யாண மோதிரம் போட வேண்டும் என ஒரு சிறுவன் வற்புறுத்தினான். நூலில் ஒரு மோதிரம்  செய்து அவன் விரலில் மாட்டி விட்டார் மரப்பாச்சியின் தந்தை போல நடித்த சிறுவன்.

இரண்டு பொம்மைகளையும் ஒரு அட்டைபெட்டியில் சாய்ந்து நிற்க வைத்தார்கள்.

பேப்பர் கேமிராவில் ஒரு சிறுவன் அவர்களை புகைப்படம் பிடித்தான். . திடீரென வயதில் மூத்த ஒரு சிறுவன், சூப்பர்மேன் ஒரு அமெரிக்காகாரன். அவன் நம்ம ஊர் மரப்பாச்சியை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது எனச் சண்டையிட்டான்.

எதிர்ப்பு தெரிவித்தவனுக்கு இரண்டு சாக்லேட் கொடுத்து வாயை அடைத்தார்கள்.

சூப்பர்மேன் சார்பில் ஒரு சிறுவன் சிவப்புக் கயிறு ஒன்றை தாலியாக மரப்பாச்சி கழுத்தில் கட்டினான். உடனே சோப்பு நுரையை ஊதி பறக்கவிட்டான் ஒரு சிறுவன். ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு வாங்கி வைத்திருந்த சாக்லெட்டுகளை கல்யாண விருந்தாக பரிமாறிக் கொண்டார்கள்.

சூப்பர்மேன் மரப்பாச்சி தம்பதியினர் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்றாள் ஒரு சிறுமி.

அதுவும் நடந்தேறியது.

கல்யாணம் முடிந்த உற்சாகத்தில் சிறுவர் சிறுமிகள் ஆடிப்பாட ஆரம்பித்தார்கள்.

சூப்பர்மேன் பொம்மையின் சொந்தக்காரப் பையன் இந்தக் கல்யாணம் பிடிக்கலை. என் பொம்மையைத் திரும்பக் கொடு என பிடுங்கிக் கொண்டான். உடனே மரப்பாச்சி வைத்திருந்த சிறுமி நாங்க டைவேர்ஸ் பண்ணிகிடுறோம் என்றாள்.

சிறுவர்கள் கூச்சலிட்டார்கள். சூப்பர்மேன் பொம்மையை பிடுங்கி வீசினான் ஒருவன். சிறுவர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டு சண்டையிட்டார்கள்.

யாரோ ஒரு சிறுமி அழும் சப்தம் கேட்டு மாடிக்கு வந்த அவளது அம்மா எல்லோரையும் திட்டி துரத்திவிட்டாள்.

இத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பொம்மை கல்யாணம் என்றாலும் எளிமையாக நடப்பதில்லை என்று புரிந்தது. அதைவிடவும் பெரியவர்களிடம் இருந்து எவ்வளவு மோசமான விஷயங்களை சிறுவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள் என்று கவலையாகவும் இருந்தது

••

0Shares
0