இதற்கென எளிய விஷயம் தானே என்று முதலில் தோன்றியதால் விசாரித்து ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். அதன்பிறகு தான் அதன் உண்மையான நிலவரம் புரியத் துவங்கியது. சென்னையில் குளிப்பது, உறங்குவது போன்றவை மிக ஆடம்பரமான, கூடுதல் செலவாகக்கூடிய விஷயங்கள் என்று. சென்னைக்கு அதிகாலையில் அவர்கள் வந்து சேரக்கூடும். அதற்குள் இடம் தேட வேண்டும் என்பதால் வழியில் எங்கே குளிப்பதற்கு இடமிருக்கிறது என்று அறிந்த ஒவ்வொருவராக விசாரிக்க துவங்கினேன். செங்கல்பட்டு ஏரியில் குளிக்கலாம். ஆனால் அதற்கான வழிகள் இல்லை. மற்றொன்று தண்ணீர் மிக மோசமாக உள்ளது என்று ஒரு நண்பர் தேடலைத் துவங்கி வைத்தார். மற்றவர் வழியில் தான் பாலாறு உள்ளது. ஆனால் பாலாற்றில் தண்ணீர் இல்லை. அருகாமை கிராமம் ஏதாவது ஒன்றில் போய் குளிக்கப்பதற்கு வழியிருக்கிறதா என்று தேடிப் பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னார். வழியில் ஏதாவது குளம், கிணறு ,ஏரி இருக்கிறதா என்று தேடலாம் என்று சுற்றிச் சுற்றி வந்தேன். கிராமங்களில் கூட இயற்கையான நீர்நிலைகளில் குளிப்பவர்கள் இப்போது எவருமில்லை. அத்தோடு இயற்கையான நீர்நிலைகள் என்பதேயில்லை. இருக்கின்ற சில தாமரை குளங்களும் அருகில் செல்லமுடியாதபடிய துர்நாற்றம் நிரம்பி காணப்படுகின்றது. பெரும்பான்மை நீர்நிலைகள் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகி விட்டன. மீதமிருப்பவை கம்பெனிகளால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டன. இதற்குள் ரயில் நிலையங்களில் நிச்சயம் குளிப்பதற்கான அறைகள் இருக்க கூடும். எக்மோர் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் விசாரியுங்கள் என்று சொன்னார்கள். அதையும் கேட்டுவிடலாம் தானே என்று இரண்டு ரயில் நிலையங்களிலும் சென்று விசாரித்தேன். பயணிகள் தங்கும் இடத்தில் குளியல் அறைகள் உள்ளன. ஆனால் அது அங்கே தங்குகின்றவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் வெளியிடங்களில் தான் செல்லவேண்டும். பொதுபயணிகளுக்காக தனியே குளியல் அறை என்ற ஒன்று கிடையாது. அருகில் உள்ள தனியார் தங்குமிடங்களில் விசாரியுங்கள் என்றதும் எக்மோரின் சந்து சந்தாக தேடி அலைந்தேன் ஒவ்வொரு இடத்திலும் முக்கியமான பிரச்சனை இதை எப்படி லாட்ஜ்காரர்களுக்கு புரிய வைப்பது என்பது. அவர்கள் காலையில் பல்விளக்கி கழிப்பறை மற்றும் குளியல் முடித்து கருத்தரங்கில் கலந்து கொண்டுவிடுவார்கள். இரவே ஊர் திரும்பிவிடுவார்கள். ஆகவே காலை குளியல் தான் அவர்களின் முக்கிய பிரச்சனை என்பதை எந்த தங்குமிட நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நாள் வாடகை ஆயிரத்து இருநூறு இரண்டு பேர் தங்கலாம் என்பதில் துவங்கி ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு நுற்றிபத்து என்பது வரை விசாரித்துவிட்டேன். எங்கும் குளிப்பதற்கு மட்டும் அனுமதியில்லை. முடிவில் காந்தி இர்வின் சாலை அருகில் உள்ள ஒரு தங்குமிட உரிமையாளர் நாற்பது பேர் என்றால் அதற்கு எப்படியும் மூவாயிரம் ஆகும் என்று சொன்னார். குளிப்பதற்கு ஒரு ஆளுக்கு எழுபத்தைந்து ரூபாய் என்பது அநியாயமாக பட்டது. அதுவும் பத்து மணிக்கு மேல் மட்டுமே தன்னால் அனுமதிக்க முடியும் என்ற நிபந்தனை வேறு போட்டார். அது சரிப்படாது என்றபடியே நீச்சல் குளங்கள் எங்காவது இருக்கிறதா என்று விசாரிக்கலாம் என்ற புது யோசனை உருவானது. அதன்படியே கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்திற்கு சென்றால் அங்கே தண்ணீர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு காலைநேரங்களில் அதை பயணிகள் பயன்படுத்த முடியாது என்று மறுத்தார்கள். அன்று நாள் முழுவதும் துர்ந்து போன நீச்சல்குளங்கள், பழைய ஏரிகள்,நீர்நிலைகள் என்று அலைந்து திரிந்து வீடு திரும்பிய போது குளிப்பதற்கான இடங்கள் என்று தனியே எதுவுமே இந்த மாநகரில் கிடையாது என்பது துல்லியமாக புரிந்தது. அத்தோடு நகரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் குளிப்பதற்காக பல போராட்டங்களை மேற்கொள்கிறார்கள் என்பதும் புரிந்தது. ஒரு நாளைக்கு சென்னைக்கு லட்சணக்கில் ஆட்கள் வெளியூர்களில் இருந்து வந்து இறங்குகிறார்கள். இவர்களுக்காக கழிப்பறை மற்றும் குளியல் அறை வசதிகள் செய்து தருவது என்பது எளியாமையானதில்லை. ஆனால் அது தவிரக்கபட முடியாதது. சில இடங்களில் மாநகராட்சியின் கட்டண குளியல் அறைகள் இருக்கின்றன. ஆனால் அது பராமரிக்கபடாமலும் மிக அசுத்தமான தண்ணீரும் கொண்டே காணப்படுகின்றது. நாலைந்து வருசத்தின் முன்பு ஒரு முறை குளிப்பதற்கான இடமில்லாமல் போய் நானும் கோணங்கி அம்பத்தூரில் உள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒன்றிற்கு சென்று கதவை தட்டினோம். யாரும் இல்லை. வேறு வழியில்லை என்று பின்வாசல் வழியாக தாவி உள்ளே குதித்து சென்று குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டிருந்த போது இரண்டு பேர் உள்ளே வந்தார்கள். எங்களை முறைத்தபடியே அவசரமாக குளியல் அறைக்கு நடந்தார்கள். மாட்டிக் கொண்டோம் என்று பயந்தோம். ஒரு நபர் கோபத்துடன் பச்சை வாளியில் இருந்த தண்ணியவா குளிச்சீங்க என்று கேட்டார். ஆமாம் என்றதும் என்ன தோழர் இப்படி பண்ணியிருக்கீங்க. அது நல்ல தண்ணீ. ஒரு குடம் ரெண்டு ருபா குடுத்து வாங்கி வச்சிருந்தேன். இந்த தண்ணி அரிக்கும் என்று சொன்னார். அது உண்மையும் கூட. ஒரு வீட்டில் குளிக்கும் அளிக்கும் அளவு நெருக்கம் இருக்கிறது என்பது தான் உறவின் அடையாளம் . ஒவ்வொரு நாளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்கின்றவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் மலம்கழித்து குளித்து விட்டு செல்வதற்கு சுகாதாரமான இடங்கேள இல்லை. சென்னையில் இருந்து மதுரை வரையான நெடுஞ்சாலையில் நம்பி சாப்பிடக்கூடிய உணவகங்கள் என்று இரண்டு மட்டுமே உள்ளது. அதிலும் அவர்கள் தரும் உணவை தவிர வேறு கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் குளியல் அறைகளை எங்கே போய் தேடுவது. குறைந்த பட்சம் ஆரோக்கியமான தேநீர் கடைகள், பழரசக் கடைகள் கூட வழியில் கிடையாது. வயதானவர்கள் காரில் பயணம் செய்தால் அவர்கள் இயற்கையான இடங்களில் மூத்திரம் போவதை தவிர வேறு வழிகள் இல்லை அரபு நாடுகளில் பொதுக்குளியல் அறைகள் மிகவும் பிரபலமானவை. அவை குறைந்த கட்டணத்தில் குளியலுக்கான வசதி செய்து தரப்பட்டவை என்று வாசித்ததும் திரைப்படங்களில் பார்த்திருந்ததும் மனதில் ஒடிக் கொண்டேயிருந்தது. பின்னிரவில் நண்பன் கடலில் போய் குளிக்க சொல் வேறு வழியில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அது தான் சாத்தியம் போலும் என்பது கசப்பாக இருந்தது. நீண்ட போராட்டத்தின் பிறகு கிழக்கு கடற்கரை பகுதியின் புறநகர் ஒன்றில் குடியிருக்கும் ஒரு நண்பர் தன் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு என்ஜிஒ அலுவலகம் ஒன்றில் கேட்டிருப்பதாகவும் அவர்கள் இருபது பேருக்கு என்றால் சம்மதம் என்கிறார்கள் என்றார். அது தான் நடைமுறை சாத்தியம் என்பது போல தெரிந்த ஒவ்வொரு இடத்திலும் நாலைந்து பேராக அனுப்பிவிடலாம் என்று முடிவு செய்தபடியே உறங்கிப் போனேன். விடிகாலையில் அவர்கள் அழைக்க கூடும் என்பதற்காக காத்துக் கொண்டேயிருந்தேன். மணி ஆறு கடந்தும் அவர்கள் அழைக்கவேயில்லை. ஒருவேளை அவர்களும் என்னைப் போல வழியில் ஏதாவது நீர்நிலை கண்டதும் குளிப்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்தபடியே போன் செய்தேன். போன் கிடைக்கவில்லை. என்ன நகரமிது என்று எரிச்சலாக வந்தது. அதே நேரம் ஒவ்வொரு கட்சிக்கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து இறங்குகிறார்களே அவர்களும் இப்படி அலைந்து தான் திரிந்திருப்பார்களா என்ற யோசனையும் வந்தது. சென்னைவாசிகளும் ஒவ்வொரு நாளும் குளிப்பதற்கு நிறைய போராட்டங்களையே மேற்கொள்கிறார்கள். மின்சார ரயிலில் குளிப்பவர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். சிலர் தெரிந்த அலுவலகம் அல்லது வீடுகளுக்கு சென்று குளித்து வருகிறார்கள் ஆண்களாவது கிடைத்த இடத்தில் கிடைத்த நேரத்தில் குளித்துவிடுகிறார்கள். இது போன்று கருத்தரங்கம் மருத்துவ மனை என்று வரக்கூடிய பெண்கள் பாடு மிக அவஸ்தையானது. நெடுஞ்சாலையை ஆறுவழித்தடம் கொண்டதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு நெடுஞ்சாலையோரமாக சுகாதாரமான குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகள் கொண்ட தற்காலிக தங்குமிடங்களை உருவாக்கலாம். இதை அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ செய்யலாம். வெளிநாடுகளில் காரில் பயணம் செய்யும் போது சாலையோர உணவங்களில் உள்ள வசதிகளை காணும் போது இதில் ஏன் பத்தில் ஒரு பங்கு கூட நம்மிடம் இல்லை என்ற ஏக்கமே மிஞ்சுகிறது. மாநகருக்குள் தண்ணீர்பிரச்சனை வெளியே தெரியாத புயல் போல சுழன்று கொண்டேதானிருக்கிறது. ஒரு நாள் இதற்குள் போய்வருவதற்குள்ளே எரிச்சலும் ஆத்திரமும் பொங்குகின்றது. சிங்கார சென்னைவாசிகள் எப்படியோ ஒவ்வொரு நாளும் இதைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நம்மவர்கள் மகாபொறுமைசாலிகள் .
சென்ற வாரத்தில் ஒரு நாள் எனக்கு விசித்திரமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. சென்னையில் நடைபெற உள்ள மாற்று மருத்துவக்கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சாத்தூரிலிருந்து நாற்பது பேர் ஒரு வேனில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காலையில் குளிப்பதற்கு மட்டும் ஏதாவது ஒரு இடமிருக்கிறதா அல்லது வழியில் எங்காவது குளிக்கலாம் என்றால் எங்கே குளிப்பது என்று எனது அண்ணன் தொலைபேசியில் கேட்டார்.
குளிப்பதற்காக நாற்பது பேர் ஒரு கிராமத்திற்கு போய் தேடுவது என்பது எவ்வளவு அபத்தமானது. அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் அருகில் உள்ள கம்பெனிகளுக்கு தண்ணீர் தரப்படுகிறது. அங்கே குளிப்பதற்கு வசதியிருக்கிறதா என்று பாருங்கள் என்று இன்னொரு நண்பர் சொன்னவுடன் ஒரு மணி நேரம் பயணம் செய்து அங்கே போன போது அங்கே கிணறுகளின் தண்ணீரை கம்பெனிகள் அப்படியே குத்தகைக்கு எடுத்து தங்களது உபயோகத்திற்கு பயன்படுத்துவதையும் அதில் ஒரு குடம் தண்ணீர் கேட்டால் கூட தரமாட்டார்கள் என்பதும் புரியத் துவங்கியது. தண்ணீர் வசதியுள்ள கிராமங்களின் முக்கியமான தொழில் கிணற்றை குத்தகைக்கு விடுவது என்பது விசித்திரமான உண்மையாக இருந்தது.
மறைமலைநகர் அருகில் பொதுகுளியல் அறையொன்று இருக்கிறது என்று இன்னொரு நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். சரி அதையும் பார்த்துவிடலாம் என்று சொல்லி அங்கே தேடினேன். விசாரித்த போது அது பொது குளியல் அறையில்லை என்பதோடு பொதுக்கழிப்பறை என்றும் அதுவும் உபயோகபடுத்தபடாத மிக மோசமான நிலையில் இருப்பதை அறிந்தேன்.
அவர் சொல்லும் வரை உடலில் அரிப்பில்லை. ஆனால் அன்று முழுவதும் அந்த பயம் இருந்து கொண்டேயிருந்தது. என்ன வியப்பு என்றால் நாங்கள் யார் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளவேயில்லை. கதவை திறந்து உள்ளே குளித்து கொண்டு இருக்கின்றவர்கள் என்றால் நிச்சயம் தெரிந்தவர்கள் தான் என்ற நம்பிக்கையொன்று இருப்பதை அன்று உணர்ந்தேன்.
கருத்தரங்கத்திற்காக வருகின்றவர்கள் ஊரில் இருந்து கிளம்பும்வரை என்னால் அவர்களுக்கான குளியல் அறையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது கல்யாணமண்டபங்களில் கேளுங்கள். ஒருவேளை அங்கே கிடைக்க கூடும் என்றார்கள். சரி அதையும் விசாரித்துவிடலாம் என்று ஒவ்வொரு கல்யாண மண்டபமாக போன் செய்து விசாரித்தால் திட்டாத குறையாக பேசி போனை வைத்தார்கள். விடியும் வரை என்ன செய்வது என்ற தோன்றவேயில்லை.
பத்தரை மணிக்கு போன் வந்தது. சாலையில் இரவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திருச்சியை தாண்டி வண்டி நின்று போய்விட்டது. இப்போது தான் தாம்பரம் வந்திருக்கிறோம் என்று. இனி எங்கே போய் குளிப்பது சாப்பிடுவது. வேறு வழியில்லாமல் மருத்துவகருத்தரங்கிற்கு நேரடியாக கலந்து கொண்டு ஆங்காங்கே கிடைத்ததை சாப்பிட்டு கொண்டு அன்றிரவே ஊர் திரும்பி போனார்கள்.
**