சிறுகதை எழுத விரும்புகின்றவர்களுக்கு இரண்டு ஆசான்கள் அவசியமானவர்கள். ஒருவர் ஆன்டன் செகாவ், மற்றவர் மாபசான். இந்த இருவரும் சிறுகதை என்ற வடிவத்தை அதன் பல்வேறு உயர்நிலைகளுக்கு கொண்டு சென்றவர்கள். உலகின் தலை சிறந்த கதை சொல்லிகள். காலம்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் எல்லா இசங்களையும் தாண்டி இவர்களது சிறுகதைகள் அசலாக மனித வாழ்வின் பேருண்மைகளை என்றென்றும் வெளிப்படுத்துகின்றன.
சிறுகதை எழுத விரும்புகின்றவன் இந்த ஆசான்களிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட வேண்டும். இவர்களை தொடர்ந்து வாசிப்பதன் வழியே அவர்களின் கதைநுட்பத்தை கற்றுக் கொள்ள இயலும்.
செகாவையும் மாபசானையும் கற்பது மிகுந்த கவனத்துடனும் ஆழ்ந்த அக்கறையுடனும் செயல்பட வேண்டிய ஒன்றாகும். மேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சிக்கல்களையே அதிகம் கதை சொல்வது போன்று தோற்றம் தரும் கதைகள் அதிகம் இவர்களிடம் உண்டு. ஆனால் அது வெறும் தோற்றமயக்கம் மட்டுமே. தினசரி வாழ்வில் அவர்கள் கொள்ளும் குவிமையம் விசேசமானது. சிறு கதைகளின் வழியே அவர்கள் காட்டும் தரிசனங்களும், தெறிப்புகளும், துக்கம் சந்தோஷம். வெறுமை, ஏமாற்றம் போன்ற ஆழ்ந்த உணர்ச்சிவெளிப்பாடுகளும் முக்கியமானவை. இருவரையும் ஆழ்ந்து கற்று தேர்ந்த ஒருவரால் எந்தக் கதையையும் சுலபமாக எழுதிவிட முடியும்
செகாவ் மாபசான் இருவருமே துயரம் பீடித்த பால்ய காலத்தை கொண்டவர்கள். தாயால் வளர்க்கபட்டவர்கள். தந்தை இருவருக்குமே வெறும் மனப்படிமம் மட்டுமே. இருவருமே நாற்பது வயதுகளில் இறந்து போனவர்கள். இருவரும் பதிமூன்று சிறுகதை தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள். மிக ஆச்சரியமாக இருவரது சிறுகதை பாணியும் மிக நெருக்கமானது. கதை களம், சொல்லும் முறை, கதாபாத்திரங்களின் மனவெளிப்பாடு என் யாவிலும் இருவரும் அதிக நெருக்கம் கொண்டவர்கள். இந்த இருவரின் பாதிப்பில்லாத சிறுகதை ஆசிரியர்களே உலகில் இல்லை என்று சொல்லலாம்.
ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு விரிவாக ரஷ்யாவிலும் பிரெஞ்சிலும் நாவல்கள் எழுதப்பட்ட சூழலில் செகாவ் மற்றும் மாபசான் இருவரும் பிரதான சிறுகதை ஆசிரியர்களாக வெளிப்பட்டனர். தங்களது கதை சொல்லலின் முக்கிய வடிவமாக சிறுகதைகளை அடையாளப்படுத்தினார்கள்.
மாபசான் பிரெஞ்சை சேர்ந்தவர். சிறுவயதில் அம்மா தனித்துவாழ விரும்பி அப்பாவை பிரிந்துவிடுகிறார். அம்மா வளர்ப்பில் உருவான மாபாசன் இலக்கியம் இசை என்று தேர்ந்து விளங்கினார். மதக்கல்வி படிக்க அம்மா அனுப்பி வைக்கிறார். அவரது விருப்பமோ இலக்கியத்தின் மீது குவிகிறது.
பிரபல எழுத்தாளரான பிளாபெர்டின் நட்பு கிடைக்கிறது. பிளாபெர்ட் தனது இலக்கிய வாரிசு என்று மாபசானைக் கூடவே வைத்துக் கொள்கிறார். ஒவ்வொரு கதையாக எழுத வைத்து உடனிருந்து பாராட்டி அவரை இலக்கிய அந்தஸ்து பெற செய்கிறார்.
மாபசானின் கதைகள், செகாவின் கதைகள் இரண்டுமே பெண்களின் அகவுலகை பெரிதும் விவரிப்பவை. இருவருமே மனித அவலங்களை பற்றி அதிகம் எழுதியவர்கள்.குறிப்பாக ஒழுக்கம் மதக்கட்டுபாடு, குற்றம் என்று ஒதுக்கபட்ட மனிதர்கள் மீது அதிக அக்கறையுடன் எழுதினார்கள். மாபசான் அவர்களை பற்றி எழுதியதோடு வேசைகள், குடிகாரர்கள், திருடர்களுடன் ஒன்று கலந்து வாழவும் முற்பட்டார்.
இருவரது இலக்கிய அங்கீகாரமும் உடனே கிடைத்துவிட்டது. தன் வாழ்நாளில் மாபாசன் தன் எழுத்தின் மாபெரும் வெற்றியை கண்டு சந்தோஷம் கொண்டார். வெளியான இரண்டு மாதங்களில் முப்பது பதிப்புகள் விற்று தீர்ந்திருக்கின்றன அவரது சிறுகதை புத்தகங்கள். ஆடம்பர விருந்து, மேல்தட்டு வர்க்க பாராட்டுகள் என்று மாபசான் ஒரு இலக்கிய நட்சத்திரம் போல விளங்கினார்.
செகாவை போலவே மாபசானும் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் அவர் ஒரு புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டார். பெண்களின் மீதான காதல் அவரது ஒரே கொண்டாட்டமாக இருந்தது. நிறைய காதலிகள். கையிருப்பு முழுவதும் தீருமட்டும் குடித்து கொண்டாடினார் மாபசான்.
வேசைகளுடன் பழகி பால்வினை நோய் ஏற்படுகிறது. குணமாவதற்காக வைத்தியம் மேற்கொள்கிறார். ஆனால் நோய்கட்டுப்படவில்லை. நோய் வளர்வது அவருக்குள் சுயபயத்தை உருவாக்குகிறது. பால்வினை நோயாளியாக உருசிதைந்து போய்விடுவோமோ என்றபயத்தில் தற்கொலை செய்ய முயற்சித்து மனநல சிகிட்சை மையத்தில் அனுமதிக்கபடுகிறார் மாபாசான். அங்கே சிகிட்சை பலன் இன்றி தனது நாற்பத்தி ரெண்டாவது வயதில் இறந்துவிடுகிறார். நாற்பது வருச வாழ்விற்குள் சூறாவளி போல அவர் எழுதி தள்ளியவை ஏராளம்.
செகாவின் அப்பா சிறிய பலசரக்கு கடை வைத்திருந்தவர். அதிக கடன் காரணமாக அவரால் குடும்பத்தை சீராக நடத்த முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கடியை தாங்க முடியாமல் அவர் எப்போதும் மனம் உடைந்துபோன நிலையிலே இருந்தார். தங்களுக்கு உரிய பணத்தை கொடுக்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று கடன்காரர்கள் மிரட்டவே ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவர் வீட்டிலிருந்து வெளியேறி மாஸ்கோவிற்கு ஒடிபோய்விட்டார்.
அப்பாவின் தலைமறைவு காரணமாக கடன்காரர்கள் அம்மாவை நெருக்கினார்கள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பாவை கண்டுபிடித்து அழைத்து வருவதாக அவள் மாஸ்கோ புறப்பட்டாள். கடன்காரர்கள் பிள்ளைகளில் ஒன்றை அடமானமாக தாங்கள் பிடித்து வைத்துக் கொள்வதாக சொல்லி அவர்கள் கடனை தந்தபிறகு அந்த பிள்ளையை மீட்டு போகும்படியாக சொன்னார்கள். அப்படி கடனுக்கு பிடிபட்டு நிறுத்தி வைக்கபட்டவர் ஆன்டன் செகாவ்.
அப்பா ஒடிப்போய்விட்டார். அம்மா பிள்ளைகளுடன் அவரை தேடி போய்விட்டாள். கடன்காரன் வீட்டில் வசவும் ஏச்சும் வாங்கிக் கொண்டு அவமானத்தில் துவண்டு போயிருந்தார் செகாவ். மாஸ்கோவிற்கு போன அம்மா வரவேயில்லை. ஒவ்வொரு நாளும் செகாவ் அம்மாவிற்காகவும் தன் குடும்பம் ஒன்று சேர்வதற்காகவும் காத்திருந்தார். ஆனால் அது சாத்தியமாகவே இல்லை. இதற்கிடையில் இன்னொரு கடையில் வேலை செய்தபடியே தானே பள்ளிக்கு போய்வர துவங்கினார். மாஸ்கோவில் கல்லூரி படிக்கும் அண்ணனுக்கு கடிதம் எழுதினார். கடன்காரர்கள் வெட்டியாக செகாவை ஏன் சோறு போட்டு வளர்க்க வேண்டும் என்று ஒரு நாள் துரத்திவிட்டார்கள்.
வழியில்லாமல் தானும் மாஸ்கோ போவது என்று முடிவு செய்தார்.
குடும்பத்தை தேடி வந்து கண்டார். அரசு உதவி தொகை கிடைத்து அவரது அண்ணன்கள் முறையாக கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். அம்மா செகாவையும் எப்படியும் படிக்க வைத்துவிட வேண்டும் என்று போராடினாள். முடிவில் அவருக்கு மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது. படிப்பு தான் தன்னுடைய குடும்பத்தின் வறுமையிலிருந்து தங்களை காப்பாற்ற துவங்கியது என்று செகாவ் தன் நினைவு குறிப்பில் எழுதுகிறார்.
அந்த நாட்களில் தன் அண்ணன்களுக்கு அவர் பரிகாசமாக எழுதிய கடிதங்களில் ஒன்றை அவன் தன் நண்பரும் பத்திரிக்கை ஆசிரியருமான ஒருவரிடம் காட்ட அது நாளிதழில் வெளியாக துவங்கியது. கேலியான தொனியில் எழுதப்பட்ட அந்த நடைசித்திரங்கள் புனைபெயரில் வெளியாகின.
தஸ்தாயெவ்ஸ்கியின் முதல் படைப்பை கண்டு பாராட்டி அவரை பெரிய எழுத்தாளராக உலகிற்கு அறிமுகப்படுத்த காரணமாக இருந்த டிமிட்டிரி கிரிகோவிச் தற்செயலாக ஒருநாள் இந்த நடைச்சித்திரங்களை வாசித்துவிட்டு யார் இந்த பையன் எங்கிருந்து எழுதுகிறான் என்று விசாரித்து உன் திறமைகளை இப்படி கேலியாக எழுதுவதில் வீணடித்துவிடாதே. உன்னால் சிறந்த கதைகளை எழுத முடியும் என்று பாராட்டி கடிதம் எழுதுகிறார்.
அந்த கடிதம் தான் செகாவின் புதிய மாற்றங்களுக்கு விதையாக இருந்தது. மிகுந்த நன்றி உணர்வோடு தான் மருத்துவராக பணியாற்றுவதாக சொல்லிய செகாவ் தன்னால் கதைகள் எழுத முடியும் என்று அவர் கொண்டிருந்த நம்பிக்கைளை தான் நிறைவேற்றுவதாக குறிப்பிடுகிறார். அதன்பிறகு செகாவின் புதிய சிறுகதைகள் வெளியாக துவங்கின.
மருத்துவர் என்பதால் அவரை தேடி சிகிட்சைக்கு வருபவர்களை அவர் மிக நுணுக்கமாக ஆராய்ந்தார். அத்துடன் சிறுவயதிலிருந்தே அடிநிலை மக்களுடன் நேரடியாக கலந்துபழகி வாழ்ந்த அனுபவம் சேர்ந்த கொள்ள அவரால் தன்னை சுற்றிய உலகை மிக துல்லியமாக புரிந்து கொள்ள முடிந்தது.
ஒடுக்கபட்ட மனநிலைகள். வறுமை, ஏழ்மை, பணக்காரப் பெண்களின் பகட்டு, பணம்படைத்தவர்களின் மிகை வாழ்வு, நிர்கதியான பெண்களின் வலி என்று அவர் தன்னை சுற்றிய மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளை கதைகளில் ஊடுருவ செய்தார்.
இயல்பாகவே செகாவிடம் எதிலும் ஆழ்ந்து ஈடுபடும் தன்மையிருந்தது கடவுள் நம்பிக்கையற்ற செகாவ். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்வதற்காக தனி மருத்துவமனை ஒன்றினை தொடங்கி அதை நடத்திவந்தார்.
ஒரு நாள் அவரது மருத்துவமனைக்கு ஒரு சிறுமி கால் உடைந்து போன தெருநாய் ஒன்றை தூக்கி கொண்டு வந்து சிகிட்சை செய்யுமாறு வேண்டினாள். தான் விலங்கிற்கு வைத்தியம் செய்கின்றவன் இல்லை என்றதும் அவள் மருத்துவத்தில் என்ன விலங்கு மனிதன் என்ற பேதம் வேண்டியிருக்கிறது. இந்த நாய் மனிதர்கள் மேல் விசுவாசமானது. அதை காப்பாற்றுங்கள் என்று அவர் காலை பிடித்து கொண்டு கெஞ்சுகிறாள்.
அந்த சிறுமியின் மீதான அன்பில் நாயை குணப்படுத்துகிறார். நாயின் காலில் கட்டு போட்டு தரையில் விடுகிறார். உடனே அது ஒட முயற்சிக்கிறது. செகாவ் அந்த நாயின் தலையை பரிவோடு தடவியபடியே நண்பா தெரு தான் உன்னுடைய இடம் என்று ஏன் நீயே முடிவு செய்து கொண்டாய். சில நிமிசங்கள் கூட வீட்டில் தங்குவது அவமானமாக இருக்கிறதா, மனிதர்கள் போல கிடைத்த சந்தர்ப்பங்களை ஏன் தந்திரமாக உபயோகிக்க நீ கற்றுக் கொள்ளவேயில்லை என்று அத்துடன் பேசுகிறார். அந்த நாயை அடுத்த சில நாட்களுக்கு தன் கூடவே தங்க வைத்து கொண்டு சிகிட்சை தருகிறார். அந்த சிறுமியை பற்றி ஒரு சிறுகதையொன்றை எழுதியிருக்கிறார் செகாவ்
அவரது பெரும்பான்மை சிறுகதைகள் மனதின் விசித்திரமான போக்குகளையே ஆராய்கிறது. எள்ளலும் கசப்புணர்வும், கவித்துவமான அணுகுமுறையும் கொண்ட கதைசொல்லல் செகாவுடையது. செகாவ் நாடகங்கள் எழுதி நாடகஉலகில் பிரபலமாக துவங்கினார். நாடக ஒத்திக்கை. நிகழ்ச்சி என்று அவரது உலகம் பரபரப்பானது. நடிகைகளை காதலிக்க துவங்கினார்.செகாவிற்கு நிறைய காதலிகள். அவர் எந்த பெண்ணோடும் அதிக நாட்கள் நீடித்திருக்கவில்லை. தன் தாயுடன் மருத்துவமனையில் வசித்த அவர் தனக்கு விருப்பமான பெண்களில் ஒருவரை கூட தன் இருப்பிடத்திற்கு அழைத்து வரவேயில்லை
நாற்பது வயது வரை திருமணமே செய்து கொள்ளாமலே இருந்தார். எழுத்து நாடகம், கடலோடி சுற்றிய பயணங்கள் என்று வாழ்வை கொண்டாடினார் செகாவ். பெண்களின் அக உணர்வுகளை எழுதியதில் டால்ஸ்டாயை விட செகாவ் மிக முக்கியமானவர். தஸ்தாயெவ்ஸ்கியை போல கொந்தளிப்பு மிக்க எழுத்து இவரிடமில்லை. ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் அகசிக்கல்கள் இவரது எழுத்தில் வேறு தளத்தில் வெளிப்படுகிறது.
நாற்பது வயதிற்கு பிறகு ஒரு வெளிநாட்டு பயணம் செல்ல விரும்பியபோது துணையாக யாரையாவது அழைத்து கொண்டு போகலாம் என்று செகாவிற்கு தோன்றியது. இதற்காக தெரிந்த நாடகநடிகையான ஒல்காவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் முன்பாக அவளுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி அந்த பெண் தனியே நகரில் வசிக்க வேண்டும். தான் புறநகரில் வசிப்பார். வாரம் இரண்டு நாட்கள் அவர்கள் சந்தித்துகொள்ளலாம். ஒன்றாக சேர்ந்து சுற்றலாம். படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஒருவர் மற்றவரது செயல்களில் , அக உலகில் தலையிட கூடாது. மற்றவரை சார்ந்து வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. இந்த ஒப்பந்தபடியே அவர்கள் திருமணம் நடந்தேறியது.
ஒல்காவுடன் அவரது தேனிலவு சில மாதங்கள் இன்பமாக கடந்தது. அவள் கருச்சிதைவுற்றாள். அந்த நிகழ்விலிருந்து இருவருக்குமான பிரிவு துவங்கியது.
செகாவ்விற்கு லிடியா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவள் திருமணமானவள். பணக்கார பெண். ஆனால் பேரழகி. அவள் பார்த்தமாத்திரத்தில் செகாவை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். செகாவிற்கும் அவள் மீது காதலிருந்தது. ஆனால் திருமணமானவள் என்பதால் அதை தவிர்த்தே வந்தார். அவளோ மிக ஆவேசமாக அவரை காதலித்தாள். அது வெறும் நட்பு என்று லிடியாவை ஒதுக்கி வைத்தார். அந்த நாட்களில் லிடியாவை ஒரு நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த சந்திப்பில் செகாவின் காதலி மீது நண்பன் மயங்கி போனான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள். செகாவை விட்டு லிடியா விலகி போனாள். அந்த சம்பவம் செகாவ் மனதில் எப்போதும் ஆறாத ரணமாக இருந்து கொண்டேயிருந்தது. லிடியாவின் கதையை தான் நாய்க்கார சீமாட்டியாக பின்னாளில் செகாவ் எழுதினார்.
கடற்பயணத்தில் அதிக விருப்பம் கொண்டிருந்த செகாவ் அடிக்கடி பயணம் மேற்கொண்டார். ஒரு கடற்பயணத்தின் போது இந்தியாவிற்கு கப்பலில் வந்திருக்கிறார். ஆனால் இந்தியா அவரை வசிகரிக்கவில்லை. கப்பலை விட்டு இறங்கி வராமலே தங்கியிருந்திருக்கிறார். அந்த கப்பல் இலங்கைக்கு சென்றிருக்கிறது. அங்கே செகாவ் தரையிறங்கி இலங்கையை கண்டிருக்கிறார். சிங்கப்பூருக்கு கப்பல் சென்ற போது அவர் சிங்கப்பூரை கண்டு வியந்திருக்கிறார்.
காசநோய் பாதித்த செகாவ் அதிலிருந்து மீள முடியாமல் தொடர்சிகிட்சை பெற்றுவந்தார்; முன்னதாக அவரது அண்ணன் இதே காசநோயால் இறந்து போயிருந்தார். ஆகவே தானும் நோயிலிருந்து மீள முடியாது என்று உறுதியாக நம்பிய செகாவ். வாழ்க்கையை பயனுள்ளதாக செலவிட நினைத்து ஆரம்ப பள்ளி மருத்துவ மனை. சுகாதார மையம் என்று தன் கையிருப்பு முழுவதையும் இல்லாதவர்கள் நலனுக்காக செலவிட்டார்
மருத்துவ காப்பகத்தினுள் வீடு அமைத்து கொண்டு தன் எழுத்தாள நண்பர்களை தேடி சந்தித்தார். அப்போது தான் டால்ஸ்டாய், கார்க்கி போன்றவர்கள் செகாவை சந்தித்து உரையாடினார்கள். தனது 44 வயதில் 1904ல் செகாவ் மரணமடைந்தார்.
செகாவ் சிறுகதைகள் பதிமூன்று தொகுதிகளாக மொத்தம் 568 சிறுகதைகள் உள்ளன. அவரது நாட்குறிப்பு மற்றும் கடிதங்கள் தனி தொகுதியாக வெளியாகி உள்ளன. செகாவின் நாடகங்கள் தனித்து நூலாக வெளியாகி உள்ளன. இதில் முக்கியமான கதைகள்.
The Lady with a Dog, Ward No. 6, The Grasshopper, The Huntsman, The Black Monk, The Name-Day Party, Sleepy, The Seizure, A Dreary Story, Gooseberries , A Medical Case The Bishop.
செகாவின் பல சிறுகதைககள் இசைகோர்வையை போன்றவை. அவை மாறுபட்ட உணர்வுகளை ஒன்று சேர்க்கின்றன. சில வேளைகளில் அவை துவக்க நிலையில் உயர் எழுச்சி கொள்கின்றன. முடியும் போது சட்டென முடிந்துவிடுகின்றன. இன்னும் சில கதைகள் நிலக்காட்சி ஒவியம் போன்றவை. அதில் கதையின் மையமாக இருப்பது நிலவெளி தான். கதாபாத்திரங்கள் அந்த நிலவெளியின் தன்மையை எப்படி உள்வாங்கி வெளிப்படுத்தகிறார்கள் என்பதிலே கதை முடிந்து விடுகிறது
பொதுவாக செகாவின் கதைகளின் ஆதார புள்ளியாக இருப்பது ஒரு உள்ளார்ந்த நாடகம். அவர் குரலை உயர்த்துவதில்லை. கதை சொல்லி எல்லாவற்றையும் அடங்கிய குரலில் சலனமில்லாமல் விவரிக்கிறான். ஆனால் கதை கொந்தளிப்பு மிக்கதாக இருக்கிறது. அது தான் செகாவின் நுட்பம்.
கதாபாத்திரத்தின் புற செயலுக்கும் அக காரணங்களுக்கும் இடையில் நடைபெறும் நாடகமே அவரது தனித்துவம். அவர் மிக நுட்பமாக உடைகள், சுற்றுசூழல், உணவு வகைகளை விவரிக்கிறார். நாடகத்தில் நடப்பது போன்று சிறு சிறு கையசைவுகள் கூட கதையில் முக்கியமாக இடம் பெறுகின்றன. ஆண் பெண்ணுக்குமான ஈர்ப்பு திருமணம் உறவு என்ற கட்டுபாடுகளால் தடை செய்யப்பட்டுவிட முடியாது என்பது பல கதைகளில் மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது.
சிறுகதைகளுக்கான ஆறு விதிகள் என்று செகாவ் தனது குறிப்பேட்டில் இந்த பட்டியலை தருகிறார்
1) அரசியல் சமூக கருத்துகளை தேவையில்லாமல் வலிந்து பத்திபத்தியாக கதையின் உள்ளே எழுதாதே. 2) கதாபாத்திரங்கள் தான் கதையின் மையம்.அதன் மோதல் அல்லது முரண் அதிலிருந்து வெளிப்படும் நாடகம் அதை கவனமாக வளர்த்து எடுக்கவேண்டும். 3) கதாபாத்திரங்கள் மற்றும் சூழல் விவரணைகள் மிக உண்மையாகவும் மை உணர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். தேவையற்ற மிகையலங்காரம் கூடவே கூடாது. 4) தனித்துவம் மற்றும் அசலான கதை சொல்லும் முறை அவசியம். 5) வழக்கொழிந்த போன சொற்கள், உரையாடல்கள் தவிர்க்கபட வேண்டும். 6) ஒரு சொல் கூட வீணடிக்கபடாத அளவு கச்சிதமான வடிவம் மிக முக்கியம்.
ஒரு கதையை கச்சிதமாக எப்படி எடிட் செய்வது செகாவிடம் என்று கேட்ட போது முதல் மூன்று பத்திகளை தூற எறிந்துவிடுங்கள். மறுபடி படித்து பாருங்கள். இப்போது கதை கச்சிதமாக இருப்பது போன்றிருக்கும். கதையை எப்படி துவங்குவது என்பது தான் பலருக்கும் பிரச்சனை என்கிறார் செகாவ்.
மனிதன் பயத்தில் வெளிறியபடி பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் என்று எழுதினால் வாசகன் எளிமையாக உடனடியாக அதை புரிந்து கொண்டுவிடுவான். அதையே மிக உயரமும் சற்று கழுத்து பருத்தும், தலை சரிவாகவும், முகத்தில் பரு விழுந்த, சிவப்புநிறதாடி கொண்ட ஆறடிக்கும் குறைவான மனிதன் ஒரு பக்கம் வளைந்திருந்த, நீல நிற வர்ணமடித்த, மிக பழமையான நாற்காலியின் உள்ளே பாதி சாய்ந்தும் பாதி வெளியேயும் கால்கள் பட இளவெயிலில் பயத்தோடு உட்கார்ந்திருந்தான். என்று எழுதினால் வாசகன் குழப்பமடைந்துவிடுகிறான். வாசக மனது அந்த காட்சியிலிருந்து துண்டிக்கபட்டுவிடுகிறது. ஆகவே விவரணைகளை எழுதும் போது அதை காட்சிபடுத்தும் தன்மைமிக அவசியமானது எனவும் குறிப்பிடுகிறார்.
எது அவரது கதைகளின் ஆதாரம் என்று செகாவிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில்
மனித இயல்பை ஆராய்வது.
மனித இயல்பு என்ற இரண்டு சொற்கள் எளிமையானவை போல தோற்றம் கொண்ட போதும் அவை முடிவில்லாத அர்த்தம் கொண்டவை. மனித மனம் கொள்ளும் விசித்திரமான பயம், சந்தோஷம், நாட்டம் தேடுதல் யாவும் ஒன்றிணைந்து தான் மனித இயல்பு. அவை சீட்டு விளையாட்டு போல உருமாறி ஒன்று சேர்கின்றன. கலைந்துவிடுகின்றன. மறுபடி காத்திருக்கின்றன. கதாபாத்திரங்களின் செயல்களை விடவும் அதன் மனநிலையை துல்லியமாக எழுத முடிந்தவனே சிறந்த எழுத்தாளன் ஆகிறான். அதுவே செகாவின் தனிச்சிறப்பும்.
எழுத்தாளன் பலசரக்கு கடை வைத்திருப்பவனோ. அலங்கார ஒப்பனையாளனோ, பிரசங்கியோ, போஷாக்கு உணவு தயாரித்து தருபவனோ அல்ல. மாறாக தன் மனசாட்சியின் உண்மையான குரலுக்கு செவி சாய்த்தபடியே தான் அறிந்த நிஜத்தை, வாழ்வின் அவதானிப்புகளை, எந்த அதிகார நெருக்கடிக்கும் பயமில்லாமல் நேர்மையாக வெளிப்படுத்துகின்றவன் என்று கூறும் செகாவ் உலகெங்கும் அவரது சிறுகதைகளுக்காக தொடர்ந்து மறுவாசிப்பிற்கு உள்ளாகி கொண்டாடப்பட்டு வருகிறார்
2010 ம் ஆண்டு செகாவின் 150 வருட பிறந்த நாள். அதை உலகமே கொண்டாட பெரிய ஏற்பாடுகள் நடக்கின்றன.
செகாவின் பிறந்தநாளை தமிழ் எழுத்துலகம் பெரிதாக கொண்டாட வேண்டும். அது தான் இலக்கிய ஆசானுக்கு நாம் செய்யும் எளிய கைமாறு.
***
Reading list.
The Tales of Chekhov, translation by Garnett
Complete Original Short Stories of Guy De Maupassant
Anton Chekhov: A Life in Letters,
The Kiss and Other Stories – Anton Chekhov
The Duel and Other Stories, Anton Chekhov
The Party and Other Stories, Anton Chekhov
The Fiancée and Other Stories, Anton Chekhov
The Complete Early Short Stories of Anton Chekhov