கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பேனா மருத்துவமனை பற்றிய செய்தி ஒன்றை இணையத்தில் கண்டேன். பேனா மருத்துவமனை என்ற கடையின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. மைப்பேனாக்களைச் சரி செய்து தரும் இந்தக் கடை 75 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்

முகம்மது இம்தியாஸ் தன்னைப் பேனா மருத்துவர் என்றே அழைத்துக் கொள்கிறார். சிறிய மருத்துவமனையை நடத்தும் மூன்றாம் தலைமுறை மருத்துவர் என்றே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.
அமெரிக்காவின் லூயிஸ் வாட்டர்மேன் தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர்.
உடைந்த நிப்கள், மைக்கசிவு மற்றும் பேனா பிஸ்டன்களைச் சரி செய்து தருவதே இவர்களின் முக்கிய வேலை. மான்ட்பிளாங்க் போன்ற உலகளாவிய பேனா நிறுவனங்களின் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பினையும் செய்து தருகிறார்கள்.
நோயாளியைப் பரிசோதனை செய்வது போலவே பேனாவைப் பூதக்கண்ணாடி மூலம் பரிசோதனை செய்து தேவையான பாகங்களை மாற்றிச் சரி செய்கிறோம் என்கிறார் இம்தியாஸ்.
இந்தப் பேனா மருத்துவமனையில் இயக்குநர் சத்யஜித் ரே தனது பேனாவைச் சரி செய்து வாங்கியிருக்கிறார். வங்காள எழுத்தாளர்கள் பலரும் இக்கடையின் வாடிக்கையாளர்களே.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் நிப்பு தயாரிக்கும் தொழிலில் புகழ்பெற்றது. பிரபல நிறுவனங்களுக்கான பேனா நிப்புகள் சாத்தூரில் தான் செய்யப்படுகின்றன. அவற்றை நேரில் கண்டிருக்கிறேன். குடிசைத் தொழில் போல சிறிய இயந்திரங்களைக் கொண்டு நிப்பு தயாரிப்பது நடக்கிறது.
காந்தி தனது வாழ்நாளில் 31,000 கடிதங்களை எழுதியிருக்கிறார் என்கிறார்கள். அவ்வளவும் மைப்பேனாவில் எழுதப்பட்டதே. ஆனாலும் மைப்பேனாவின் விலை அதிகம் என்பதால் அதைச் சாமானிய மக்கள் பயன்படுத்த இயலாது என்பதைக் காந்தி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்.
காந்தியின் ஆலோசனைப்படி கையால் தயாரிக்கப்படும் சுதேசிப் பேனாக்களை ஆந்திராவின் ராஜமுந்திரியில் கோசூரி வெங்கட் ரத்னம் துவங்கினார் 1932 இல் ஆரம்பிக்கப்பட்ட ரத்னம் பென் ஒர்க்ஸ் இந்திய அளவில் புகழ்பெற்றது. காந்தி அவர்களைப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார். இன்றும் அவர்கள் கையால் பேனா தயாரிப்பதைத் தொடருகிறார்கள். அதுவும் தங்கப்பேனா வரை தயாரிக்கிறார்கள்.

பேனா விற்பனை செய்பவர்களை, பேனா தயாரிப்பவர்களைப் பற்றி ஏதேனும் சிறுகதை தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா என யோசித்துப் பார்த்தேன். நினைவில் வரவில்லை.
பிபேக் டெப்ராய் மற்றும் சோவன் ராய் எழுதிய Inked in India: Fountain Pens and a Story of Make and Unmake புத்தகத்தில் மைப்பேனாவின் வரலாறு மற்றும் காந்தி பயன்படுத்தி மைப்பேனா, தொட்டு எழுதும் நாணல் பேனா பற்றிய காந்தியின் கடிதங்கள். சுதேசி பேனா உருவாக்கம் பற்றிய அவரது ஆலோசனைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்

1900 களின் முற்பகுதியில், வங்காள மருத்துவர் ஒருவர் தான் காசியில் இந்திய மைப் பேனாவை உருவாக்கினார் என்கிறது இந்தப் புத்தகம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனாக்கள் இந்தியச் சந்தையில் செலுத்திய ஆதிக்கம், இந்தியாவில் மை தயாரிக்கப்பட்ட விதம் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்
ஒவ்வொரு பேனா வாங்கியதற்கு பின்னாலும் ஒரு கதையிருக்கிறது. பரிட்சை எழுதக் கொண்டு சென்ற பேனா, தொலைத்த பேனா, கடன்வாங்கிய பேனா, முதல்கதை எழுதிய பேனா, சம்பளம் வாங்க கையெழுத்திட்ட பேனா, பரிசாகப் பெற்ற பேனா என பேனாவின் பின்னால் உள்ள கதைகள் ஏராளம். இது எனக்கு மட்டுமானதில்லை. என் தலைமுறையின் பலருக்கும் மைப்பேனா நினைவுகள் நிறையவே இருக்கும் . மைக்கறை படிந்த விரலை மறக்க முடியுமா என்ன.
நன்றி :
www.atlasobscura.com/places/kolkata-pen-hospital