அவர்களின் இரவு

The Night of the Hunter 1955-ஆம் ஆண்டு சார்லஸ் லாட்டன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படம்.  இது ஒரு நடிகரால் இயக்கப்பட்ட திரைப்படம். திகிலூட்டும் விசித்திரக் கதை கொண்டது.

வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு பிடிபட்ட பென் ஹாப்பர் சிறைக்குப் போகும் முன்பாக கொள்ளையடித்த பணத்தை ரகசியமாக ஒளித்து விட்டுப் போகிறான். அந்தப் பணம் எங்கேயிருக்கிறது என  தனது மகன் ஜான் மற்றும் மகள் பேர்ல் ஆகியோரிடம் தெரிவிக்கிறான்.  இந்த உண்மை அவனது மனைவி வில்லாவிற்குக் கூட தெரியாது.

வங்கியைக் கொள்ளையடித்து, இருவரைக் கொன்ற குற்றத்திற்காக ஹாப்பருக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது.

சிறையில் பென் ஹாப்பர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, மதகுரு என்று கூறிக்கொள்ளும் ஹாரி போவல் இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிறான். பணம் ஹாப்பர் வீட்டில் எங்கோ ஒளித்து வைக்கபட்டிருக்க கூடும் என நினைக்கிறான்.

மதகுரு போவல் தனது ஒரு கையில் ‘HATE’ என்றும் இன்னொரு கையில், ‘LOVE’ என்ற எழுத்துக்களையும் பச்சை குத்தியிருக்கிறான். இரண்டு இணைந்தவன் தான் அந்த மதகுரு. எந்தக் கை அவனை வழிநடத்துகிறது என்பதை வைத்து அவனது செயல் தீர்மானிக்கபடுகிறது.

சிறையிலிருந்து போவல் விடுதலையாகி  வெளியே வந்து ஹாப்பர் குடும்பத்தைத் தேடிப் போகிறான். அவனது மனைவிக்கு உதவி செய்வது போல நடித்து அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். பணம் எங்கேயிருக்கிறது என்பதை அறிந்துள்ள ஜான் மற்றும் பெர்லிடம் நெருங்கிப் பழகுகிறான். ஆசை காட்டுகிறான்.

போவல் மோசடி பேர்வழி எனத் தெரிந்து கொண்ட ஜான் மற்றும் பெர்ல் அவனிடமிருந்து தப்பியோடுகிறார்கள். இவர்களை வெறி கொண்டு துரத்துகிறான் போவல்  அவர்கள் எப்படி  காப்பாற்ற படுகிறார்கள் என்பதே படத்தின் மையக்கதை

கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்து தீமையின் அடையாளம். அதைத் திருட வருகிறவன் மதகுரு. அவன் தீமையின் உச்சபட்ச வடிவம். சிறார்கள் அந்தப் பணத்தைக் காப்பாற்ற முயலுகிறார்கள். நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் கதைகளை பார்த்திருக்கிறோம். இது தீமைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்படும் மோதல்.

உலகின் பார்வையில் மோசமான கொலைகாரனாகத் தோன்றும் ஹாப்பர் குழந்தைகளின் பார்வையில் அன்பான தந்தை. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே அவன் திருடிய பணத்தை ஒளித்து வைக்கிறான். அதே நேரம் உலகின் பார்வையில் வழிகாட்டியாகத் தெரியும் மதகுரு போவல் பேராசை கொண்டவன், எந்தக் குற்றத்தையும் துணிந்து செய்பவன். இவர்களுக்குள் நடுவே களங்கமின்மையின் அடையாளமான சிறார்கள். அவர்களுக்கு மீட்சி அளிக்கும் தேவதை போன்ற பெண்.

படத்தில் தந்தையின் பணத்தைப் பாதுகாக்கும் பிள்ளைகள் அதைத் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியின் அடையாளமாக கருதுகிறார்கள். அதிலும் மகன் தந்தையின் மீதுள்ள அன்பின் பொருட்டே பணத்தைக் காப்பாற்ற முயலுகிறான்.

படத்தின் சிறப்பு மதகுருவாக நடித்து போவல் மேற்கொள்ளும் தந்திரமான முயற்சிகள்.அது சிறைச்சாலையிலே துவங்கிவிடுகிறது. கணவனை இழந்த பின்பு மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என வைராக்கியமாக உள்ள ஹாப்பரின் மனைவி வில்லாவிடம் ஆறுதல் வார்த்தைகள் பேசி கொஞ்சம் கொஞ்சமாக அவளைச் சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறான். அந்த திருமண நாடகம் சிறப்பாக படத்தில் விவரிக்கபடுகிறது

ஹார்ப்பரின் ஊருக்கு வந்தவுடனே போவல் அங்குள்ள  மக்களைக் கவர்ந்து விடுகிறான். தனது ஆன்மாவை மீட்கவே அந்த திருமணம் நடைபெற்றது என வில்லாவும் நினைக்கிறாள். .  பணம் எங்கே மறைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துமாறு சிறுமி பேர்லை போவல் மிரட்டுவதை அவள் ஒட்டுக்கேட்ட பிறகே அவன் மீதான நம்பிக்கையை இழக்கிறாள். தப்பியோட முயன்று தோற்றுப் போகிறாள்.

இரண்டு சிறார்களையும் எளிதாக ஏமாற்றி ஒளித்துவைக்கட்ட பணத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என நினைத்து போவல் அவர்களிடம் நாடகம் ஆடுகிறான். ஆனால் உண்மை வெளிப்பட்டுவிடுகிறது.

குறிப்பாக நிலவறையில் உள்ள பொம்மையை எடுக்கும் காட்சி.  சுவரில் மதகுருவின் நிழல் தோன்றும் அந்தக் காட்சி மறக்க முடியாதது. ஸ்டான்லி கோர்டெஸின் ஒளிப்பதிவு அபாரமானது. ஒளியும் நிழலும் இணைந்து உருவாக்கும் அற்புதங்களைக் காண முடிகிறது.

போவலிடம் தப்பியோடும் இருவரும் சிறு படகில் செல்லும் காட்சியும், அவர்கள் அடைக்கலமாகும் வீடும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் நேர்த்தியாக விவரிக்கபடுகின்றன

வங்கிக் கொள்ளை சார்ந்த படங்களில் இப்படம் மாறுபட்டது.  மதகுருவாக நடித்து ஏமாற்றும் போவல் கதாபாத்திரம் தனித்துவமாக உருவாக்கபட்டுள்ளது. மதகுருவாக ராபர்ட் மிட்சம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

சார்லஸ் லாட்டன் இந்த ஒரேபடத்தை மட்டுமே இயக்கியுள்ளார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் படுதோல்வி அடைந்ததால் அவர் தொடர்ந்து படம் இயக்கவில்லை.

இன்று ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக The Night of the Hunter கொண்டாடப்படுகிறது. ராபர்ட் மிட்சம் தனது திரைவாழ்வில் இப்படம் நிகரற்றது என்று சொல்கிறார். 

மௌனப்படங்களில் வெளிப்படுவது போல பல காட்சிகள் உரையாடலின் துணையின்றி அழுத்தமாக வெளிப்படுத்தபடுகின்றன. பணம் எங்கேயுள்ளது என்ற முடிச்சு பாதியிலே அவிழ்க்கபட்டுவிடுகிறது. அதன் பின்புள்ள திரைக்கதையின் பலம் சிறப்பானது. அதுவே இப்படத்தை ஹாலிவுட்டின் உயரிய திரைப்படமாக மாற்றுகிறது.

••

0Shares
0