உலகின் அழகு

சாஷா வாட்டர்ஸ் இயக்கிய Mary Oliver: Saved by the Beauty of the World ஆவணப்படம் கவிஞரின் வாழ்க்கை மற்றும் இலக்கியச் செயல்பாடுகளை விவரிக்கிறது.

மேரி ஆலிவரை நினைவுபடுத்துவது இயற்கையின் மீதான அவரது ஈடுபாடு மற்றும் புரிதல். இந்த ஆவணப்படம் அதனைச் சரியாகப் பதிவு செய்துள்ளது.

மேரி 1935-ல் பிறந்து, ஓஹியோவில் உள்ள ஒரு சிறிய ஊரில் வளர்ந்தவர். தினமும் எழுதுவதை ஒரு சடங்காகக் கொண்டிருந்தவர். நகர வாழ்வின் பரபரப்பை விட்டு ஒதுங்கிய அவரது வீடு இயற்கையின் அரவணைப்பில் இருந்தது.

தனது கவிதைகளில் மேரி ஆலிவர் எழுப்பும் கேள்விகள் எதற்கும் நம்மிடம் பதில் இல்லை. அந்தக் கேள்விகளை அகத்தேடலின் திறவுகோல் என்பேன்.

இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் தான் எழுதிய கவிதைகளைப் பட்டியலிட்டு வைத்துக் கொண்டு எந்தப் பத்திரிக்கைக்கு எந்தக் கவிதைகளை அனுப்பினோம் என்று குறித்துக் கொள்கிறார். ஏற்றுக் கொள்ளாத கவிதைகளின் எதிரே சிவப்பு குறியிடுகிறார். ஒரு சிறுமியின் வீட்டுப்பாடம் போலவே அதை உணர முடிகிறது.

தனது கவிதைச் செயல்பாட்டின் ஆதாரமாக மேரி ஆலிவர் கருதுவது நேரம் தவறாமல் எழுதுவதாகும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் எழுதும் பழக்கம் வந்துவிட்டால் எழுத்து எளிதாகக் கைகூடிவிடும் என்கிறார். தனது அன்றாட நடைப்பயணத்தின் வழியே கவிதைகளைக் கண்டடைவதாகவும் சொல்கிறார்.

படத்தில் அவரது கவிதைகள் தன்னை எவ்வளவு பாதித்துள்ளது என்பதைக் கவிஞர்கள் சிலர் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மேரி ஆலிவரின் குழந்தைப் பருவம் கசப்பானது. எழுதத் துவங்கிய நாட்களில் அறிமுகமான விட்மனும், தோரூவும் எந்த அளவிற்குத் தனது கவிதைகளைப் பாதித்துள்ளார்கள் என்பது குறித்து மேரி ஆலிவர் ஒரு இடத்தில் தெரிவிக்கிறார். அமெரிக்க உரைநடையின் வரலாறும் கவிதை மரபின் வரலாறும் முற்றிலும் மாறானது. எலியட், எஸ்ரா பவுண்ட் ஒரு புறம் என்றால் மறுபுறம் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மேரி ஆலிவர். சிற்றிதழ் மரபே அமெரிக்க கவிதையிலும் முதன்மையானது.

தனது சமகாலக் கவிதையுலகின் போக்கினைப் பற்றிச் சற்றும் கவலைப்படாதவர் மேரி ஆலிவர். அவர் இயற்கையின் ஆழ்ந்த இயக்கத்தை, சலனங்களை, மௌனத்தை நன்கு புரிந்து கொண்டிருந்தார். நீர்வண்ண ஓவியரைப் போலவே கவிதைகளை எழுதி வந்தார்.

அவரது கவிதைகளில் வெளிப்படும் பிரமிப்பு உண்மையானது. ஒரேயொரு வாழ்க்கை மட்டுமே ஒரு மனிதனுக்குச் சாத்தியம் எனும் போது விலைமதிப்பற்ற அந்த வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என அவர் எழுப்பும் கேள்வி முக்கியமானது.

தனது சககவிஞர்களில் பலரும் நூலகங்களை நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் காட்டின நோக்கிச் சென்றதாக ஆலிவர் குறிப்பிடுவது சிறப்பானது.

தன்பாலின ஈர்ப்பாளரான அவர் மோலியோடு இணைந்து வாழ்ந்து வந்தார். மோலியின் மரணத்திற்குப் பின்பான அவரது மனத்தடுமாற்றம், தீராத்தனிமை, மற்றும் மரணத்துயரின் கொந்தளிப்பினை நேர்த்தியான காட்சிகளின் வழியே சித்தரித்துள்ளார்கள்.

கவிஞர் எட்னா செயின்ட் வின்சென்ட் மில்லேயின் சகோதரிக்குச் செயலாளராகப் பணிபுரிந்த இளமைக்காலத்தை விவரிக்கும் மேரி ஆலிவர் எட்னாவின் ஆளுமையைப் பற்றி வியந்து பேசுகிறார்

இளம் கவிஞர்களுக்கான கையேடு ஒன்றை மேரி உருவாக்கியுள்ளார். அவரது கவிதை வகுப்புகளில் கலந்து கொண்டு சிறந்த கவிஞர்களாக உருவானவர்கள் அந்த அனுபவம் குறித்து இப்படத்தில் விவரிக்கிறார்கள்.

ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு அடிப்படையான அளவு உண்டு. கவிதை என்பது ஒருவகை உரையாடல். அது எளிதாக, இயல்பாக நடைபெறுதல் வேண்டும். கவிதை என்பது மேடைச் சொற்பொழிவில்லை. அது விருப்பமான நண்பருடன் பேசுவதைப் போன்றது. கவிதையில் சொற்தேர்வும், மொழிதலும், வடிவ நேர்த்தியும் முக்கியமானது. அதற்கு ஒவ்வொரு சொல்லையும் கவனமாகத் தேர்வு செய்தல் வேண்டும். தேய்வழக்குகளைப் பயன்படுத்துவது கவிதையின் மீதான ஈர்ப்பை விலக்கி விடும். கவிதை எழுதுவதற்கு உணர்ச்சி நிறைந்த ஒரு மனம் தேவை என்கிறார் மேரி ஆலிவர்

இந்தக் கவிதைக் கையேட்டில் மேரி தனது சொந்த கவிதைகள் எதையும் உதாரணமாகப் பயன்படுத்தவில்லை என்பது முக்கியமானது.

கவிதை எழுத விரும்புகிறவர்களின தேவைகளையும், பிரச்சனைகளையும். சவால்களையும் பற்றிப் பேசும் இந்தக் கையேடு வாசகர்களுக்கும் பயன்தரக் கூடியதே.

ஜென் கவிதைகளில் இயற்கை வெளிப்படும் விதமும் மேரி ஆலிவரின் கவிதையில் இயற்கை வெளிப்படும் விதமும் மாறுபட்டது. மேரி ஆலிவர் ஒரு சிறுமியின் கண்களால் இயற்கையை அணுகுகிறார்.ஜென் கவிதைகள் துறவியின் கண்களால், பயணியின் கண்களால் அணுகுகின்றன. ஜென் கவிதைகளில் இயற்கை என்பது புறவயமான காட்சிகள் மட்டும் அல்ல, அவை உருவகங்கள். குறீயீடுகள். ஆனால் மேரி ஆலிவரில் இயற்கை மனிதனோடு இணைந்தும் விலகியும் தனது பிரம்மாண்ட இருப்பை வெளிப்படுத்துகிறது. ஒருவகையில் வேர்ட்ஸ்வொர்த்தின் இன்றைய வடிவமே மேரி ஆலிவர்.

தனிப்பட்ட முறையில் நவீன வாழ்வின் சிக்கல்களை, பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மேரி ஆலிவர் கவிதைகளில் அதனை நேரடியாக இடம்பெறச் செய்வதில்லை. மாறாக இன்றைய வாழ்வின் இயக்கத்தைச் சொல்லாமல் என்றும் நடைபெறும் இயக்கத்தையினை அடையாளம் காட்டுகிறார். அது தான் கறுப்பு அன்னங்களாக, நாரையாக மாறுகின்றன.

மேரி ஆலிவரின் ‘அமெரிக்கன் பிரிமிடிவ்’ கவிதை தொகுப்பு புலிட்சர் விருது பெற்றது. தேசிய புத்தக விருதினையும் அவர் பெற்றிருக்கிறார்.

ஆலிவரின் கவிதைகளைப் படிப்பது என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகின் நுண்மையான இயக்கங்களை அவதானிப்பதும் புரிந்து கொள்வதுமாகும். அவை நாம் தவறவிட்ட கணங்கள். காட்சிகள்.

அவரது கவிதைகளில் எந்தவிதமான அலங்காரமும் கிடையாது. மலர்குவளையில் விருப்பமான மலர்களை அடுக்குவது போலவே சொற்களை அடுக்கி வைக்கிறார். அவரது கவிதையில் வெளிப்படும் எளிமை அபாரமானது. எளிதில் அடைய முடியாதது.

கவிதையை மக்கள் எளிதில் நினைவில் கொள்கிறார்கள்; அதனால், அது தங்களுக்குச் சொந்தமானது என்றும், ஒரு பிரார்த்தனையைப் போல மனதிற்குள் அதனைச் சொல்லிக்கொள்ள முடியும் என்றும் உணர்கிறார்கள். அந்த அனுபவம் மிகவும் முக்கியமானது. ஒருவர் கவிதையைத் தனக்காகவும், எல்லாருக்காகவும் எழுதுகிறார். அந்த வகையில் அது ஒரு வகைத் தொல்சடங்கு. கவிதை என்பது ஒரு பரிசு. உங்களுக்கு நீங்களே அளிக்கும் பரிசு என்கிறார் மேரி ஆலிவர்

புற்றுநோய் பாதித்துச் சிகிட்சை எடுத்துக் கொண்ட ஒரு பெண் மேரி ஆலிவரின் கவிதைகளை ஆழ்ந்து வாசித்து மறுஉயிர்ப்பு கொண்டதை இந்த ஆவணப்படத்தில் விவரிக்கிறார். தனது நாய்க்குட்டி கவிதைகளைச் சொல்லும் மேரி அந்த நாய்க்குட்டிகளுடன் ஆசையாக விளையாடுகிறார். அவரது கவிதை ஒன்றில் மலரை நேசிக்கும் நாய்க்குட்டி இடம்பெற்றுள்ளது

கவனமே அர்ப்பணிப்பின் தொடக்கம் என்று நான் நம்புகிறேன். அதுவே என்னைக் கவிதைகள் எழுத வைக்கிறது என்கிறார் மேரி ஆலிவர்.

உலகம் இனிமையானது தான். ஆனால் இனிமையானது மட்டுமில்லை என்பதையும் மேரி ஆலிவர் சில கவிதைகளின் வழியே சுட்டிக்காட்டுகிறார். மேரி ஆலிவரின் அக உலகமும் புறவாழ்வும் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன

0Shares
0