ஃபிரான்ஸ் காஃப்கா தனது குறுங்கதை ஒன்றில் விசித்திரமான விலங்கு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். A Crossbreed என்ற கதையில் வரும் விலங்கு பூனையின் தலையும் ஆட்டுக்குட்டியின் உடலும் கொண்டிருக்கிறது. ஆட்டுப்பூனை என்று அதனைக் குறிப்பிடலாமா.

இந்த விலங்கு அவரது தந்தையிடமிருந்து பராம்பரியமாகக் கிடைத்ததாகக் காஃப்கா குறிப்பிடுகிறார்.
ஆட்டுக்குட்டியைப் போல உடல் கொண்டிருந்தாலும் அது ஆட்டுக்குட்டி போல நடந்து கொள்ளவில்லை. அது போலவே பூனையின் தலை கொண்டிருந்தாலும் எலியைத் துரத்தவில்லை.
சில நேரம் ஆடு போல அங்குமிங்கும் ஒடுகிறது. அல்லது பூனை போல அமைதியாக ஜன்னல் விளிம்பில் படுத்துக் கொள்கிறது. அதனால் மியாவ் என்று கத்த முடியவில்லை.

அந்த ஆட்டுப்பூனை காஃப்கா மடியில் அமர்ந்து புட்டிப்பால் குடிக்கிறது. ஞாயிறுகிழமைகளில் இந்த விலங்கைக் காணும் வரும் வேடிக்கைச் சிறுவர்கள் விசித்திரமான கேள்விகளைக் கேட்கிறார்கள்.
ஏன் அப்படி ஒரு விலங்கு இருக்கிறது. அது ஏன் ஒருவரால் சொந்தமாக்கபட்டிருக்கிறது. அது இறந்துவிட்டால் என்ன ஆகும். அந்த விலங்கு தனது தனிமையை உணர்கிறதா அதற்கு ஏன் குட்டிகள் இல்லை என்பது போன்ற கேள்விகள் அவருக்கு அயர்ச்சி அளிக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பதில்லை.
சிலர் அந்த ஆட்டுப்பூனையோடு விளையாட பூனைக்குட்டியோ, அல்லது ஆட்டுக்குட்டியோ கொண்டு வருகிறார்கள். அப்போது ஆட்டுப்பூனை அமைதியான கண்களால் தன் எதிரிலுள்ள விலங்கைக் காணுகிறது. இரண்டு விலங்குகளும் தங்கள் பரஸ்பர இருப்பை ஏற்றுக் கொள்கின்றன.
ஆட்டுப்பூனை எப்போதும் அவர் மடியில் இருக்கவே விரும்புகிறது. அவரது குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கிறது.
சில சமயங்களில், அது தன்னைச் சுற்றி மோப்பம் பிடித்து, தன் கால்களுக்கு இடையில் சுற்றிக்கொண்டு பிரிய மறுக்கும்போது. ஆட்டுக்குட்டியாகவும் பூனையாகவும் இருப்பதில் திருப்தியடையாமல், ஒரு நாயாகவும் இருக்க முனைகிறது என்கிறார் காஃப்கா
ஒரு நாள் தன்னுடைய மடியில் அமர்ந்திருந்த விலங்கின் கண்களில் கண்ணீர் வடிவதை காணுகிறார். அது தனது கண்ணீர் தானோ என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது. அதன் அமைதியின்மை அவரை வருத்தம் கொள்ள வைக்கிறது. .
ஒருவேளை கசாப்புக் கடைக்காரனின் கத்தி இந்த மிருகத்திற்கு இறுதி விடுதலையாக இருக்கலாம் எனவும் நினைக்கிறார் மரபுரிமையாக அளிக்கப்பட்ட விலங்கு என்பதால் தானாக இறக்கும் வரை அதனைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கிருக்கிறது என்றும். சில நேரம் அதன் பார்வை தனது மனதிலுள்ள குற்றவிருப்பத்தை அறிந்து கொண்டு சவாலிடுவது போலவும் மனிதர்கள் குறித்த அதீத புரிதல் கொண்டதுமாக இருக்கிறது எனக் கதை முடிகிறது

பூனை வளர்ப்பு பிராணி. ஆடு வளர்க்கபட்டாலும் உணவிற்காகப் பயன்படுத்தப்படும் விலங்கு. ஒன்று ஆசையின் வடிவம். மற்றது பயன்பாட்டின் வடிவம். கதையில் இரண்டும் ஒன்று சேர்ந்த உருவம் கொண்டிருக்கிறது.
காஃப்கா இப்படித் தான் இருந்தார். அவரால் குடும்பத்திற்கு உபயோகமாகவும். தனது கனவுகளை, ஆசைகளைத் துரத்திச் செல்லும் படைப்பாளியாகவும் ஒரே நேரத்தில் எப்படியிருப்பது என்று தெரியவில்லை.
ஆனால் இரண்டிற்கும் ஆசைப்பட்டார். தந்தையிடமிருந்து பெற்ற விலங்கு என்பது அவரே தான்.
அந்த விலங்கைக் காண்பவர்கள் நிறையக் கேள்வியை எழுப்புகிறார்கள். அது போலவே காஃப்காவைப் பற்றிய கேள்விகள் அவரது குடும்பத்தில் நிறைய எழுந்தன,
தான் ஒரு ஆட்டுப்பூனை என்பதால் தனக்குத் திருமணமோ, வாரிசோ இருக்காது எனக் காஃப்கா நினைக்கிறார். அதே நேரம் ஆட்டுப்பூனைக்கு ஒரு வீடும் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. அப்படித் தனது சகோதரிகளை, அன்னையை நேசிக்கிறார் காஃப்கா
இருவுடல் கொண்டிருப்பது போதாது என அந்த விலங்கு நாயாக நடந்து கொள்வதைக் குறிப்பிடுவதன் மூலம் தனது பிற ஆசைகளைக் காஃப்கா கேலி செய்கிறார். ஆட்டுப்பூனையின் கண்ணீரை தனது கண்ணீராக அவர் கருதும் இடத்தில் கதை மிகை புனைவிலிருந்து யதார்த்தமாகி விடுகிறது.
தந்தையின் பிடியிலிருந்து விடுபடுவது என்பது அவரது இடையுறாத முயற்சி. அல்லது கவலை.
ஆட்டுப்பூனையின் முடிவு எப்படியிருக்கும் என்ற கேள்வியைக் கதை எழுப்புகிறது. அதன் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடாது என்பது போலக் கதை விவரிக்கிறது. ஆட்டுப்பூனைக்குத் தனது இருநிலை குறித்த குழப்பங்கள் இல்லை. அது ஒரு ஆட்டுக்குட்டி ,அல்லது பூனைக்குட்டியோடு சமமாகப் பொருந்திக் கொள்கிறது. இயல்பாக நடந்து கொள்கிறது..
மனிதர்களை ஆட்டுப்பூனை புரிந்து கொண்டுள்ள விதம் முக்கியமானது. பரிவு காட்டுவதன் வழியே மட்டுமே வாழ்ந்துவிட முடியாது என்ற உண்மையை அது வெளிப்படுத்துகிறது.
உருமாற்றம் கதையில் கிரிகர்சோம்சா அடையும் மாற்றம் இது போன்றதே. ஆனால் உடலும் மனமும் தனியே பிரிந்துவிடுகின்றன.
சிற்பங்களில் இது போல இரு உடல், மூன்று உடல் கொண்ட விசித்திர விலங்குகளைக் காண முடிகிறது. அவை குறியீட்டு விலங்குகள். அது போன்ற ஒரு நவீன குறியீடாகவே இந்த ஆட்டுப்பூனை அமைகிறது.
காஃப்காவின் கதைகளில் வரும் விலங்குகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். அதில் அவர் விலங்குகளுடன் கொள்ளும் நெருக்கம் மற்றும் புரிதல் முக்கியமானது என்கிறார்கள்.
1931ல் காஃப்காவின் மறைவிற்குப் பிறகே இக்கதை வெளியிடப்பட்டிருக்கிறது
பூனை ஒன்பது உயிர் கொண்டது என்பதையும் ஆடு பலி கொடுப்பதற்கான விலங்கு என்பதையும் இங்கே மறந்துவிடக் கூடாது.
வளர்ப்பு பிராணிகளை வைத்துக் கொள்ளவிரும்புகிறவர்கள் அதனிடம் ஒரு விசேசம் அல்லது தனித்துவம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அந்த விலங்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். அந்த விலங்குடன் வெளிப்படையாகச் செல்லம் கொஞ்ச முற்படுகிறார்கள். இந்தக் கதையிலும் அப்படியே நடக்கிறது.
மடியில் ஆட்டுப்பூனையை வைத்திருப்பதைக் கதையில் வருபவன் பெருமையாக நினைக்கிறான். அப்போது அவன் அதன் தந்தையைப் போலவே உணருகிறான்.
“என் மடியில் அமர்ந்திருக்கும் அந்த மிருகத்திற்கு, பயமோ துரத்தும் ஆசையோ கிடையாது. என்னுடன் ஒட்டி இருக்கும்போதுதான் அது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது“ எனக் கதையில் காஃப்கா குறிப்பிடுவது கவனிக்க வேண்டியது. இது தான் தந்தையின் அடையாளம்.
விசித்திர தோற்றம் கொண்ட எல்லா விலங்குகளும் தனது அடையாளச் சிக்கலைக் கொண்டிருக்கின்றன. தான் எந்த விலங்கை போல நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியாமல் தடுமாறுகின்றன. ஆசையாகப் பராமரிக்கபட்டு வந்தாலும் ஆட்டுப்பூனைக்குக் கலப்பின உயிரியாக வாழ விருப்பமில்லாமல் இருக்கிறது.
அந்த ஆட்டுப்பூனைக்கு மனித இலட்சியங்கள் ஏதேனும் இருக்கிறதா எனக் காஃப்கா கேட்கிறார். அது முக்கியமான கேள்வி.
விலங்குகள் கடந்தகாலத்தைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதுமில்லை. மனித நெருக்கம் இல்லாத விலங்குகளின் வாழ்க்கை வேறு. மனிதனுடன் பழகிய விலங்குகளின் உலகம் வேறு. மனித நெருக்கம் விலங்கின் இயல்பை மாற்றிவிடுகிறது. பூனைகள் மனிதர்களுடன் நெருக்கம் கொண்டிருந்தாலும் அதன் இயல்பில் பெரிய மாற்றத்தை அடையவில்லை. அதன் மர்மம் நீடிக்கவே செய்கிறது.
காஃப்காவின் நாட்குறிப்பில் அவர் தனியாக இருப்பதை விட, மற்றொருவருடன் இருக்கும்போது மிகவும் கைவிடப்பட்டதாக உணர்வதாக எழுதியிருப்பது நினைவிற்கு வருகிறது. இக்கதையில் அந்த உணர்வை ஆட்டுப்பூனை அனுபவிக்கிறது. வெளிப்படுத்துகிறது.
கிரேக்க தொன்மத்தில் தீப்ஸ் (Thebes) நகரத்தின் வாசலில் அமர்ந்திருந்த ஸ்பிங்ஸ் கேள்வி கேட்கிறது. ஈடிபஸ் அதற்குப் பதில் அளிக்கிறான். இக்கதையும் அது போலவே சில கேள்விகளை எழுப்புகிறது. அதற்குப் பதில் அளிப்பதன் மூலம் நீங்களும் ஈடிபஸ்ஸாக முடியும்.
••