நினைவின் ஈரம்

புதிய சிறுகதை.செப்டம்பர் 7 2026

புறப்படுவதற்கு முன்பே சிவா சொல்லியிருந்தான்

“நாம இன்னைக்கு ஷூட் பண்ணப் போற டி.சி. தாஸிற்கு ஞாபகமே கிடையாது. அவர் இருக்கிற ரூம்க்குள்ளே தான் ஷுட் பண்ணணும்.. எக்ஸ்ட்ரா லைட் எடுத்துக் கோ.. “

“ஞாபகமே இல்லாதவரை எதுக்குச் சிவா ஷூட் பண்ணனும்“ எனக்கேட்டான் அஸ்வின்

“அவருக்கு ஸ்டேட் அவார்ட் கொடுத்திருக்காங்க. ஏவிக்கு அவரோட விஷுவல் வேணும். கௌதம் சார் இப்போ உள்ள விஷுவல் கேட்கிறார். அதுவும் வீட்டுக்குள்ளே நடக்கிற மாதிரி. புக் படிக்கிற மாதிரி. “

“அவருக்கு ஞாபகமே கிடையாதா“

“எல்லாம் மறந்து போயிருச்சி. தன்னோட சொந்த பையனைக் கூட யார்னு தெரியாது. வயது 78 ஆகுது. பெரிய கவிஞர். நிறைய புக்ஸ் எழுதியிருக்கார்“

“நீ படிச்சிருக்கியா“

“இல்லே. விக்கில அவரைப்பற்றிப் படிச்சேன். தட்ஸ் அல்“ எனச் சிரித்தான் சிவா

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பரணிதா சொன்னாள்

“தொட்டிச்செடியை படம் எடுக்கிற மாதிரி ஈஸியா ஷூட் பண்ணிடலாம். அதை முடிச்சிட்டு அப்படியே போரூர் போயிரலாம். அங்கே ஒரு இண்டர்வியூ இருக்கு“

தொட்டிச் செடி என அவள் சொன்ன உதாரணம் அஸ்வினுக்குப் பிடிக்கவில்லை. நினைவில்லாதவர்கள் தொட்டிச் செடியா என்ன. எதற்காக இப்படிக் கேலி செய்கிறாள். முன்பின் அறியாதவர்களை எப்படிப் பரிகாசம் செய்ய முடிகிறது.

“டைம் எடுத்து தான் ஷூட் பண்ண முடியும் பரணிதா.. உன் இண்டர்வியூவை மதியம் வச்சிக்கோ“ என்றான் அஸ்வின்

“நீ கேமிராவை எங்கே வச்சாலும் அவர் என்ன கோவிச்சிக்கிட போறாரா… குயிக்கா முடிச்சிரு “என்றாள் பரணிதா

“அங்கே போயிட்டு அதை முடிவு செய்யலாம் “என்றான் அஸ்வின்.

இதுவரை நூற்றுக்கணக்கானவர்களை அவன் படம் பிடித்திருக்கிறான். ஆனால் நினைவில்லாத ஒருவரை படம்பிடிப்பது இதுவே முதன்முறை.

ஆகவே அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். காரணமேயில்லாமல் அவனுக்குள் பதற்றமாகவும் அச்சமாகவும் இருந்தது. மனிதர்களால் தனது நினைவுகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பது விசித்திரமான உண்மை.  

கூகிளில் அவரது பெயரை உள்ளிட்டு அவரைப்பற்றிப் படிக்கத் துவங்கினான். விக்கிபீடியாவில் இருந்த செய்திகள் இருபது ஆண்டுகளுக்கு முந்தயவை. எப்போதோ பத்திரிக்கையில் வெளியான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். இப்போது எப்படியிருப்பார் என்று தெரியவில்லை.

நினைவில்லாதவர் என்ன ஆடை அணிந்து கொள்வார். அதை எப்படித் தேர்வு செய்வார். என்ன சாப்பிட்டோம் என்பதும் நினைவில் இருக்காதா

அவரது கவிதை நூல்களின் அட்டைப்படங்களும் இரண்டு கவிதைகளும் சுயவிபரக்குறிப்பில் இடம் பெற்றிருந்தன. அந்தக் கவிதைகளை வாசித்துப் பார்த்தான். அவனுக்குப் புரியவில்லை. வாசிக்க எளிதாக உள்ள சொற்கள் ஏன் புரியவில்லை என யோசித்தான். சொற்களை வரிசைப்படுத்துவது எளிதானதில்லை. இரண்டு சொற்கள் அருகருகே இணைந்தவுடன் ஒளிரத்துவங்கி விடுகின்றன. அர்த்தம் மாறிவிடுகிறது.

ஒருமுறை அவன் பிரபலமான சினிமா ஒளிப்பதிவாளர் திவாகரமேனனை சந்தித்த போது அவர் சொன்னார்

“அஸ்வின் நீ நிறையக் கவிதை படிக்கணும். கவிதையில ஒவ்வொரு வரியும் ஓரு ஷாட். ப்யூட்டிபுல் இமேஜ். எந்த லைட்டிங்கும் பண்ணாம அது ஒளிரும். “

“எனக்கு புக் படிக்க விருப்பமேயில்லை சார். கேமிரா வழியா பாக்கிற திரில் எதுலயும் கிடைக்கிறதில்லை“

“அப்படியில்லை. மொழி தான் கேமிரா. அதை வச்சி எதையும் படம்பிடிக்கலாம். கேமிரா லென்ஸ்க்கு ரேஞ்ச் இருக்கு. மொழிக்கு அந்தத் தடையில்லை. நான் அதை உணர்ந்திருக்கேன்“

“டிரை பண்ணி படிக்கிறேன் சார் “என்றான் அஸ்வின். ஆனால் படிக்கவில்லை. அவனது அறையில் ஒரு புத்தகம் கூடக் கிடையாது. ஆனால் கேமிரா, உபகரணங்கள். லைட் மீட்டர். துணைக்கருவிகள் என நிறைய இருந்தன. இருபது வயதில் நிறைய ஊர்களுக்குத் தனியே சுற்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கிறான். சேனலில் வேலைக்கு வந்தபின்பு தனியாகச் சுற்றுவது குறைந்துவிட்டது. ஆனால் நிறைய விதமான சூழ்நிலைகளை, அபூர்வமான மனிதர்களைப் படமாக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் எடுத்த காட்சிகளைத் தொலைக்காட்சியின் வழியாகப் பல்லாயிரம் பேர் பார்த்தார்கள். ஆனால் எவருக்கும் அக்காட்சிகள் அவன் எடுத்தவை என்று தெரியாது. அந்த வருத்தம் அவனுக்கிருந்தது

••

அவர்கள் பெசன்ட் நகரில் இருந்த டி.சி. தாஸின் வீட்டிற்குச் சென்றார்கள். கடற்கரையை ஒட்டிய வீதியில் இருந்த தனி வீடு. வாசலில் பன்னீர் மரமிருந்தது. இரும்பு கேட்டில் பெண் மருத்துவரின் பெயர் பலகை காணப்பட்டது. மருமகளாக இருக்கக் கூடும். கல்பாவிய நடைபாதை. நிறையப் பூச்செடிகள். காலிங் பெல்லை அழுத்திவிட்டு அவர்கள் காத்திருந்த போது வேலைக்காரப் பெண் கதவை திறந்துவிட்டு ஹாலில் காத்திருக்கச் சொன்னாள்

பெரிய ஹால். ஊதா நிற கார்பெட். இரண்டு வரிசையாகக் கறுப்பு சோபா. ஒரு தனித்த குஷன் சோபா. ஹாலில் டிவி இல்லாதது வியப்பாக இருந்தது. மரடீப்பாயில் ஒரு ஆங்கில நாளிதழ் மடித்துக் கிடந்தது. சுவரில் ஒரு புகைப்படம் கூட மாட்டப்படவில்லை. சமையல் அறையில் யாரோ நடக்கும் சப்தம் கேட்டது.

அஸ்வின் அந்த வீட்டினுள் பேரமைதி நிரம்பியிருப்பதை உணர்ந்தான். ஹாலிலிருந்து மாடிப்படி மேலே சென்றது. அதன் வழியாக ஐம்பது வயதுடைய ஒருவர் இறங்கி வந்தார். தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார்

“என் பேரு ஜோஷ்வா. அப்பா ரூம் பின்னாடி இருக்கு.. அவர் இன்னும் ரெடியாகலை “

“வெயிட் பண்ணுறோம் சார்“ என்றான் சிவா

“டீ காபி ஏதாவது சாப்பிடுறீங்களா“ எனக்கேட்டார் ஜோஷ்வா

“டீ“ என்றாள் பரணிதா

மூவருக்கும் தேநீர் கொடுக்கும்படியாகப் பணிப்பெண்ணிடம் சொன்னார் டி.சி. தாஸின் மகன்.

“சாரோட பழைய போட்டோஸ் இருந்தா வேணும். அதையும் ஷுட் பண்ணிக்கிடலாம்“ என்றான் சிவா

“அப்படி எதுவும் இல்லே.. அப்பா மொத்தமே பத்து பதினைந்து போட்டோ தான் எடுத்துருப்பார். அதுவும் பத்திரிக்கைகாரங்க எடுத்தது. “

“அவரோட புக் எதுலயும் போட்டோ போடலை“ என்றான் சிவா

“போட விரும்ப மாட்டார். கவிஞர் எப்படியிருப்பார்னு தெரியாமல் கவிதை படிக்கப்படணும்னு அப்பா ஆசைப்படுவார்“

“கரெக்ட் தான். சங்க காலக் கவிஞர்களுக்கு எல்லாம் ஏது போட்டோ. கபிலர் எப்படியிருப்பார்னு யாருக்கு தெரியும் “எனக்கேட்டான் சிவா

நிறையப் புத்தகங்களைப் படித்தவன் போலச் சிவா உரையாடுவது அஸ்வினுக்கு வியப்பாக இருந்தது.

“அப்பா சட்டை போடுறதை விட்டு எட்டு வருஷமாகுது.. பனியன் வேஷ்டி தான். அப்படியே இருக்கலாமா. இல்லே சட்டை போட்டுவிடவா“ எனக்கேட்டார் ஜோஷ்வா

“சட்டை போட்டுவிட்ருங்க“ என்றான் சிவா

“இல்லை சார். அப்படியே இருக்கட்டும். அது நேச்சரலா இருக்கும்“ என்றான் அஸ்வின்

“எங்களுக்கு அப்படியே பழகிருச்சி.. ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு போறப்ப மட்டும் தான் சட்டை போட்டு விடுறோம். அவருக்கு ரெண்டு ஒண்ணு தான்“ என்றார் ஜோஷ்வா

“யார் அவரைப் பாத்துகிடுறாங்க“ எனக்கேட்டாள் பரணிதா

“பழனியப்பன்னு ஒரு கேர் டேக்கர் இருக்கார். அவன் தான் குளிக்க வச்சி. டிரஸ் போட்டுவிட்டு சாப்பாடு கொடுக்கிறான். அப்பாவுக்குத் தூக்கம் குறைஞ்சி போச்சி. நாலு மணி நேரம் தான் தூக்கம். அவரோட ரூம் ஜன்னல் எப்பவும் திறந்து தான் இருக்கும். அது முன்னாடி ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். என்ன பாக்கிறார்னு தெரியாது. அவரோட உலகமே வேற… “

“உங்க வொய்ப் டாக்டரா“ எனக்கேட்டாள் பரணிதா

“ஆமா. இப்போ மாலத்தீவுல வொர்க் பண்ணுறா.. வீட்ல நானும் அப்பாவும் மட்டும் இருக்கோம். என் பொண்ணு டப்ளின்ல  படிக்கிறா“

“அப்பாவுக்குக் கொடுக்கப் போற அவார்ட்டை நீங்க தான் வாங்கப் போறீங்களா“ எனக்கேட்டான் சிவா

“இல்லே.. என் பொண்ணு வர்றேனு சொல்லியிருக்கா. அவளுக்குத் தாத்தாவோட கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். நான் அவ்வளவா வாசிச்சது இல்லே“

“ஆச்சரியமா இருக்கு . உங்க அப்பா கவிதைகள் பிடிக்காதா. “ எனக்கேட்டான் சிவா

“அந்த ஆர்வம் வரலை. எனக்குச் சின்ன வயசுல இருந்து சயின்ஸ்ல தான் ஆர்வம். ஐஐடில படிச்சேன். அப்பா யாரையும் அவரோட கவிதைகளைப் படிக்கச் சொல்ல மாட்டார்.  “

“உங்கப்பாவோட கவிதைகள் நிறைய மொழியில டிரான்ஸ்லேட் பண்ணியிருக்காங்களே“

“ஆமா.. எட்டு பத்து மொழியில வந்துருக்கு.. அந்தப் புக்ஸ் எல்லாம் கூட அப்பா ரூம்ல இருக்கு“

“இப்போ அவரால புக் படிக்க முடியுமா“

“முடியாது. ஆனா எப்போவாது அதைக் கையில் எடுத்து பாத்துகிட்டே இருப்பார். அவருக்கு இப்போ புக்ஸ் எல்லாம் சிற்பம் மாதிரி ஆகிருச்சி. “

அவர் புத்தகத்தைப் பார்ப்பது போல ஒரு விஷுவல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என அஸ்வினுக்குத் தோன்றியது

ஒரு டிரேயில் டீ பிஸ்கட் வந்தது. அவர்கள் மூவரும் தேநீர் அருந்தும் நேரத்திற்குள் ஜோஷ்வா அப்பா இருந்த அறையை நோக்கிச் சென்றார். திரும்பி வந்த போது அவருடன் பழனியப்பனும் இணைந்து வெளியே வந்தான்

பழனியப்பனுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். குள்ளமான உருவம். வேஷ்டி கட்டியிருந்தான். கதர்சட்டை. நெற்றியில் திருநீறு பூசியிருந்தான். அவர்களைக் கண்டதும் கைகூப்பி வணக்கம் சொன்னான்

“டிவில இருந்து வந்துருக்கீங்கன்னு அய்யாகிட்டே சொல்லிட்டேன்“

“அவருக்கு ஞாபகம் இருக்கா“ எனக்கேட்டான் சிவா

“இல்லே. அதுக்காக நான் சொல்லாம இருக்க முடியாதுல்லே. நான் எல்லாத்தையும் அய்யா கிட்ட சொல்லிடுவேன். அவர் தான் பதிலுக்கு எதுவும் பேச மாட்டார். “

“அய்யா சாப்பிட்டாங்களா“ எனக்கேட்டாள் பரணிதா

“இட்லியை மிக்சில அரைச்சி அதுல கொஞ்சம் தேன் சேர்த்துக் குடுப்பேன். ஸ்பூன்ல கொடுத்தா சாப்பிட்டுக்கிடுவார். மதியம் அரிசிக்கஞ்சி. நைட் ரெண்டு வாழைப்பழம் அல்லது ஒரு ஆப்பிள். அதையும் அரைச்சி தான் குடுக்கணும். ரெண்டு வயசு குழந்தை மாதிரி இருக்காரு.. “

“அவரை நாங்க ஷூட் பண்ணலாமா“ எனக் கேட்டான் சிவா

“நீங்க ஷூட் பண்ணுங்க. எனக்கு ஒரு ஆன்லைன் மீட்டிங் இருக்கு. முடிச்சிட்டு வந்துருறேன்“ என ஜோஷ்வா மாடியேறி சென்றார்

அவர்கள் டி.சி.தாஸின் அறையை நோக்கி நடந்தார்கள். அறையின் கதவை திறந்து பழனியப்பன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். அறை முழுவதும் டெட்டால் மணம்.

தாஸ் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ஒடுங்கிய தோற்றம். வட்ட கழுத்து பனியன். வேஷ்டி. கழுத்து எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. நரைத்த தலை. நீண்ட. மெலிந்த கைகள். தொங்கிப்போன கன்னங்கள். தளர்ந்த கண்கள். என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அறையில் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. அவரது படுக்கையை ஒட்டிய அலமாரி முழுவதும் புத்தகங்கள். அதில் ஒரு வரிசை அவர் எழுதிய கவிதை நூல்கள். அதை ஒட்டி சிறிய அலாரம் டைம்பீஸ். சுவரில் கோவில் கோபுரம் ஒன்றின் கோட்டோவியம் பிரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது

“அய்யா வரைந்த படம். இது மாதிரி நிறைய வரைஞ்சிருக்கார். மாடில பீரோவுல இருக்கு“

அஸ்வின் படப்பிடிப்பிற்கான விளக்குகளை எங்கே வைப்பது எனப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வந்திருப்பதைத் தாஸ் உணரவேயில்லை. பரணிதாவின் தொலைபேசி அடித்தது. உள்ளே சிக்னல் குறைவாக இருப்பதால் அவள் வெளியே நடந்து சென்றாள்.

அந்த வீட்டில் பெண்களே இல்லை என்பதை அப்போது கவனித்தாள். அது விசித்திரமான உணர்வை தந்தது.

சிவா அந்தப் படுக்கையைப் பார்த்தான். தலையணை எதுவுமில்லை. கோடு போட்ட மஞ்சள் நிற போர்வை. சுவரோரம் சாய்த்து வைக்கப்பட்ட மடக்குக் கட்டில். மரமேஜை மீது மாத்திரை மருந்துகள்.

“தலையணை இல்லாமல் தான் தூங்குவாரா“ எனக்கேட்டான் சிவா

“ஆமா சார். கையை மடிச்சி வச்சித் தூங்குவார். “

“ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாரா“

“இந்த நாலு வருஷத்துல ஒரு வார்த்தை பேசலை“

வெறும் நிழல் போல எப்படியிருக்க முடிகிறது எனச் சிவா ஆச்சரியப்பட்டான்

“நீங்க இந்த ரூம்ல தான் இருக்கீங்களா “

“ஆமாம் சார். நானும் இங்க தான் தங்கியிருக்கேன். அய்யாவை நைட்ல பாத்துகிடணும்லே“..என்றான் பழனியப்பன்

“கஷ்டமா இல்லையா“ எனக்கேட்டான் சிவா

“இதுல என்ன கஷ்டம். சந்தோஷமா பாத்துகிடுறேன். “

“உங்க பேமிலி எங்கே இருக்காங்க“

“கோட்டையூர்ல.. அம்மா மட்டும் தான்“ என்றான் பழனியப்பன்

“சார் நடந்து வந்து இந்த நாற்காலியில் உட்கார்ற மாதிரி பண்ண முடியுமா“

எனக்கேட்டான் அஸ்வின்

“அது கஷ்டம் சார். எழுந்திருக்க மாட்டார். அவரா எப்போ எழுந்துகிடுறாரோ அப்போ பெட்ல போய்ப் படுத்துகிடுவார். “

“அப்போ பெட் எங்கே இருக்குனு ஞாபகம் இருக்கில்லே“ எனக்கேட்டான் சிவா

“இல்லை சார்… சில சமயம் பெட்னு நினைச்சி கிழே விழுந்துடுவார். ரெண்டு மூணு தடவை அப்படி ஆகிருக்கு“

“சேரை கொஞ்சம் லெப்ட்ல நகர்த்த முடியுமா“ எனக்கேட்டான் அஸ்வின்

“அதை வேணும்னா செய்யலாம். அய்யா வெயிட்டே கிடையாது வெறும் 51 கிலோ“ என்றபடி பழனியப்பன் அந்த நாற்காலியை நகர்த்தினான்

“அவரை நீங்க தான் குளிக்க வைப்பீங்களா“ எனக்கேட்டான் சிவா

“ஆமா சார். சோப்பு நுரை அவர் மேல படும் போது மட்டும் அவரது முகம் சந்தோஷமாகிடும். சின்ன கப்புல தண்ணீர் எடுத்து அவர் மேல கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி குளிக்க வைப்பேன். ஈரத்தை துடைக்க விடமாட்டார். அந்த குளிர்ச்சி அவருக்குப் பிடிக்குது“

“நீங்க ஊருக்குப் போயிட்டா.. யார் இதை எல்லாம் செய்வாங்க“

“நாலு வருஷமா நான் லீவே எடுக்கலை.. முன்னாடி ஒரு ஆஸ்பிடல்ல இருந்து ஆள் வந்துட்டு இருந்தாங்க “

“நீங்க ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க “

“எங்கப்பா டிபி நோயாளி சார். அவர் கூட ஆஸ்பத்திரில இருந்து இருந்து பழக்கமாகிருச்சி.. அவர் இறந்த பிறகு இதையே வேலையாக்கிட்டேன். “

“நான் ரெடி சிவா.. ஷூட் போகலாம்“ என்றான் அஸ்வின்.

ஒளியூட்டப்பட்ட அந்த அறை விசித்திரமான தோற்றத்தை அடைந்திருந்தது. டி.சி. தாஸைப் படமாக்க முயன்ற போது அவரது முகத்தில் மாற்றம் தெரிவதைக் கண்டான். அவரது இடது கண்ணிலிருந்து லேசாக கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது கேமிரா வழியாகப் பார்த்த போது கண்ணீர் நன்றாகத் தெரிந்தது. அது அஸ்வினைச் சங்கடப்படுத்தியது

 எதற்கென அறியாத கண்ணீர் ஏன் நம்மைக் கலங்கடிக்கிறது. கண்ணீர் வெறும் திரவம் இல்லையா

“அவர் கண்ணுல கண்ணீர் வருது“ என்றான் அஸ்வின்

“துடைச்சிவிட்றேன் “ எனப் படுக்கை விளிம்பில் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டால் தாஸின் கண்ணீரைத் துடைத்துவிட்டான் பழனியப்பன்

“இன்னும் லேசா வருது“ என்றான் அஸ்வின்

“தண்ணீர் குடிச்சா வராது சார்“ எனப் பழனியப்பன் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்க வைக்க முயன்றான். தாஸ் தண்ணீரை குடிக்க மறுத்தார்.

“வெளிச்சத்துல கண்ணு கூசுதுனு நினைக்கேன்.. அதான் கண்ணீர் வருது “ என்றான் பழனியப்பன்

“லைட்டை மாத்திக்கோ அஸ்வின்“ என்றான் சிவா

“அவர் பக்கம் லைட் இல்லை சிவா“.. என்றபடி கேமிராவில் அவரது முகத்தைப் பார்த்தான். பேச்சு வேதனைகளைக் கரைத்துவிடுகிறது. பேச்சற்ற முகம் அதிக வேதனை கொண்டதாகயிருக்கிறது.

எதற்காக, யாருக்காக அந்தக் கண்கள் கலங்குகின்றன. நினைவில்லாதவர்களின் கண்ணீர் என்பது பெயரற்ற மொழி தானா.

அஸ்வின் படமாக்க முயன்ற போது திரும்பவும் தாஸின் கண்ணில் நீர் வழிந்தது. அவனால் கேமிராவைக் கையாள முடியவில்லை. சிரிப்பை படம் எடுப்பதைப் போல அழுகையைப் படம் எடுப்பது எளிதானதில்லை.

“அவருக்குக் கண்ணீர் வந்துட்டு இருக்கு சிவா.. பத்து நிமிஷம் வெயிட் பண்ணி ஷூட் பண்ணுவோம்“ என்றான் அஸ்வின்

என்ன செய்வது என அறியாமல் அவர்கள் அறையில் காத்திருந்தார்கள். பழனியப்பன் தாஸின் முகத்தைத் துடைத்துவிட்டு அய்யா தண்ணீர் குடிங்க என டம்ளரை நீட்டிக் கொண்டேயிருந்தான். அவர் குடிக்கவில்லை. பின்பு ஒரு ஸ்பூனில் தண்ணீரை எடுத்து உதட்டில் அழுத்திக் குடிக்க வைத்தான். இப்போதும் அவரது கண்ணில் கண்ணீர் கசிந்தபடியே இருந்தது

“இன்னைக்கு என்னனு தெரியலை. இப்படிக் கண்ணீர் வருது“ என்றான் பழனியப்பன்

“அப்படியே ஷூட் பண்ணு அஸ்வின். கண்ணீரை எல்லாம் சிஜில பாத்துகிடலாம்“

“என்னவோ மாதிரி இருக்கு சிவா“ என்றான் அஸ்வின்

“அவர் எப்போ அழுகையை நிறுத்துறது. நாம எப்போ ஷூட் பண்ணுறது“ எனச் சிவா கோவித்துக் கொண்டான்

தொலைபேசி அழைப்பை முடித்துக் கொண்டு பரணிதா உள்ளே வந்திருந்தாள்

“ஷூட் முடிஞ்சிருச்சா“

“இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. கவிஞர் கண்ணீர் விடுறார்“

“எதுக்கு“ எனக்கேட்டாள் பரணிதா

“யாருக்கு தெரியும். எல்லாம் நம்ம நேரம்“ என்றான் சிவா

“பழனியப்பன் நீங்க அந்தப்பக்கம் நில்லுங்க. உங்களைப் பாத்துகிட்டு இருந்தா. அவர் கண்ணீர் விடல“

“சேரை நகட்டவா சார்“ என்றான் பழனியப்பன்

“ஆமா.. அந்தப் பக்கம் நகட்டுங்க. “

சேரை இழுத்தான் பழனியப்பன். தன்னைப் பார்க்கும்படியாகச் சேரை மாற்றி அமைத்துக் கொண்டான் பழனியப்பன்.

“இது பரவாயில்லை.. நாம ஷூட் பண்ணுவோம் “என அஸ்வின் தனது கேமிராவை இயக்க ஆரம்பித்தான்.

இப்போது தாஸ் தனது இரண்டு கண்களையும் மூடிக் கொண்டுவிட்டார். முகம் இறுக்கமாகியிருந்தது.

“எதுக்கு இப்படி இருக்கார்னு எனக்கே தெரியலை சார். நான் ஜோஷ்வா சாரை கூட்டிட்டு வர்றேன் “

என அவசரமாக மாடிக்குச் சென்றான்.

“தாஸ் நடந்து வர்ற மாதிரி ஏஐல பண்ணிகிடலாம் சிவா. தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ண வேணாம்“ என்றாள் பரணிதா

“அதுவும் கரெக்ட் தான். அஸ்வின் இந்த ரூம். அவரோட புக்ஸ் எல்லாம் எடுத்துக்கோ.. அவரோட குளோசப் மட்டும் வேணாம்“

அஸ்வின் அந்த அறையில் இருந்த பொருட்களைப் படமெடுத்தான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாத தாஸ் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்

ஜோஷ்வா பழனியப்பனுடன் வந்திருந்தார். அப்பாவின் மூடிய கண்களைப் பார்த்தபடியே சொன்னார்

“சில நாள் அப்பா இப்படி ஆகிடுவார். எதுக்குனு எங்களுக்குப் புரியாது. மறுநாள் சரியாகிடுவார். சாரி இன்னைக்கு இப்படியாகிட்டார்“

“பரவாயில்லை சார். தேவையான ஷாட்ஸ் எடுத்துகிட்டோம்“ என்றான் சிவா

“அப்போ புறப்படுங்க. நான் எதுக்கும் டாக்டரை வரச்சொல்லி செக் பண்ணனும். “என்றார் ஜோஷ்வா.

அவரது குரலில் கடுமை வெளிப்பட்டது. அவர்களின் வருகை தான் தந்தையின் கண்ணீருக்கு காரணமோ என அவர் நினைத்திருக்கக் கூடும்

சிவாவும் பரணிதாவும் ஹாலை நோக்கி நடந்த போது அஸ்வின் தனது உபகரணங்களை எடுத்துக் கொண்டிருந்தான். பழனியப்பன் எப்போதும் அந்த நாற்காலி எப்படியிருக்குமோ அதேநிலையில் திரும்பும் வைத்தான். ஜன்னலுக்கு வெளியே இருந்த குரோட்டன்ஸ் செடியின் இலைகள் அசைந்து கொண்டிருந்தன. டி.சி தாஸ் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்

ஜன்னலுக்கு வெளியே இருந்து அவரைப் படமாக்க வேண்டும் போலிருந்தது. அஸ்வின் தனது கேமிராவை கையில் எடுத்துக் கொண்டு பின்வாசல் வழியாக வெளியே சென்றான்

குரோட்டன்ஸ் செடிகளுக்கு மத்தியில் நின்றபடியே திறந்த ஜன்னல் வழியாக அறையில் அமர்ந்திருந்த தாஸைப் படமாக்கினான். அந்தக் காட்சி மிகவும் அழகாக இருந்தது. அசையும் இலையைத் தாஸ் வெறித்துப் பார்த்தபடியே இருந்தார். சில சமயம் எதையோ புரிந்து கொண்டவரை போலத் தலையை அசைத்தார்.

திடீரென அஸ்வினுக்குக் கேமிராவிற்கு நினைவு கிடையாது. அது ஒன்றை பதிவு செய்கிறது. ஆனால் நினைவு வைத்துக் கொள்வதில்லை என்று தோன்றியது.

சிவாவும் பரணிதாவும் வாசலில் காத்திருந்தார்கள். டி.சி. தாஸின் அறைக்குள் வைத்திருந்த தனது உபகரணங்களை எடுப்பதற்காகச் சென்றான் அஸ்வின். பழனியப்பன் அறையில் இல்லை.

டி.சி. தாஸ் தனித்திருந்தார். அவரது முகம் உறைந்து போயிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என ஒருவர் அறியாமல் இருப்பது நல்லது தானோ என அஸ்வினுக்கு தோன்றியது.  தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது அவரிடம் விடைபெற்றுச் செல்ல வேண்டுமா அல்லது அப்படியே கிளம்பிவிடலாமா எனப் புரியாமல் திகைத்தான்

அருகில் சென்று நாற்காலியில் அமர்ந்திருந்த அவரது கைகளைப் பற்றினான். அவரிடம் சலனமில்லை.

“தொந்தரவுக்கு மன்னிருச்சிருங்க சார்“ என்றான்

தாஸ் தனது தலையை  வலதுபக்கம் திருப்பி வெற்றுச்சுவரைப் பார்த்தார்.

டி.சி.தாஸின் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆசை திடீரென உண்டானது. அலமாரியில் இருந்த அவரது கவிதைப் புத்தகங்களில் ஒன்றை ரகசியமாகத் திருடி தனது கேமிரா பேக்கில் வைத்துக் கொண்டான். வெளிவாசலுக்கு வந்த போது பழனியப்பன் வேகமாக அவனை நோக்கி வருவது தெரிந்தது

அருகில் வந்த பழனியப்பன் சொன்னான்

“சார். ஜோஷ்வா சாருக்கு அவங்க அப்பாவை பிடிக்காது. “

“ஏன்“

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். ஆனா ஜோஷ்வா இன்னைக்குத் தான் அப்பா ரூம்க்குள்ளே வந்திருக்கார்.  இந்த நாலு வருசத்துல தாஸ் சாரை பாக்க யாரும் வந்ததேயில்லை. நீங்க தான் வந்துருக்கீங்க. அதுக்காகத் தான் கண்ணீர் விட்டாரோ என்னவோ. உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சி சார்.. தப்பா எடுத்துகிடாதீங்க  “

“சாரை நல்லா பாத்துக்கோங்க“ என்றான் அஸ்வின்

காரில் ஏறும் போது சிவா சொன்னான்

“இந்த ஆளுக்கெல்லாம் அவார்ட் குடுத்து நம்மைச் சாகடிக்கிறாங்க. நல்ல விஷுவல்ஸ் கிடைக்கலை. கௌதம் சார் கேட்டா நீயே சமாளிச்சிக்கோ..

“கொஞ்சம் எடுத்துருக்கேன். அதை வச்சி சமாளிச்சிரலாம்“. என்றான் அஸ்வின்

“நம்மாலே ஒரு நாள் டி.சி. தாஸ் மாதிரி இருக்க முடியாதுப்பா. நரகம்“ என்று சிரித்தாள் பரணிதா.

“கோடி ரூபா கொடுத்தாலும் என்னாலே முடியாது“ என்று சிரித்தான் சிவா

அஸ்வின் சிரிக்கவில்லை.

அவன் மனதில் கண்ணீர் வழியும் தாஸின் முகம் ஆழமாகப் பதிந்து போயிருந்தது.

இரவு அறைக்குப் போனவுடன் அவரது கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற நினைத்துக் கொண்டான். பழனியப்பன் சொன்ன விஷயத்தைப் பற்றி தன்னோடு வந்திருந்த இருவரிடமும் அவன் பகிர்ந்து கொள்ளவில்லை.

•••

0Shares
0