திருமணமாகி வந்த போது தனது வீட்டிலிருந்து அம்மா அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தாள். ஆப்த நாதரின் கதைகள் என்ற அந்தப் புத்தகத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்மா படித்துக் கொண்டிருந்தாள். அட்டை கிழிந்து காகிதங்கள் பழுத்து உதிரும் நிலைக்கு புத்தகம் வந்தபோதும் அதை வாசிப்பதை நிறுத்தவில்லை.
ஒரு புத்தகத்தை எத்தனை முறை படிக்க முடியும். அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது. அம்மா புத்தகம் படிக்கும் போது அவள் முகத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் வெளிப்படும். வீட்டுவேலைகள் செய்து கொண்டிருக்கும் போதோ, வேற்று மனிதர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதோ இத்தனை உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்துவதில்லை.
அம்மா சமையற்கட்டில் தான் எப்போதும் புத்தகம் படிப்பாள். அதுவும் மதிய நேரங்களில் தான். சில சமயம் புத்தகத்தின் பக்கங்களை கூண்டிற்குள் இருக்கும் புலியைப் பார்ப்பது போல வெறித்துப் பார்த்தபடியே இருப்பாள். சில சமயம் கண்களைத் துடைத்துக் கொண்டபடியே தனக்குத் தானே ஏதோ சொல்லிக் கொள்ளுவாள்.
அப்படி என்ன தான் படிக்கிறார். யாரிடமும் தான் படிக்கிற புத்தகம் பற்றி ஒரு வார்த்தை பேசிக் கொண்டது கிடையாது. புத்தகத்தின் கடைசிப் பக்கத்திற்கு வந்தவுடன் மீண்டும் முதற்பக்கத்தை நோக்கித் திருப்பி விடுவாள். முந்நூறு பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் தான், ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் வாசித்தும் தீராமலிருந்தது. ஒருமுறை மருத்துவமனையில் குளிர்காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட போதும் கூட அவள் புத்தகத்தைக் கையோடு வைத்துக் கொள்ள மறக்கவில்லை.
“படிச்சதையே திரும்பப் படிக்கிறயே,, வேற புத்தகம் வாங்கித் தரட்டுமா“ என ஒருமுறைக்கேட்டேன்.
“ஐம்பது வருஷமா உங்க அப்பாவோட குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். அதென்ன சலிச்சா போச்சு.. கதையில வர்ற மனுசங்களோட பழகிப் போயிட்டேன். அவங்க கஷ்ட நஷ்டங்களைத் தெரிஞ்சிகிட்டு எப்படிப் போதும் போனு பொஸ்தகத்தைத் தூரப் போட முடியும் சொல்லு“ என்றாள் அம்மா
“அப்படி என்னம்மா கதைல படிக்கிறே“ எனக்கேட்டேன்
“படிக்கப் படிக்கக் கதையில வர்ற சின்னசின்ன விஷயங்களை மனசு ரசிக்க ஆரம்பிச்சிருது. கதைல வர்ற பொண்ணுக்கு அவங்க அம்மா ரெட்டை ஜடை போட்டுவிடுறா. சீப்பு தலைமயிர்ல சிக்கிகிடுது. ஏன்டீ தலைய இப்படி வச்சிருக்கேனு மக தலையில அம்மா கொட்டுவைக்குறா.. இதைப் படிச்சவுடனே என்னோட ரெட்டை ஜடை, தெரிஞ்ச பொண்ணுகளோட ரெட்டை ஜடைனு என்னென்னமோ ஞாபகம் வர ஆரம்பிச்சிருது.. எங்கம்மா சீப்பு கிட்ட பேசுவா.. இப்படித்தான் தலையில கொட்டுவா.. ஸ்கூல் படிக்கிறப்போ ரோஸ்கலர் ரிப்பன் ஒண்ணை ரொம்ப நாள் வச்சிருந்தேன். இப்படியான நினைப்பு மனசுல வர ஆரம்பிச்சிருது..
கதையில வர்ற பெரிய விஷயங்கள் எல்லாம் திரும்பப் படிக்கும் போது முக்கியமில்லாமல் போயிருச்சி. எத்தனையோ சின்ன விஷயங்கள். சின்ன சின்ன நிகழ்ச்சிகள். குருவி தானியத்தை ஒவ்வொண்ணா கொத்தி திங்கிறது மாதிரி அது ஒவ்வொண்ணா படிச்சுகிட்டே இருக்கேன். எனக்குத் தான் வயசாகிருச்சி. கதையில வர்ற ஒருத்தருக்கும் வயசாகவேயில்லை“ எனச் சிரித்தாள் அம்மா
“என்னால அப்படிப் படிக்க முடியாதும்மா, போரடிக்கும்“ என்றேன். அதை ஆமோதித்தவள் போலச் சொன்னாள்.
“சின்ன வயசில அடிவானத்தைத் தொடுறதுக்காக ஓடிப்போவேன். ஒட ஒட வானம் பின்னாடி போய்கிட்டே இருக்கும். முடிவே கிடையாது. அப்படித் தான் பிடிச்ச பொஸ்தகமும் முடியுறதேயில்லை. தினம் இந்தக் காவிரி ஆற்றில இறங்கி குளிக்கிறேன். ஒண்ணாவா இருக்கு. அதே தண்ணீர் தான், ஆனா புதுசா தானே ஒடுது. நான் படிக்கிற கதையும் அப்படித் தான்.
ஆம்பளை புத்தகம் படிக்கிறதும், பொண்ணுக புத்தகம் படிக்கிறதும் ஒண்ணு இல்லடா. அதை எல்லாம் சொன்னா புரியாது “என்றாள் அம்மா
புத்தகத்தின் வரி போலவே இருந்தது அவளது பேச்சு.
••
