காதலின் நினைவில்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை என்ற எனது புதிய  நாவலைப் பற்றி  அழகான விமர்சனத்தை திவாகர் ஜெ எழுதியிருக்கிறார்.

அவருக்கு எனது நன்றி

••

காதலின் நினைவில்

திவாகர். ஜெ

உங்களின் பள்ளிப் பருவக் காலத்தில் நீங்கள் கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றதுண்டா? நிச்சயம் சென்றிருப்போம். அதுவும் பெரும்பாலும் தாத்தா – பாட்டி வீட்டிற்கோ அல்லது மாமா வீட்டிற்கோ தான் சென்றிருப்போம் அல்லவா? இக்கதையும் அப்படியொரு கோடை விடுமுறையில் தனது தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஒருவனது கதை தான்.

கதை, முதலில் கதையின் நாயகனான ராமசுப்ரணியத்தின் 40 வயதில் வழக்கமாய் ஒவ்வொரு ஆண்டும் அவனது தோழியான சில்வியாவுடன் சேர்ந்து கொண்டாடும்  கிறிஸ்துமஸ் பண்டிகையினைக் கொண்டாட இவ்வாண்டும் கர்நாடக மாநிலம்  சித்தாபுரா செல்வதிலிருந்து தொடங்குகிறது.

அங்கிருந்து நாவல் ராமசுப்புவின் பார்வையிலேயே பின்னோக்கி விரைந்து, அவனது 8 ஆம் வகுப்பு கோடை விடுமுறையில் தாத்தா வீடிருக்கும் கோவில்படிக்கு வந்தது, சில்வியாவைச் சந்தித்தது அவர்களுக்கிடையேயான நட்பு , அடுத்தடுத்த கோடை விடுமுறைகளில் நட்பு தொடர்ந்தது பின் பிரிவு, மீண்டும் சந்தித்தது என விரிகிறது.

பார்க்கப்போனால், இது ஒரு சாதாரண கதை தான். ஆனால், நம் பால்யத்தைத் தொட்டுச் சென்று, நாமே மறந்து போன – மறந்து போனதாய் நம்புகின்ற நம் வாழ்க்கை கதைகளை நம் கண் முன் நிறுத்துகிறது- ஒரு சிறிய விடுமுறைக் கால காதல் கதை.

நமது பதின் வயதில் புதிதாய் ஒரு பெண்ணின் சினேகிதம் கிடைக்கையில் அவ்வுறவுக்கு – அவளுடன் பேசும் போது ஏற்படும் இன்பக் கிளர்ச்சிக்கு என்ன அர்த்தமென்று புரியாமல் தடுமாறி இருப்போம் தானே? அப்படியாயின் நாம் தான் இக்கதையின் நாயகன். நண்பர்களாய் ஒரு ஆணும், பெண்ணும் பழகுவதைக் கூட இவ்வுலகம் புரிந்து கொள்ளாமல் தன் தீ நாவால் தப்புத்தப்பாய் பேசி உங்களைச் சுட்டிருக்கும் தானே? அப்படியாயின் நீங்கள் தான் இந்நாவலின் நாயகன் – நாயகி.

ஆணின் பார்வையிலேயே நாவல் பயணித்தாலும், பெண்ணாகிய சில்வியாவின் எண்ண ஓட்டங்களையும், அவள் உடம்பிற்குள்ளும், மனதிற்குள்ளும் ஏற்படும் மாற்றங்களையும் கூட சரியாய் அவளின் வார்த்தைகளாலேயே பதிவு செய்துள்ளமை சிறப்பு.

நம் பெயரை மற்றவர் கூப்பிடுவதை விட பிரியமானவர்கள் கூப்பிடும் போது நம் பெயருக்கே ஒரு ஈர்ப்பு வந்துவிட்டதை உணருவோமல்லவா? அப்படித்தான் ராமசுப்பிரமணியம் என்ற தன் பெயரை சுப்பி என்று சில்வியா அழைக்கையில் மயங்கும் சுப்புவின் நிலையினை இவ்வாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர்: *”ப்ரியம் தானே பெயரைச் சுருக்கிக் கூப்பிடச் செய்கிறது. எந்தப் பெயரையும் அழகாக்கி விடக் கூடியவர்கள் பெண்கள்”*

பதின்ம வயதில் ஓர் ஆணுக்கு ஒரு பெண் மீதோ அல்லது ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் மீதோ ஏற்படும் உணர்ச்சிக்கு என்ன பெயர் வைப்பது? காதல் என்பதா? காமம் என்பதா? அல்லது அந்த வயதில் இயல்பாய் இதெல்லாம் தோன்றுவது தான் என்று ஒதுக்கி விடுவதா? இதுவரை உளவியலாளர்கள் இதற்கு ஏதேனும் பெயர் வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இவ்வயதில் தோன்றும் உணர்வை காதலென்று கொண்டாலும் அது கைகூடுவதற்கான சாத்தியங்கள் குறைவே. அதைப்பற்றியும் சுப்புவும் சில்வியும் உரையாடும் ஒரு காட்சியும் நாவலிலுண்டு.

தனக்கு திருமணம் ஆனவுடன் சுப்பு தன் மனைவியிடம் கேட்கிறான்: “உன் ஸ்கூல் பிரண்ட்ஸ் யாரோடயும் டச் கிடையாதா?”

“அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன்” என்கிறாள்.

உண்மையில் எத்தனை வலி பொருந்திய வரிகள் இவை.

இரு ஆண்களுக்கோ அல்லது இரு பெண்களுக்கோ இடையிலான நட்பு இறுதி வரை தொடர்கிறது. ஆனால் ஒரு பெண்ணிற்கும் ஓர் ஆணிற்குமான நட்பு??? அவன் அல்லது அவளின் திருமணத்திற்கு பிறகு??? வாய்ப்பே இல்லை என்ற நிலையில் தான் இன்றைக்கு வரை சமூகம் உள்ளது. ஆனால், அவ்வரியை வாசிக்கையில் எனக்கு தோன்றியது இதுதான்: *என் மனைவியின் பள்ளிப்பருவ நண்பர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் அவரை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களின் நட்பை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.*

பெண்கள் ஒன்றும் வெறும் எலும்பு, தோலாலான சதைப்பிண்டமல்லவே. ஆண்களைப் போன்றே எல்லா உணர்ச்சிகளும் அவர்களுக்கும் பொதுதானே?

சுப்பு – சில்வியாவின் உறவினைச் சரியாய் – ஆழமாய் புரிந்து கொண்ட ஒரே ஆள் சில்வியாவின் மகள் நான்சி மட்டுமே. பழைய சமூகத்திலிருந்து விலகி மலரும் இந்த புதிய சமுதாயம் ஆண் – பெண் உறவினை புரிந்து கொள்ளும் பக்குவத்துடன் தான் வளர்கிறது என்பதனை நான்சியின் மூலமே நிரூபிக்கிறார் நூலாசிரியர்.

உண்மையில் இந்நாவலைப் படிக்கையில், தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளும், பஷீரின் காதல் கடிதமும் உங்களின் மனதில் நிழலாடும். அத்தோடு நாவல் வாசிக்கத் தொடங்கியதிலிருந்தே நம் மனத்திலும் சுப்புவைப் போன்றே சில்வியா சில்வியா சில்வியா என்றே திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

நிச்சயம் உங்கள் வாழ்விலும் சில்வியா போன்றதொரு தோழி இருப்பாள். அவளின் நினைவினை மீட்டெடுக்கவாகினும் நீங்கள் இந்நாவலை வாசிக்கலாம்.

இறுதியாய், நூலிலிருந்து சில வரிகள்:

*–> நாமாக மறதியை ஏற்படுத்திக் கொள்ள முடியாது தானே. தானே மலரும் பூவைப் போன்றதுதான் மறதியும். விரும்பினால் நடந்து விடாது.*

*–> மனிதர்கள் நடமாடாதபோது வீதிகள் பேரழகு கொள்கின்றன.*

*–> ஒரு பெண் நம்மிடம் நமக்கே தெரியாத நற்குணங்களைக் கண்டுகொள்கிறாள். அதை நமக்கும் அடையாளம் காட்டித் தருகிறாள். அழகான தோற்றத்தை விடவும் பெண்களுக்குப் பிடித்திருப்பது இணக்கமான பேச்சும் விருப்பமான செயல்களும் தான்.*

*–> எந்தப் பெயரில் அழைத்தாலும் உறவு என்பது அன்பு காட்டுதல் தானே..*

*–> சின்னஞ்சிறு விஷயங்களின் வழியே வெளிப்படும் அன்பு நிகரற்றது.*

இன்னும் நாவலின் வரிகளிலிருந்தும் சுப்பு- சில்வியின் நட்பிலிருந்தும் என்னால் வெளிவர இயலவில்லை.  வாசியுங்கள்.  வாலிபம் கடந்து பின்னோக்கி பயணித்து உங்களை பால்யத்தின் படிக்கட்டுகளில் அமர வைக்க புத்தகங்களால் மட்டுமே முடியும்.

~ * ~

நூல் : ஒரு சிறிய விடுமுறைக் கால காதல் கதை

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்

பக்கங்கள் : 224  விலை : ₹ 200

தொடர்புக்கு

Phone: 044 2364 4947
https://www.desanthiri.com/

நாவலின் முன்னோட்டம் காணொளி

https://www.youtube.com/watch?v=FWvlecyBDmI

0Shares
0