வாழ்க்கையின் வேஷம்

மலையாளத்தில் வெளியாகி மிகுந்த கவனம் பெற்ற கல்பற்றா நாராயணனின் நாவல், தமிழில் ஷைலஜா மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக வெளிவர உள்ளது,

சுமித்ரா என்ற அந்த நாவலுக்கு  நான் எழுதிய அறிமுக உரை

•••

வாழ்க்கையின் வேஷம்      –  எஸ் ராமகிருஷ்ணன்

மனிதர்களின் வாழ்க்கை மரணத்துடன் முடிந்து விடுவதில்லை போலும், மரணம் உடலின் இருப்பைத் தான் முடித்துவைக்கிறது, சாவிற்கு அப்புறம் மனிதர்கள் நினைவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,

எந்த நினைவுகளை விலக்கியும், வெறுத்தும் ஒதுக்கி வைத்தார்களோ அந்த நினைவுகளில் ஒன்றாக அவர்களும் உருமாறிப்போகிறார்கள், கொதித்து ஆவியாகி வான் உயர்ந்து சென்று, பின்பு குளிர்ந்து மழையாகி, உறைந்து பனியாகி, வெயில் கண்டு உருகி மீண்டும் தன் இயல்பிற்குத் தானே திரும்பிவிடுகிறது தண்ணீர், மனித இருப்பும் அப்படித்தான், மனிதனின் பிறப்பும் இறப்பும் தண்ணீரோடு தொடர்பு கொண்டவை.

சுமித்ராவின் முதல் குளியலும் கடைசிக்குளியலும் அவளுக்கு நினைவிலிருக்காது, குளிப்பது சுமித்ராவின் முக்கிய வேலை, அவள் குளிப்பதில் அதிக விருப்பமுள்ள ஸ்திரியாக இருக்கிறாள், அது வெறும் தண்ணீரோடு உள்ள  பந்தம் மட்டுமில்லை, அவளது மனம் சதா தூய்மையையும் சுத்தத்தையும் வேண்டிக் கொண்டிருக்கிறது, நடப்பு உலகமும் உறவுகளும் அவளைத் தொடர்ந்து மாசுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன, அதை அவள் எதிர்ப்பதில்லை, மாறாக தண்ணீரின் வழியே தன்னைத் தூய்மைபடுத்திவிட முடியும் என்று நம்புகிறாள், ஒரு தாதியைப் போல தண்ணீர் அவளைத் தேற்றுகிறது. தண்ணீரோடு பெண்களுக்கு உள்ள உறவு ஆண்களால் ஒரு போதும் புரிந்து கொள்ளபட முடியாதது

மற்றவர்கள் நினைவில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பது எவ்வளவு மர்மமான புதிர், சுமித்ராவைப் பற்றிய நினைவுகள் அவளது மரணத்தின் சந்நதியில் பீறிடுகின்றன,  ஆமாம் மரணம் ஒரு சந்நதியே தான், பயமும் புனிதமும் ஒன்று சேரும் இடம் சாவு வீடு,

சாவு வீட்டில் ரோஜா மலர்கள் அதன் சுகந்தத்தை இழந்துவிடுகின்றன, உணவு அதன் ருசியை இழந்துவிடுகிறது, மனிதர்கள் தனது இயல்பை இழந்துவிடுகிறார்கள், ஊதுபத்தியின் புகை கூட துக்கத்தின் வாசனையாகி விடுகிறது,

துக்கம் என்ற சிறு சொல் எவ்வளவு எடைகூடியது, அது கரைக்கமுடியாத ஒரு பாறையை போல அல்லவா பறிகொடுத்தவரின் மனதில் ஏறி நிற்கிறது, ஆனாலும் அந்தப் பாறை காலஒட்டத்தில் உப்பாக இளகி கரைந்து போய்விடுகிறது, எந்த துக்கமும் மனித வாழ்க்கை முற்றாக முடக்கிவிடுவதில்லை,

மனிதர்கள் வாழ்வதில் விருப்பமுள்ளவர்கள், சகல நெருக்கடிகளுக்குள்ளும் பசி அவர்களை உந்தித்தள்ளி வாழ்வதற்கான எத்தனிப்பை மேற்கொள்ளச் செய்கிறது. இந்த நாவல் மரணத்தை முதன்படுத்திய போதும் வாழ்தலின் நெருக்கடியை தான் அதிகம் கவனப்படுத்துகிறது

மரணத்தில் கூட ஆணும் பெண்ணுக்கும் பேதமிருக்கவே செய்கிறது, அழுகையின் கதியும் மாறுபடுகின்றன, பெண் இறப்பின் போது மண்சுவரில் பெய்யும் மழையைப் போல நினைவுகளைக் கரைத்துக் கொண்டு ஒடுகிறது அழுகை, அதுவே ஆணின் மரணத்தில் தகரத்தில் பெய்யும் மழை போல உரத்த ஒப்பாரி, ஒங்கிய அழுகை, அங்கே நினைவுகள் கரைவதில்லை மாறாக வெடித்து தெறித்து விழுகின்றன, மயானம் பெண்களின் காலடி படாத உலகம்,

சுமித்ரா இறந்துவிட்டாள், இந்த ஒரு வரி தான் மொத்த நாவல், இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கை அடங்கியிருக்கிறது, சுமித்ராவின் குடும்பம், கணவர், மகள் அவளது இயல்புலகம், அவளோடு அன்பைப் பகிர்ந்து கொண்டவர்கள், அவளுடன் பழகிய மனிதர்கள், அவளைப் புரிந்து கொள்ள தவறியவர்கள், அவளது மரணத்தின் முன்பாக தன்னை உணர்ந்து கொண்டவர்கள், அவள் இருந்த போது அடையாத முக்கியத்துவத்தை மரணத்தின் வழியே அடைவதை காண்கிறவர்கள் எனப் பலரது நினைவுகளின் வழியே சுமித்ரா பீறிடத்துவங்குகிறாள்,

கல்பற்றா நாராயணன் ஒரு கவிஞர், அதிலும் இருத்தலின் வலியை உணர்ந்த சிறந்த கவிஞர், அதனால் தான் நினைவுகளை இவ்வளவு கூர்மையாக, உச்சமாக அவரால் மீட்ட முடிந்திருக்கிறது, இவற்றை சுமித்ராவின் நினைவுகள் என்று தனித்து பிரித்துவிட முடியாது, சுமித்ரா இந்த நினைவுகளுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறாள், விளக்கின் சுடர் தன்னை எரிந்துக் கொண்டு ஒளிர்வதைப் போல.

இறந்தவர்கள் பொய் சொல்வதில்லை என்று அகிரா குரசேவாவின் ரோஷமானில் ஒரு வசனம் இடம் பெறுகிறது, அது பொய் என்பதை இறந்த பலர் இன்றுவரை உறுதி செய்து கொண்டேயிருக்கிறார்கள். வரலாற்றில் பாதி இறந்தவர்கள் சொல்லும் பொய்கள் தானே,

சாமான்ய மனிதனின் மரணம் உலகின் கண்களைப் பொறுத்தவரை ஒரு சம்பவம், ஒரு இலை உதிரல், அவ்வளவே,

மகாபாரத்தில் யட்சன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல வந்த யுதிஷ்ட்ரன் உயிரினங்கள் தினந்தோறும் இறந்து கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்களே – அதுதான் ஆச்சரியம் என்கிறான்,  அந்தப் பதிலை சொல்லும் போது யுதிஷ்டரன் மனம் ஒரு நிமிசம் மரணத்தைப் பற்றி யோசித்து தானே கடந்து வந்திருக்கும்,

மரணம் ஆச்சரியமானதிற்கான முக்கியக் காரணம், சாவு என்பது நமக்கு ஒரு சொல், ஒரு துண்டித்தல், ஒரு உதிர்தல், காலத்திலிருந்து அகாலத்திற்குள் செல்லும் பயணம், விடைபெறல் அவ்வளவே.

பகல் மறைந்து இரவு வரும் போது கண்முன்னே இருந்த காட்சி துண்டிக்கபடுவது போல மரணத்தை எளிய நிகழ்வாகவே பொதுமனம் கற்பனை செய்து கொள்கிறது, மரணத்தை வலியுறச்செய்வது முடிக்கபடாமல் விட்டுப்போன காரியங்கள், ஆசைப்பட்டு நிறைவேறாமல் போன எண்ணங்கள், பகிர்ந்து கொள்ளப்படாத ரகசியங்கள், கரைந்து போக மறுக்கும் தருணங்கள் அவ்வளவே,  அவை மரணத்திற்கு நீண்ட கருநிழலை உண்டாக்கிவிடுகின்றன.

மரணத்தின் சந்நதியில் அதிக நேரம் நிற்பதற்கான திராணி மனிதர்களிடம் குறைந்துக் கொண்டே வருகிறது என்றொரு வரியை கல்பற்றா தனது நாவலில் எழுதியிருக்கிறார், அது முக்கியமான உளவியல் பதிவு, மரணவீட்டில் நிற்பதற்கான தைரியமற்று போவதற்கான காரணம், மர்மமான அமைதி, மற்றும் அழுகை, அந்த அழுகை இறந்தவரின் பொருட்டு மட்டுமில்லை, அது ஒரு நினைவூட்டல், தனக்கும், தன்னை சுற்றிய உலகிற்குமான நினைவூட்டல்

கல்பற்றாவின் நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவு எழுத்தின் மரபில் உருவானது, The Meek One  என்று ஒரு சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார், இறந்து போன மனைவியின் முன்னால் உட்கார்ந்தபடியே அவளைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கெர்ள்ளும் ஒருவனை பற்றிய கதையிது, இந்த நாவலுக்கும் அக்கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை, ஆனால் மரணத்தின் முன்பு மனிதர்கள் தோற்றுப்போய்விடுகிறார்கள் என்ற உண்மையை இருவருமே அவரவருக்கான கதை மொழியில் முன்வைக்கிறார்கள் என்பது தான் பொது ஒப்புமை

கல்பற்றாவின் இந்த நாவலோடு நினைவில் வந்து போகும் இன்னொரு நாவல் சம்பத்தின் இடைவெளி, ஆனால் சம்பத்தின் தினகரன் மரணம் குறித்த தேடுதலில் ஈடுபடுகிறான், அவனை ஆட்டுவிப்பது எதிர்பாராமை, அது மரணத்தின் வழியே தன்னை வெற்றிக் கொள்வதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அந்த நாவலில் கூட தினகரனின் மனைவி மரணத்தைப் பெரிய விஷயமாக கருதுவதில்லை என்று ஒரு வரி இடம் பெற்றிருக்கிறது

பொதுவாக பெண்கள் மரணம் குறித்து அதிகம் பயம் கொள்பவர்களில்லை, ஆண்கள் தான் அதிகம் பயப்படுகிறார்கள், காரணம் அது வரை அவர்களின் அதிகாரத்தில் இருந்த உலகம் கண்முன்னே கைகழுவிப்போய்விடுகிறதே என்ற பதைபதைப்பு,  சுமித்ரா வாழும் போது பல தருணங்களில் சாவைப் பற்றி தனியாக நினைத்து பார்த்திருப்பாள், அது பெண்களுக்கு ஒரு விளையாட்டு, பேச்சில், கோபத்தில் அடிக்கடி சாவைப்பற்றி சொல்லிக் காட்டுவது உண்டு,

சுமித்ராவின் மரணம் அவளது அன்றாட உலகில் இருந்து அவளைத் துண்டிக்கிறது, அவளுக்கு விருப்பமான நிலத்தில், வீட்டில், பழங்கலத்தில் இருந்து அவளைத் துண்டிக்கிறது, அவள் தனக்குப் பிடித்தமான பசுக்களிடமிருந்தும், ப்ரிய மனிதர்களிடமிருந்து அறுந்து போகிறாள், அது ஒன்றும் அவள் வரையில் பெரிய விஷயமில்லை, பிரிவின் வலியை அறிந்து பழகியவள் தானே, இன்மையை இருப்பதை போல பெண்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற புதிரை தான் இந்த நாவல் ஆராய்கிறது

கல்பற்றா நாராயணன் கதையை நீட்டி வளர்த்துக் கொண்டு செல்லவில்லை, மாறாக சிதறடிக்கிறார், ஒற்றைக் கதையில் இருந்து எண்ணிக்கையற்ற கதைகளை நோக்கி நகர்த்தி போகிறார், கம்பளம் நெய்பவன் தனித்தனி நூல்களை கொண்டு ஒரு பூவை, மயிலை, கம்பளத்தில் உருவம் கொடுப்பதை போன்ற அரிய பணியது, அதை எத்தனை அழகான, கவித்துவமான, உணர்ச்சிபூர்வமாக செய்திருக்கிறார் என்பதில் தான் இந்த நாவல் வெற்றிபெறுகிறது

சிறிய நாவல் என்றாலும் இதை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியாது, உண்மையில் இந்த நாவலை பத்து பத்து பக்கமாகவே வாசித்தேன், வாசிக்க வாசிக்க காரணமற்ற துக்கம் மனதை கனக்க செய்துவிடுகிறது, கோட்டோவியர்கள் ஒற்றை கோட்டில் முழு குதிரையின் உருவத்தை வரைந்துவிடுவதை போல ஒரு வரியில் ஒரு கதாபாத்திரத்தின் முழு அனுபவத்தையும் தந்துவிடுகிறார், அது கல்பற்றாவின் சிறப்பு

பயணம், நோயுறுதல், மறக்கமுடியாத ரகசியங்கள், இச்சைகள் என நாவலெங்கும் கடந்தகாலத்தின் குமிழிகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஆண்கள் மிகவும் பயந்தவர்கள் என்று நாவலில் மாதவி சுமித்ராவிடம் சொல்கிறாள், அது நிஜம் என்பது வாசுதேவன் போன்ற மனிதர்களின் வழியாக தெரிகிறது

சுமித்ராவிற்கு உலகிடம் அதிகமான புகார்கள் இல்லை, அவளுக்கு வாய்த்த வாழ்க்கையை விட வேலைக்காரியாக உள்ள எளிய பணிச்சியின் வாழ்க்கை பிடித்திருக்கிறது, அந்த வாழ்க்கையை அவள் ரசிக்கிறாள், உள்ளுக்குள்  அப்படி தானும் வாழ்ந்துவிட விரும்புகிறாள்.  சுமித்ராவின் கவலை அவள் மகளை பற்றி மட்டுமே,

அம்மாவின் சாவிற்கு வந்த மகள் அனுசுயா திடீரென ஒரு முறை தாயை முத்தமிடுகிறாள், இதுவரை பெற்ற முத்தங்களுக்கான விடைபெறல் போலவே அந்த முத்தம் அடையாளப்படுத்தபடுகிறது

நாவல் முழுவதும் கல்பற்றாவின் கவித்துவமான வரிகள் தூய வெளிச்சமாக ஒளிர்கிறது, குறிப்பாக

யார் இப்படி அழுவது என கவனமாக படத்திலிருந்து கவனிக்கும் அப்பாவைப் பார்த்ததும், அவர் இறந்த அன்றைய நாளை விட அதிக துக்கத்துடன் புருஷோத்தமனுக்கு அழுகை வந்தது,

காமம் மனசைத்தீண்டியிராத மனிதரின் பக்கத்தில் உட்காரும் போதுள்ள எல்லையில்லா பாதுகாப்பை தாசனோடு பழகும்போது பெண்கள் உணர்ந்தார்கள்.

வயதான கோமாளிகளின் கோமாளித்தனம் நடிப்பதற்காக அல்ல. அது வாழ்க்கைக்கானது என்பது வேதனையைத் தந்தது.

மிருகக்காட்சி சாலைகளோ, சர்க்கசோ எப்போதும் அவரை வேதனைப்படுத்தின. இதற்கும் மேலான அநாதைகளை அவர் எங்கும் பார்த்ததில்லை

அனுசூயா வந்தவுடன் பிணம் மீண்டும் சுமித்ராவாக ஆனது.

உடன் அழுவது மேலும் சுலபம், ஒன்றாய் நடந்து மலையேறுவது போல. மலையேறுகிறோம் என்றே தெரியாது.

என்பது போன்ற அற்புதமான வரிகள் நாவலின் கதைப்போக்கிற்குள் ஒரு அனுபவத்தையும் தனித்து வாசிக்கையில் மேலதிகமான மனஎழுச்சியும் தருகின்றன

ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு  மிகச் சரளமாக, மூலத்தின் கவித்துவத்திற்கு நிகராக, அதே நேரம் மலையாள எழுத்துக்கே உரிய தனிச்சொற்கள், பிரயோகங்களுடன் வந்திருக்கிறது , தேர்ந்த வாசிப்பும் இலக்கிய ரசனையும்  கொண்டவர் ஷைலஜா என்பதை இந்த மொழிபெயர்ப்பின் வழியே நன்றாக உணர முடிகிறது, அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள், அட்டை வடிவமைப்பும் உள் ஒவியங்களும் சிறப்பாக உள்ளன, ஒவியர் சீனிவாசனுக்கும் என் பாராட்டுகள்

கல்பற்றா நாராயணனின் இந்நாவல் தமிழுக்கு மிகவும் புதியதொரு கதை சொல்லும் முறையை, எழுத்துவகையை, புதிரும் கண்ணீரும் நிரம்பிய பெண்களின் அகவுலகை அறிமுகம் செய்துவைக்கிறது, அவ்வகையில் இதை வாசிக்கும் தமிழ்வாசகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

••••

0Shares
0