அணங்கு

நாடகம்

மேடைஇருள் நிரம்பியிருக்கிறது.  வெளிச்சம் மெல்ல பரவ மிகப்பெரிய மலை ஒன்று சலனமற்று நீண்டு கிடப்பது தெரிகிறது. இரவில் கேட்கும் ஒசைகள் போல பூச்சிகளின் சப்தமும் விட்டுவிட்டு கேட்கும் பறவைகளின் ரெக்கையடிப்பும் கேட்கிறது.மலையின் உயரத்திலிருந்து யாரோ நடந்து வரும் மூச்சொலி கேட்கிறது. நடக்க சிரமமான யாரோ ஒரு பெண்ணின் சப்தம் போல அது கேட்கிறது.

ஒரு இளம் பெண் முதுகில் துôக்க முடியாத ஒரு சுமையை கொண்டு வருபவள் போல மிக சிரமத்துடன்  நடந்து  வந்து கொண்டிருக்கிறாள். அவள் கறுப்பு உடையை அணிந்திருக்கிறாள். அவளது முகத்தில் வேதனையும் உடலில் அசதியும் படிந்திருக்கிறது பாறைகளை மிதித்து ஏறி வருபவள் போல அவளது நடை கடினமாக மாறுகிறது. அவள் இருட்டில் தடுமாறி நடக்கிறாள்.

ஒரு இடத்தில் நின்றபடியே தலையை உயர்த்தி இன்னமும் எவ்வளவு துôரம் நடந்துவரவேண்டும் என்பது போல தொலைவைப் பார்க்கிறாள். பிறகு ஒரு பாறையின் மீது சாய்ந்து கொண்டவளைப் போல ஆசுவாசம் செய்தபடி தனக்கு தானே  சொல்லிக்கிறாள்

அணங்கு :
தொலைவு நீண்டு கொண்டே இருக்கிறது.

எவ்வளவு காலம் நடந்திருக்கிறேன் என்று தெரியவில்லை.

வலி தோள்களை அழுத்துகிறது. கண்களை உறக்கத்தின் விரல்கள் பொத்துகின்றன. குதிங்கால்கள் நடுங்குகின்றன. ஆனால் மனது மட்டும் விழித்து கொண்டேயிருக்கிறது.

இந்த காடும் மலையும் இரவில் ஏன் இப்படி தன்னை உருமாற்றி கொண்டு விடுகின்றன.

இந்த பாறை ஏன் என்னை முறைக்கிறது

மலை ஏன் இரவில் இத்தனை மௌனமாகி விடுகிறது

மரங்களின் இலைகள் கூட உறைந்து போய்விடுகிறதே

இருள் தன் ஆயிரம் விரல்களால் எதையோ தேடிக் கொண்டிருக்கிறது.

எனக்கு இருள் பழகிவிட்டது. இந்த மலையும் காடும் பழகிவிட்டது. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இரவானதும் நினைவுகள் கொப்பளிக்க துவங்கிவிடுகின்றன.

என்னை சுற்றிலும் ஏதேதோ நினைவுகள் சிறகடிக்கின்றன

என் கால்களை அசையவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன

பயம் கொள்ள செய்கின்றன.

நான் பெண் என்று நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன

நினைவுகளின் சரிவில் நடப்பது வேதனை தருவதாக இருக்கிறது

என்றபடியே அவள்
இரண்டு அடி நடக்கிறாள்
 

 என் பெயர் அணங்கு.
 
நான் ஒரு ஆற்றை சுமந்து கொண்டு வருகிறேன்

யாரோ சிரிக்கும் சப்தம் கேட்கிறது

 : யாரோ சிரிக்கிறார்கள்.

  என் முதுகிற்கு பின்னால் சிரிப்பவர்கள் என்னை  பின்தொடர்ந்து கொண்டே வருகிறார்கள்.

அந்த சிரிப்பு என்னை வெறியூட்டுகிறது.

அந்த சிரிப்பு என்னை மூச்சு திணற செய்கிறது.

அந்த சிரிப்பு அருவருப்பாக இருக்கிறது.

ஒரு வேளை என் கதையை கேட்டால் நீங்களும் என் முதுகிற்கு பின்னால் சிரிக்க கூடும்.

பெண்களை பற்றி ரகசியமாக பேசி சிரிக்காத ஆண்கள் எவராவது இருக்கிறார்களா என்ன?

பெண்களை அவமதிக்கும் சிரிப்பு கிருமியை போல பரவிவிடக்கூடியது,

இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்களாம். சொல்லிக் கொள்கிறார்கள் அப்பாவி மனிதர்கள்

ஆனால்

மலை சிரிப்பதற்கு பெயர் தான் அருவி

ஆகாசம் சிரிப்பதற்கு பெயர் தான் வானவில்

விருட்சகளின் சிரிப்பு தான் பூக்கள்

பூமியின் சிரிப்பு தான் நீருற்று

அது மனிதர்களுக்கு புரியவேயில்லை

பல நேரங்கள் மனிதன் சிரிப்பதை காணும் போது தான் பயமாக இருக்கிறது.

என் பெயர் அணங்கு.
 
நான் ஒரு ஆற்றை சுமந்து கொண்டு வருகிறேன்.

ஏதோவொரு காலத்தில் திருடிக் கொண்டு சென்று விட்ட ஒரு ஆற்றை  மீட்டு கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்.

நம்ப முடியவில்லையா. சிரிப்பாக இருக்கிறதா?

ஆற்றை எப்படி துôக்கி வர முடியும் என்று சந்தேகம் வருகிறதா?

சிவனின் கூந்தலில் இருந்து கங்கை வழியும் கதையை நம்புகிறவர் தானே நீங்கள்

பாற்கடலில் பாம்பு மெத்தையில் துயில்கிறான் பரமன் என்று சேவிப்பவர்கள் தானே நீங்கள்

உலகில் அழியும் நாளில் ஒரேயொரு ஜோடி உயிரினங்கள் மட்டும் ஒரு கப்பலில் காப்பாற்றபட்டு விடும் என்ற நம்பிக்கை உங்களுடையது தானே?

எனக்கு வேண்டியது உங்கள் நம்பிக்கையல்ல

உங்களது கவனம்.

      
ஆயிரம் கிளைகள் கொண்ட ஆற்றின் கைகால்களை கட்டிச்சுருட்டி என் கோணிப்பைக்குள் அடைத்திருக்கிறேன். ஆறு தன் நீர்கால்களால் ஒரு குழந்தையை போல முதுகில் எத்திக் கொண்டே வருகிறது.

ஆற்றின் சுமை என் கழுத்து எலும்புகளில் வேதனையை உருவாக்குகிறது. ஆனாலும் கர்ப்ப சிசுவைப் போல ஆற்றை என் உடலோடு சேர்த்து பாதுகாப்பாக கொண்டு வந்திருக்கிகிறேன்

எனக்கென ஒரு அறு வேண்டும்.

எவர் கண்ணிலும் படாமலும், கண்ணீரை போன்று பரிசுத்தமானதாக ஆருக்க வேண்டும்.

என் அசைகளும் கனவுகளும் குமிழ்விடும் ஆறாக அது இருக்க வேண்டும்

எத்தனை பகல் இரவு இதற்காக காத்து கிடந்திருக்கிறேன். இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது.

அவள் எதேவொரு யோசனையுடன் மௌனமானவளை போல தலைகவிழ்ந்திருக்கிறாள். பிறகு எழுந்து கொள்கிறாள். மலையிலிருந்து சிரமத்துடன் கீழ் ஆறங்குவது போல நடக்கிறாள்.தடுமாறுவது போல உடல் நிலை கொள்ள மறுக்கிறது.  சமாளித்துக்கொண்டு திரும்பி பார்வையாளர்களை பார்த்தபடி பேசுகிறாள்.

ஆற்றை மீட்டுக் கொண்டு வருவது எளிதானதல்ல. அது ஐரு போராட்டம்.

ஆறு ஒரு நெளிந்து கிடக்கும் பாம்பை போல பார்வைக்கு தெரிந்தாலும் அது நிஜமல்ல.  மரங்களின் வேர்கள் விடவும் அதிகமான கால்கள்  கொண்டது ஆறு.

ஆறு நிம்மதியற்றது. அதன் விதி நீராலானது. அது பூமியில் எதையோ தேடிக் கொண்டு செல்கிறது.

அதன் சப்தத்தை காது கொடுத்து கேட்டிருக்கிறீர்களா?

உண்மையில் அது ஆற்றின் சப்தமல்ல.

பூமியோடு கொள்ளும் உரையாடலது.

பாறைகளோடும், மண்ணோடும் ஆறு வாய் ஒயாமல் பேசி தீர்க்கிறது.

ஆற்றின் பேச்சை நாம் கேட்பதேயில்லை.

அது பூமியில் தோன்றி மறைந்த கோடானகோடி மனிதர்களின் ஆசைகளை நிராசைகளை துக்கத்தை வேதனைகளை. பிறப்பை இறப்பை  நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

தண்ணீரை நாம் புரிந்து கொள்ளவேயில்லை. 

தண்ணீர் புனையும் ஒப்பனையின் ரகசியத்தை எவரும் அறியவே முடியாது.

அது சில நேரம் புல்லின் நுனியை விடவும் மிருதுவாகவுமிருக்கிறது. சில நேரம் விஷத்தின் கடுமையை விடவும் வலியதாகவுமிருக்கிறது.

தண்ணீரின் கருணையால் தான் பூமி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் தான் மரங்களாக, கனிகளாக, விதையாக தன்னை உருமாற்றிக் கொண்டேயிருக்கிறது.

நாம் மறந்துவிட்டோம்.

நமது பூர்வகதைகளை, நம் வாழ்வு துவங்கிய பள்ளதாக்குகளை, நமக்கு கனி தந்த மரங்களை. நம் வீட்டின் சுவர்களுக்குள் ஒடுங்கியிருக்கும் கற்கள் ஒரு காலத்தில் மலைகளாகயிருந்ததை. நம் உடைகள் ஒரு தாவரத்தின் கருணை என்பதை மறந்து விட்டோம்.

எப்படியாவது நான் என் இருப்பிடத்திற்கு  செல்ல வேண்டும்

ஆற்றை திருடிக் கொண்டு போகின்றவர்கள் அதிகமாகி விட்டார்கள்.

ஆறு யாருடையது என்ற சர்ச்சையில் தண்ணீரை விடவும் அதிகமாக பெருக்கடுத்த குருதிக்கறை இன்றும் உலராமலேயிருக்கிறது..

உண்மையில் யாருடையது அறு?

சூரியனின் முகம் காணாத இருட்புடவில் முட்டி துளைத்துக் கொண்டு பீறிடும் சுனையுள்ள பாறைகளுக்கு  ஆறு சொந்தமா?

இல்லை வீழ்ந்து கிடக்கும் யானைகளை  போல தன் சின்னஞ்சிறு கண்களால் உலகை பார்த்துக் கொண்டிருக்கும் மலையுடையதா ஆறு?

இல்லை வேர் பருத்த விருட்சங்களுடையதா?

தாகவேட்டையில் நாவுலர்ந்து அலையும் மிருகங்களுடையதா?

ஆற்றின் தாய் கருத்த மேகங்கள் தானா?

அதுவுமில்லை என்றால் யாருடையது அறு.

ஆற்றை உண்டாக்கியது யார்? அற்றிற்கு பெயரிட்டது யாருடைய முடிவு? கங்கை யமுனை கோதாவிரி நர்மதை காவேரி என பெண்களின் பெயர்கள் எதற்காக சூட்டப்பட்டன. பெண்ணைப் போலவே ஆறும் புறக்கணிக்கபடுவதால்  தானா?

ஆற்றினை பங்கு போட்டு கொண்டது எவருடைய நீதி?

ஆற்றின் வழிகளுக்கு எந்த கைகள் பாதை போட்டு தந்தன?

என்னிடம் கேள்விகள் மட்டுமே ஊஞ்சியிருக்கின்றன.

கூழாங்கற்களை வைத்து விளையாடுவது போல கேள்விகளை ஆகாசத்தில் துôக்கிபோட்டு விளையாடி களைத்துப் போய்விட்டேன்

எனக்கென ஒரு ஆறு வேண்டும்.

என் ஆசைகளும் கனவுகளும் குமிழ்விடும் ஆறாக அது இருக்க வேண்டும்

என்னுடைய ஆற்றை நான் மீட்டுக் கொண்டு வருகிறேன்.

சோர்வாகயிருக்கிறது. கலக்கமும் பயமும் என் இரண்டு தோள்களின் மீதும் ஏறிக்கொண்டு கூச்சலிடுகின்றன.

நான் வீடு திரும்ப வேண்டும்

என்னை சுற்றிய தனிமை என்னை தின்றுவிடுவதற்கு முன்பு நான் வீடு திரும்ப வேண்டும்

என்றபடி ‘அவசரமாக நடக்கிறாள். ஆனால் உடல்வலு குறைந்து வருவதால் நடை வேகமாகயில்லை.
ஒரிடத்தில் அவளறியாமல் உட்கார்ந்து கொண்டுவிடுகிறாள்.

ஆறு பூமிக்கு வந்ததது ஒரு கதை.

கதையில்லாத ஆறுகளேயில்லை.

ஆதியில் ஒரேயொரு ஆறு மட்டுமே உலகிலிருந்தது. அதுவும் எங்கோ வெகுதொலைவில் மனித கால்தடமே படாத ஆகாசத்தின் உயரத்தில் பாம்பு தன் தலையைத் தானே கவ்விக் கொண்டு படுத்திருப்பது போல தன்னை தானே சுற்றிக் கொண்டு படுத்திருந்தது. அது உறங்கவுமில்லை. விழித்திருக்கவுமில்லை.

ஒரு மனிதன்.

கிழட்டு பருந்தென செம்பட்டை படிந்த மயிருடன் உள்ள வயதான மனிதன். அதைத் தேடி  நடந்து கொண்டேயிருந்தான்.

எத்தனை நாட்கள் நடந்தான் என்று கணக்கேயில்லை.

அவன் வயது சிறகுகள் போல வழியெல்லாம் உதிர்ந்து கிடந்தன. 

அவன் கண்கள் மட்டும் குளத்து மீன்களை போல எதையோ தேடி நீந்திக் கொண்டேயிருந்தன.

ஒரு புழு பழத்தை தின்று தீர்ப்பது போல அவன் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கியபடி நடந்து கொண்டிருந்தான்.

ஆகாசத்தின் உந்தி சுழிபோலிருந்த அந்த ஆற்றினை அவன் கண்டபோது ஒரு மிருகத்தை போல தாவி மொத்த ஆற்றையும் தன் ஒரு மிடறில் உறிஞ்சி குடித்துவிட முயன்றான்

ஆறு சீறியோடிக்கொண்டிருந்தது. தண்ணீரின் விசையை அவன் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.  பிறகு அதற்கொரு பெயர் வைத்தான்.

அதுவரை பெயர் அறிந்திராத ஆறு தன் பெயரை தானே சொல்லிப் பார்த்து சந்தோஷம் கொண்டது.

கிளிக்கு பேசப்பழக்கி தருவது போல ஆற்றிற்கு அதன் பெயரை பழக்கி தந்து கொண்டிருந்தான்.

பிறகொரு நாள் பழக்கபடுத்தபட்ட வீட்டுநாயென ஆற்றை தன் கூடவே கூட்டிக் கொண்டு ஆறங்கி வரத் துவங்கினான்.

நுôறு கால்களால் நடந்து வரும் பூரான் போல ஆறும் மலையை விட்டு ஆறங்கி வரத்துவங்கியது.

அப்படிதான் ஆறு பூமிக்கு வந்தது

இதை சொல்லி முடிக்கும்
போது மேடையின் பின்னாலிருந்து யாரோ ஒருவர் சொல்வது போல ஒரு குரல் கேட்கிறது.

குரல் :

கதை..

வெறும் பழங்கற்பனை.
இதை நம்புகிறாயா நீ?

அவள் பதற்றத்துடன் சுற்றிலும் பார்க்கிறாள்.
யாருமிருப்பதாக தெரியவில்லை. ஆனால்  எதிரொலி போல அதே சப்தம் கேட்கிறது

குரல் : நம்புகிறாயா நீ?

அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே
அவளது நிழல் அருகில் தெரிகிறது.
பயத்துடன் அவள் தன் நிழலைப் பார்த்தபடியே. கேட்கிறாள்.

அணங்கு :  நீ யார்?  எப்படி இந்த மலையின் மீதிருக்கிறாய். உன் குரல் பரிச்சயமானது போலவேயிருக்கிறதே.

அந்த பெண்ணின் நிழல்  அவளோடு பேசுகிறது.

நிழல் : நான் உன் கூடவே வருகிறேன். நீ என்னை
 கவனிப்பதேயில்லை. நான் உன் நிழல்.

சற்றே கலக்கத்துடன் கேட்கிறாள்

அணங்கு : நிழல்கள் பேசுவதில்லை. அவை பொய் உருக்கள். எனது பாதையை திசை மாற்றம் செய்து ஆற்றை திருடிச் செல்ல வந்த மாய உருவம் தானா நீ?

நிழல் பகடி செய்வது போல சொல்கிறது.

   நிழல் :

மாய உரு கொண்டது நானல்ல, ஆறு தான் மாய ஈருவம் கொண்டது.

ஆறு கரைக்குள் ஒடுவதாக நினைக்கிறாயா? கரை ஆற்றிற்கல்ல, நமது பயம் தான் கரையாக உயர்ந்திருக்கிறது. நதி பயமறியாதது.

நான் நிழல். என்னை எந்த நதியாலும் நனைக்க முடியாது.  ஒளி எனது தாய். எனது உடல் ஒரு நாணலை போல அசைந்து கொண்டேயிருக்க கூடியது. நான் ஒரு ரகசியம். நீயறியாத உன் ரகசியம்

அவள் பெருமூச்சிட்டபடியே சொல்கிறாள்

   அணங்கு : ரகசியம்.

ரகசியம்.

என் கால்களிலிருந்து சிரசு வரை ரகசியத்தின் கொடிகள்சுற்றியேறியிருக்கின்றன. திராட்சைக்கனிகளை போல ரகசியம் என் உடல் முழுவதும் கனிந்து தொங்குகின்றன.

சிறுவயதிலிருந்தே ரகசியங்களை உள்ளங்கை மச்சத்தை போல நானே உற்று ஈற்று பார்த்துக் கொண்டு வருகிறேன்

நிழல் மிக அருகில் வந்து பேசுகிறது

நிழல் : ரகசியம் என்று ஒன்றுமேயில்லை.  பயம் தான்
ரகசியமாக வெளிப்படுகிறது.. ஆசையை தான் நாம் பயமாக வளர்த்துக் கொண்டுவிடுகிறோம். உனக்குள் இருப்பது ரகசியங்கள் அல்ல ஆசைகள். வெளிப்படுத்த தயங்கும் ஆசைகள்.

அவள் அவேசமாக மறுத்தபடி சொல்கிறாள்
அணங்கு : எனக்கு ஆசைகளே கிடையாது. நான் வலியாலும்
   வேதனையாலும் பீடிக்கபட்டிருக்கிறேன்.

பரிகாசம் செய்வது போல நிழல் பேசுகிறது.

நிழல் : நீ பொய் சொல்லுகிறாய். உன்னை நீயே எமாற்றிக்
கொண்டு வருகிறாய். ஆசைகள் தான் பொய்யின் விதைகள்

அணங்கு : இல்லை. நான் ஆசைபடுவதேயில்லை. ஆசைகளால்
எனக்கு துக்கத்தையும் வலியை தவிர வேறு எதையும் பரிசாக தர முடிந்ததேயில்லை. என் ஆசைகள் காற்றில் பறந்து செல்லும் மணல்களனெ அடித்து செல்லபட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆசைகளால் பிரயோசனமேயில்லை.

நிழல் பரிகசிப்பது போல சொல்கிறது

   நிழல் : வலி மனிதர்களை உண்மைக்கு மிக இருகில்
 கொண்டுவிடுகிறது.

அவள் சற்றே கலங்கிய குரலில் சொல்கிறாள்

அணங்கு  : உண்மை யாருக்கு தேவையாகயிருக்கிறது.
நாம் பொய்யை உண்டு வளர்க்கிறோம் பொய்யை பரிமாறிக் கொள்கிறோம். பொய்யின் வாசனையால் உலகமே மயங்கி கிடக்கிறது.  பொய் என்னை மூச்சுமுட்டச் செய்கிறது. பொய் மனிதர்களின் மகத்தான கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் பேசப்படும் ஒரே பாஷை.

பிறந்ததிலிருந்துபொய் சொல்லி சொல்லி தானே வளர்க்கபட்டிருக்கிறேன் என் பெயரிலிருந்து துவங்குகிறது பொய். சமைப்பது சாப்பிடுவது ஈடுப்பது உறங்குவது காதலிப்பது கற்றுக்கொள்வது. என எல்லாவற்றிற்கும் பின்னாலும் பொய் ஒட்டிக் கொண்டிருக்கிறதில்லையா?

நிழல் உரத்து சொல்கிறது

நிழல் : உண்மை ஒரு செல்லாத நாணயத்தை போல கையில் எடுத்து
 பார்க்க கூட விருப்பமற்று கிடக்கிறது.

கலக்கத்திலிருந்து விடுபட்டவள்போல அவள் உரத்து சொல்கிறாள்

அணங்கு : நீ போய்விடு. என்னை பின்தொடராதே. உன்னால் என்
மனது குழப்பம் கொள்கிறது.உன் பேச்சு என் நடையை தளர்வடைய செய்கிறது. போய்விடு. என்னை சுற்றி வராதே

என யாரையோ அடிக்க துரத்துவது போல அவள்
சுற்றிலும் ஒடுகிறாள்.

பின் மெதுவாக ஆற்றைத் துôக்கிக் கொண்டு இறங்கி
நடக்கிறாள். மரங்களை விலக்கி கொண்டும் பிளந்து
கிடக்கும் பாதைகளை தாண்டிக் கொண்டும் நடந்து
வருவது போல அவளது செய்கை  மிகவும் சிரமமானதாகயிருக்கிறது.

ஒரிடத்தில் அவள் அமர்ந்து கொள்கிறாள்.மேடையில்
அவள் அமர்ந்திருக்கும் இடத்தை
தவிர மற்ற யாவும் இருளாகின்றன.
ஆகாசத்தை நிமிர்ந்து பார்த்து சொல்கிறாள்

அணங்கு :  பிறந்த குழந்தையை நீராட்டுவது போல எல்லா
ஒப்பனைகளையும் களைந்து மொத்த உலகையும் தன் கைகளால் அள்ளி நீராட்டுகிறது இரவு. 

மீன்களை போல மனதில் கூட்டமாக நினைவுகள் நீந்த துவங்குகின்றன.

இரவின் கண்கள் யாவையும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றன.

இரவிற்கு நேற்றுமில்லை இன்றுமில்லை நாளையுமில்லை.

ஒரு பருந்தைப் போல உறக்கத்தின் கால்கள் நம்மை கவ்விக் கொண்டு பறக்கத் துவங்குகின்றன.

என்றபடி நடக்கத்துவங்குகிறாள்.. யார் மீதோ
மோதியது போல தடுமாறுகிறார்கள்

இரவின் படிக்கட்டில் என்னை தவிரவும் யார் யாரோ உட்கார்ந்திருக்கிறார்கள்.

யார் இவர்கள்?

உட்கார்ந்திருப்பவர்களின் ஒவ்வொருவரின்
முகமாக தாடையை நிமிர்த்திப் பார்ப்பது
போல பார்க்கிறாள். வியப்படைகிறாள். சடசடவென அங்குமிங்கும் ஒடி ஒவ்வொரு முகமாக பார்க்கிறாள்

அணங்கு : இது என் அம்மாவை போலிருக்கிறது. அது என்
தோழியை நினைவுபடுத்துகிறது. இருட்டில் இருப்பவர்கள் என் சகோதரிகள். தெரிந்தவர்கள் பள்ளியில் படித்தவர்கள் தெருப்பெண்கள். இவர்களில் பலரையும் எங்கெங்கோ பார்த்திருக்கிறேன். என்னை இவர்கள் எவரும்  அடையாளமே கண்டுகொள்ளவில்லை. எதற்காக இத்தனை நிசப்தமாக காத்துகிடக்கிறார்கள். ஒருவேளை உலகத்தில் உள்ள எல்லா நிழல்களும் ஒன்று சேர்ந்து ஈட்கார்ந்திருக்கின்றவா?

ஒரு பெண்ணின் முகத்தினை
கூர்ந்து கவனிப்பது போல இருந்துவிட்டு திடுக்கிட்டவளாக சொல்கிறாள்

இது நிழல் இல்லை. கண்கள் அசைகின்றன நாசி துடிக்கிறது.

இது என் அம்மா

என திரும்பி அருகில் போய் கூப்பிடுகிறாள்

என்னை பார். அம்மா,

நினைவிருக்கிறதா

சிறுவயதிலிருந்து சொல்வாயே யாரும் ஏறமுடியாத உச்சியில் இருக்கிறது நாம் பறிகொடுத்த ஆறு என்று. அதை மீட்டுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்.

அம்மா உனக்கு நான் சொல்வது கேட்கிறதா இல்லை கேட்டும் ஆண்டாண்டுகளாக காப்பாற்றி வந்த மௌனத்தில் இதையும் புதைந்துவிடுகிறாயா. ?

சொல் ,

அம்மா நீ ஆற்றை பற்றி கனவுகண்டிருப்பாய் தானே,

அதன் பெருகும் நீரோட்டம் உன் மனதில் சுழன்றுகொண்டிருக்கிறது தானே?

( சற்றே அங்காரமான குரலில் )

அம்மா பேசாமல் இருப்பது தந்திரம் என்று நினைத்துக் கொள்ளாதே அது ஒரு ஏமாற்று. மற்றவர்களை அல்ல உன்னை நீயே எமாற்றிக் கொள்கிறாய்.

அம்மா உன் தொடையில் உள்ள சூடுபட்ட காயத்தை போல மனதின் அசைகளையும் எத்தனை நாட்களுக்கு மறைத்துக் கொண்டிருப்பாய்.

( பழைய நினைவுகளிலிருந்து பேசுபவள் போல)

அம்மா நீ மலையேறியிருக்கிறாயா? மலையை உனக்கு பிடிக்குமா? இங்கு வீடுகளேயிருப்பதில்லை. எதையும் சமைக்க வேண்டிய அவசியமும் ஆல்லை.

அம்மா

சுவரில் அடிக்கபட்ட ஆணியை போல வீட்டோடு நீயும் சேர்ந்து அடிக்கபட்டிருக்கிறாய்.

நம் ரகசியபேச்சுகளில் கனவுகளில் சுற்றிக்கொண்டிருந்த ஆற்றை நான் கொண்டு வந்திருக்கிறேன். அதை பார்க்கிறாயா, கரைகள் இல்லாத அந்த ஆற்றில் நீந்த ஆசைபடுகிறாயா?

தண்ணீரில் தெரியும் பறவையின் நிழலை போல உனக்கும் எனக்கும் விசித்திரமான உறவிருக்கிறது.

அம்மா நான் மறக்கவே மாட்டேன்

என் முதல் அழுகையும் உன் பிரசவ கண்ணீரும் ஒரே நிமிசத்தில் தான் நிகழ்ந்தது. அந்த கண்ணீரின் ஈரம் உன் உடலின் மீது இன்றும் உலராமல் தானிருக்கிறது.

அம்மா. உன் மௌனம் என்னை உன்னிடமிருந்து விலக்கி கொண்டு போகிறது.

உதிர்ந்த கனிகள் மரத்திற்கு ஒருபோதும் திரும்புவதில்லை.

என்றபடி வேகமாக நடக்கிறாள்.
வெளிச்சம் லேசாக தொலைவில் தெரிகிறது.
அதை நோக்கி நடக்கத் துவங்குகிறாள்.
பாறைகளின் மீதும் சிறுபாதைகளிலும் நடப்பவளை போல
மெதுவாக நடக்கிறாள். தொலைவில் ஒரு ஆணின் குரல்கேட்கிறது.
அவள் சுற்றிலும் பார்க்கிறாள். அந்தக் குரல் மிக அருகில் கேட்கத்துவங்குகிறது.

ஆண் :  முன்னொரு காலத்தில் ஒரு பெண் ஆற்றில்
படகோட்டிக் கொண்டிருந்தாள். அவள் பிறந்ததிலிருந்து அவள் உடலில் மீனின் வாசனை வந்து கொண்டிருந்தது. ‘அவள் ஆண்களை விடவும் வலிமையானவள். ஒரு நாள் மூன்று ஆசைகளையும் விலக்கிய ஒரு ரிஷி அவளது படகில் ஏறினான். அவனுக்கு மச்ச வாசனை மயக்கமூட்டியது. காமத்தில் அவள் முன் மண்டியிட்டான். சூரியன் தலைக்கு மேலாக இருப்பதற்கு கூட வெட்கபடாமல் அவளோடு கூடினான்.  அதன் பிறகு அவளுடலில் பரிமளம் வீசத்துவங்கியது. மீன் வாசம் மறைந்து போய்விட்óடது ஆண் பெண்ணிற்கு பரிமளம் உண்டாக்குபவன். காமம் மயிலிறகின் கண்களை போல மினுமினுப்பாக ஒளிரக் கூடியது.

அவள்  திரும்பி திரும்பி பார்த்தபடியே கேட்கிறாள்

அணங்கு என்னை சுற்றிவரும் இந்த குரல் யாருடையது. எதற்காக இந்த கதையை நினைவுபடுத்துகிறான்

திரும்பவும் ஒரு ஆண் குரல் கேட்கிறது

ஆண் :  பெண்கள் நாணலை போல பலவீனமானவர்கள். நுரையை போல மெலிதானவர்கள், ரோஜாவை போல பரிமளம் மிக்கவர்கள்.

அவள் காதைப் பொத்திக் கொள்கிறாள்.

அணங்கு : சொற்கள் கிருமிகளை போல என் உடலில்
நுழைந்து என்னை நோய்மைபடுத்துகின்றன. இனிப்பு தடவப்பட்ட வார்த்தைகளை ருசித்து ருசித்து நாக்கு மழுங்கிப் போய்விட்டது. இனி நான் எதையும் கேட்க மாட்டேன். மரங்கொத்தி துளையிடுவதைப் போல என்னை உன் அலகால் குத்தி துளைத்துக் கொண்டேயிருக்காதே விட்டுவிடு.

இனி நான் எதையும் கேட்க மாட்டேன்.

என்றபடி ஒடுகிறாள்.
இருட்டில் ஏதோ காலில் பட்டு
தடுமாறுபவள் போல குனிந்து பார்க்கிறாள்

குழப்பத்துடன் முன்னும் பின்னுமாக நடக்கிறாள்

அணங்கு : இது என்ன வேட்டையாடப்பட்ட விலங்கு 
குதறுண்டுகிடக்கிறதா?

அவள் குனிந்து அந்த உடலை புரட்டுகிறாள்.

அணங்கு : அய்யோ இது விலங்கில்லை. ஒரு பெண்.
ஸ்தனங்கள் அறுக்கப்பட்டு அடிவயிறு கிழிந்து இறந்து கிடக்கும் ஒரு பெண். யார் இவள் எத்தனை நாளாக கிடக்கிறது இந்த உடல்.

அவள் குனிந்து பார்க்கிறாள்

இவள் யார் என்று எப்படி தெரிந்து கொள்வது.
 
உலகம் ஒரு வேட்டை நாயை போல பெண்ணை துரத்துகிறது.

எத்தனை நாட்களுக்கு இப்படி ஒளிந்து ஒளிந்து வாழ்வது.

இரவில் எந்த மூலையில் எந்த மிருகம் ஒளிந்து தாக்கப்போகிறது ஒன்று பெண் எப்படி தெரிந்து கொள்வது.

பாதுகாப்பான இடம் என்று உலகில் எதுவுமேயில்லை

உறக்கத்தில் கூட  நடுங்கிக் கொண்டே தான் துôங்க வேண்டியிருக்கிறது

ஒடுங்கிக் உட்கார்ந்து கொண்டுவிடுகிறாள்.

வேண்டாம்
நான் மலையை விட்டு கிழே இறங்கி போகவே வேண்டாம்.
உலகிற்கு தேவை கேளிக்கையும் போகமும் அதிகாரமும் வன்முறையும் மட்டுமே. நான் தரையிறங்க விரும்பவில்லை.

அவள் வேகமாக பின்னால் போகிறாள்.
சுற்றிலும் திரும்பி பார்க்கிறாள். எங்கு செல்வதென
தெரியாத குழப்பம் பீடித்துக் கொள்கிறது,
மனச்சோர்வுடன் சொல்லிக் கொள்கிறாள்

பின்னால் போவதற்கு தானா இத்தனை நாட்களாக ஆற்றை சுமந்து கொண்டு இறங்கிவருகிறேன். நான் என்ன செய்வது, எங்கே போவது என்று எனக்கு தெரியவில்லை. குழப்பம் என் கண்களை பொத்திக் கொண்டுவிட்டது. நான் முன்னால் போவதா இல்லை பின்னால் போவதா?

திசை தெரியாமல் அங்குமிங்கும் ஒடுகிறாள்.
முடிவில் விடிகாலையின் ஒசை பிறக்கிறது.
அவள் ஒரு உயர்ந்த பாறையொன்றின்
மீது நின்றவளாக தொலைவை பார்த்து பெருமூச்சிட்டுக் கொள்கிறாள்.

வண்ணத்துப்பூச்சிகளை போல வீடுகள் தொலைவில் மிதந்து கொண்டிருக்கின்றன. எனக்கென ஒரு ஆறு உள்ளது. இதோ நான் வீடு திரும்புகிறேன்

வேகவேகமாக நடக்கிறாள். மலைசரிவில்
இறங்கும்போது ஏற்படுவது போல
உடல் அவளது நிலையில் இல்லாமல் முன்னால் போகிறது.

தெருவும் மனிதர்களும் கைதொடுமருகில் வந்துவிட்டார்கள். நான் தரையிறங்கிவிட்டேன்.

என் கால்கள் மண்ணை தொட்டுவிட்டன.

என்றபடி ஆசுவாசமாக சந்தோஷம் கொள்கிறாள்.

இனி என் ஆறு என் கூடவேயிருக்கும். இனி இந்த ஆறை என் வாழ்விடத்தில் ஒட விடுவேன்.

என்று சந்தோஷமாக சுற்றுகிறாள்.
இப்போது எதிர்பாராமல் பின் அரங்கிலிருந்து
இந்த சப்தங்கள் எழுகின்றன.

இது அரசாங்கத்தின் இடம். இங்கே ஆறு ஒடுவதற்கு இடமில்லை. 

இது தனியார் இடம்

இது சாலை

இது பள்ளிக்கூடம்

இது அலுவலகம் இங்கே ஆறு ஒடுவதற்கு இடமில்லை. 

இது தொழிற்சாலை

இது விளையாட்டுமைதானம்

இது முதியோர் காப்பகம்

இது கோவில்

இது தெரு இங்கே ஆறு ஒடுவதற்கு இடமில்லை. 

இது சந்து

இது நண்பனின் வீடு

இது ஊதிரியின் வீடு.

இது படுக்கையறை இங்கே ஆறு ஒடுவதற்கு இடமில்லை. 

இது சமையலறை

இது பூஜையறை

     இடமில்லை.
     இடமில்லை.
     இடமில்லை.
அனுமதியில்லை.
தேவையில்லை

இங்குமிங்கும் விரட்டப்படுகிறாள். என்ன செய்வதென தெரியாமல் அவள் பயத்துடனும் நடுக்கத்துடனுடன் தனது ஆற்றை
துôக்கிக் கொண்டு நடக்கிறாள்.

என்னுடைய ஆற்றை நான் எங்கே வைப்பேன்.

எது எனது இடம்.

எது எனது அடையாளம்

என் ஆற்றை நான் சுமந்து கொண்டே திரியவேண்டியது தானா?

எனது ஆற்றினை நான் எங்கே வைப்பது.

கேள்விகளை விளையாட்டுகற்களை போல ஆகாசத்தில் வீசி விளையாடிக் கொண்டே இருக்க வேண்டியது தானா?

புதைமேடுகளை போல  தனித்து ஒதுக்கபட்டு மௌனமாக தான் வாழவேண்டுமா?

என்னுடைய ஆற்றை நான் எங்கே வைப்பேன்.
 

அவளது குரல் அப்படியே ஒடுங்கி தேய்கிறது.
மேடையில் இருள் மெலிதாக பரவுகிறது.

***

0Shares
0