அன்றாடம் ஏதோவொரு செய்தியோ, நிகழ்வோ மறக்கமுடியாதபடி மனதில் பதிந்துவிடுகிறது. சில நாட்கள் காலையில் தூங்கி எழுந்து கொள்ளும் போதே மனதில் ஒரு குறிப்பிட்ட திரைப்படப் பாடலின் வரி தோன்றி அந்தப் பாடலை கேட்க வேண்டும் என்ற ஆசையை உருவாக்குகிறது. எதற்காக அப்பாடல் மனதில் தோன்றியது என அறிய முடியாது. ஆனால் பாடலைக் கேட்கும் போது மனது சந்தோஷம் கொள்கிறது. அப்போதேல்லாம் நிகழ்காலத்தில் ஒரு காலும் கடந்தகாலத்தில் ஒரு காலும் வைத்து நடப்பது போலவே தோன்றுகிறது.
இன்று காலையில் அப்படி தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க என்ற வரிகள் வந்து போயின. தண்ணிலவு என்ற சொல்லே குளிர்ச்சியாக இருந்தது. பாடலைக் கேட்டு முடியும் போது தாழை விழுது அசையும் காட்சி மனதில் தோன்றி மறைந்தது. மனதில் தண்ணிலவு தேனிறைக்க என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சுவைத்தபடியே இருந்தேன்.

எனது நடைப்பயிற்சியின் போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்திலுள்ள வீட்டின் பால்கனியில் கட்டிப்போடப்பட்டிருந்த நாயைக் கண்டேன். அந்த நாய் மண்தரை அறியாதது. தொட்டிச்செடியை போலவே அந்த நாயும் பால்கனியில் வளர்க்கிறது. ஆனால் தொட்டிச் செடியினைப் போல நாய் மௌனமாக இருக்க மறுக்கிறது. சாலையில் செல்லும் வாகனங்களை, பள்ளி சிறார்களை, வாக்கிங் போகிறவர்களை, பறக்கும் காகங்களைப் பார்த்து குரைத்தபடியே உள்ளது. அந்த நாயைப் பார்க்க மிகவும் பாவமாக உள்ளது. உணவு கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த நாய் பால்கனியில் வாழுகிறது. அதற்குத் தான் ஒரு நாய் என்பதே மறந்து போயிருக்கவும் கூடும். தெரு நாய்கள் எதுவும் பால்கனியில் வாழும் நாயைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை. யாரோ ஒரு வயதானவரின் துணையாக உடனிருக்கும் அந்த நாய் அந்தரத்தில் வாழுகிறது. பறவைகளைப் பார்த்துக் குரைக்கிறது பாவம். நகரம் மனிதர்களை மட்டுமில்லை நாய்களையும் அந்தரத்தில் நிறுத்தியிருக்கிறது.
••
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியனின் நேர்காணல் ஒன்றினைப் பார்த்தேன். 91 வயதைக் கடந்தவர். தனது அரசியல்வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது தான் இதுவரை பத்து லட்சம் பேருக்கும் மேலாகக் கைகுலுக்கியிருக்கிறேன் என்கிறார். நம் ஊரில் கைகுலுக்கும் பழக்கம் குறைவு. ஆனால் அரசியல்தலைவர்கள் பலருக்கும் வணக்கம் சொல்லியிருப்பார்கள். ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை என்பது இது போலப் பல்லாயிரக்கணக்கான முறை கைகூப்பி வணக்கம் செய்வது என்பது வியப்பளிக்கிறது.
எந்த அரசனும் எந்தக் கதவையும் தட்டியதேயில்லை. அதற்கான தேவையே கிடையாது. கதவை திறந்துவிட எப்போதும் சேவகர்கள் இருப்பார்கள் என்று படித்த போது அரசனைப் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பம் மாறியது.. அரசனின் தனிமையும் அரசனின் பயமும் சாமான்யன் அறியாதது. சாமானியனின் விலையற்ற சந்தோஷங்களைக் கொண்டவன்.
கனேடிய பிரதமர் பத்து லட்சம் கைகுலுக்கலில் எந்தக் கையை அவசரமாக உதறியிருப்பார். எந்தக் கையைப் பற்றிக் கொண்டதற்காக வருத்தப்பட்டிருப்பார். எந்தக் கைகுலுக்கல் மறையாத நினைவாக மிஞ்சியிருக்கும். எல்லாவற்றுக்கும் பின்னும் சொல்லப்படாத கதை ஒன்று ஒளிந்திருக்கிறது
•••