ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே.
– அலெக்சாந்தர் ரஸ்கின்
அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற சிறார் நூலை நா.முகம்மது செரீபு மொழியாக்கம் செய்திருக்கிறார். சுவாரஸ்யமான சிறார் நூல்.

தனது தந்தையின் பால்ய நினைவுகளைக் கேட்பதில் பிள்ளைகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதுவும் பள்ளி நினைவுகளை விவரிக்க துவங்கினால் இப்படி எல்லாம் நடந்ததா என்று வியப்படைவார்கள்.
தந்தையோ, தாயோ தான் படித்த பள்ளிக்குப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் காட்ட வேண்டும். தனது பால்ய நண்பர்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும். அவர்கள் உருவானவிதம் பற்றி பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த நூலில் ரஸ்கின் தனது சிறுவயது நினைவுகளைச் சுவைபட விவரித்திருக்கிறார்.

தன் மகள் சாஷா சிறுமியாக இருந்த போது அவளுக்கு அடிக்கடி ஜலதோஷம் தொண்டைவலி. காதுவலி என ஏதாவது ஒரு தொல்லை ஏற்பட்டு அவதிப்படுவாள். அதுவும் காதுவலி வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். படுக்கையில் உறங்கமுடியாமல் தவிப்பாள். அது போன்ற நேரத்தில் அவளைச் சாந்தப்படுத்த அவளுக்குச் சொல்லிய கதைகளே இந்த நூல் என்கிறார் ரஸ்கின்.
இப்போது சாஷா வளர்ந்து பெரியவளாகி விட்டாள். அவளே நான் சிறுமியாக இருந்த போது என்று கடந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள்.
சிறுவயதில் அவள் கதை கேட்க விரும்பினால் காது வலிக்கிறது என்று பொய்யாக நடிப்பாள். அந்த ஆசையின் பொருட்டு தான் சொல்லிய கதைகள் தன் வாழ்வில் உண்மையாக நடந்தவை. எல்லா தந்தைகளும் இது போல கதைகள் கொண்டவர்கள் தான் என்கிறார் ரஸ்கின்
ஆனால் பெற்றோர்கள் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் கிடைக்காமல் போன விஷயங்களையும் திரும்பத் திரும்ப பிள்ளைகளிடம் சொல்லும் போது அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். விலகி ஒடுகிறார்கள்
எனது நண்பர் தான் பள்ளிக்கு ஐந்து மைல் நடந்து போய் வந்த கதையை மகளிடம் பலமுறை சொல்லி சொல்லிச் சலித்துப் போக வைத்துவிட்டார். அவர் பேச முயன்றாலே மகள் உன் புராணத்தை ஆரம்பிச்சிட்டயா என்று காதைப் பொத்திக் கொண்டுவிடுவார். இப்படி பிள்ளைகளை வதைக்க கூடாது.
ஆனால் மறக்கமுடியாத நினைவுகளை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்தால் அது அவர்கள் மனதில் ஆழமான பதிந்து போய்விடும். பெரும்பான்மை பெற்றவர்கள் தனது பால்யவயதின் ஏக்கங்களைப் பிள்ளைகளின் வழியே தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அது நிறைவேறாத போது ஏமாற்றம் அடைகிறார்கள்.
ரஷ்ய எழுத்தாளரான அலெக்சாண்டர் ரஸ்கின் பெலாரஸில் பிறந்தவர். பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய இவர் மாஸ்கோவில் வசித்துவந்தார். தனது கவிதைகள் மற்றும் கதைகளின் மூலம் ரஷ்ய இலக்கியத்தில் தனியிடம் பிடித்தவர் ரஸ்கின். When Daddy was a little boy இவரது புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த கதைகள் யாவும் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளே. அதை சுவாரஸ்யமாக சொல்லிய விதம் பாராட்டிற்குரியது.
தனது அழகான வண்ணப்பந்து ஒன்றை அது மோதி வெடிக்கிறதா இல்லையா என பரிசோதிக்க ஒடும் காருக்குள் உருட்டிவிட்டுப் பார்க்கிறான் சிறுவன். முடிவில் பந்து வெடித்துவிடுகிறது என ரஸ்கினின் வேடிக்கையான அனுபவத்துடன் இந்த நூல் துவங்குகிறது. ஒவ்வொரு அனுபவமும் இரண்டோ மூன்றோ பக்கங்கள். அதற்குள் மறக்க முடியாத நிகழ்வுகளை ரஸ்கின் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சர்க்கஸ் பார்க்கச் சென்ற ரஸ்கின் வீடு திரும்பித் தனது நாயை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போலப் பழக்க முயன்றது நகைச்சுவையான அனுபவம். சிறுவயதில் அவருக்குப் புத்தகம் படிப்பதில் இருந்த ஆர்வம். அவர் படித்த புத்தகங்கள் பற்றி விவரிக்கிறார். இந்த ஆர்வத்தால் தானே பாடல்களைப் புனைந்து பாடும் திறமையை உருவாக்கிக் கொள்கிறார். தான் புனைந்த முதல்பாடல் எப்படியிருந்தது என்பதையும் ரஸ்கின் குறிப்பிடுகிறார்

பெரியவன் ஆனதும் என்ன ஆகப்போகிறாய் என்ற கேள்வியைச் சந்திக்காத குழந்தைகளே இந்த உலகில் கிடையாது. பள்ளியில் இந்தக் கேள்வியை கேட்டதும் பலரும் டாக்டர், கலெக்டர் என்று சொல்வார்கள். அவர்களில் எத்தனை பேர் டாக்டர் அல்லது கலெக்டர் ஆனார்கள் என்பது கேள்விகுறி. இந்தக் கேள்வியை தந்தையும் எதிர்கொள்கிறார். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் ஒரு பதில் சொல்லுகிறார். அதில் ஒருமுறை தான் ஒரு நாயாக மாற விரும்புவதாகச் சொல்கிறார். விநோதமான ஆசையில்லையா.

ஜெர்மன் படிக்க முயன்று தோற்றுப்போனது, பள்ளிக்குத் தாமதமாகப் போனது, வீட்டில் சினிமா பார்க்க கூடாது என்று தடுத்தபோது செய்த குறும்பு. ஒவியம் வரைய ஆசைப்பட்டது, காய்ச்சல் வந்து மருத்துவரைப் பார்க்க போய் பயத்தில் அவரைக் கடித்து வைத்தது என சுவாரஸ்யமான நினைவுகளை ரஸ்கின் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தக் கதைகளைப் பெற்றோர்கள் வாசித்து பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் வெறும் கதையைச் சொல்லாமல் ரஸ்கின் போலத் தனது பள்ளிவயது அனுபவங்களை இணைத்துச் சொல்ல வேண்டும். அது வாசிப்பை மேம்படுத்துவதுடன் அப்பா, அம்மாவைப் புரிந்து கொள்ளச் செய்யும்
இந்தக் கதையில் ரஸ்கின் சித்தரிக்கும் வாழ்க்கை இன்றில்லை. ஆனால் அந்த குறும்புதனங்கள், ஆசைகள். ஏமாற்றம், சந்தோஷம் அப்படியே சிறார்களிடம் இன்றுமிருக்கிறது. அது தான் இந்தக் கதையை நெருக்கமாக்குகிறது. இந்த கதைகளுக்கு வரையப்பட்டுள்ள ஒவியங்கள் யாவும் மிக அழகானவை. அதில் காணும் அப்பாவின் கண்ணாடி அணிந்த சித்திரமே கதை சொல்லத் துவங்கி விடுகிறது.
••