மஞ்சுநாத்
சைக்கோ என்ற வகைமையில் வாழ்ந்து வந்தவர்களை வாழ்ந்து வருபவர்களை எவ்விதப் பொருளில் வகைப்படுத்துவது. வரலாறு அவர்களை ஒரு பட்டியலாக மட்டுமே வகைமைப்படுத்தியுள்ளது. மனநோயாளிகளாக அவர்கள் மீது கருனை கொள்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை. அவர்களுக்கு மனம் இருக்கிறது. சாமானியன் மனதைவிட அது சிறப்பாகவே செயல்புரிகிறது. துடிப்பான வேகத்தோடு செயலாற்றும் ஒன்றிற்கு நோயின் சாயத்தைப் பூச முயல்வது அனர்த்தம் மட்டுமல்ல ஆபத்தும் கூட.
மனதின் செல்வாக்கிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களைச் சைக்கோவாகப் பொருள் கொள்வதில் ஒரு உடன்பாடு உள்ளது. இதைக் குறைந்தபட்ச உயிர்வாழ்தலுக்கான யாசக மனமல்ல. மனப்பிறழ்வற்ற அதிகாரம். தனது மன அடிமைத்தனத்தின் நீட்சியாக வளரும் ஆபத்தான கரம் அது. அதன் வல்லமை அசூரத்தனமானது. அது தனது பசிக்கு எதை வேண்டுமானால் உணவாக்கிக் கொள்ளும்.
நியாயம்-அநியாயம், தர்மம்-அதர்மம், நல்லது-கெட்டது, ஒழுங்கு -ஒழுங்கின்மை, இன்பம் – துன்பம், நீதி-அநீதி இந்த இரண்டுங்கெட்டான் கருத்தியல்களுக்கு அப்பாற்பட்டது அதிகார ஆட்சி பீடத்தின் தராசு. தேவைப்படும் போது தேவையானது உயரும். அதுவே உயர்வு. உயர்வானது. இவ்வகைக் கரம் கொண்ட அதிகார மனம் இரண்டு கட்டமைப்புகள் வழியே தன்னைப் பிரதிபலித்துக் கொள்கிறது. ஒன்று ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நியதியின் வெளிப்பாடு. மற்றொன்று ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட நேர்மாறான சிதைவின் வெளிப்பாடு.
துரதிர்ஷ்டவசமாக இவ்விரண்டு கட்டமைப்புகளின் பிரமாண்ட கோரைப்பற்களும் சமூகத்தின் குருதியில் நீராட்டி கொள்வதில் முனைப்போடு செயல்பட்டுள்ளன. அதன் குருதி கரைப்படிந்த வரலாற்றின் சிவப்பு பக்கங்களின் பிரகாசத்தை இடக்கை நமக்குப் புரட்டி பார்வை புலனில் ஆழமாகக் காட்சிப்படுத்துகிறது.
யோக விஞ்ஞானத்தின்படி மனித உடலின் இடப்பாகத்தில் இருப்பது இடா வலப்பாகத்தில் இருப்பது பிங்கலா. இந்நாடிகள் சமநிலை அடையும்போது மிகப் பெரும் சக்தியோட்ட வழித்திறப்பின் பாதையான சுஸுமுனா திறந்து கொள்ளகிறது. ஆனால் சமூக ஞானத்தைப் பொருத்தவரை மேல்தட்டும் மற்றும் கீழ்தட்டும் எவ்வகையிலும் சமநிலை சாத்தியற்றதாக உள்ளது. அது ஒருபொழுதும் நிகழ்ந்ததும் கிடையாது என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை.
நிலவும் சூரியனும் ஒருபோதும் ஒன்றாகக் காட்சியளிப்பதில்லை. ஒருவேளை உதயத்திலோ அஸ்தமனத்திலோ சில நொடிகள் நிகழலாம். பின்பு ஏகபோகத்தின் ஒரு சார்பு ஆட்சியின் துவக்கத்தின் முன் அறிகுறியே அது.
ஈடில்லாத அதிகாரத்தின் ஆளுமை கொண்டவன் தன் மனதிடம் தினம் தினம் தோற்றுப்போகும் சூதாடி. சகிக்க முடியாத தோல்வியைத் தனது நிழலில் உள்ள எளியோர்கள் மீது பிரயோகிப்பது என்பது ஏதேச்சதிகாரத்தின் பசியாற்றும் குரூரம். ஆனால் இப்பசி ஒருபோதும் தீராத அகோரப்பசி. இது அரசனிடம் மட்டுமல்ல சமூக வரிசையில் ஒருபடி மேலே அமர்ந்துள்ள ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது தன் கீழ் இருப்பவர்கள் மீது குறி நீட்டி சிறுநீர் கழிப்பதை தங்கள் உரிமையாகவே கருதிக் கொள்கிறார்கள்.
ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நியதிகள் வெளிப்பாட்டின் சுயநல உதாரணப் புருஷனாக மிளிர்ந்த அப்துல் முஷாபர் மொகதீர் முகமது ஒளரங்சீப் பரத்துபட்ட இந்துஸ்தான்த்தை தனது உள்ளங்கையில் வைத்து ஆண்ட பேரரசர். இருந்த பொழுதும் அவரது மனம் ஒரு கைப்பாவையாக அவரைக் குனிய வைத்துச் சலாம் போட வைத்த கதையை இடக்கை பேசுகிறது.
பாதுஷா ஒளரங்கசீப் பலருக்கு தனது சிவப்பு முகத்தைத் தாரளமாகத் தரிசனம் தந்தபோதிலும் அவரது சாதாரண இறுதி ஆசைக்கான வரத்தை அவரது மகன் நிராகரித்து விடுகிறான். மனதின் கயமைத்தனத்தில் இன்பம் காணும் ஆட்சி துர்மரணத்தின் நிழலை மட்டுமே விதைக்கிறது.
ஒளரங்கசீப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் சத்கர் தேசத்தை ஆட்சி செய்து வந்தவன் சிற்றரசன் பிஷாடன். இவன் இரண்டாவது வகைக் கட்டமைப்பு கொண்டவன்.
ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்ட நேர்மாறான சிதைவின் வெளிப்பாடு கொண்டவன். நடுநிசியில் தனது பட்டத்து யானையின் கண்களைச் சிதைத்து அதன் அலறலில் தூக்கமில்லாத தனது இரவுகளைத் தாலாட்டி கொள்பவன். இவனது நீதி பரிபாலனம் பல அப்பாவிகளின் நிஜவாழ்வு கதையின் சலிப்பை குறைத்து புனைவின் வசீகரிப்பை தரும் வல்லமை கொண்டது. இதனால் தான் காலா எனும் சிறைச்சாலை நகரம் கதைகளின் சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது. நல்லாட்சியும் நீதி வழுவாமையும் பொய்யமை கலந்த சரித்திர மாயைகள்.
தூமக்கேது போன்ற போன்ற எளிய மனிதர்கள் புனைவின் பின்னால் இருந்து நமது மனசாட்சியைக் கிளறச் செய்யும் ஒளிக்கதிர்கள். தேசமுழுவதும் பயனப்பட்டாலும் தூமக்கேது தனது மூலத்தை அடையாமல் நம்மைப் பரிதவிக்க விடுக்கிறான். அவன் விட்டுச் சொல்லும் ஒவ்வொரு புனைவு கதறலும் மாயக்கரம் கொண்டு நமது காதுகளைச் செவிடாக்கி விடுகிறது
ஒருவன் பேரரசனாக இருக்கலாம். சிற்றரசனாக இருக்கலாம். ஏன் நதிதிக்கரையில் சுற்றித்திரியும் சம்புவாகவும் இருக்கலாம். தங்களது செயல்களால் சேகரித்துக் கொள்ளும் நினைவலைகள் தன்னுருவம் கொண்டு விழிகளில் மிதந்து வரும் பிணம் போல் அவர்களது காட்சியின் சுயரூபத்தைத் தகர்க்கின்றன.
ஆண் உருவில் பெண்மை உணர்வை கண்டறிந்த ஒளரங்கசீப்பின் நெருக்கமான பணியாள் அஜ்யாவின் இறுதிக்காலமும், சதுரங்க ஆட்டத்தில் யாவரையும் தோற்கடித்துப் பிஷாடனின் அடிமைத் தோழனான மனிதரை போல் பேசும் அநாம் என்கிற குரங்கின் இறுதிக்காலமும் ஒன்று போலவே நிகழ்கிறது. இது நாயின் மலம் போன்ற அநீதியின் தூர்நாற்றத்தை தன் வாழ்நாள் முழுவதும் முகர்ந்து திரியும் தூமக்கேதுவின் துயரத்தை போன்றது.
துயரம் பொதுவானது பாகுபாடற்றது. சமநிலை கொண்டது. அது விரும்பாத இடைக்கையாக இருந்த போதிலும் உடலையும் சமூகத்தையும் விட்டு நீங்காமல் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும்.
மல்லாங்கிணற்றிலிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட காலப்பொக்கிஷமான தங்க கதைச்சிமிழிலிருந்து கசியும் செந்தூரத்தின் துளிகளாக எஸ்.ரா வின் எழுத்து ஒரு நுண்ணோவியம் போல் நம்மை வியக்க வைக்கிறது. நமது பார்வையைக் கூர்மையாக்குகிறது. மாயபுனைவுகளில் நம்மை மயக்கும் அதே வேளையில் அதனுடன் சாரமாக்கப்பட்ட உண்மையின் தரவுகள் சங்கின் வழியாக நமக்குச் சிறிது சிறிதாகப் புகட்டவும் படுகிறது.
வரலாறு வியாப்பானதுமில்லை. உவப்பானதுமில்லை. அது நமது நிகழ் வாழ்வை கட்டமைத்து கொள்ளவும் மனதை நம் கட்டுப்பட்டில் வைத்துக்கொள்ள உதவும் மாயக்கருவி. இடக்கையோடு கை குலுக்குவது மரபு பிழை மரியாதை குறைவு என்ற கருத்தியல்களைக் கடந்து இடக்கையை உள மகிழ்வோடு வணங்குகிறேன்.