இந்தியாவின் மகத்தான இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தனது சொந்த ஊரான காசி பற்றியும் தனது இசை வாழ்க்கையின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்ட கட்டுரை. அட்சரம் இதழில் வெளியானது.
••

பனாரஸில் மழைக்காலம் துவங்கியிருக்கிறது. கங்கை நதிக் கரையோரங்களில் அதிகாலை நேரம் ரம்மியமானது. படித்துறைகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. குவாலியர் ராஜா இந்தூர் அரசர் எனப் பல்வேறு ராஜாக்களும் கட்டிய படித்துறைகளில் வேகமான கங்கையின் அலைகள் மோதுகின்றன. கங்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதே இசை கேட்பது போலவேயிருக்கிறது. இந்தப் படிக்கட்டுகளில் தான் முப்பது வருடங்களக்கு மேலாகச் சாதகம் செய்திருக்கிறேன். எனது மாமா, தாத்தா பலரும் இங்குள்ள கோவில்களின் பூஜைகளில் எத்தனையோ முறை இசையை வாசித்திருக்கிறேன்.
எனது வீட்டின் உயரத்திலிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருப்பது மனதிற்கு விருப்பமானதாகயிருக்கிறது. இந்த உலகம் இசையால் நிரம்பிக் கொண்டிருக்கிறது.
இசைக்கு மதம், சாதி பேதமில்லை. குரு சிஷ்யர்கள் என்பது கூட முக்கியமுமில்லை. இப்போதுள்ள குருக்கள் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். பணம் வாங்குவது தவறில்லை. ஆனால் அதற்கான பொறுப்பினை விட்டு விடுகிறார்கள். என் சீடர்களிடமிருந்து நானும் பணம் வாங்குகிறேன். ஆனால் அவர்கள் எனது வீட்டு உறுப்பினர்களாகி விடு வார்கள். என்னோடு சேர்ந்து தங்கி, சாப்பிட்டு வாழ்கிறார்கள். ஜெகதீஷ் என்ற சீடன் என் வீட்டில் 11 வருடமாக வாழ்ந்து வருகிறான். ஒருமுறை ஒரு இந்து எப்படி உங்கள் வீட்டில், உங்களோடு சேர்ந்து வாழ்வது எனக் கேட்டார்கள். என்னிடம் இசைகற்றுக் கொள்பவர்களுக்குள் எவ்விதமான பேதமில்லை, இந்து, முஸ்லீம் எனப் பிரிவு கிடையாது. அவர்கள் இசையைக் கற்க வந்தவர்கள் அவ்வளவே.
முன்பு பல் உஸ்தாத்கள் பண்டிட்கள் குறிப்பிட்ட சில ராகங்களைத் தனது சொந்த மகன்களுக்கு மட்டுமே கற்றுத்தருவார்கள். சீடர்களுக்குக் கற்றுத்தர மாட்டார்கள். அது தவறான செயல். கற்றுக் கொடுப்பதன் வழியேதான் நாம் வளரமுடியும். பார்க்க இயலாத இசைக் கலையினைத் தனது சங்கீதத்தைத் தன்னோடு மரணத்தில் கொண்டு செல்லமுடியுமா என்ன?
பாகிஸ்தான் பிரிந்து செல்லும்போது நான் ஏன் அங்கே போகவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். அது அவரவர் விருப்பம் சார்ந்த செயல். எனக்கு ஒரு போதும் அந்த எண்ணம் தோன்றவேயில்லை. இந்தியா, பாகிஸ்தான் எங்கிருந்த போதும் அல்லாவின் கருணைதான் முக்கியம். அது எங்களுக்குக் கிடைப்பதாக இருந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் வந்து சேரும். எனக்குக் கிடைத்த பாரத ரத்னா, பத்மபூஷன், பத்மவிபூஷன் அத்தனை விருதும் அல்லாவின் கருணையால் கிடைத்தது தானே.
‘காகவி’ என்றொரு வாத்திய கருவி உண்டு, கன்னக்கோல் வைக்கப்போகும் திருடர்கள் இரவில் இதை வாசிப்பார்களாம். இதைக் கேட்டதும் எவரும் ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் வசமாகிவிடுவார்களாம். தண்டி மகாகவி தசகுமாரகரிதம் சொல்கிறது. இசை மயக்கம் தான் இல்லையா.
இந்த ஷெனாய் 13ம் நூற்றாண்டில் அறிமுகமானது என்கிறார்கள். அத்தியா, மேற்கு ஆசியாவிலிருந்து வந்த பெயர். அர்னா எனச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் பறவை வடிவில் செய்யப்பட்ட ஊதல்கள் இருந்தன. அதற்குக் குருவி ஊதல்கள் என்று பெயராம்.

ஒருமுறை கல்கத்தாவில் ஒரு இசைக்கச்சேரி முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன். பின்னிரவின் ஆழ்ந்த உறக்கம். ஒரு பகுதியை கடந்தபோது இரண்டு பிச்சைக்காரப் பெண்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு ஆழமான குரல், கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. இரு பெண்களும் உற்சாகமாகப் பாடிக் கொண்டேயிருக்கிறார்கள் எனக்கு உறக்கம் கலைந்துவிட்டது. ஆண்டவர் தான் பாடுகிறாரோ எனத் தோன்றியது, சில வருஷங்களுக்கு அதே இடத்தை இரவில் கடந்தபோது அங்கே யாருமேயில்லை, ஆனால் எனக்கு அந்தச் சங்கீதம் நினைவில் கேட்க துவங்கியது.
ஷெனாய் நல்ல மூச்சுப் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே வாசிச்சகூடியது. மற்ற வாத்தியக்காரர்களை விடவும் பலமான நுரையீரல், உடல்வாகு இதற்கு வேண்டும். இன்னும் நான் இதற்கான பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். அன்றாடம் சாதகம் செய்வது மட்டுமே இதைச் சாத்தியப்படுத்த உள்ள ஒரேவழி.
இசை கடவுளைப் போல அதை நம்புகிறவர்களுக்குச் சாத்தியப்படுகிறது. எனது இதயம் என்னிடம் கற்றுக்கொள்ள வருபவனுக்கு எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் தந்துவிட வே ஆசைப்படுகிறது. நீங்கள் கொடுக்க, கொடுக்க விருத்தியடைக் கூடியது இசை.
எனது தாத்தா குவாலியர் அரசரின் சபையில் இருந்த இசைக்கலைஞர். பரம்பரையாக அரசதர்பாரில் வாசிக்கின்ற குடும்பம் எங்களுடையது. எனது தாத்தா ஷெனாய் வாசிக்கின்றவர். தினமும் கோலில் பூஜையில் இருபது நிமிஷம் அவர் வாசிக்கவேண்டும், பிறகு பல மணி நேரம் சாதகம் செய்வார். எப்போதாவது கச்சேரிகள் நடக்கும். அரச சபையே வீட்டிற்குத் தேவையான உதவிகளும், மாத சம்பளமும் தந்துவிடும். சிறந்த இசைக் கலைஞர்களுக்கான விருதும் உண்டு.
எனது மாமா நல்ல வாத்தியக்காரர். அவரிடம் தான் நான் இசை கற்றுக் கொண்டேன். அவருக்குத் தனது சொந்த பிள்ளைகளைவிடவும் என் மீது விருப்பம் அதிகம். இசையை அவரிடமே கற்றுக் கொண்டேன்.
ஒரு முறை மாமாவுடன் கல்கத்தாவில் நடக்கப்போகின்ற கச்சேரிக்காக ரயிலில் பயணம் செய்தேன். எங்கள் அருகில் உஸ்தாத் அப்துல் கரீம் கான் அமர்ந்திருந்தார். நான் மாமாவிடம் ரகசியமாக உஸ்தாத் இன்று கச்சேரியில் என்ன ராகம் வாசிக்கப் போகிறார் எனக் கேட்கலாமா எனக் கேட்டேன், மாமா வேண்டாம் என்றுவிட்டு, அது தனக்குத் தெரியும் என்றார். என்ன ராகம் எனக் கேட்டதற்கு ரகசியமாகச் சொன்னார். தோடி ராகம். மாமாவிற்கு எப்படித் தெரிந்தது எனக்கேட்டதற்கு, “உஸ்தாத் கரீம்கானின் கண்களில் தோடி ராகம் மின்னிக் கொண்டிருக்கிறது” என்றார் மாமா.
எவ்வளவு விந்தை பாருங்கள். தனது சக கலைஞன் என்ன ராகம் தேர்வு செய்வார் என்பதைப் பார்வையாலே ஒரு இசை கலைஞன் கண்டுபிடித்துவிடுவது. இதைவிடவும் எவ்வளவு இசை நுண்மை கொண்டு இருந்தவர் உஸ்தாத் அப்துல் கரீம்கான். அவர் இதயத்தில் உள்ள இசை, அவர் கண்களில் ஒளிர்கிறது. யாவர்க்கும் எளிதில் வசப்படாத அதிசயம் இதுதான் எனப்படுகிறது.
இசையொரு காணமுடியாத உணர்ச்சி. ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். சம்பு மகாராஜின் உணவினர் புர்ஜ் மகாராஜ் நடனமாடினார். நடனவேகத்தில் ஒரு பாவம் வெளிப்பட்டபோது என்னை அறியாமல் கண்ணீர் வந்து அழுதுவிட்டேன். இதுபோன்ற அரிய கலைஞர்களாக உஸ்தாத் பயால் கான், உஸ்தாத் அமீர்கான், குலாம் அலிகான் என எத்தனையோ இசைக்கலைஞர்கள் என்னைப் பாதித்திருக்கிறார்கள்.

நான் ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ளவன். தினமும் தொழுகை செய்கிறேன். அல்லாவின் ஆசியும் கருணையும் என்னை இசைக்கலைஞராக வைத்திருக்கிறது என நம்புகிறேன். ஆனாலும் இசையே எனது மர்மாக இருக்கிறது. எனது கடவுளோடு நான் இசையாலேதான் பேசுகிறேன். எனது உண்மையான மதம் இசை. கடவுளின் கணக்குப் புத்தகத்தில் நமது செயல்கள் யாவிற்கும் உரிய பதிவு இருக்கிறது.
இந்தக் காசி எனக்குப் பிடித்தமான ஊர். இங்குள்ள கோவில்களில் வாசிப்பது மனதை வருடக்கூடியது. எனது இசையைப் பகிர்ந்து கொள்ள மதபேதம் தேவையேயில்லை. சிறுவயதில் புட்பால், மல்யுத்தத்தில் விருப்பம் இருந்தது, ஆனால் இசையை அறியத்துவங்கிய பிறகு எனக்கு உலகின் எல்லாச் சப்தமும் இசையால் பொங்குவதாக உணர்வதால் வேறு விஷயங்களில் நாட்டமில்லை.
ஜுகல் பந்தி போன்ற இசைக்கூடலை நானும் விரும்புகிறேன். விலாயத் கான், ரவிசங்கர் இவர்களோடு சேர்ந்து வாசிப்பதற்கு அதிக விருப்பம் இருக்கிறது. இதுபோன்ற கச்சேரிகளுக்கு நான் எப்போதும் வாங்கும் பணத்தில் பாதியே வாங்குகிறேன். ஆனால் ரவிசங்கர், விலாயத் கான் இதில் கில்லாடிகள்.
எனது ஷெனாய் இசையை மக்கள் கேட்கும்போது அவர்களை என்னோடு இன்னொரு உலகத்திற்கு அழைத்துப்போகிறேன். கொண்டாட்டம், சந்தோஷம் இவையே அங்குள்ளன. அவர்கள் சந்தோஷத்தில் மனம் துள்ளுகிறார்கள். இது மிகுதியாகும்போது மனம் விட்டு அழுகிறார்கள்.