என் வாழ்க்கைப் போர்

தமிழ் அறிஞர் சி.இலக்குவனார் அவர்களின் சுயசரிதையான என் வாழ்க்கைப் போர் என்ற நூலை வாசித்தேன். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் இலக்குவனார்.

இவரது வாழ்க்கை வரலாறு நூறு வருஷங்களுக்கு முன்பு நாகை பகுதி கிராமங்கள் எப்படியிருந்தன. கிராமப்புற வாழ்க்கையில் கல்வி பெற எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதன் சாட்சியமாகவுள்ளது.

கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த இலக்குவனாரின் தந்தை ஒரு நாள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்.. அந்த நாட்களில் வயிற்றுப்போக்கு வந்தால் இறந்து போய்விடுவார்கள் என்ற பயம் இருந்தது.

அது போலவே குடும்பம் அவரது நோயைக் கண்டு அஞ்சுகிறது. காளியம்மாள் வந்து விட்டாள் என்று தெய்வத்திற்குப் பரிகாரம் அளிக்கப்படுகிறது. நாட்டு வைத்தியத்தால் பயனில்லை. தந்தை வயிற்றுப்போக்கு நிற்காமல் மரணத்துடன் போராடுகிறார்.

இஸ்லாமிய வைத்தியர் ஒருவரை அழைத்து வருகிறார்கள். அவர் வெள்ளைக் குதிரை ஒன்றில் வந்து இறங்கி பரிசோதனை செய்கிறார். பின்பு ஒரு வார்த்தை பேசாமல் போய்விடுகிறார். அன்றிரவே இலக்குவனாரின் தந்தை இறந்துவிடுகிறார். இறந்த தந்தையின் உடலைக் காணத் தூக்கத்திலிருந்து எழுப்பி அருகில் அழைத்துப் போககிறார்கள்

இந்தக் காட்சிகளை ஒரு நாவலில் வருவது போல துல்லியமாக விவரிக்கிறார் .

காலராவில் இறந்தவர்களுக்குச் சாப்பறை கொட்டக்கூடாதாம். ஆகவே  இறுதி ஊர்வலத்தில் சங்கு மட்டுமே ஊதியிருக்கிறார்கள். இறந்த உடலுக்கு எண்ணெய் குளியல் செய்யும் பழக்கம் இருந்தது என்ற தகவலைக் கூறுகிறார். அது எனக்கு விநோதமாகப் பட்டது.

தந்தையின் நோய்மை குறித்து மட்டுமில்லை. அந்த நாட்களில் வயிற்றுப்போக்கு எவ்வளவு கொடிய நோயாகக் கருதப்பட்டது. தந்தை இல்லாத குடும்பம் எத்தனை அவமானங்களைச் சந்திக்கிறது என்பதையும் இலக்குவனார் மிக உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்

தந்தை இறந்தபிறகு வீட்டில் விளக்கு வைக்கக் கூட எண்ணெய் இல்லை. இருட்டில் அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலை. வேறு வழியில்லாமல் வைக்கோல் போரைக் கொளுத்தி அந்த வெளிச்சத்தில் சாப்பிடுகிறார்கள்.

அன்றைக்குத் திண்ணைப்பள்ளிக்கூடம் தான் கல்வி நிலையம். அங்கே பச்சை களிமண்ணில் ஹ என்று எழுதி அதை நெருப்பில் சுட்டு செங்கல்லாக வைத்திருப்பார்கள். அந்தச் செங்கல்லில் உள்ள எழுத்தின் மீது மாணவன் விரல் இழுத்துச் செல்லப்படும். மாணவன் விரைவில் கற்றுக் கொள்ளாவிட்டால் விரலை அழுத்தித் தேய்த்து ரத்தம் கட்டிக் கொண்டுவிடும். இப்படிக் கல்லில், மணலில் எழுத்து பயின்ற பிறகே எழுத்தாணி கொண்டு எழுதுவதற்குப் பயிற்சி அளிக்கப்படும் என்கிறார் இலக்குவனார்.

திண்ணைப் பள்ளிக்கூடம் காலை ஏழு மணிக்குத் துவங்கி மதியம் பனிரெண்டு மணிக்கு முடிவு பெறும். அதன்பிறகு இரண்டு மணிக்குத் துவங்கி ஐந்து மணிக்கு முடியும்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் விடுமுறை நாட்கள். அந்நாட்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குக் காணிக்கை  தர வேண்டும். அந்த காணிக்கையின் பெயர் வாவுக்காசு. பெற்றோர்களின் வசதிக்கு ஏற்ப காணிக்கை தர வேண்டும். காய்கறி பழங்களும் காணிக்கையாகத் தரப்படுவது உண்டு.

கட்டணம் கட்டிப்படிக்க முடியாத சூழலில் இலவச கல்வி வேண்டி திருவையாறுக்குப் போகிறார். காசில்லாத காரணத்தால் நடந்தே போக வேண்டிய சூழல். பசியோடு நடக்கிறார். அன்னசத்திரத்தில் உணவு கிடைக்கிறது. உறைவிடப்பள்ளியில் அனுமதிக்கப்படுகிறார்.

அங்கோ சாதி வேறுபாடு மேலோங்கியிருக்கிறது. பிராமணர்கள் தனியாகச் சாப்பிட வைக்கப்படுகிறார்கள். பிற சாதியினர் அவரவர் சாதி நிலைக்கு ஏற்ப அடுத்த பந்தி எனச் சாப்பிட அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுமையை யாரும் கேள்விகேட்கமுடியாத சூழல் இருந்ததையும் நீதிக்கட்சி தலைவர் பன்னீர் செல்வம் இதில் தலையிட்டு இந்த முறையை மாற்றியதையும் பதிவு செய்திருக்கிறார்.

பன்னீர் செல்வம் முயற்சியால் அன்ன சத்திரங்கள் , ஏழை மாணவர்களின் இலவச உணவு விடுதிகளாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஒரத்தநாடு, ராசா மடம் என்னும் இரு ஊர்களில் இருந்த சத்திரங்கள்,  மாணவர் உறைவிட விடுதிகளாக உருமாற்றம் பெற்றன. ராசாமடத்தில் தான் இலக்குவனார் பயின்றார். இதே ராசாமடம் இலவச விடுதியில் தங்கிப் பயின்ற இன்னொரு மாணவர் இந்திய ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன்.

உறைவிடப்பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு வாழை இலையில் சோறு போடுகிறார்கள். காலை உணவாகச் சுடுசோறும் மோரும் ஊறுகாயும். இரவு உணவு சோறும் கூட்டும் சாம்பாரும் தரப்பட்டது. அந்த நாட்களில் தட்டில் சாப்பிடுகிறவர்கள் என்றால் அவர்கள் கிறிஸ்துவர்கள் என்று கருதினார்களாம். ஆகவே தான் வாழை இலை.

மாணவர்கள் நீண்ட கூந்தல் வளர்த்து குடுமி வைத்திருப்பதே வழக்கம். அதற்கு மாற்றாகத் தனது கூந்தலை இலக்குவனார் கிராப் வெட்டிக் கொண்டுவிடவே ஆசிரியர் நல்ல பையன் இப்படி நடந்து கொண்டுவிட்டானே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். குடுமி இல்லாத ஆண்பிள்ளையா எனப் பலரும் கேலி பேசியிருக்கிறார்கள்.

விடுதியிலிருந்தால் மூன்று வேளையும் உணவு கிடைக்கும். வீட்டிற்கு போனால் அதுவும் கிடைக்காதே என்று பல மாணவர்கள் விடுமுறையின் போதும் விடுதியிலே தங்கிவிடுவது உண்டாம். இலக்குவனாரும் அப்படித் தங்கியிருந்திருக்கிறார்

வறுமை ஒருவனைத் துரத்தும்போது கல்வி ஒன்று மட்டுமே அவனைக் காப்பாற்றக்கூடியது என்பதற்கு இலக்குவனாரே சாட்சியமாக விளக்குகிறார்.

அந்தக்காலத்தில் நன்றாகப் படிக்கக் கூடிய வசதியில்லாத பையனுக்கு ஆசிரியர்களே பரிட்சைக்கட்டணம் கட்டியிருக்கிறார்கள். ஊரின் முக்கியப் பிரமுகர்கள் ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்திருக்கிறார்கள். அதே நேரம் காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே பலரும் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள் என்பதையும் இலக்குவனார் பதிவு செய்திருக்கிறார்.

பொன்னண்ணாக் களத்தில் வென்றார் என்ற தனது ஆசிரியர் பற்றி வியந்து கூறுகிறார். அவரது பெயரே எவ்வளவு சிறப்பாக உள்ளது பாருங்கள். இது போன்ற பெயருள்ள மனிதர்கள் இப்போதில்லை. இந்தப் பெயர்களும் காலத்தில் மறைந்துவிட்டன. தமிழ் அறிஞராக இருந்த போதும் களத்தில் வென்றார் தனது ஓய்விற்குப் பிறகு ஆசையாக ஆங்கிலம் பயின்றிருக்கிறார். அதுவும் தன் மாணவர் இலக்குவனார் இடத்தில்

ஆண்டு இறுதிப் பரீட்சை கட்டணம் கட்டுவதற்குப் பணமில்லை என்ற காரணத்தால் வீட்டின் முன்பு இருந்த வாகை மரம் ஒன்றை 25 ரூபாய்களுக்கு விற்று முன்பணமாகக் கிடைத்த பதினைந்து ரூபாயைக் கொண்டு போய்ப் பரீட்சை எழுதப் பணம் கட்டியதாகக் கூறுகிறார்.

தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சி வளர்ச்சி அடைந்த விதம் பற்றியும் பெரியார் எப்படி ஊர் ஊராகப் போய்ப் பிரச்சாரம் செய்தார் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். சுயமரியாதை இயக்கம் என்பதை இலக்குவனார் தன் மதிப்பு இயக்கம் என்றே குறிப்பிடுகிறார். தன் மதிப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டங்கள். அங்குப் பேசப்பட்ட விஷயங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ என்று கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர் இலக்குவனாரே. பின்னரே தமிழகம் முழுவதும் இம்முறை பின்பற்றப்பட்டது..

பள்ளி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர். தமிழ்த் துறை தலைவர் என்று பல்வேறு பணிகள் செய்த இலக்குவனார். விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.. 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக இவரது வேலை பறிபோனது. பின்பு குலசேகரன்பட்டினத்தில் தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரியில் முதல்வராகவும் பின்னர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றி பின்பு மதுரை தியாகராயர் கல்லூரி தமிழ்த் துறை தலைவராகப் பணியாற்றினார்.,.

இலக்குவனாரிடம் தமிழ் பயின்ற மாணவர்களில் முக்கியமானவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன், தோழர் நல்லகண்ணு, சபாநாயகர் காளிமுத்து, கவிஞர் நா. காமராசன், எழுத்தாளர் பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும்பெருமாள் ஆவார்.

பள்ளியில் பணியாற்றிய காலத்தில் ஆண்டு தோறும் தொல்காப்பியர் திருநாள், திருவள்ளுவர் திருநாள், இளங்கோ அடிகள் திருநாள், ஒளவையார் திருநாள், மறுமலர்ச்சி நாள் என்று ஐந்து விழாக்கள் கொண்டாடி தமிழிலக்கியத்தின் பெருமைகளை அனைவரும் உணரச் செய்திருக்கிறார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துவக்கமாகக் கருதப்படும் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம் இவரது உரையில் உருவான எழுச்சியே. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக இலக்குவனாரைக் கைது செய்து சிறையிலிட்டது அன்றைய அரசு.

தொல்காப்பியத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட இலக்குவனார் தனது முனைவர் பட்ட ஆய்வையும் தொல்காப்பியத்தில் தான் செய்திருக்கிறார்.

இந்நூல் இலக்குவனாரின் வாழ்க்கை வரலாறாக மட்டுமின்றிச் சுதந்திரத்திற்கு முந்திய தமிழக வாழ்க்கையின் சாட்சியமாகவும் உள்ளது.

•••

0Shares
0