தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் என்ற திரைப்படப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதுரையின் திருவிழா நினைவுகள் வந்து போகும்
மாட்டுவண்டி கட்டி சித்திரைத் திருவிழாவிற்கு போய் வந்த பால்ய வயதின் நினைவுகள் பசுமையாகயிருக்கிறது.
மதுரையைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை அழகான புகைப்படங்களுடன் திருவிழா குறித்த தகவல்களுடன் மதுரையின் பண்பாட்டுச் சிறப்புகளை விவரிக்கும் ஒரு புத்தகம் இதுவரை வந்ததில்லை. அப்படி ஒரு நூலை சித்திரவீதிக்காரன் எழுதியிருக்கிறார்
நண்பர் முத்துகிருஷ்ணன் நடத்தும் பசுமை நடையில் அவரைச் சந்தித்திருக்கிறேன். சிறந்த வாசிப்பாளர். புகைப்படக்கலைஞர். இணையத்தில் தொடர்ந்து மதுரை குறித்து எழுதக்கூடியவர். பசுமை நடையில் உருவான அனுபவங்கள் அவருக்குப் புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. பசுமை நடை குறித்து ஐம்பதுக்கும் மேலான கட்டுரைகள் இணையத்தில் எழுதியிருக்கிறார்
மதுரை திருவிழாக்களின் தலைநகரம். இங்கே ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் தான். எத்தனை விதமான திருவிழாக்கள். அதிலும் சித்திரைத்திருவிழாவைக் காண்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியூட்டும் அனுபவமே. மதுரையில் நடைபெறும் விழாக்களின் சிறப்புகளை நுட்பமான தனது எழுத்தால் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கூடவே வியக்கவைக்கும் புகைப்படங்கள்.
திருவிழாவில் நாமே சுற்றியலைந்து திரும்பியது போல எழுதப்பட்டுள்ள இந்நூலை பசுமை நடை சிறப்பான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது. சித்திரவீதிக்காரனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
பசுமை நடையின் மூலம் மகத்தான பண்பாட்டுச் சூழலியல் இயக்கத்தை முன்னெடுத்து வரும் நண்பர் முத்துகிருஷ்ணனுக்கும் அன்பான வாழ்த்துகள்.
திருவிழாக்களின் தலைநகரம் மதுரை
சித்திரவீதிக்காரன்
பசுமை நடை வெளியீடு,
200 பக்கங்கள், விலை – 130ரூ